அந்தகனைக் காட்டி, அருள்கூட்டுவிக்கும் அப்பர்

0

-கோப்பெருந்தேவி. சு., 

முன்னுரை 

’சொல்லுக்கு உறுதி அப்பர்’ என்பது முதுமொழி. அவர்தம் திருப்பதிகங்கள், அரியபொருளான சிவபெருமானை அறிவதற்குச் சிறந்த துணையாகின்றன. அத்திருப்பாடல்களில் அமைந்திலங்குகின்ற தொன்மக்கூறுகள், கதைப்போக்கிலான தத்துவ வலியுறுத்தலுக்கும், அருள்நெறி கூட்டலுக்கும், இலக்கிய இனிமைக்கும் வகைசெய்கின்றன. அவ்வகையில், அட்டவீரட்டனாகிய பெருமான், அந்தகனை அடர்த்தருளிய தொன்மக்கூறினை அப்பர்பெருமான், தமது பல திருப்பதிகங்களிலும் கையாண்டுள்ளார். அதன்வழியே, காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களும் நீங்கி, உயிர்கள் மேன்மையுற அவர் அருள்நெறி காட்டுகின்ற பாங்கினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

 திருமுறைகளில் தொன்மக்கூறுகள்

அரும்பொருளான இறைவனை, ஆருயிர்கள் உணர்ந்துய்ய, வேதம், ஆகமம், இதிகாசம், புராணம், சாத்திரம் என்பன கருவிகளாகின்றன. இவற்றுள், வேதங்களின் உட்பொருளாகிய பரத்துவத்தை, இறைவன், கல்லாலின் கீழிருந்து நால்வர்க்கு அருளிச்செய்தான். வேதங்களின் கிரியாநெறி விளக்கமாகிய ஆகமங்களின் பொருளை, பெருமான் அம்மைக்கு அருளிச்செய்தான். வேத, ஆகம நன்னெறிகளை மண்ணுலகில் நிலைநிறுத்தவேண்டி இறைவன், தானே மனித உருவேற்று வந்தான். அதை, இதிகாசங்கள் விளக்கியுரைக்கின்றன. வேத, ஆகம, இதிகாசங்களின் பரத்துவ நுண்பொருள் தத்துவங்களை எளிமைகொண்டதாக, மக்களிடையே வலியுறுத்துவதற்கு, கதைக்கூறாக அவற்றை அருளிச்செய்த அணுகுமுறையினைத் திருமுறை ஆசிரியர்களிடத்தில் காணலாம். அவ்வரிசையிலேயே,  ஆதிபுராணனாகிய பெருமானைத் தொன்மங்களாகிய புராணக்கூறுகளால், அப்பர்பெருமான் போற்றிப்பரவியுள்ளார்.

 ஆதிபுராணனின் அட்டவீரட்டம்

போற்றித்திருத்தாண்டகம் உள்ளிட்ட,  பல  திருத்தாண்டகத் திருப்பதிகங்களிலும், பல்வகைத் தொன்மக்கூறுகள் அப்பர்சுவாமிகளால் எடுத்தாளப்பட்டுள்ளன. அவ்வரிசையில்,  ‘பொருப்பள்ளி வரைவில்லா’ என்றமைந்த அடைவுத் திருத்தாண்டகத்தின் இரண்டாம் திருப்பாடல், சிவபிரான்,  பிரமனின் சிரம் கொய்தருளிய திருக்கண்டியூரையும், அந்தகாசுரனுக்கு மறக்கருணை அளித்தருளிய திருக்கோவலூரையும், முப்புரத்தையும் எரித்தருளிய திருவதிகையையும், தக்கனது வேள்வியினைத் தகர்த்தருளிய திருப்பறியலூரையும், சலந்தராசுரனின் ஆணவத்தை அடக்கியருளிய திருவிற்குடியையும், அத்தி உரித்து, அதுபோர்த்தருளிய திருவழுவூரையும், மன்மதனை நெற்றிக்கண்ணால் சுட்டருளிய திருக்குறுக்கையினையும், மார்க்கண்டேயர்க்காக, கூற்றுவனை அட்ட திருக்கடவூரையும் ஏற்றிப்போற்றுகிறது. அட்டவீரட்டத் திருவிளையாடல்கள், பிற திருத்தாண்டகப் பதிகங்களில் மிகுதியும் அமைந்துள்ளன.

 அப்பர்பெருமான் திருஉள்ளம்

‘ஆமயந்தீர்த் தடியேனை’ எனத் தொடங்குகின்ற தனித்திருத்தாண்டகத்தில், அட்டவீரட்டத் திருவிளையாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. இத்திருப்பதிகத்தின் இரண்டு இடங்களில், அந்தகனைக் குறிக்கின்ற தொன்மத்தை அப்பர்பெருமான் எடுத்தாண்டுள்ளார். அத்தொன்மப் பயன்பாட்டில், பெருமான், தனக்குத் தொண்டுநெறி அருளிய வரலாற்றை இயைத்துப் பாடியுள்ளார்.  ‘ஆமயம்’ என்பது, ‘நோய்’ என்று பொருள்படும். அப்பர்பெருமான், ‘ஆமயந்தீர்த்து அடியேனை ஆட்கொண்டான்’ எனத் தொடங்கி, சிவபெருமானைப் பாடியநிலையில், தான் சமணசமயத்தைச் சார்ந்திருந்த முந்தைய அறியாமையினை நினைந்தார் எனலாம். பெருமான், ‘தகுதிநோக்காமல், அடியார்களின் ஆணவமல அறியாமையினையும் பொறுத்தருளி, குற்றத்தையும் குணமாக ஏற்றருளிக் காக்கின்ற பெருங்கருணையை நீளநினைக்கின்றார். அவ்வாறே, தனக்கும் சூலைநோயினைத் தந்து ஆட்கொண்டதை உடன்நினைந்து உருகுகின்றார். பெருமானின் இத்தகைய எளிவந்த பெருங்கருணையை வலியுறுத்தவேண்டி, அட்டவீரட்டத் திருவிளையாடல்களால் ஆட்கொள்ளப்பட்டோரைக் குறித்த தொன்மங்கள் அனைத்தையும் இத்திருப்பதிகத்தில் எடுத்தாண்டுள்ளார். இத்தொன்மக் குறிப்புகள், கதைநிகழ்வுகள் என்னும் நிலையில் பல புராணங்களில் இடம்பெற்றிருப்பினும், உள்பொருளாக சித்தாந்தத் தத்துவங்களையும், வாழ்வியல்நெறிகளையும் வலியுறுத்துகின்ற வகையில் அப்பர்பெருமானால் சுட்டப்பெற்றுள்ளன.

 அந்தகனைக் குறித்த தொன்மக்கூறு

ஒரு சமயம் உமையம்மை, சிவபெருமானின் கண்புதைத்த வேளையில், அவளை அறியாத அச்சம் ஏற்பட்டது. அச்சத்தால், அவள் உடலில் பூத்த வியர்வைப்பெருக்கு, பெருமானின் நெற்றிச் சூட்டினால், கரியநிறமுடையதாக, கண்பார்வையற்றதாக உருப்பெற்றது. அக்குழந்தை அசுரத்தன்மை கொண்டிருந்ததனால், இரண்யாட்சன் என்னும் அசுரனால் வளர்க்கப்பெற்றது. கண்ணொளி இல்லாமல் பிறந்த அக்குழந்தை, பின்னாளில் பிரமனிடம் பெற்ற வரத்தால், கண்பார்வையும், எவரையும் வெற்றிகொள்கின்ற வலிமையும் பெற்றது. அரியவலிமையும், பெரியவரமும் பெற்ற அந்தகன், ‘தான் இனியும் பெறத்தக்க பேறு எவையும் இல்லை’ என்ற தருக்கினால்,  ஆணவமலம், அவன் அறிவை மறைக்க, அறியாமை இருளில் ஆழ்ந்தான். ‘யான்’ ; ‘எனது’ என்னும் ஆணவப்பற்றுக்கு ஆட்பட்டான். பற்றற்றவனாகிய பெருமானைப் பணிய மறந்தான். அதனால், ஆருயிர்க்கு அன்புசெய்தலையும் மறந்தான். நெறியல்லாத வகையில், உயிர்களுக்குத் துன்பத்தையே செய்தான். பால்நினைந்தூட்டுகின்ற தாயினும் பரிகின்ற பெருமான், உயிர்களுக்கு ஏற்பட்ட  துன்பத்தைத் தீர்க்க, சூலம் எடுத்தான்;  சூலத்தால் அந்தகனைப் பழிகொண்டான். (சிங்காரவேலனார், அபிதான சிந்தாமணி, பக்கம்: 23).

அந்தகன் அருள்பெற்றுய்ந்த வரலாற்றை அப்பர் பெருமான்,

‘அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார்’ (திருத்தாண்டகம்: 96:5) எனக் குறித்தருளியுள்ளார்.

அடியேனையும் ஆட்கொண்ட பெருமான்

‘எந்தவொரு இலக்கியப் படைப்பிலும், படைப்பாளனது சாயலையுடைய மாந்தன், படைப்பாளனையும் அறியாமல் நுழைந்துவிடுகிறான். படைப்பாளன், அக்கதைமாந்தனைப் பற்றிப் பேசுகின்ற இடங்களில், படைப்பாளனைக் குறித்த பதிவுகளும் இடம்பெற்றுவிடுகின்றன’. (படைப்பாக்க ஆளுமைகள்: பக்:11).   பெருமான், ‘சூலத்தால், அந்தகனுக்கு மறக்கருணை தந்தான்’ என்று பாடிய அப்பர்பெருமான், அத்தொடரில், பெருமான், தன்னை ஆட்கொண்ட வரலாற்றையும் ஒருசேரச் சுட்டியுள்ளார்.

சிவபெருமான், அறக்கருணை அல்லது மறக்கருணை என்ற இருவேறு நிலைகளில்நின்று உயிர்களுக்கு அருள்கின்றான். ‘வல்வினைகள் கொண்டிருந்த அந்தகனுக்குச் சிவபெருமான், மறக்கருணை தந்தருளினான். அதுபோன்றே தன்னை ஆட்கொள்ள வேண்டியும் சிவபெருமான், மறக்கருணயையே தந்தருளினான்’ என்று அப்பர்பெருமான் நினைந்தார் போலும். கூற்றுவனை ஒத்த சூலைநோயினைப் பெற்றுத் தாம் துன்புற நேர்ந்ததற்கும், ஆணவமலத்தால் தம்மிடம் விளங்கிய  அறியாமையே காரணம் என்றும் அவர் உணர்ந்திருந்தார். அதனாலேயே, ஆணவத்தின் உருவாகி, அறநெறியில் பிழைத்த அந்தகனை எண்ணியஅளவில், அவனது அறியாமை போன்றே, தானும் பெருமானை மறந்து சமணத்தில் வாழ்ந்திருந்ததாகக் கழிவிரக்கம் கொண்டார்’ எனக் கருதத்தகும். அதனாலேயே,  அந்தகனுக்கு மட்டுமல்லாமல், தனக்கும் அருள்செய்து காத்த பெருமானின் பெருங்கருணையை ஒருசேர நினைவுகூர்பவரானார். இதனை,

‘சூலங்கைக் கொண்டார்தொண் டெனைக் கொண்டாரே’ (திருத்தாண்டகம்: 96:7)

என்று குறித்தருளியுள்ளார். சிவபெருமான், அப்பருக்கு அருளிய தொண்டுநெறியே, அவர்தம் பிறவிப் பெருநோய்க்கு மருந்தானது. ‘யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்’ என்னும் நோக்கில், பெருமானைப் பற்றி உய்கின்ற பெருநெறிக்கு வழிகாட்டவேண்டி, உயிர்களின் பேரறியாமையினைத் தனது அறியாமையாக ஏறிட்டுக்கொள்கின்றார். தன்னை, பார்வையற்ற குருடனாக, திருக்கோவலூர் திருப்பதிகத்துள் சுட்டியுள்ளார்.

‘கொத்தையேன்’ என்று குறித்துள்ளமை

பெருமான், அந்தகாசுரனுக்கு அருளிய திருத்தலமாக அறியப்படுவது, நடுநாட்டிலுள்ள திருக்கோவலூர் வீரட்டமாகும். இத்தலத்துக்குரிய திருப்பதிகங்கள் இரண்டு (2:100, 4: 69). அப்பர்பெருமான், இத்திருத்தலத்தைப் பாடத்தொடங்கிய நிலையில், அந்தகனின் நிலையினைப் போன்றே, அனைத்து உயிர்களும் அறியாமை கொண்டிருப்பதை எண்ணிக் கலங்கியுள்ளார். பெருவரத்தால், கண்ணொளி பெற்றநிலையிலும், அந்தகனுக்குக் கண்களின் பயனாகிய பெருமானின் திருக்காட்சி காணுதலில் அறிவு செல்லவில்லை. அதைப்போன்றே, இயல்பாகவே ஆணவமலத்தால் பிணிக்கப்பட்டுள்ள அனைத்து உயிர்களிடத்திலும், அறியாமை மட்டுமே மிகுந்திருக்கின்றது. ஆணவமலத்தின் இருள்வலிமை மெலிந்தால் மட்டுமே, உயிர்களால், இறைவனை உணர இயலும்; அதுகாறும், பெருமானை உணராத அறியாமைக்கு உயிர்கள் இரங்கி, அவனை அணுப்பொழுதும் பிரியாமல் பற்றி உய்கின்ற அருள்பேற்றுக்குத் தலைப்படும். அவ்வாறு, பெருமானைப் பற்றுகின்ற பெரும்பேறு வாய்க்கப்பெற்றாலும், ஆணவமல வாசனை, உயிர்களிடத்தில் மெலியாது. ஆணவமலத்தின் இவ்வலிமையினைச் சிவஞானபோதம், ‘நிகழ்செம்பினிற் களிம்பு’ எனக் குறிக்கிறது. துலக்கித் தூய்மையாக்கிய செம்புப் பாத்திரத்தில், ஓரிருநாளில் களிம்பு தோன்றுவதைப்போல, மலக்கட்டில் உழல்கின்ற உயிர்களிடத்தில், ஆணவமலம் மீண்டும் மீண்டும் பெருமுனைப்புடன் செயல்பட்டு, அவை பெருமானை மறந்து, காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றங்களுக்கும் ஆட்படுகின்ற கீழ்நிலைக்குத் தள்ளும். அக்கீழ்நிலையிலிருந்து விடுபட, உயிர்களின்  ஊனக்கண் உதவாது. பெருமானின் திருவருளே கண்ணாக இருந்து அவனைக் காட்டியருளவேண்டும்’ என்கின்ற நல்லறிவு, உயிர்களுக்கு வாய்ப்பதில்லை.

அந்தகன், பிறப்பின்பொழுது கண்ணில்லாமல் இருந்து, அரனருளால் கண்பார்வை பெற்றவன்.  ஆயினும் அவன், தனது கண்ணின் மணியாக அரனாரே விளங்குவதை உணரவில்லை. ஆணவமலம், அவனது அறிவை மறைத்ததால், கண்களும் அவனுக்கு, அரனாரைக் காட்டி உதவவில்லை. மண்ணுலகில், பல்லுயிர்களும் இத்தகைய அறியாமையையே கொண்டுள்ளன. அப்பர்பெருமான், இதை நினைந்து இரங்குகின்றார். உயிர்களின் அறியாமையினை, தன்னுடைய அறியாமைக் குறையாக ஏறிட்டுக்கொள்கின்றார். அதன் வெளிப்பாடாக, தம்மைத் திருப்பதிகத்துள் இரண்டு இடங்களில், ’மெய்ப்பொருளை ஞானக்கண்ணால் உள்ளவாறு உணர்ந்தறிய இயலாத குருடன்’ என்பவராக, ‘கொத்தையேன்’ என்று  குறித்துள்ளார் (திருமுறை:4-69-1,8). குழந்தையின் பிழையினைத் தனது பிழையாக ஏற்றுக்கொள்கின்ற அவர்தம் தாயுள்ளத்துடன், ‘உயிர்களின், காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களும் நீங்க, அந்தகன் அருள்பெற்ற வரலாற்றின்வழியே அருள்நெறி  காட்டுகின்றார். ‘முக்குற்ற நீக்கத்துக்கும் திருவருளே துணையாகும்’  என்பதைக் காஞ்சிப்புராணமும், அந்தகேச வதைப்படலத்தில் விரிவாக வலியுறுத்தியுள்ளது (தமிழ் இணைய கல்விக்கழகம், காஞ்சிப் புராணம், பக்கம் 401-409).

 அந்தகன் போல அறிவழிந்தோர்

இப்புராண வரலாறு, அரனருளால், அளவில்லாத ஆற்றலைப்பெற்ற அந்தகன் அறநெறி தவறி, தனது ஆற்றலை மிகவும் வியந்து, ஆணவத்தால், விண்ணவரையும், மண்ணவரையும்  வெகுண்டு  அஞ்சச்செய்தான். அந்தகனுக்கு அஞ்சிய திருமால் முதலான வானவர்கள், பெண்ணுரு எய்தி, உமையம்மையிடம், சரண்புகுந்து, அவர்தம் சேடியர்களாக மறைந்து வாழ்ந்தனர். ஆனால், அந்தகனோ, வானவர்பால் இரக்கம் கொள்ளாமல், தன்பால் அச்சம்கொண்ட வானவரைச் சிறைப்படுத்த அறியாமையுடன் முனைத்தெழுந்தான். ஆணவம்கொண்டு படைநடத்திவந்த அந்தகனை எதிர்க்கவேண்டி, உமையம்மை வீரகன்னியர்களை எதிர்விடுத்தாள். வீரகன்னியர்களுக்கு அஞ்சிய அந்தகன், புறங்காட்டி ஓடிப் பிழைத்தான். அம்மையோ, பசுங்குழவிகளாகிய நமக்காக அப்பனிடமிருந்து என்றும் குறைவில்லாமல் திருவருளைப் பெற்றுத்தருபவள். அத்தகைய தாயுள்ளத்துடனேயே, ‘அந்தகனும் உயிர்கொண்டு வாழட்டும்’ என எண்ணி, அம்மை அவன் தோற்றோடி உயிர்ப் பிழைத்திருக்க அருளினாள். திருவருள் நிலையுடையவளாகிய அம்மையால் அறிவுறுத்தப்பெற்றும், அவனால் நன்மையை உணர இயலவில்லை. ஆணவமலம் மிகுந்த வலிமையுடன், அவனது அறிவை மறைத்தது. அதனால், தான் உய்கின்ற நல்லறிவை அவன் சிந்திக்கவில்லை. தோல்வியால் ஏற்பட்ட சோர்வு நீங்கி, அவன் ஆணவ எழுச்சியுடன் மீண்டும், வானவரை எதிர்க்கவந்தான். அந்நிலையில், அவனை அழித்தொழிக்கச் சிவபிரானார், வைரவத்தேவரை அனுப்பியருளினார்.

பெருமானின் அருளாணையின்வண்ணம் வந்தருளிய வைரவத்தேவரும், தமது கூரிய முத்தலைச் சூலத்தில் அவனைக் கோத்து, அல்லல்படுத்தி, மறக்கருணையால் அவன் மெய்யுணர்வைப் பெற்றுய்ய வகைசெய்தார். ‘மேலும் தன்னிடத்தில் மெய்யுணர்வை மிகுவித்து, வீடுபேற்றினைத் தந்தருள வேண்டும்’ என்று அவன், வைரவத்தேவரைப் பணிந்தான். அதற்கு, வைரவத்தேவரோ, ‘பெரும்பேறாகிய, வீடுபேற்றினைப் பெருமான் ஒருவனே தந்தருள வல்லவன்’ என்று உணர்த்தியருளினார். அந்நல்லுணர்வின் மேன்மையால், சிவபிரானை அவன் சரண்புகுந்தான். ‘ஊரே சிவலோகமாகவும், மக்கள் அனைவரும், சிவகணங்களாகவும், அங்குப் பிறத்தலே, வீடுபேற்றுக்கான வகை’ என்ற உயர்மேன்மைகள் உடையதாகிய,  ‘காஞ்சி மாநகரை’ அடைந்துய்ய அருளினார். அந்தகனும், பலகாலம் அங்கிருந்து, பெருமானை இலிங்கத் திருமேனியாக வழிபட்டு, இறுதியில் அத்திருமேனியிலேயே கலந்துய்ந்தான்’ என்று காஞ்சிப்புராணம் விவரிக்கிறது. அந்தகன் திருவருள் பெற்றுய்ந்த அத்திருத்தலமானது, ‘அந்தகேசுரம்’ என்னும் திருப்பெயரால் இன்றும் விளங்குகிறது.

பிச்சை உகக்கின்ற திருவிளையாடல்:

மேற்கண்ட புராணவரலாற்றின் இடைப்பகுதி, பெருமான், தாருகாவனத்து முனிவர்களுக்கும், அவர்தம் மனைவிகளுக்கும் அருளவேண்டி, பிச்சை உகக்கின்ற பெருமானாகச் சென்றருளிய திருவிளையாடலையும் மிகவிரிவாகச் சுட்டியுள்ளது.  அந்தகன், திருமால் முதலான வானவரை எதிர்க்கக் கயிலையை நோக்கி முதன்முறை வந்து தோற்றோடிய அளவில், அவனை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டிய சூழல் அமைந்தநிலையிலும், பெருமான் அவனைத் தனது வலிமையால் அந்நொடியிலேயே அழித்தொழிக்க எண்ணவில்லை.  ‘தாம் வளர்த்த நச்சுமரத்தையும் வெட்டத் துணியாத சான்றோனாகிய பெருமான், கயிலையிலிருந்தும் தாருகாவனத்தை அடைந்ததாகப் புராணம் கூறுகிறது.

அந்தகன், ஆணவம் தந்த வெகுளியின் மயக்கில், வானவரைத் துன்புறுத்த நினைத்த அறியாமையினைக் கடிவதற்கும்கூட மேலும் சில காலம் பொறுக்கலாம்’ என்று பெருமான் நினைத்திருந்தான் போலும். அதனாலேயே, ஆணவத்தால் சினம்கொண்ட அவனை உடனே அடர்த்து அருள்செய்வதையும் விடுத்து, ‘தாருகாவனத்தில் புகுந்தான்’ எனலாம். பிறப்பால், அசுரத்தன்மை பெற்றிருந்தும், அறிவால் ஆணவம் மிக்கும் இருந்தவன் அந்தகன். அவனுக்கு அருளவேண்டிப் பெருமான், சற்றே காலம் தாழ்த்தினான். ஆனால், பெருமானை மறந்திருந்த, தாருகாவனத்து முனிவர்கள் மற்றும் அவர்தம் மனைவியரிடத்தில் ஆணவ அறியாமை மிக்கிருந்ததைக் கண்டு பொறுத்திருக்க மனமின்றி, உடனே அதனைக் களைந்தெறிந்து அவர்களை உய்விக்கத் தாருகாவனத்திற்குச் சென்றான். ‘வேதமும், வேள்வியும், அதன் பயனும்’ என அனைத்துமாகப் பெருமானே விளங்குகிறான்.

முனிவர்கள் ஆணவத்தால் இதை மறந்து, தமது முயற்சியால் மட்டுமே வேள்வியும், அவற்றுக்கான பயன்களும் சிறந்திருப்பதாக தருக்கினர்; மேலும், பெருமானை வணங்குதற்குரிய, வேள்வி முதலான நற்செயல்களுக்கு அரனருளே துணைசெய்கிறது’ என்பதையும் முனிவர்தம் மனைவியர்கள் மறந்திருந்தனர். ‘தமது கற்பாகிய மனவலிமையே, வேள்வி முதலான புண்ணியங்களுக்குக் காரணம்’ என்றும் ஆணவம் கொண்டிருந்தனர். இவ்வாறு, பெருமானையும், அவனது, திருவருளையும் மறந்து, அவர்கள் செய்த வேள்வி முதலான செயல்கள், பதிபுண்ணியங்களாகப் பெருகாமல், அவர்களிடத்தில், ஆணவஇருளை மேலும் வளர்க்கின்ற பாவச்செயல்களாகிய பசுபுண்ணியங்களாகவே அமையக்கண்டு, அதற்கு இரங்குபவன் பெருமான்.  பசுபுண்ணியங்கள், வினைப்பயனைத் தந்து, முனிவர்களுக்கும், அவர்தம் மனைவியர்க்கும், மேலும் பல பிறவிகளைத் தந்து, துன்புறச்செய்யும் என்பதை நினைந்தான். எனவே, முனிவர்தம் மனைவியர்கள், மெய்யுணர்வு பெறுகின்றவகையில், அவர்கள்தம் ஆணவத்தின் தன்முனைப்பைச் சிதைத்தருள்கின்றநோக்கில், பேரழகனாக, பிச்சை உகக்கின்ற திருக்கோலத்தில் வந்தருளினான். அங்கிருந்த பெண்களும், பெருமானின் பேரழகில் திளைத்தனர். தாம், பெண்கள் என்பதையும் மறந்தனர். காமமாகிய ஆணவச்சேட்டையில் ஆழ்ந்து, பெருமானை அடையத் துடித்தனர்.  தம்மை மறந்து, தம்நாமம் கெட்டு, பெருமானுக்கே பித்தியராக அறிவழிந்த அவர்களைப் பெருமான், கருணைநோக்கத்தால் காத்தருளி மெய்யுணர்வைத் தந்தருளினான்.

இதை அறிந்த முனிவர்கள், ஞானக்கண் கொண்டு பெருமானைப் பணிய முற்படவில்லை. ‘ஊனக்கண்கள், பதியை உணராது’ என்ற அறியாமைக்கு இலக்கணமாகி, பெருமானை எதிர்க்க, முயலகனையும், பாய்புலியையும், கொல்களிற்றையும், விடநாகத்தையும் வேள்வியிலிருந்து ஏவினர். வைதாரையும் வாழ்விப்பவனாகிய பெருமான், முயலகனைத் தன் திருவடிக்கீழ் இருத்தி அருளினான்; புலித்தோலும், நாகமும், யானையின் தோலும் திருமேனியில் விளங்கும்படிச் செய்தருளினான்.  பசுஞானம் தந்த அறியாமையால், தம்மை மறந்த முனிவர்களின் அறிவைப் பிணித்திருந்த ஆணவ மயக்கத்தையும், தனது ஞானநோக்கத்தால் பெருமான் விலக்கியருளினான். அதன் பின்பு, தாருகாவனத்து முனிவர்கள் தமது மனைவியருடன், காஞ்சி மாநகரத்தில் பிறந்து, இல்லறம் நடத்தி, இறுதியில் தம்மை வந்தடைந்துய்ய அருளினன்’ என்பது புராண வரலாறு.

வாழ்வியல் நெறி

இப்புராணத்தில், ஆணவமலப் பிணிப்பின் அறியாமையால் நெறியற்று, காம வலைப்பட்டவர்களாக, தாருகாவனத்து முனிவர்களின் மனைவியரைக் காண்கின்றோம். தனக்குக் கிடைத்த அரியபேற்றை மதியாமல், ஆணவத்தால் அறிவழிந்து, சினம் என்னும் குன்றேறிச் சிறப்பழிந்தவனாகவும், அறியாமை உடையவனாகவும் அந்தகனைக் காண்கின்றோம். அத்துடன்,

   வேதங்கள் பல கற்றிருந்தும்,  ‘ஞானம் ஈசன்பால் அன்பே’ என்பதை மறந்து, புண்ணியங்களைச் செய்வதே பெரும்பேறு’ என்று கருதிய ஆணவமயக்கத்தின் அறியாமையுடையவர்களாக முனிவர்களைக் காண்கிறோம். ‘காமம், வெகுளி, மயக்கம் ஆகிய முக்குற்றங்களும் நீங்கினால் மட்டுமே உயிர்கள் பிறவிப் பிணிநீங்கி உய்வடையும்.   இவ்வுண்மையை,
‘காமம், வெகுளி, மயக்கம் என்னும்மூன்றன்  நாமம்கெடக் கெடு நோய்’      (திருக்குறள்: 360)

என வள்ளுவமும் வலியுறுத்துகின்றது. அவ்வகையில், ‘நெறியுடைய காமமும், சினத்தை நீக்கிய சிந்தையும், மெய்ப்பொருளைக் காண்கின்ற அறிவும், நம்மை மண்ணில் நல்லவண்ணம் வாழச்செய்து, வானுறையும் தெய்வப்பேற்றுக்கு வகைசெய்யும்’ என்பதே அந்தகனைக் குறிக்கின்ற தொன்மம் உணர்த்துகின்ற வாழ்வியல்நெறியாகும். 

முடிவுரை:

ஆணவமலத்தின் வலிமையால், உயிர்களிடத்தில், ‘காமம், வெகுளி, மயக்கம்’ என்னும் முக்குற்றங்களும் விளையும் என்பதை விளக்கவும், ‘சிவபிரானின் பெருங்கருணை,  ஆணவத்தின் வலிமையை மெலியச்செய்து, ‘ஞானம் ஈசன்பால் அன்பே’ என்னும், உயர்ஞானத்தை விளங்கச்செய்யும்’ என்பதை வலியுறுத்தவும், அப்பர்பெருமான், அந்தகனின் வரலாறாகிய தொன்மத்தைத் தமது திருப்பதிகத்துள் எடுத்தாண்டு அருள்நெறி காட்டியுள்ளார்.

*****

ஆய்வுக்குத் துணைநின்ற நூல்கள்:

  1. தேவாரத் திருப்பதிகங்கள்., ஞானசம்பந்தன். அ.ச., கங்கை புத்தக நிலையம், சென்னை:17,         ஐந்தாம் பதிப்பு: ஜனவரி 2005.
  1. அபிதான சிந்தாமணி., சிங்காரவேலு முதலியார். ஆ., சீதை பதிப்பகம், சென்னை: 5, முதற் பதிப்பு (செம்பதிப்பு): டிசம்பர் 2004.

*****

கட்டுரையாசிரியர்
ஆய்வாளர் – தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.
நெறியாளர்: முனைவர் இரா. மதன் குமார்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *