சிற்றிலக்கியச் சமுதாய வாழ்வியல் மதிப்புகள்

-முனைவர் நா.கவிதா

இல்வாழ்க்கையில் தனிமனித நிலை, குடும்ப நிலை, உறவினர் நிலை, சமூக உறுப்பினர் நிலை, குடிமக்கள் நிலை என்னும் தளங்களில் மனிதர்கள் பாதுகாக்க வேண்டிய, ஆற் வேண்டிய பணிகள் போற்றத்தகுந்த பண்புகள் எனப் பன்முகக் கூறுகளை ஒழுங்குற வகைப்படுத்தினால் அவை வாழ்வியல் மதிப்புகள் ஆகும். இத்தகைய சமுதாய வாழ்வியல் மதிப்புகள் சிற்றிலக்கியக் காலகட்டத்தில் எத்தன்மையுடன் திகழ்ந்தன என்பனவற்றை ஆராய்வதாக இவ் ஆய்வு அமைந்துள்ளது.

சமுதாய வாழ்வியல் மதிப்புகள் விளக்கம்

உலகில் தோன்றும் ஒவ்வொரு மொழி இலக்கியமும் வாழ்க்கை மதிப்புகளை எடுத்துரைப்பதை முதன்மை நோக்கமாகக் கருதுகின்றது.

வாழ்வியல் என்பதற்கு விளக்கம் தருகையில், “வாழ்வியல் என்பதில் ‘வாழ்வு’ என்பதன் பொருள் முறைமை, வாழ்தல் என்பதாகும். ‘இயல்’ என்பதற்கு ‘ஒழுங்கு’ என்று பொருள். வாழ்வு + இயல் = வாழ்வியல். முறையான ஒழுங்கினைக் கடைப்பிடித்து வாழும் வாழ்க்கை முறை வாழ்வியல் ஆகும்.”1 என்று கூறுவர்.

மேலும் சமுதாய வாழ்வியல் மதிப்புகளே வாழ்வியல் நெறிகளாக மலர்கின்றன என்று கூறுவதை, “முறையான சமுதாய வாழ்க்கைக்குப் பயன்படுகின்ற பண்புகளே சமுதாய மதிப்புகள் (Social Values) எனப்படுகின்றன. இவையே சமுதாய ஒழுங்கு முறையினை உருவாக்கும் வாழ்வியல் நெறிகளாகின்றன; சமுதாயத்தின் குறிக்கோளை வகுத்துத் தந்து, மக்கள் நடத்தைக்கு வழிகாட்டுகன்றன.”2 என்பது சமூகவியலார் கருத்து.

உடன்பாட்டு, எதிர்மறை வாழ்வியற் மதிப்புகள்

சமுதாயவியல் அணுகுமுறையில் அதிகக் கவனத்தைப் பெறுவது சமுதாய வாழ்வியல் மதிப்புகள் சார்ந்தது ஆகும். இது “சமுதாய உறவுகளின் பிணைப்பிலே, சமுதாய நடப்பின் காரணமாகத் தோன்றுகிற சமுதாய உணர்வு வடிவங்களிலே ஒன்று”3 என தி.சு.நடராஜன் வரையறை செய்கின்றார். இவர் சமுதாய வாழ்வியல் மதிப்புகளைப் பின்வருமாறு பகுத்துக் கூறுகின்றார்.

சமுதாய மதிப்புகள் (Social Values)

உடன்பாட்டு மதிப்புகள்        எதிர்மறை மதிப்புகள்

(Positive Values)                                (Nagative Values)

காதல், கற்பு, தாய்மை, பாசம், புகழ்,          பொய்ம்மை, தீமை, பாவம், பக்தி, கொடை போன்றவை.                    குடிப்பழக்கம், லஞ்சம், பித்தலாட்டம்
போன்றவை.”4

சிற்றிலக்கிய காலச் சமுதாயத்திலும் இவ்விருவகை மதிப்புகளும் வழக்கில் இருந்தன என்பதனைச் சிற்றிலக்கிய கால கட்டத்தில் தோன்றிய இலக்கியங்களை ஆராய்வதால் அறியமுடிகிறது. இவ்விரு வகையானவற்றுள் உடன்பாட்டு மதிப்புகள் போற்றப்பட வேண்டியவை, எதிர்மறை மதிப்புகள் மாற்றப்பட வேண்டியன.

உடன்பாட்டு மதிப்புகள் என்ற பிரிவினில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம், தானம் வழங்கும் நெறி, நிலையாமை நெறியை அறிவதால் கிடைக்கலாகும் புகழ், பக்தியுணர்வு ஆகியவற்றை அடக்கலாம்.

எதிர்மறை மதிப்புகள் என்ற பிரிவினில் கள் குடிக்கும் வழக்கம், பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் வசிய மருந்திடும் முறை ஆகியவற்றை அடக்கலாம்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம்

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப் பண்பாட்டை உலகிற்குப் பறைசாற்றியது தமிழகம் எனலாம். ஒழுக்கத்தை உயிருக்கும் மேலாகக் கற்பித்தார் திருவள்ளுவர். அவர்தம் பார்வையில் கல்விக்கு இரண்டாம் இடம்; ஒழுக்கத்திற்கே முதலிடம். ஆக ஒழுக்கமாக வாழும் வாழ்க்கையே தவம். ஒழுக்கம்கெட்டு வாழும் வாழ்க்கையே சவத்திற்கு ஒப்பானது என்று கூறலாம். இவ்விடத்தில் கலாசாரம் குறித்துக் கூறும் இலக்கணம் குறிப்பிடத்தக்கது.

“கலாசாரம் என்பது இடங்கள், எண்ணங்கள், நம்பிக்கைகள், சுய அடையாளங்கள், சமூக அடையாளங்கள், மொழி, இலக்கியம், கலை மற்றவர்களுடன் பழகும் முறைகள், குடும்ப அமைப்புகள், கட்டுப்பாடுகள் என வாழ்க்கையின் பல அம்சங்களை உள்ளடக்கியது. கலாசாரம் காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் வேறுபடும்.”5 என்று கூறுவர். இத்தகைய பண்பாடு சமூகத்தின் அடையாளமாகும். சிற்றிலக்கிய காலச் சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் ஏற்புடைய ஒன்று என்றாலும் ஒருத்திக்கு ஒருவன் என்பதுவே வழக்கில் இருந்தது.

திருக்குற்றாலக் குறவஞ்சியில் குறவர்களின் வாயிலாக அவர்களின் குலமரபு குறித்த கருத்துக்களையும் அறிந்து கொள்ளலாம். குறவர்கள் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழும் மக்கள் என்பதை,

“உறவு பிடித்தாலும் விடோம் குறவர் குலம் நாங்கள்” (திருக்குற்றாலக் குறவஞ்சி, செ.எ., 7)

என்ற அடிகள் வாயிலாக அறியலாம். இதிலிருந்து குறவர் குலத்தில் ஒருவரை வாழ்க்கைத் துணை உறவாகப் பிடித்துக் கொண்டனர் என்றால் எந்நாளும் அந்த உறவை கைவிடாத ஒழுக்கம் உண்டு என்பதை அறிய முடிகின்றது.

ஆனால் இக் கலாசாரம் காலத்துக்கு காலம் இடத்துக்கு இடம் வேறுபடும் என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி ஏற்பட்ட காலத்தில் ஆட்சி செய்த மன்னர்தம் கலாசாரம் மக்களுக்கும் பரவியது என்று கூறலாம். அதனில் ஒன்றே பலதார மணம்.  ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கம் பின்பற்றப்பட்டு வாழ்ந்த தமிழ் மக்களிடையே மன்னனைப்போன்று பலதார மணம் பின்பற்றப்பட்டது. இதனைப் பின்வரும் கூற்றினால் அறியலாம்.

      “மன்னன் எவ்வழியோ குடிகள் அவ்வழி” என்பதற்கு ஒப்ப நாயக்கர் கால ஆண்களும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியரைப் பெற்றிருந்தனர். அத்துடன் உயர்வர்க்கத்தவரிடையே பலதார மணம் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.”6 என்ற கூற்று கலாசார மாற்றத்தை இயம்புகிறது.

தானம் வழங்கும் நெறி

தானம் வழங்குவதின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைக்காத இலக்கியங்களே என்று கூறலாம். அத்தகைய தானத்தை எவ்வாறு, எத்தகைய நெறியுடன் வழங்க வேண்டும் என்பதை தைத்திரிய உபநிஷதம்,

ச்ரத்தயா தேயம்! அச்ரத்தயா தேயம்! ச்ரியா தேயம்!
ஹ்ரியா தேயம்!
பியா தேயம்! ஸம்விலிதா தேசம்”
7

என்ற சுலோகத்தில் கூறுகின்றது. இதில், வருமானத்திற்கு ஏற்ப தானம் செய்தல் வேண்டும். அத்துடன் பணிவுடனும், தகுந்த அறிவுடனும் தானம் செய்வதே சாலச் சிறந்தது என்று தானம் குறித்துச் சுட்டப்பட்டுள்ளது. தானம் வழங்குதல் பற்றி முக்கூடற்பள்ளு, செய்தக்காதி நொண்டிநாடகம், நந்தனார் சரித்திரக் கீர்த்தனை போன்ற நூல்கள் குறிப்பிட்டுள்ளன. முக்கூடற்பள்ளுவில் பண்ணைக்காரனிடம் வடிவழகக் குடும்பன் தானமாக அளந்த நெல்லின் கணக்கு வகைகளை,

“ஆடித் திரு நாளுக்கு நெல்
ஆறாயிரங் கோட்டை நெட்டைத்
தாடிப்பிச்சன் நேருஞ் சம்பா
நெல் அளந்தேன்.
வருபங் குனித் திருநாட்படி
வகைக் காயிரம் கோட்டை சின்னத்
திருவன் பயிரிடும் புள்ளியில்
செந்தாழை நெல் அளந்தேன்.” (முக்கூடற்பள்ளு, செ.எ.,143)

என்று குறிப்பிடுவதன் வாயிலாக அறியலாம். மேலும், ஆடித் திருநாளுக்குச் சம்பா நெல்லும், பங்குனித் திருநாளுக்கு செந்தாழை நெல்லும் அளந்து கொடுத்த வழக்கையே அறிய இயலுகின்றது.

செய்தக்காதி நொண்டி நாடகத்தில் வள்ளல் செய்தக்காதியின் கொடை வளத்தை,
“சங்கநிதி பதுமநிதி போல் நிதிவாரிச்
சடையாமலிரு கையுங் கொண்ட கொடுக்க
தருப்போற் கொடை கொடுக்கும் வட்டாவுந்
தாம்பூல முந்துகிலந் தாங்கி நிற்க
விருப்பொடு முத்துரத்தினப் பரீட்சையர்
மேன்மை யொடு தானிருக்க” (செய்தக்காதி நொண்டி நாடகம், செ.எ.,190) என்ற பாடலடிகள் சுட்டுகின்றன.

புகழ்பெறும் முறை

சமயங்கள் எவ்வாறு தங்கள் கருத்தை வலியுறுத்தி இறைவனை நோக்கி மக்களை அழைத்துச் செல்கின்றனவோ, அதனைப் போன்றே அறஇலக்கியங்களும் நிலையாமைக் கருத்துக்களை வெளிப்படுத்தி மக்களுக்கு நல்வாழ்க்கை நெறியைக் கற்றுத் தருகின்றன. இவ்வுலகில் காணப்படும் செல்வம், இளமை, யாக்கை போன்றவை நிலையற்றவை என்று எடுத்துரைக்காத அறஇலக்கியங்களே இல்லை. குமரேச சதகம் இவ்வுலகில் எவை எவை நிலையற்றன என்று வரையறுத்துள்ளது. ஆநிரையும், வீடும், மனைவியும், உறவினரும், மக்களும், செல்வமும், அணிகலன்களும் கனவைப் போலவே மாறிவிடும் நிலையற்ற தன்மையுடையது. ஆகவே நிலையாமை நெறியினை உணர்ந்து வாழும் காலத்தே அறச் செயலைப் புரிதல் வேண்டும் என்று வழிகாட்டுகின்றது. இக்கருத்தினை,

“மாடுமனை பாரிசனம் மக்கள்நிதி பூடணமும்
மருவுகன வாகும் அன்றோ”
(குமரேச சதகம், செ.எ.,73)

என்ற வரிகளில் அறியலாம். இந்நெறியினை அறிந்து வாழ்வில் பின்பற்றினால் புகழ் என்ற உடன்பாட்டு மதிப்பு கிடைப்பது திண்ணம்.

கள் குடிக்கும் பழக்கம்

மக்கள் அன்றாட வாழ்க்கையில் மேற்கொள்ளும் பழக்கங்கள் வழக்கங்களாக அமைந்துவிடுகின்றன என்று கூறுவர். அவ்வகையில் கள் குடிக்கும் வழக்கம் அன்றிலிருந்து இன்று வரையிலும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. என்றாலும் அது எதிர்மறை மதிப்பாகவே விளங்கியது. கள்ளுண்ணுதல் குறித்துப் பதிவு செய்யாத சங்க இலக்கியங்களே இல்லை என்று கூறலாம். தெளியுங் கள்ளையும், நறவையும் உண்ட நபர்களுடைய உலகியல் கெட்ட மயக்கம் போல காணப்படுகின்றது என்று கூறுவதை,

“தேறுகள் நறவுண்டார் மயக்கம் போற் காமம்”      (கலித்தொகை – நெய்தல் கலி-30:2)

என்ற அடியின் மூலம் காணலாம். இவ்வாறே கள் குடிக்கும் வழக்கத்தினை சிற்றிலக்கியங்களில் முக்கூடற்பள்ளு, செய்தக்காதி நொண்டி நாடகம், நந்தனார் சரித்திரம் போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன. முக்கூடற்பள்ளில் இடம்பெறும் பள்ளர்கள் தங்களது உழைப்பினால் விளைந்த நெல்லினைக் கண்ட மனமகிழ்ச்சியால் மிகுதியான மதுவைக் குடித்து மயக்கத்துடன் காணப்படுகின்றனர். அத்துடன் பெண்களும் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை,

“வடிக்கும் மதுவைக் குடிக்கும் ஆசை
மயக்கமும் பெருந் தியக்கமும்
வரம்பிற் பாய்ந்து பரம்பிற் சாய்ந்த
வாட்டமும் முகக் கோட்டமும்”
(முக்கூடற்பள்ளு, செ.எ., 130)

என்றும்,

“பெண்பிள்ளை ஆண்டே – பொல்லாத்
தண்ணீர் குடித்த வெறியால்
முதற் சொன்னேன் ஆண்டே
கால் மரம் வெட்டி விடுவிக்க
வேணுங்கான் ஆண்டே” (முக்கூடற்பள்ளு, செ.எ., 107)

என்றும் குறிப்பிடுவதிலிருந்து முறையே பள்ளர்கள் மது அருந்தி மயங்கிய விதத்தையும், ஆண்டையிடம் மூத்தபள்ளி கள்ளுண்ட வெறியிலே பள்ளனைக் காவலில் வைக்குமாறு கூறிவிட்டேன் விடுவிக்க வேணும் என்று முறையிடுவதையும் அறியலாம். மனமகிழ்வு மற்றும் துயர காலங்களில் கள் அருந்திய சூழலை மேற்கூறிய கருத்துக்களில் இருந்து அறியலாம்.

செய்தக்காதி நொண்டி நாடகத்தில் இடம்பெறும் ஒடுங்காப்புலியை சுலூபுகான் கூடாரத்தில் உள்ள துலுக்கர்கள் வரவேற்று கஞ்சாத் தண்ணீர் தருகின்றனர். அதனை மறுக்காமல் இஸ்லாமிய மார்க்க நெறியைக்கூறிக் கொண்டே ஒடுங்காபுலி அருந்துகிறான். இதனை,

கடைபடு கஞ்சாத் தண்ணீர் பாத்திரத்திற்
கட்டளையிட்டார் பிரமன் கட்டளையன்றே
யிடையூறு பேசாமல் மண்டிபோட
டிருந்து பிசுமிச் சொல்லி யருந்தினேன்”                          (செய்திக்காதி நொண்டி நாடகம், செ.எ., 96) என்னும் வரிகளால் அறியலாம்.

வசிய மருந்திடுதல்

பொதுவாக மருந்து என்பது ஓர் உயிரினத்திற்கு ஏற்பட்ட நோயை அல்லது உடற்கேட்டைத் தீர்க்கவோ தணிக்கவோ பயன்படும் பொருள். ஆனால், வசிய மருந்து கொண்டு விலங்குகளையும் தன் வசியமாக்கலாம் என்பர். கருவூரார் எனும் சித்தர் இயற்றிய ‘கருவூரார் பலதிரட்டு’ என்ற நூலில் மிருகங்களை வசமாக்கும் முறை குறிப்பிடப்பட்டுள்ளது. வெண்குன்றி மூலிகை எடுத்து, ‘வம் வம் வசி வசி மிருகவசீகரி ஓம்’ என்ற மந்திரத்தை கூறி மூலிகை வேரை வாயில் போட்டு, எந்த மிருகத்தை அழைக்கிறோமா அது வசியமாகும் என்று கருவூரார் சுட்டுகிறார். இதனை,

“பாரப்பா வேண்குன்றி மூலம் வாங்க
நேரப்பா மந்திரத்தான் வம்வம் வசிவசி
நிறைமிருக வசீகரி ஓமென்று போற்றி
வேரப்பா பிடுங்கி யதைவா யிலிட்டு
பேசவே மிருக வசீகரங் காணும்”8 

என்ற பாடலடி சுட்டும். இவ்வாறு பண்டை காலம் தொட்டே தமிழர்களிடம் வசிய மருந்தினைப் பயன்படுத்தும் முறைமை இருந்ததை அறியலாம். எவ்வாறு விலங்குகளையும் வசியப்படுத்தலாம் என்று கூறினார்களோ அதனைப் போல மனிதர்களையும் வசியமிட்டு, தவறான ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்த பாங்கினை சிற்றிலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. முக்கூடற்பள்ளு, குற்றாலக் குறவஞ்சி, செய்தக்காதி நொண்டி நாடகம் போன்ற நூல்கள் வசிய மருந்திடும் முறையைப் பதிவு செய்துள்ளன. முக்கூடற்பள்ளில் மூத்தபள்ளி மாடு குத்திய வடிவழகக் குடும்பனைக் காண வரும்போது இவ்வாறு நடக்கக் காரணம் இளையபள்ளி உனக்கு வைத்த கீழான வசிய மருந்தே என்று கூறுகிறாள். இதனை,

“……………………………………………………………………………
…………………… மருதூர்ச்
சக்களத்தி புலைமருந்தின் வெறியோ
முதலேயீ தார் விளைத்த இடும்போ – தெரிந்திலேன்
முக்கூடல் அழகர் பண்ணைக் குடும்பா”
(முக்கூடற்பள்ளு, செ.எ., 118) எனக் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

திருக்குற்றாலக் குறவஞ்சியில் வசிய மருந்துடன், வேறுசில மருந்துகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சிங்கியைத் தேடிவரும் சிங்கன், தன்னுடன் வந்திருக்கும் நூவனிடம் சிங்கி இருக்கும் இடத்தைக் கூறினால் உனக்கு வாடை மருந்துப் பொடி, அம்மியிலேறி ஊர்ந்து வரும் மரப்பாவையுங்கூடப் பின்தொடர்ந்து வரச் செய்யும் மாயப்பொடி, பிரிந்தவர் கூடியிருக்குமாறு செய்யும் மருந்து, பிரியாமல் கூடி இருப்பவரைக் கலைப்பதற்கான மருந்து, இத்துடன் பொட்டிட்டு வசீகரம் செய்யும் முறையையும் உனக்கு கற்றுத் தருவேன் என்று கூறுகிறான். இதனை,

“வாடை மருந்துப் பொடியும் அம்மியூர்
மரப்பாவை பின்தொடர மாயப்பொடியும்
கூடியிருக்க மருந்தும் இருபொழுதும்
…………………….
கூடியிருப்பார்களைக் கலைக்க மருந்தும் …………
திலக வசீகரம் செய்வேன் …………………
சிங்கிதனைக் காட்டாய் ஐயே!”
(திருக்குற்றாலக்குறவஞ்சி, செ.எ., 36) என்னும் பாடலால் அறியலாம்.

செய்தக்காதி நொண்டி நாடகத்தில் வேசியர்கள் பொருள் பறிப்பதற்காக ஒடுங்காப்புலிக்கு மருந்துப் பொருள்களைக் கலந்துதரும் செய்தி காணப்படுகின்றது. இன்றும் வெற்றிலை, பால், உணவு முதலியவற்றில் மருந்தைக் கலந்துதரும் வழக்கம் நாட்டுப்புறங்களில் காணப்படுகின்றது. இந்த நாட்டுப்புற வழக்கத்தின் தாக்கமே நொண்டி நாடகத்தில் வேசியர் மருந்திட்டனர் என்று கூறுவதற்கு வழி வகுத்தது எனலாம். வசிய மருந்தினை தரும் முறையுடன், அதனை உட்கொண்டதால் உண்டாகிய விளைவையும்,

“கைவேர்வையும் மருந்தும் பல
காரத்துடன் கூட்டிச் சேரத் தந்தாள்
தந்தட ருத்தா லே மித்
தள்ளாடித் தள்ளாடி யுள்ளாகிச்
சிந்தை தடுமா றியொட்டுச்
சிட்டு போல் நானகப் பட்டுக் கொண்டேன்” (செய்தக்காதி நொண்டி நாடகம், செ.எ., 33)

எனச் சுட்டுவதிலிருந்து அறிய முடிகின்றது. மேலும் பள்ளர்கள், குறவர்கள், திருடர்கள் வாழ்க்கையில் வசிய மருந்தினை பயன்படுத்தியுள்ளதை உணர இயலுகின்றது. சமுதாய வாழ்வியல் மதிப்புகளில் எதிர்மறை மதிப்பினைத் தருவதாக வசிய மருந்திடும் முறைமை திகழ்கின்றன. சிற்றிலக்கிய காலச் சமூகம் இம்முறையை வரவேற்கும் ஒரு பிரிவாக விளங்கியுள்ளமையையும் அறிய இயலுகின்றது.

*****

குறிப்புகள்

  1. நா.கதிரைவேற்பிள்ளை, தமிழ் மொழி அகராதி, ப.14.
  2. N.Shankar Rao, Sociogy, P.469.
  3. தி.சு.நடராசன், திறனாய்வுக்கலை, ப.63.
  4. மே.நூ., ப.55.
  5. http:// tawp.in தமிழ் விக்கிப்பீடியா, கலாச்சாரம், ப.2.
  6. Rajayyan, History of Tamilnadu, P.68.
  7. kadampavanpoonga.com, கடம்பவன பூங்கா, தானத்தில் சிறந்த தானம், ப.4.
  8. keetru.com, கருவூரார், கருவூரார் பாடல் திரட்டு, ப.9.

*****

கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
சிவகாசி

 

Share

About the Author

has written 845 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]


six − = 1


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.