படக்கவிதைப் போட்டி 157-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி

கோலாட்டம் ஆடும் பெண்ணின் முகபாவங்கள் அழகாய் வெளிப்படும் வண்ணம்  புகைப்படம் எடுத்துள்ளார் திருமிகு. ஷாமினி. இந்த இரசமிகு படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். புகைப்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி.

கலைகளில் சிறந்தது நவரசங்களையும் (தமிழில் மெய்ப்பாடுகள் எட்டே) வெளிப்படுத்தி மக்களைக் கவர்ந்திழுக்கும் ஆடற்கலை. தில்லை அம்பலவனே ஆடவல்லானாய் – நடவரசனாய் ஆனந்த நடம் ஆடிக்கொண்டிருப்பது ஆடலின் மகத்துவத்தை அகிலத்துக்கு உணர்த்துகின்றது. 

இனி, முகபாவத்தால் நம் அகம் மயக்கும் இந்த ஆரணங்கைத் தம் கவியாரத்தால் அணிசெய்ய வருகின்றார்கள் கவிவலவர்கள்!

*****

”மனஅழற்சி போக்கும் பயிற்சி; உடல்நலத்தை, மனவளத்தைக் கூட்டும் முயற்சி” என்று இந்த அம்மணி ஆடும் அழகு ரங்கோலியைப் புகழ்கிறார்  ஏ. ஆர். முருகன்மயிலம்பாடி.

ஆடு..உடல்வளம் நாடு!!

அம்மிணியாடும் ரங்கோலி _
ஜம்முனிருக்குது பங்காளி!!
குச்சிரெண்டத்தூக்கிகிட்டு
குதிச்சுக்குதிச்சு ஆடும்போது
கூடச்சேந்து கும்மிகொட்டி
ஆடுது ஆசை எனும் ஓங்காளி!
கச்சிதமாய்க் கால வச்சுக்
கைகள் செய்யும் சாகசத்தில்
உறுப்புகள் முறுக்கேற…விளி
உற்றுப்பார்க்கும்போதுகோடாலி
கூர்மையோடு ஒளி வீசும்!!
அடிமனசுக்கு ஏற்ற பயிற்சி
அடித்துப்போகும்மன அழற்சி!!
வடக்கிருந்துவந்த விருந்தாளி!
இளமையிலே விளையாட்டு
இரும்பாக்கும் உடல் வளத்தை
கரும்பாக்கும் மன நலத்தை!! _
நோய்நொடிக்குப்பகையாளி!!
உண்ணுபவை உடன்செரிக்க,
கண்ணயர்ந்து தூக்கம்வர
பெண்களுக்கு பெரிதுதவி
நன்குவாழ உதவும் கூட்டாளி! _
கட்டுடலோடு நற்றவம் சேர
பட்டொளிவீசி வாழ்வதே ஜாலி!!
*****

”ஆடல்காண வந்தவரை வண்டுவிழிகள் துழாவ, கண்மலர்கள் வரவேற்க, வெண்முத்துப் பற்கள் ஒளிசிதறக் கோலாடிக் கொண்டாடினாள்” என்று பாவையின் எழிலைப் பழகு தமிழில் பாராட்டுகின்றார் திருமிகு. சக்திப்ரபா.

வரவேற்பு

ஆடை வனப்பு அழகைக் கூட்டி
அங்கமெங்கும் வர்ணம் பூத்திருக்க,
உற்றவரை உறவுக்கு உகந்தவரை
அங்குமிங்கும் படபடக்கும்
வண்டு விழிகளால் துழாவி
கண்மலர்களால் வரவேற்று
கோலாடிக் கொண்டாடினாள்.

உடன் தாவிய முத்துக்குழைகளும் ஆரங்களும்
சட்டென இதழ் விரித்த வெண்முத்துக்களுடன்
கூடியாடிக் குதித்ததில்,
மேடையெங்கும் ஒரே முத்துச் சிதறல்கள் !

*****

”தமிழ்ப்பாட்டு காதில் தேனாய்ப் பாய, சேலாட்டம் விழிகள் ஆட, கோலாட்டம் ஆடு பெண்ணே! குவலயத்தில் தாய்த்தமிழ்க்கு முடிசூட்டு கண்ணே!” என்று உற்சாகமூட்டுகிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

கலை வளர்க்க…

ஆடு மயிலே கோலாட்டம்
ஆடுமுன் விழிகள் சேலாட்டம்,
பாடு பாடு தமிழ்ப்பாட்டு
பாயவே காதில் தேனாட்டம்,
சூடு சூட்டு முடிசூட்டு
செந்தமிழ்த் தாய்க்கும் முடிசூட்டு,
ஈடு இணையே இதற்கில்லை
இக்கலை வளர்த்தே ஆடுநீயே…!

*****

”அன்னக்கோல் துழவியாங்கு அமுத அட்சயம் வளர்த்திடு; எண்ணக்கோல் செலுத்தியாடி புதுசாத்திரம் சமைத்திடு; செங்கோல் உயர்த்தியாங்கு சட்டமாற்றம் வகுத்திடு எம் சுதந்திர தேவி!” என்று நடமிடும் சுந்தரிக்கு நல்லறிவு கொளுத்துகின்றார் திருமிகு. அவ்வைமகள்.

சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

கன்னக்கோல் சுழற்றியாங்கு கயவர் கள்வினை கவர்ந்திடு
துன்னக்கோல் அசத்தியாங்கு மாதர் நல்வினை கோத்திடு
அன்னக்கோல் துழவியாங்கு அமுத அட்சயம் வளர்த்திடு
ஆனைக்கோல் தூக்கியாங்கு வலிய தீவினை ஒடுக்கிடு

சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

வண்ணக்கோல் தட்டியாடி உடல் சீர்மையைச் செழித்திடு
திண்ணக்கோல் திருத்தியாடி உளஉறுதியை முறுக்கிடு
தண்ணக்கோல் வீசியாட்டிக் கற்பு சூத்திரம் முழக்கிடு
எண்ணக்கோல் செலுத்தியாடிப் புதுசாத்திரம் சமைத்திடு

சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

செங்கோல் உயர்த்தியாங்கு சட்ட மாற்றமும் வகுத்திடு
வெங்கோல் நிறுத்தியாங்கு கடின விதிமுறை பதித்திடு
அங்கோல் கரத்திலாங்கு மல்லாயுதம் எடுத்திடு
தங்கோல் நாட்டியாங்கு நவயுவ பாரதம் எழுப்பிடு

சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

கொடுங்கோல் ஒடித்து ஆங்கு ஆணவம் அகற்றிடு
கடுங்கோல் மடித்து ஆங்கு உபத்திரம் ஒழித்திடு
தடுங்கோல் வளர்த்து ஆங்கு பத்திரம் வழங்கிடு
நெடுங்கோல் வழங்கியாங்கு சுதந்திரம் பெருக்கிடு

சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி! சுதந்திரதேவி!

சுடுங்கோல் பொருத்தியாங்கு வஞ்சநெஞ்சகம் பொசுக்கிடு!
அடுங்கோல் அணைத்து ஆங்கு அமைதியை நிறுத்திடு
மடுங்கோல் திருத்தியாங்கு தமிழகநீர்வளம் மீட்டிடு
எடுங்கோல் எழுப்பியென்றும் நல்லுறவினை உயர்த்திடு! ( சுதந்திரதேவி! —)

*****

நல்லதமிழ்ச் சொல்லெடுத்து நாட்டிய நங்கைக்கு இனிய தமிழ்மாலை சூட்டியிருக்கும் கவிஞர்கட்கு என் பாராட்டும் நன்றியும்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை எனும் பாராட்டைப் பெற்ற கவிதை அடுத்து…

கோபாலா வா…வாவென்று கோலாட்டம் போடுங்கடி..!

பெண்களின் கலைநயத்தைக் காணுகின்ற கலையில்
……….பெருங் கலையே கும்மியடிக்கும் கோலாட்டமாம்..!
வண்ணம் கொண்ட கழிகளிரண்டைக் கையிலேந்தி
……….வகையாய்த் தட்டியே ஒலியெழுப்புமோர் ஆட்டம்..!
எண்ணத்தை வெளிப்படுத்தும் விசேட ஒலியாய்
……….இங்குமங்கும் ஓடியாடி உல்லாசம் கொடுக்குமாம்..!
கண்ணசைவால் கவரும் இளநங்கைகள் தாங்கள்
……….கால்விரலில் உடல்தாங்குமொரு உத்தியை அறிவர்..!

கண்ணுக்குக் குளிர்ச்சிதரும் பட்டாடை உடுத்தி
……….கண்ணன் பிறந்தநாளில் கோலாட்டம் குதூகலமாம்..!
மண்ணில் அன்னவனால் பிறவி கொண்டோமென
……….மாயவனைக் கூத்தாட அழைப்பதுவும் வழக்கமாம்..!
பண்ணிசையால் பாவையர்கள் பாடுமழகைக் காண
……….பறந்தோடி வருவான் மாயப்பிரான் கண்ணனுமே..!
அண்டத்தைத் தன்னண்ணத்தில் காட்டிய பெருமாயன்
……….அகமகிழ்ந்தே ஆயகலையும் கைவர அருளுவான்..!

பண்ண(ணிய) கடுந்தவத்தால் பார்வதியின் கறுத்தமுகம்
……….பளிச்சென முகம்வெளிரப்…பலமாகக் கும்மியடி..!
வெண்ணெய் திருடுமுன் அந்தத் தாழியுடையுமாறு
……….கண்ணன் வருவதற்குமுன் கழிதட்டி ஆடுங்கடி..!
உண்ணவும் உழைக்கவும் உடல்பயிற்சி பெறவும்
……….ஓடியாடி ஒன்றாய்ப்பின்னிப் பிணைந்து கும்மியடி..!
தண்டையணிந்த நம் குதிகாலும் தரையிலூன்றாது
……….வெண்தாடி விருத்தரும் விரைந்துவரக் கும்மியடி..!

”அண்ணத்துள் அண்டம் காட்டிய அந்த மாமாயன் அருள்பெறவே, அவன் பிறந்தநாளில் பாவையர் ஆடும் கோலாட்டம், அனைவர்க்கும் தந்திடும் கோலாகலம்! கெண்டை விழிகள் சுழன்றாட, தண்டையொலிகள் பண்பாட, இளம்பெண்டிர் ஆடும் இந்த எழிலாட்டம் வெண்தாடி விருத்தரையும் விருப்பத்தோடு காண வைக்கும் ஒயிலாட்டம்!” என்று கோலாட்டத்தின் சிறப்பைக் குவலயத்துக்கு இயம்பும் இக்கவிதையினைப் படைத்த பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்து பாராட்டுகின்றேன்.

 

 

மேகலா இராமமூர்த்தி

மேகலா இராமமூர்த்தி

Share

About the Author

மேகலா இராமமூர்த்தி

has written 303 stories on this site.

2 Comments on “படக்கவிதைப் போட்டி 157-இன் முடிவுகள்”

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 24 April, 2018, 15:48

  இந்த வாரத்தின் (24-04-18 – 28-04-18) சிறந்த கவிதையாகவும், கவிஞராகவும் தேர்ந்தெடுத்த நடுவர் திருமதி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும், கவிதைக்குப் படத்தை எடுத்த திருமிகு ஷாமினிக்கும், படக்குழுமத்தின் ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பனுக்கும், ஆசிரியர் திருமதி பவளசங்கரிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

  இந்த வாரத்தில் வெளியிடப்பட்ட படம், தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக்கலைக்கு பெருமைசேர்க்குமாறு கவிதை எழுதுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது.

  பெண்கள் பலர் கூடி ஓரிடத்தில் வட்டமாகப் பாடிக்கொண்டே தங்கள் கைகளில் வண்ணம் தீட்டிய கழிகளைத் தட்டிக்கொண்டு, ,ஆடும் ஒருவகை நடனம்தான் கோலாட்டம். தொன்று தொட்டு வரும் தமிழ்நாட்டுப் பாரம்பரியக் கலைகளில் ஒன்று. இருபுறமாக சரிசமமாக நின்று இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடுமொரு நடனத்தை தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் இன்றும் வழக்கில் உள்ளது.

  குரவை என்ற கலையில் கும்மி பிறந்ததாகவும், கோலாட்டம் என்பது பொதுவாக கண்ணன் பிறந்த நாளில் வடநாடுகளில் பரவலாகக் கொண்டாடப்படுகிறது. கண்ணனுக்கு மிகவும் விருப்பமான ஆட்டமாகவே இந்தக் கோலாட்டம் பற்றி எங்கும் தகவல் உள்ளது. கவிதையின் கடைசியில்..ஒரு வரியாக..

  பண்ணிய கடுந்தவத்தால் பார்வதியின் கறுத்தமுகம்
  ………பளிச்சென முகம்வெளிரப்…பலமாகக் கும்மியடி..!

  சேர்த்திருந்தேன். அசுரருக்கும், தேவருக்கும் நடந்த போரில் தேவர்கள் வெற்றிபெற பார்வதிதேவி கடுந்தவம் புரியும்போது, அவள் முகம் கருத்ததாகவும், மீண்டும் மகேஸ்வரியின் முகம் ஒளிபெற, அங்கே தேவருலகப் பெண்கள் கோலாட்டமாடி மகிழ்வித்து, பார்வதியின் முகம் மலரச் செய்ததாகவும் ஒரு வரலாறு உள்ளது.

  சிறந்த கவிதையாக இது தேர்வுற்றதால், மறைந்து வருகின்ற நம் தமிழர்களின் பெருமை சொல்லும் நடனக்கலைக்கு இது வெகுமதியாக அமையும்.

  அன்புடன் பெருவை பார்த்தசாரதி

 • அரிமா வெற்றிவேல் wrote on 26 April, 2018, 22:22

  எனது நண்பரின் கவிதைக்கு சிறந்த கவி பட்டம் கொடுத்த மேகலா அவர்களுக்கு என் முதற்கன் நன்றி.
  பெருவையே உமது உண்மையான உழைப்புக்கு, உன்னதமான பரிசு. வெல்க வளர்க மென்மேலும்.

  நன்றி 

Write a Comment [மறுமொழி இடவும்]


3 + = seven


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.