பழந்தமிழக வரலாறு – 6

 

 

         மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு

 

                                      கணியன்பாலன்

பண்டைய சங்ககாலத் தமிழகத்தின் தத்துவார்த்த, அறிவியல், கலை சார்ந்த அனைத்துச் சிந்தனைகளையும் “மூலச்சிறப்புடைய தமிழ்ச் சிந்தனை மரபு” எனலாம். இந்தச்சிந்தனை மரபு 1000 ஆண்டுகளுக்கும் மேலான மிக நீண்ட நெடிய காலத்தைக்கொண்டதாகும். இந்த மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு ‘பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனை’ என்கிற ஒரு உறுதியான அடித்தளத்தைக் கொண்டிருந்தது. அதில் சாங்கியம்(எண்ணியம்), உலகாயதம், பூதவாதம், வைசேடிகம்(சிறப்பியம்), ஆசிவகம், நியாயவாதம் எனப்பலவிதமான மெய்யியல் சிந்தனைகள் இருந்தன. கடவுள் மறுப்பும், வைதீக எதிர்ப்பும்  பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையில் உறுதியாக நிலை கொண்டிருந்தது. கிட்டத்தட்ட 1200 ஆண்டுகளாகச் சங்கம் மருவிய காலம் முடியும்வரை(கி.மு. 1000-கி.பி. 200), இந்தப் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள்தான் தமிழ் சமூகத்தின் அடித்தளக் கருத்தியலாக இருந்து வந்தன.

முனைவர். கா. இராசன் அவர்கள் தான் எழுதிய தொல்லியல் நோக்கில் சங்ககாலம் என்கிற நூலில் கி.மு. 1000 வாக்கில் தமிழகத்தின் தென் பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டிலும், வடபகுதியில்புதிய கற்காலப் பண்பாட்டிலும் வாழ்ந்த மக்கள் இருவரும் இணைந்து ஒரு மிகப்பெரிய பண்பாட்டுப் புரட்சிக்கு வித்திட்டனர் எனவும், அன்றே அவர்கள் ஒருவகையான வரிவடிவத்தைத் தமது கருத்துப்பரிமாற்றத்திற்குப் பயன் படுத்தினர் எனவும், இவர்களே ஒரே வகையான மொழி, வரிவடிவம் என்ற கட்டமைப்பை உருவாக்கி அதன் மூலம் தமிழ்ச் சமுதாயம் என்ற  அமைப்பை ஏற்படுத்தவும், தமிழகத்தின் சங்ககால எழுச்சிக்கும் வித்திட்டவர்கள் என்கிறார்-(1).   தென்பகுதியில் நுண்கற்கருவிகள் பண்பாட்டைச் சேர்ந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வின் காலம் சுமார் கி.மு. 2000 என அறிவியல் ஆய்வு உறுதி செய்துள்ளது என்கிறார் முனைவர் அ. இராமசாமி-(2). ஆதிச்சநல்லூர் கி.மு. 1500 வாக்கில் ஒரு தொழில் நகரமாக இருந்தது எனவும் அங்கு உயர் தொழில்நுட்பமிக்க உயர்தரமான இரும்பு எஃகும், பிற உலோகங்களும் தயார் செய்யப்பட்டன எனவும், வெண்கலப் பொருட்கள் தயாரிப்பில் அவர்கள் மிக உயர்ந்த தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்தனர் எனவும் முனைவர் அ. இராமசாமி குறிப்பிடுகிறார்-(3).  ஆகவே இப்பண்பாட்டுப்புரட்சி தென்பகுதியில் கி.மு. 1000க்கு முன்பே நடந்து, பின் வடபகுதியோடு இணைந்து மேலும் வலிமை பெற்றது எனலாம். இந்த மிகப்பெரிய தொழிநுட்பப் பண்பாட்டுப் புரட்சியின் தொடர்ச்சியாக உருவாகியதுதான் பொருள்முதல்வாத மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட  ‘மூலச்சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபு’ ஆகும்.

பண்டையத் தமிழ்ச் சமூகம்:

தமிழ்ச் சமூகம் பண்டையகாலத்திலிருந்து மெய்யியல்,  அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம் ஆகியவற்றில் ஒரு புகழ்பெற்ற மரபைக்கொண்டிருந்தது. கி.மு. 1000க்கு முன்பிருந்து நிறையச் சிறு சிறு நகர்மைய அரசுகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்தன. நறுமணத் திரவியங்களின் உலகத்தேவையும் அதன் வணிகமும், தமிழர்களைப் பெரும் கடலோடிகளாக மாற்றியமைத்தன.  இவையெல்லாம் கி.மு. 1000 க்கு முன்பிருந்து நடந்து வருகிறது எனினும் கி.மு. 7ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழக வணிகம் தொடர்ச்சியாகவும் உலகளாவிய அளவிலும் நடைபெற்றது. தமிழகத்தில் தனித்தனி வேந்தர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிளைஅரசர்கள்,  சிறுகுறு மன்னர்கள், வேளிர்கள் எனப் பலதரப்பட்ட அரசுகளின் கீழ் நிறைய சுதந்திரமான  நகர்மைய அரசுகள் இருந்தன. அவை தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் சுதந்திரமான வணிக நகர்மைய அரசுகளாகவும் பரிணமித்தன. பொருள் உற்பத்தியும், தொழில் நுட்பமும் வணிகமும் பெருகி வளர்ந்து கொண்டிருந்தன. இந்தச் சிறு குறு நகர்மைய அரசுகளே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைக்கும் அறிவியல், தொழிநுட்பம், பொருள்உற்பத்தி, வேளாண்மை, வணிகம், இயல், இசை, நாட்டியம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் காரணகர்த்தாக்களாக இருந்தன. ஆதலால் கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே மூலச்சிறப்புள்ள தமிழ் மெய்யியல் சிந்தனை ஒரு சிறப்பு வடிவத்தைப்(தொல்கபிலரின் எண்ணியம்)  பெற்றுக்கொண்டது.

திரு. வி. கிரபிவின் அவர்கள் “உலகத்தைப்பற்றிய பொருள்முதல் வாதக்கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும், பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், கி.மு. இரண்டாயிரம் ஆண்டின் தொடக்கத்திலும் உருப்பெற்றது” என்கிறார்-(4). அக்காலகட்டத்தில் எகிப்திலும் பாபிலோனியாவிலும் நகர அரசுகள் தோன்றி வளர்ந்து உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை மாறிக்கொண்டிருந்தன. ஆதலால் நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி வணிக நகர அரசுகளாக அவை வளர்கிற போது  பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்கிறது எனலாம். கிரேக்கத்தில், கிரேக்க நகர அரசுகள் தோன்றி உற்பத்தி பெருகி, அவை வணிக நகர அரசுகளாக வளர்ந்த போது பொருள்முதல்வாதக் கண்ணோட்டமும் தோன்றி வளர்ந்தது.  மறுமலர்ச்சிக்கால ஐரோப்பாவில், இத்தாலியின் வெனிசு போன்ற நகரங்களில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சிதான் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தது. ஆகவே சுதந்திரமான வணிகநகரங்கள் முற்போக்கான அறிவியல் கண்ணோட்டம் உடைய சிந்தனைகளின் வளர்ச்சிக்கான காரணிகளாக இருந்துள்ளன என்பதை வரலாறு பலவிதங்களிலும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த வணிக நகர அரசுகள் பேரரசுகளாக மாறும்பொழுது பொதுமக்களையும் அடிமைகளையும் கட்டுப்படுத்தி வைக்கப் பொருள் முதல்வாத மெய்யியலை அழித்து அவ்விடத்தில் கருத்துமுதல்வாத மெய்யியலைக் கைக் கொள்கின்றன. வட இந்தியாவில் 16 ஜனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகள் உருவாகி வணிகம் பெருகி வளர்ந்துகொண்டிருந்தபொழுதுதான் கி.மு. 8ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் பொருள்முதல்வாதச்சிந்தனையை  ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை உருவாகியது. அதன் விளைவாகவே பல்வேறு பொருள்முதல்வாதச் சிந்தனைபள்ளிகள் அங்கு வளர முடிந்தது. கி.மு. 6ஆம் நூற்றாண்டிலிருந்து அந்நிலை மாறி அங்கு பேரரசுகள் உருவாகத்துவங்கின. பேரரசுகளின் உருவாக்கம் பொருள்முதல்வாத மெய்யியல் வளர்ச்சியைத்தடுத்துவிடும் என்பதால் வட இந்தியாவில் ஓரிரு நூற்றாண்டுகள் மட்டுமே பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைபள்ளிகள் வளர முடிந்தது. ஆனால் தமிழகத்தில் முன்பு கூறியவாறு கி.மு. 1000 க்கு முன்பிருந்து நகர்மைய அரசுகள் தோன்றி வளர்ந்து, கி.மு. முடிய, 1000 வருடங்களுக்கும் மேலாக கிரேக்க, உரோம நகர அரசுகளைப்போன்ற வளர்ச்சிபெற்ற வணிக நகர அரசுகளாகப் பண்டைய தமிழக நகர்மைய அரசுகள் இருந்து கொண்டிருந்தன. அதனால்தான் சாங்கியம், போன்ற மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனை மரபு தோன்றி வளர முடிந்தது. தமிழகத்தில் எண்ணியம் மட்டுமின்றி பூதவாதம், சிறப்பியம், ஆசிவகம், கடவுள் மறுப்புச் சிந்தனையான நாத்திகம் போன்ற பலவகையான பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தோன்றி வளர்ந்தன. இந்தச் சிந்தனைகள்தான் இந்தியா முழுவதும் பரவின. எண்ணியம், சிறப்பியம் ஆகியவற்றின் மூலவர்களான தொல்கபிலர், கணாதர் ஆகிய இருவர் குறித்து, இந்திய மெய்யியல் வள₹₹ர்ச்சியடைவதற்குக் கபிலரும், கணாதரும் முன்னொடிகளாக இருந்தனர் எனவும், இருள் சூழ்ந்திருந்த இந்திய வானில் ஒளிவீசும் விண்மீன்களாக இந்த இரண்டு மாமனிதர்களும் தோன்றினார்கள் எனவும் கூறுகிறார் பிரேம்நாத் பசாசு(5). தமிழ்ச்சிந்தனை மரபின் மூலவர்களான தொல்கபிலர், கணாதர், பக்குடுக்கை நன்கணியார், பூரணகாயபர், நரிவெரூத்தலையார் போன்றவர்கள் தமிழர்கள்தான் என உறுதிப்படுத்தியதில் க.நெடுஞ்செழியன் அவர்களின் பங்கு மகத்தானதாகும்.

 

தமிழகத்தில் இருந்த ஆட்சியாளனின் அரச அதிகாரம் பொதுமக்கள் சபைகளால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என கி.மு. 4ஆம் நூற்றாண்டு கிரேக்கத் தூதுவரான மெகத்தனிசு அவர்கள் கூறுவதாகக் கூறுகிறார் நேரு அவர்கள்-(6). மெகத்தனிசுவின் கருத்தைக் கணக்கில் கொள்வதன் மூலம் தமிழகத்தின் பண்டைய நகர அரசுகளின் அமைப்பை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். நகரங்களிலும், ஊர்களிலும் குடவோலை முறையில் நகர, ஊர்ச் சபைகளின் பிரதிநிதிகளையும், பல்வேறு துறைகளுக்கான வாரியப் பொறுப்பாளர்களையும் நியமிக்கத் தேர்தல்கள் நடைபெற்றன என்பதை மருதன் இளநாகனாரின் பாடல்(அகம்-77) தெரிவிக்கிறது.  இதன் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டாகும். ஆகவே சங்ககாலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரச் சபைகளும், ஊர்ச்சபைகளும், வாரியப் பொறுப்பாளர்களும் இருந்தனர் என்பதும் அவர்கள் பலவிதங்களில் அரசனுடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்தினர் என்பதும் மேற்கண்ட மெகத்தனிசின் கூற்று மூலமும், மருதன் இளநாகனார் தரும் தேர்தல் முறை மூலமும் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆகவே தனித்தனியான ஆட்சியாளனின் கீழ் மிக நீண்ட காலமாக இருந்து வந்த சுதந்திரமான பலவகைப்பட்ட வணிக நகர, நகர்மைய அரசுகள் தான் மூலச்சிறப்புள்ள பொருள்முதல்வாத மெய்யியல்சிந்தனைகள் தமிழகத்தில் தோன்றி வளர்ந்ததற்கான அடிப்படைக் காரணம் ஆகும். 3000 ஆண்டுகளுக்கும் முந்தைய, மூலச் சிறப்புடைய தமிழ்ச்சிந்தனை மரபானது, பொருள் முதல்வாத மெய்யியல் சிந்தனையைத் தனது அடித்தளமாகக் கொண்டு, வளர்ச்சி பெற்ற வணிக நகர அரசுகளைக் கொண்டிருந்த பண்டைய தமிழ்ச் சமூகத்தில், 1000 வருடங்களுக்கும் மேலாக மிகப்பெரும் செல்வாக்குடனும், புகழுடனும் இயங்கி வந்துள்ளது.

பார்வை:

  1. முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 74, 75, 76.

2.அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிகவரலாறு, டிசம்பர்-2013, பக்:62.

  1. “ “    பக்: 52-64.

4.’இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன?’  இரசிய நூல், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ பக்:43.

5.இந்திய வரலாற்றில் பகவத்கீதை, பிரேம்நாத் பசாசு, தமிழில் கே.சுப்ரமனையன், விடியல் பதிப்பகம், சனவரி-2016, பக்:131.

6.சவகர்லால் நேரு, உலகச் சரித்திரம், தமிழில் ஒ.வி. அளகேசன், முதல் பாகம், 2006, பக்: 153.

ஆதார நூல்: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 777-818.

 

 

 

 

 

Share

About the Author

கணியன் பாலன்

has written 21 stories on this site.

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்பொறியியல் கல்லூரியில் வேளாண்மைப் பொறியியல் பட்டப்படிப்பு படித்துவிட்டு, தமிழக அரசின் வேளாண்மைப்பொறியியல் துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர். தமிழக நீர் வளம் குறித்துச் சிறு நூல்கள் சிலவற்றை எழுதியவர். தமிழக வரலாறு குறித்து “பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்” என்ற மிகச்சிறந்த நூலை ஏழு வருடங்கள் ஆய்வு செய்து எழுதியவர். இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கிய சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வீ.அரசு அவர்கள், “சங்க இலக்கியங்களை காலவரிசைப்படுத்தல் ஆய்வுகளில் பேரா. சிவராசப்பிள்ளை, பேரா. கமில் சுவெலபில் ஆகியோர் வரிசைப்படுத்த முயன்றுள்ள போக்குகளின் அடுத்தகட்ட ஆய்வாகக் கணியன்பாலன் அவர்களது ஆய்வுகள் வடிவம் பெற்றுள்ளன…….இதற்கென அவர் மேற்கொண்ட உழைப்பு என்பது பிறரை மலைக்கச்செய்கிறது. அர்ப்பணிப்பு, ஈடுபாடு, தொடர்வாசிப்பு, தேடல் ஆகிய அனைத்திற்கும் உரியவராக ஆய்வாளர் கணியன்பாலன் அவர்களைக் காணமுடிகிறது…… கணியன்பாலன் அவர்களின் தேடல், அதற்கான அவரது உழைப்பு ஆகியவற்றைத்தமிழ்ச் சமூகம் கொண்டாடவேண்டும்….. அவர் தமிழ்ச் சமூகத்திற்குக் கிடைத்துள்ள மிக அரிய வளம். இந்த வளத்தை நாம் போற்றிப் பாராட்டுவோம்” எனக்குறிப்பிட்டுள்ளார்.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.