திருவுடை மன்னரும் தீராத நோய்களும்!

-மேகலா இராமமூர்த்தி

உலகைப் படைத்துக் காப்பவன் இறைவன் என்றொரு நம்பிக்கை உலக மக்களில் பெரும்பான்மையோருக்கு உண்டு. விண்ணுலகவாசியாய்க் கருதப்படும் கடவுளைக் கண்ணால் கண்டவர் உண்டா என்பது இன்றுவரை விவாதத்துக்குரிய பொருளாகவே இருந்துவருகின்றது. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்று இதற்கு விடைசொல்லிச் சென்றுவிட்டார் தமிழ்ச் சித்தரான திருமூலர்.

விண்ணுலகக் கடவுள் காட்சிக்கு எட்டாதவராக ஆகிவிட்டமையால், மண்ணுலக மாந்தரின் காட்சிக்குத் தென்படுபவராகவும் அவர்தம் குறைகளைக் களைபவராகவும் கடவுள் ஒருவர் தேவைப்பட்டார். ஆகலின் திருவும் உருவும் வலிவும் பொலிவும் மிக்க ஆடவன் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அரியணையில் அரசனாய் அமர்த்தி அழகுபார்த்தனர் மக்கள். ’திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே’ என்று அவனைக் கண்டு பரவசமடைந்தனர்.

இறை என்ற பெயர் அற்றை நாளில் இறைவனுக்கு மட்டுமல்லாது அரசர்களுக்கும் பொதுவான பெயராக விளங்கிவந்தது. அரசர்தம் மாட்சியை விளக்கவந்த வள்ளுவர், ’இறைமாட்சி’ என்றோர் அதிகாரம் படைத்திருப்பது அக்கருத்துக்கு அரண் சேர்க்கின்றது. தன் கருத்தை மேலும் தெளிவுபடுத்த விரும்பிய அவர்,

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்
என்று விளம்பினார்.

கோயில் என்றசொல்கூட கோவாகிய அரசனின் இல்லத்தை – அரண்மனையைக் குறிக்கும் சொல்லாகவே அன்று பயன்பாட்டில் இருந்திருக்கின்றது.

”…வாயில் வந்து கோயில் காட்டக் 
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி…” (சிலப்: வழக்குரை காதை) என்ற சிலப்பதிகார வரிகள் இதனை உறுதிசெய்கின்றன.

பாடப்படும் ஆண்மகனின்/அரசனின் கொடை, வீரம், வென்றிச் சிறப்பு முதலியவற்றைப் போற்றும் ’பாடாண்’ எனும் தமிழிலக்கணப் புறத்திணையின் துறைகளில் ஒன்றாகக் கருதப்படுவது பூவைநிலை. பூவை என்பது காயா மரத்தைக் குறிக்கும் சொல்லாகும். காயாம்பூ வண்ணனாகிய திருமாலை ஒப்புமைகாட்டி அப்பூவைப் புகழ்தல் பூவைநிலை ஆகும். இத்துறை அரசனைத் திருமாலோடு ஒப்பிட்டு போற்றுகின்ற துறையாக மாற்றமும் வளர்ச்சியும் பெற்றதற்குச் சங்கப்பாடல்கள் பல சான்றாய் நிற்கின்றன.

கண்கண்ட தெய்வமாய்த் திகழும் அரசனைத் தரிசித்தால் தம் தீராத நோய்களெல்லாம் தீரும் என்றொரு நம்பிக்கையும் அன்றைய மக்களிடம் இருந்திருக்கின்றது. சங்கப் புதையலான புறநானூற்றில் இடம்பெற்றுள்ள பாடலொன்று இதற்கு ஆதாரமாய் விளங்குகின்றது.

பொறையர் குடியில் பிறந்து கொங்குநாட்டுக் கருவூரில் முடிசூட்டிகொண்ட அரசன் ஒருவன் இருந்தான்; ஒளிமிகு வாளேந்தித் தன் வெந்திறலால் பகைவரின் செருக்கழிப்பதிலும், தண்ணளியால் குடிகளைக் காத்தோம்புவதிலும் வல்லவனான அவன், ’கரூவூரேறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரலிரும்பொறை’ எனும் பெயரால் அழைக்கப்பட்டான்.

மெய்ப்பொலிவு மிக்கவனாக விளங்கினான் அவன். அவனுடைய எழில்வடிவைக் கண்டோர் தம் உடற்பிணிகள் நீங்கப்பெறுவர் என்ற எண்ணம் அவன் குடிகளிடம் இருந்தது. அதனைச் சான்றோர் வாயிலாய் அறிந்தார் நரிவெரூஉத்தலையார் எனும் நல்லிசைப் புலவர். யாதுகாரணத்தாலோ அவருடைய தலை, நரி அஞ்சுதற்குரிய தலையாக இருந்திருக்கின்றது. (அப்படியாயின் அவர்தலை நாயின் தலைபோல் இருந்திருக்கவேண்டும்; அது எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கான விளக்கங்கள் ஏதும் சங்கப்பாடல்களில் கிட்டவில்லை.) ஏதேனும் நோய் காரணமாகத் தலையின் அமைப்பு மாறிப்போனதோ என்னவோ நாமறியோம்.

இரும்பொறையைக் கண்டால் தன் விகார வடிவம் விடைபோற்றுப் போகும் என்றறிந்த அவர், அந்நன்னாளை ஆவலோடு எதிர்நோக்கியவராய்க் கருவூருக்கு விரைந்துவந்தார். பேரெழில் வாய்ந்த சேரனின் ஒளிமிகு திருமுக மண்டலத்தைக் கண்டதும், அவரின் கோரவடிவம் மாறி, இயல்பான தோற்றத்தைப் பெற்றாராம்! அதனால் மட்டிலா மகிழ்ச்சியடைந்த புலவர் பெருந்தகை, அரசனை அன்போடும் நன்றிப்பெருக்கோடும் வணங்கினார்; கண்ணீர்மல்க வாழ்த்தினார்.

பின்னர், மன்னனுக்குத் தான் கூறவிழைந்த நன்மொழிகளை ஓர் இன்கவியில் எடுத்தியம்பலானார்.

எருமை யன்ன கருங்கல் லிடைதோறு
ஆனிற்
பரக்கும் யானைய முன்பின்
கானக
நாடனை நீயோ பெரும
நீயோர்
ஆகலின் நின்னொன்று மொழிவல்
அருளும்
அன்பும் நீக்கி நீங்கா
நிரயங்
கொள்பவரோடு ஒன்றாது காவல்
குழவி
கொள்பவரின் ஓம்புமதி
அளிதோ
தானேயது பெறலருங் குரைத்தே. (புறம்: 5 – நரிவெரூஉத்தலையார்)

”பெரும! எருமைபோலும் வடிவையுடைய  கரிய கற்பொருந்திய  இடந்தோறும் பசுக்கூட்டம்போலப் பரக்கும் யானைகளைக் கொண்ட, வலிமைமிகு காட்டிற்குள்ளே அமைந்த அரணுடைய நாட்டையுடையவனே! இங்ஙனம் பகைவரால் அணுகப்படாத இயல்பாகிய பெருஞ்செல்வத்தை யுடையவன் நீ ஆதலின் உனக்கொன்று சொல்லுவேன் கேட்பாயாக!

அருளையும் அன்பையும் நீக்கிப் பாவஞ்செய்து, நீங்காத நரகத்தைத் தமக்கு  இடமாகக் கொள்பவரோடு பொருந்தாது, நின்னால்  காக்கப்படும் தேயத்தைக் குழவியை வளர்ப்பாரைப் போலப் பாதுகாப்பாயாக!  அளிக்கத்தக்கதொன்றும், பெறுதற்கரியதுமானது அக்காவல்.” என்று பொருள்செறி அறிவுரை பகர்ந்தார் புலவர்பெருமான்.

”குழவியைப்போல் நாட்டை ஓம்பு” என்றமையால் இது செவியறிவுறூஉவும், ”அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங்கொள்பவரோடு ஒன்றாதே” என்றமையான் இது பொருண்மொழிக்  காஞ்சியுமாயிற்று.

“நிரயங்  கொள்பவரோ   டொன்றாது   காவலை 
யோம்பென  வேம்புங் கடுவும்போல வெய்தாகக் கூறி  மன்னற்கு உறுதி பயத்தலின் இது வாயுறை வாழ்த்தாயிற்று” என்பர் உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்.

அரசனைத் தரிசித்தால் நோய்களும், சங்கடங்களும் தீரும் எனும் நம்பிக்கை நம்மவரிடம் இருந்ததுபோலவே மேனாட்டாரிடமும் இருந்திருக்கின்றது என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகின்றது.

காசநோய் காரணமாகக் கழுத்திலுள்ள நிணநீர்ச் சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம் (Tuberculous cervical lymphadenitis better known as scrofula or the King’s Evil), அரசர்களால் குணமடையும் எனும் நம்பிக்கை மேற்குலக நாடுகளான இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் அன்று இருந்திருக்கின்றது. 15ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தை ஆட்சிசெய்த ஆறாம் ஹென்றி (Henry VI – 1485–1509) ஒரு தங்க நாணயத்தை (touch piece), நோயாளியின் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் வைத்துத் தடவுவது (royal touch), அந்நாணயத்தை நோயாளியின் கழுத்தில் கட்டித் தொங்கவிடுவது முதலியவற்றைச் செய்து நோயாளிகளைக் குணப்படுத்தினாராம். இவரைப் போலவே இவருக்கு முன்னும் பின்னும் ஆட்சிசெய்த பல அரசர்கள் ஈதொத்த தொடுவழி சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஓராண்டுக்கு எத்தனை நோயாளிகளை இவ்வாறு தொடுவது, எந்தச் சமயங்களில் தொடுவது என்பது போன்ற வரையறைகளும் பின்பற்றப்பட்டிருக்கின்றன என்பது நமக்கு மேலும் வியப்பைக் கூட்டுகின்றது.

கிருமித்தொற்றால் ஏற்படும் நோய்கள் அரசன் ஒருவன் தொட்டால் குணமாகிவிடுமா? இதற்கெல்லாம் மருத்துவரை அல்லவா நாடவேண்டும்? என்று பகுத்தறிவின்பாற்பட்டுச் சிந்தித்து வினா எழுப்பினால் விடை பகர்வது கடினம். உளவியல் பார்வையில் இதனை அணுகுவோமேயானால்… நிறைந்த நம்பிக்கையோடும், நேரிய எண்ணத்தோடும் (Positive thinking) நாம் செய்கின்ற பல செயல்கள் வாழ்வில் வெற்றியடைவது கண்கூடு. அந்த அடிப்படையில், அரசனைத் தரிசித்தால் – அவன் புனிதக் கரங்கள் நம் நோயுடலைத் தொட்டால் நோய்கள் அகன்றுவிடும் எனும் மக்களின் திடமான நம்பிக்கைகூட அவர்களின் நோய்க்கு நல்லதொரு சிகிச்சையாக அமைந்திருக்கக்கூடும்.

எது எப்படியாயினும், அரசன் என்னும் மனிதனைப் புனிதனாகவும், ஏன்… வழிபடு கடவுளாகவுமே வையத்து மாந்தர் மதித்தனர்- துதித்தனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

 

 

மேகலா இராமமூர்த்தி

மேகலா இராமமூர்த்தி

Share

About the Author

மேகலா இராமமூர்த்தி

has written 361 stories on this site.

2 Comments on “திருவுடை மன்னரும் தீராத நோய்களும்!”

 • Mrs.Radha wrote on 23 April, 2018, 13:35

  கட்டுரை ஆசிரியர் மேகலாவிற்கு நன்றி. சங்க இலக்கிய ஒப்பீடுகளுடன் அழகாக அமைந்துள்ளது கட்டுரை. ஆறாம்
  ஹென்றியின் நாணயம் போலவே தமிழ் நாட்டில் சிங்க காசு ஒன்றை என் சிறுவயதில் புழக்கத்தில் இருந்ததுண்டு
  அதனை அஃகி எனும் நோய்யின் மீது செம்மண்ணில் நனைத்து போடுவார்கள். நோய் அகன்றுவிடும். இது காலப்போக்கில் மதுரைமாவட்டத்திலேயே மறைந்துவிட்டது

 • மேகலா இராமமூர்த்தி
  மேகலா இராமமூர்த்தி wrote on 25 April, 2018, 18:54

  பாராட்டுக்கும் சுவையான மேலதிகத் தகவலுக்கும் மிக்க நன்றி திருமதி. ராதா.

  அன்புடன்,
  மேகலா

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.