படக்கவிதைப் போட்டி (157)

 

பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

ஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (21.04.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1214 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

6 Comments on “படக்கவிதைப் போட்டி (157)”

 • Ar.muruganmylambadi wrote on 16 April, 2018, 11:23

  வீதியில் விதி செய்வோம்!!
  ========+===
  தாயாய்காவிரி தாலாட்டும்
  தஞ்சைத்தரணியிலே
  மிஞ்சுபுகழ் கொண்ட
  அண்ணாகாலனி வாழ்
  ஆன்றோரும் சான்றோரும்
  அமைத்து வெள்ளிவிழா
  காணவிழைந்துவரும்
  நேதாஜி மன்றத்துக்கு
  வாழ்த்துக்கள்!!
  கத்திரி வெய்யிலும்
  சித்திரை மாதமும்
  பிரியாமல்வருவதுபோல்
  தமிழுணர்வை மனம்தேக்கி
  தகைமயுடன் வாழும் மக்கள்
  உவகையுடன் கொண்டாடும் விழாசிறக்க உளமார்ந்த வாழ்த்துக்கள்!!!(ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி)

 • Ar.muruganmylambadi wrote on 16 April, 2018, 11:27

  ஆடு..உடல்வளம் நாடு!!
  =====+++++======+++======
  அம்மினியாடும் ரங்கோலி _
  ஜம்முனிருக்குது பங்காளி!!
  குச்சிரெண்டத்தூக்கிகிட்டு
  குதிச்சுக்குதிச்சு ஆடும்போது
  கூடச்சேந்து கும்மிகொட்டி
  ஆடுது ஆசை எனும் ஓங்காளி!
  கச்சிதமாய் கால வச்சுக்
  கைகள் செய்யும் சாகசத்தில்
  உறுப்புகள் முறுக்கேற…விளி
  உற்றுபார்க்கும்போதுகோடாலி
  கூர்மையோடு ஒளி வீசும்!!
  அடிமனசுக்கு ஏற்ற பயிற்சி
  அடித்துப்போகும்மன அழற்சி!!
  வடக்கிருந்துவந்த விருந்தாளி!
  இளமையிலே விளையாட்டு
  இரும்பாக்கும் உடல் வளத்தை
  கரும்பாக்கும் மன நலத்தை!! _
  நோய்நொடிக்குப்பகையாளி!!
  உண்ணுபவை உடன்செரிக்க
  கண்ணயர்ந்து தூக்கம்வர
  பெண்களுக்கு பெரிதுதவி
  நன்குவாழ உதவும்கூட்டாளி! _
  கட்டுடலோடுநற்றவம் சேர
  பட்டொலிவீசிவாழ்வதேஜாலி!!
  ========+++=====++============
  (ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
  பவானி….ஈரோடு….
  9442637264…)
  ==============================

 • Shakthiprabha wrote on 20 April, 2018, 15:05

  வரவேற்பு
  __________

  ஆடை வனப்பு அழகைக் கூட்டி
  அங்கமெங்கும் வர்ணம் பூத்திருக்க,
  உற்றவரை உறவுக்கு உகந்தவரை
  அங்குமிங்கும் படபடக்கும்
  வண்டு விழிகளால் துழாவி
  கண்மலர்களால் வரவேற்று
  கோலாடிக் கொண்டாடினாள்.

  உடன் தாவிய முத்துக்குழைகளும் ஆரங்களும்
  சட்டென இதழ் விரித்த வெண்முத்துக்களுடன்
  கூடியாடி குதித்ததில்,
  மேடையெங்கும் ஒரே முத்துச் சிதறல்கள் !

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 21 April, 2018, 19:31

  கலை வளர்க்க…

  ஆடு மயிலே கோலாட்டம்
  ஆடுமுன் விழிகள் சேலாட்டம்,
  பாடு பாடு தமிழ்ப்பாட்டு
  பாயவே காதில் தேனாட்டம்,
  சூடு சூட்டு முடிசூட்டு
  செந்தமிழ்த் தாய்க்கும் முடிசூட்டு,
  ஈடு இணையே இதற்கில்லை
  இக்கலை வளர்த்தே ஆடுநீயே…!

  செண்பக ஜெகதீசன்…

 • அவ்வை மகள்
  அவ்வைமகள் wrote on 21 April, 2018, 23:25

  சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!
  ———————————————————————————————
  கன்னக்கோல் சுழற்றியாங்கு கயவர் கள்வினை கவர்ந்திடு
  துன்னக்கோல் அசத்தியாங்கு மாதர் நல்வினை கோர்த்திடு
  அன்னக்கோல் துழவியாங்கு அமுத அட்சயம் வளர்த்திடு
  ஆனைக்கோல் தூக்கியாங்கு வலிய தீவினை ஒடுக்கிடு

  சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

  வண்ணக்கோல் தட்டியாடி உடல் சீர்மையைச் செழித்திடு
  திண்ணக்கோல் திருத்தியாடி உளஉறுதியை முறுக்கிடு
  தண்ணக்கோல் வீசியாட்டி கற்பு சூத்திரம் முழக்கிடு
  எண்ணக்கோல் செலுத்தியாடி புதுசாத்திரம் சமைத்திடு

  சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

  செங்கோல் உயர்த்தியாங்கு சட்ட மாற்றமும் வகுத்திடு
  வெங்கோல் நிறுத்தியாங்கு கடின விதிமுறை பதித்திடு
  அங்கோல் கரத்திலாங்கு மல்லாயுதம் எடுத்திடு
  தங்கோல் நாட்டியாங்கு நவயுவ பாரதம் எழுப்பிடு

  சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

  கொடுங்கோல் ஒடித்து ஆங்கு ஆணவம் அகற்றிடு
  கடுங்கோல் மடித்து ஆங்கு உபத்திரம் ஒழித்திடு
  தடுங்கோல் வளர்த்து ஆங்கு பத்திரம் வழங்கிடு
  நெடுங்கோல் வழங்கியாங்கு சுதந்திரம் பெருக்கிடு

  சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

  சுடுங்கோல் பொருத்தியாங்கு வஞ்சநெஞ்சகம் பொசுக்கிடு!
  அடுங்கோல் அணைத்து ஆங்கு அமைதியை நிறுத்திடு
  மடுங்கோல் திருத்தியாங்கு தமிழகநீர்வளம் மீட்டிடு
  எடுங்கோல் எழுப்பியென்றும் நல்லுறவினை உயர்த்திடு! ( சுதந்திரதேவி! —)

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 21 April, 2018, 23:29

  கோபாலா வா..வா..வென்று..
  கோலாட்டம் போடுங்கடி..!
  ========================

  பெண்களின் கலைநயத்தைக் காணுகின்ற கலையில்
  ……….பெருங் கலையே கும்மியடிக்கும் கோலாட்டமாம்..!
  வண்ணம் கொண்ட கழிகளிரண்டைக் கையிலேந்தி
  ……….வகையாய்த் தட்டியே ஒலியெழுப்புமோர் ஆட்டம்..!
  எண்ணத்தை வெளிப்படுத்தும் விசேட ஒலியாய்
  ……….இங்குமங்கும் ஓடியாடி உல்லாசம் கொடுக்குமாம்..!
  கண்ணசைவால் கவரும் இளநங்கைகள் தாங்கள்
  ……….கால்விரலில் உடல்தாங்குமொரு உத்தியை அறிவர்..!

  கண்ணுக்குக் குளிர்ச்சிதரும் பட்டாடை உடுத்தி
  ……….கண்ணன் பிறந்தநாளில் கோலாட்டம் குதூகலமாம்..!
  மண்ணில் அன்னவனால் பிறவி கொண்டோமென
  ……….மாயவனைக் கூத்தாட அழைப்பதுவும் வழக்கமாம்..!
  பண்ணிசையால் பாவையர்கள் பாடுமழகைக் காண
  ……….பறந்தோடி வருவான் மாயப்பிரான் கண்ணனுமே..!
  அண்டத்தைத் தன்னண்ணத்தில் காட்டிய பெருமாயன்
  ……….அகமகிழ்ந்தே ஆயகலையும் கைவர அருளுவான்..!

  பண்ண கடுந்தவத்தால் பார்வதியின் கறுத்தமுகம்
  ……….பளிச்சென முகம்வெளிரப்…பலமாகக் கும்மியடி..!
  வெண்ணெய் திருடுமுன் அந்தத் தாழியுடையுமாறு
  ……….கண்ணன் வருவதற்குமுன் கழிதட்டி ஆடுங்கடி..!
  உண்ணவும் உழைக்கவும் உடல்பயிற்சி பெறவும்
  ……….ஓடியாடி ஒன்றாய்ப்பின்னிப் பிணைந்து கும்மியடி..!
  தண்டையணிந்த நம் குதிகாலும் தரையிலூன்றாது
  ……….வெண்தாடி விருத்தரும் விரைந்துவரக் கும்மியடி..!

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.