‘முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு ‘ சிறுகதைத் தொகுப்பு – ஒரு வாசகர் பார்வை

0

-ஆரூர் பாஸ்கர்

டிஸ்கவரி புக்பேலசின் வெளியீடான அகரமுதல்வனின் “முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு”  வழியாக ஈழத்து இலக்கியத்துக்குள் நுழைந்திருக்கிறேன்.

தொகுப்பில் மொத்தமாகப் பத்து சிறுகதைகள்.  இலங்கைப் போருக்குப்பின்னால் எழுதப்பட்டு வெளிவந்திருக்கும் இந்தத் தொகுப்பு முழுவதுமாக ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிடக்கூடும் ரகமில்லை. நின்று நிதானித்துவாசிக்க வேண்டியது.

ஈழப் போர் கதைகளின் மைய நாதம்.  ஒரு தலைமுறை தாண்டிநடந்த போர். அதைஒட்டி ஒவ்வோரு கதையும் மனிதத்தை, மனித வாழ்வின் இருப்பை, அரசியலை வெவ்வேறு அம்சங்களில் பேசும் கனமானதொரு படைப்பு. தொகுப்பு அகத்தையும் புறத்தையும் சேர்ந்து பேசினாலும், அகம் நெகிழச்செய்கிறது.

ஒவ்வொரு கதையிலும் போரின் கொடுமையை, வலியை ஆர்ப்பாட்டமில்லாமல்  எழுத்தின் வழியே வாசகனுக்குக் கடத்திக்கொண்டே இருக்கிறார்.

“…

நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் முஸ்தாபாவின் சிறிய கண்கள் மூடித்திறக்கின்றன. நினைவுக்கு துன்பம் பற்றிய கவலையில்லை. அது இறந்த காலங்களையும் , நிகழ்காலங்களையும் கண்ணீரால் தொடர்புபடுத்துகிறது. … (பக்கம்-65)”

எனும் வரிகளை வாசிக்கையில் மனதுக்குள் பல உணர்வலைகள் மேலெழும்பி மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது.  வாசிப்புதேர்ந்த கவிஞனுடன் கதைசொல்லியும் ஒரே ஒத்திசைவில் கைகோத்து எழுதிய உணர்வைத் தருகிறது.

“திருவாளர் ஞானசம்பந்தன்” கதையில் ஒரு மறக்கமுடியாத ஒரு உரையாடல்…

ஜீவிதா, நாம் தமிழ்மொழி பேசக்கூடிய அகதி இனமா?

இல்லை நந்திதா, நாம் தமிழ்மொழி பேசுவதால் அகதி இனம்‘ என்பதில் இருக்கும் உண்மை சுடத்தான் செய்கிறது.

அதுபோலப் போர்வலியை, வாதையை, காதலை எனச் சகலமானதையும் கவித்துவமாகச் சொல்லவேண்டும் எனும் உணர்வு எதுவுமின்றி  ஏதோ ஓர் உணர்வு ஆட்கொண்டு எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது.

“…

நிலத்தின் வெளி முழுவதும் மின்மினிப்பூச்சுகளாய்க் குண்டுகள் வெளிச்சத்தோடு பறந்துதிரிந்தன. நம்மைக் காப்பாற்றிய மரங்கள் முறிந்து விழுந்தபடியிருந்தன. துவக்குகளைப் போல நள்ளிரவுகளும் யுத்ததிற்கானதே. ( பக்-57)

எனும் வரிகள் வழியாக யுத்தத்தை நம் கண்முன் நிகழ்த்திக்காட்டுகிறார். அமுதைப் பொழியும் நிலவே என இரவை  காதலியுடன் சேர்ந்திருக்க வேண்டிய இளைஞன் போர்முனையில் அவளைப் பிரிந்து துவக்குகளைப் போல நள்ளிரவுகளும் யுத்தத்திற்கானதே என்பது சங்ககாலத்தை நினைவு படுத்துகிறது.

“…

எனது கையினைப் பற்றியிருந்த அவள் விரல்களில் கசிந்த அன்பின் சங்கதிகள் விரியன்பாம்பைப் போல என்னைக் கொத்துகின்றன.

நான் சாவுக்கு ஆயத்தம் பண்ணப்பட்ட உயிரைச் சுமக்கும் உடலைக் கொண்டவன். அவள் உயிரும் என்னிடமே இருக்கிறது. நிலமதிபக்கம்-57″

இதையெல்லாம் வாசிக்கும் போது ஒரு மனிதனுக்குள் இத்தனை உணர்வுகளா? என மலைக்க வைக்கிறார். தொகுப்பில் அனுபவங்கள் எழுதப்படுவதால் அதில்  வழமையான சுவாரசியங்களை எதிர்பார்ப்பது நியாயமில்லை என என்னை நானே தேற்றிக்கொள்கிறேன். அதுபோலப் பல சொற்கள் தமிழாக இருந்தாலும்  ஈழத்து வழக்குச் சொற்களை புரிந்து கொள்வதில் தமிழ்நாட்டு வாசகர்களுக்குச் சிரமங்கள் இருப்பதால்,  அதற்கு  இணையான சொற்களை அந்தந்தப் பக்கங்களில் அல்லது பின்னுரையில் தந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஐரோப்பாவில் வசிக்கும் ஈழத்து நண்பர்களின் உதவியால் நான் அறிந்துகொண்ட சில ஈழத்துச் சொற்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

சப்பாத்துக்கால்களால் அடித்தான்  – சூ (கால் பாதணி) அணிந்த கால்களால் அடித்தான்.
துவக்கு என்பது துப்பாக்கி
சன்னங்கள் எனில் ஷெல், துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டுகள்
பெடியன் எனில்  ஆண் பிள்ளைப்பசங்க.
குசினி எனில்  சமையலறை (கிச்சன்)
அதுமட்டுமில்லாமல் அகரமுதல்வனின் எழுத்து  மேலோட்டமாக இல்லாமல்வாசிக்கையில் வாசகனின் கவனத்தை முழுமையாகக் கோரும் எழுத்து.

எனக்கு ஈழத்து எழுத்தின் முதல் பரிச்சயம் என்பதால் கூட அப்படித் தோன்றி இருக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் தவறவிடாமல் கண்டிப்பாக வாசிக்கவேண்டிய தொகுப்பு.

முதல் பதிப்பு என்பதாலோ என்னவோ எனக்குப்  பல எழுத்துப்பிழைகள் கண்களில் பட்டன. அட்டையில்  “முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு” எனச் சரியாக இருக்கும் ஒற்று நூலின் உள்ளே ஓவ்வோரு பக்கத்திலும் விடுபட்டு போனதே ஒரு பதமாக இருக்கும்.

*****

தலைப்பு: முஸ்தபாவைச் சுட்டுக் கொன்ற ஓரிரவு
நூலாசிரியர்: அகரமுதல்வன்
பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்
விலை: 100
பக்கங்கள்:111
ISBN:978-93-8430-210-8

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *