க. பாலசுப்பிரமணியன்

 

வாழ்க்கைக்கு உணவு ஒரு வரப்பிரசாதம் !

ஒரு மருத்துவர் ஒரு இளைஞனைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார். அந்த இளைஞனுக்குச் சில நாட்களாக வயற்றில் வலி. மருத்துவருக்கு அவன் குடலில் புண் இருந்தது தெரிய வந்தது..  அங்கே உடன் இருந்த அந்த இளைஞனின்  தந்தை வருத்தத்தோடு மருத்துவரைப் பார்த்துக்கூறினார் “இது என்ன குடலில் புண் வர வயதா அய்யா? சின்ன வயது.. சாப்பிட்டால் கல்லும் கரையும் என்று சொல்லுவார்கள் ..”

அந்த மருத்துவர் அந்த இளைஞனின் தந்தையை சற்றே உற்று நோக்கினார்.. சிரித்தார்… “உண்மை தாங்க ,, இது கல்லும் கரையர வயது.. ஆனால் நாமே நம்முடைய உடல் உறுப்புக்களை பழுதாக விட்டால் அங்கே கல் எப்படி கரையும்?… சாப்பாடு கூட ஜீரணிப்பதில்லை…”

மருத்துவர் கேட்டார் “உங்க பையன் வேளாவேளைக்கு ஒழுங்காகச் சாப்பிடுகிறாரா?”

“இல்லீங்க அவன் வேலை அப்படி…  நேரத்துக்குச் சாப்பாடு கிடையாது.  அடிக்கடி காப்பிதான்”

“அவர் உட்கார்ந்து அமைதியாக சாப்பிடுகின்றாரா?”

“இல்லீங்க… அவர் எப்பவும் அவசர அவசரமாக சாப்பிடுவதுதான் வழக்கம். எப்பவும் காலிலே கஞ்சியைக்கொட்டிக்கொண்ட மாதிரி..  உட்கார்ந்து சாப்பிடறதே கிடையாது.. நின்றுகொண்டு.. நடந்து கொண்டு. போன் பேசிக்கொண்டு … டிவி பார்த்துக்கொண்டு.. ”

மருத்துவர் சிரித்தார்… “அவர் ருசித்து சாப்பிடுவாரா ?”

அந்தப் பெரியவர் சிரித்தார்.. “இவங்க சாப்பிடறதெல்லாம் அள்ளித் தெளித்த கோலம் மாதிரிங்கா.. ஏதோ எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்து உள்ள தள்ளறாங்க… அறுசுவைனா என்னான்னு கேளுங்க… ஒன்றும் தெரியாது…”

“அய்யா.. நேரத்துக்குச் சாப்பிடுவதில்லை.. அளவாகச் சாப்பிடுவதில்லை… சுவைத்துச் சாப்பிடுவதில்லை.. அமர்ந்து அமைதியாகச் சாப்பிடுவதில்லை… சாப்பிடுவது என்பது ஒரு தினசரி வேலையா.. இல்லை .. வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு ஆதாரமா.. ..நாம் உடலுக்குத் தகுந்தபடி ஒத்துழைக்கவில்லையென்றால் உடல் நம்மோடு எப்படி ஒத்துழைக்கும்? குடல் நோய்கள் ஏன் வாராது?”

இந்த நிலையை நாம் பல வீடுகளில் பார்க்கின்றோம். உணவை உடலுக்கு ஒரு சக்தி தரும் உள்ளீட்டாகக் கருதாமல் கருதாமல், உடலையும் உள்ளத்தையும் பாதுகாக்கும் ஒரு மருந்தாகக் கருதாமல், வேகமான வாழ்க்கைக்கு ‘வேகமான உணவுகளைத்” தேடி ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

ஒருமுறை ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் நகருக்குக் சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு அன்பர் கேட்டார் “அன்பரே.. உங்களுக்கு நல்ல சாப்பாடு வேண்டுமா அல்லது விலையுயர்ந்த சாப்பாடு வேண்டுமா?’  நான் சற்றே திகைத்தேன்.. “விலையுயர்ந்த சாப்பாடு வேண்டுமென்றால் அருகில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் உண்ணலாம். நல்ல சாப்பாடு வேண்டுமென்றால் அருகில் உள்ள “தாபா”வில் சாப்பிடலாம். எப்படி வசதி?”

என்னுடைய அமைதியைக் கண்ட அவர் இந்த ‘தாபா”வில் உடனே தயாரிக்கப்பட்ட சூடான உணவு கிடைக்கும். அங்கே என்ன கிடைக்கும் என்று உங்களுக்கே தெரியும” என்கிறார்.

நாம் எங்கே சாப்பிடுகின்றோம் என்பது முக்கியமில்லை. எதை உண்கின்றோம் எப்படி உண்கின்றோம். எந்தச் சூழ்நிலையில் உண்கின்றோம் என்பது மிகவும்  அவசியமாகக் கருதப்படவேண்டிய ஒன்று. சாப்பிடுவதற்காகவே வாழ்கின்றவர்கள் ஒரு வகை என்றும் வாழ்க்கையில் உணவின் சீரிய நோக்கத்தை சற்றும் அறியாதவர்கள் என்றும் இருவகையாகப் பிரிக்கலாம். நல்ல வாழ்விற்கான உணவு முறைகளை கூறும் வல்லுநர்கள் அறிவுரை:

  1. சத்தான உணவு
  2. சீரான உணவு
  3. சரியான நேரத்தில் உணவு
  4. சுவையான உணவு
  5. சுத்தமான உணவு

இதை அத்தனையும் விட உண்ணும் நேரத்தில் உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது? உங்களுக்கு உணவு அளிப்பவர்கள் மனநிலை எப்படி இருக்கின்றது? கூட அமர்ந்து உண்ணுபவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? என்பதை பற்றியெல்லாம் மனநல வல்லுநர்கள் ஆலோசனைகள் கூறுகின்றனர்.

ஒரு விழாவின் முடிவில் விருந்து அளிக்கப்பட்டது. அதில் ஏறக்குறைய நூறு வகையான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும் சுவையாக இருந்தாலும் ஒருவரால் அத்தனையும் உண்ண முடியுமா? எது நமக்குத் தேவையோ எது நமக்கு விருப்பமோ, எது நமது உடலுக்கு உகந்தது அதைத் தானே உண்ணமுடியும் ? அதைத்தானே உண்ண வேண்டும் ?

அன்பாகப் பரிமாறப்படும் உணவில் உள்ள ஆக்க சக்தி எவ்வளவு அதிகமானது? நமது குடும்பங்களில் சிறிதளவே உணவு தயாரிக்கப்பட்ட நிலையிலும் அதை அன்புடன் பகிரும்பொழுது வயிறோடு மனமும் நிறைந்ததைப் பார்த்திருக்கின்றோமே !

வாழ்க்கையில் உணவு ஒரு பெரிய வரப்பிரசாதம்!  அதற்குரிய மரியாதையையும் முக்கியத்துவத்தையும் கொடுத்து வாழ்க்கையை வளம் பெறச் செய்யலாமே ! `

சிந்திக்கலாமே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *