நலம் .. நலமறிய ஆவல் 105

 

(அ)சிரத்தையான அப்பா அம்மா

நிர்மலா ராகவன்

 

படிப்பு, உத்தியோகம், திருமணம், குழந்தைகள் என்று வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது, பலருக்கும். உரிய காலத்தில் எல்லாமே நடந்துவிட்டாலும், அவை சிறப்பாக அமைகின்றனவா?

படிப்பை எடுத்துக்கொள்வோம். தங்களுக்குப் பிடித்த பாடம், அல்லது நிறைய பொருள் ஈட்டக்கூடிய கல்வி என்று சில பெற்றோர், `நீ இந்தப் பாடங்களைத்தாம் தேர்ந்தெடுக்க வேண்டும்,’ என்று பிள்ளைகளுக்கு யோசிக்கவோ, முடிவு செய்யவோ இடம் கொடுக்காது தீர்மானித்துவிடுவார்கள்.

அப்படிச் செய்யாவிட்டாலும், தமது எதிர்பார்ப்பின்படி நடக்காத பிள்ளைகளைக் கண்டு மனம் நொந்துபோவார்கள்.

கதை

இங்கிலாந்தில் ஒரு பிரபல விஞ்ஞானியின் மாணவர் அந்த மலேசியர். முதுகலைப்பட்டம் பெற்று, கோலாலம்பூரில் ஆசிரியராக இருந்தார்.

“என் மகள் விஞ்ஞானமே வேண்டாம் என்று, இடைநிலைப்பள்ளியில் ஆங்கிலம், சரித்திரம் என்று என்னென்னவோ எடுத்துப் படிக்கிறாள்,” என்று என்னிடம் அரற்றினார், ஏதோ தன்னையே அவள் விலக்குவதுபோல் பாவித்து.

“என் பெண் அறிவில் என்னைக் கொள்ளவில்லை,” என்று அவர் திரும்பத் திரும்ப பேசியதைக் கேட்டு, நான் அப்பெண் மக்கு என்ற முடிவுக்கு வந்தேன்.

அண்மையில், தனக்குப் பிடித்த துறையில் அப்பெண் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறாள் என்று அறிந்தேன். தந்தையின் எதிர்பார்ப்புக்கும் விருப்பத்திற்கும் அவள் இணங்கியிருந்தால், தன் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி இருக்க முடியாதே! செய்ததில் திருப்தியும் கிடைத்திருக்காது.

நல்ல வேளை, மகளைத் தன் அதிகாரத்திற்குப் பணியவைத்து, அவளைச் சுயமாக சிந்திக்கவிடாது செய்யவில்லையே என்று நண்பரைப் பாராட்ட வேண்டியதுதான்.

பெற்றோரின் குறுக்கீடே இல்லாது வளர்பவர்களுக்கோ வேறு விதமான பிரச்னைகள்.

தாம் பெற்ற குழந்தைகளின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்கள் பிறருடன் எப்படிப் பழகுவது என்று வழி காட்டாது இருக்கும் பெற்றோரை இருவகையாகப் பிரிக்கலாம்:

பெரிய உத்தியோகத்தில் நிறைய சம்பாதித்து, இன்னும் எப்படி மேலே போகலாம் என்பதுபோல் நடப்பவர்கள்.

`அதுதான் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறோமே! அங்கே பார்த்துக்கொள்வார்கள்!’ என்ற அலட்சியம்.

வேறு சில பெற்றோர், அவர்களும் அதிகம் படித்திருக்க மாட்டார்கள். அவர்களுடைய பெற்றோர் அவர்களை நடத்தியதுபோலவே, தம்மையும் அறியாது தம் பிள்ளைகளை அசிரத்தையுடன் நடத்த முற்படுவார்கள்.

நான் இப்படிப்பட்ட ஒரு பள்ளிக்கூடத்தில் போதித்தபோது, பெற்றோருக்கு மகன் எந்த வகுப்பில் படிக்கிறான், என்ன பாடம் எடுத்திருக்கிறான் என்பதுகூடத் தெரியாது.

இந்த அலட்சிய மனப்பான்மை கட்டொழுங்கு ஆசிரியர்களுக்குச் சாதகமாகப் போயிற்று. எந்த ஒரு தவற்றுக்கும் வன்முறையைப் பயன்படுத்தித் தண்டிப்பார்கள்.

பெற்றோரோ, `இந்தப் பள்ளிக்கூடத்தில் வெரி குட் டிசிப்ளின்’ (very good discipline!) என்று ஒருவருக்கொருவர் சிலாகித்துக்கொண்டு, `இந்தவரைக்கும் நம் பொறுப்பைக் கழித்தார்களே!’ என்ற நிம்மதியுடன் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். மாணவர்களுக்காக பரிதாபப்படத்தான் என்னால் முடிந்தது.

பணக்காரப் பெற்றோர் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு, `இனி ஆசிரியர்கள் பாடு!’ என்று நிம்மதியாக இருப்பார்கள்.

இன்னொரு வகை, தனித்து வாழும் தாய் அல்லது வறுமையில் வாடும் தந்தை. குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் சுமக்க வேண்டிய நிலை. குழந்தைகளுக்கான உணவு, உடை, படிப்புச்செலவு ஆகியவற்றிற்குத் தேவையான பொருளை ஈட்டுவதிலேயே இவர்களுடைய காலம் கழிந்துவிடுகிறது.

கதை

பதினைந்து வயதிலேயே ஜரீனா பள்ளியில் அடங்காது இருந்தாள். ஓயாமல் ஆண்களைப்பற்றித்தான் அவள் பேச்சு இருக்கும். ஆசிரியைகள் கொடுத்த எந்த வேலையையும் செய்யமாட்டாள். அப்படியே செய்தாலும், அரைகுறையாக இருக்கும். அவளால் பிற மாணவிகளும் அதேபோல் நடக்கும் நிலை.

அவளுடைய தந்தை என்னைச் சந்திக்க வந்தார்.

“நான் டாக்சி ஓட்டுகிறேன். பெரிய குடும்பம். காலையிலிருந்து இரவு வெகு நேரம் வீட்டிலே இருக்கமுடியாது. என் மகளை எப்படி அடக்குவதென்றே தெரியவில்லை. தயவுசெய்து உதவுங்கள், டீச்சர்!” என்று கெஞ்சினார் அந்த மலாய்க்காரர். (அவரைப் போன்றவர்களுக்கு ஆசிரியர்கள் என்றால் பெருமதிப்பு).

அடுத்த முறை ஜரீனா என்னை எதிர்த்தபோது, “உன் அப்பாவை வரவழைக்கட்டுமா?” என்று மிரட்டினேன்.

பயந்து, அடங்கினாள். அவ்வப்போது கண்டிக்க யாருமில்லாது, அளவுக்கு அதிகமான சுதந்திர உணர்வு அவளை மனம்போனபடி நடக்க வைத்திருந்தது.

பெற்றோருக்கும், ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கும் புரிவதில்லை, வீட்டில் ஒழுக்கம் கற்பிக்கப்படாத சிறுவர்களைத் திருத்துவது மிகக் கடினம் என்று.

அத்தகைய பெற்றோர், `குழந்தைகளுக்குத் தேவையானவைகள் எல்லாவற்றையும்தான் கொடுக்கிறோமே! போதாதா?’ என்று திருப்தி அடைபவர்கள்.

குழந்தைகளுக்கோ, `இதெல்லாம் பெற்றோரின் கடமை!’ என்ற அலட்சியம்தான் உண்டாகிறது. ஆனால், அத்தியாவசியத் தேவைகளுக்குப் பெற்றோர் வேண்டுமே! பெற்றோரிடம் தம் அதிருப்தியைக் காட்டத் துணியாது, ஆசிரியர்களை எதிர்க்க முனைகிறார்கள்.

`வீட்டில் யாருமே நம் உணர்வுகளை மதித்து நடத்துவதில்லை!’ என்ற ஆத்திரம் உள்ளுக்குள் எழும். `யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை!’ என்று நிச்சயம் செய்துகொள்வார்கள். இதனால் சுயமதிப்பு குன்றிப்போக, படிப்பிலும் சோடையாகிவிடும் அபாயமும் உண்டு.

இவர்களுக்கு ஒத்த மனமுடைய நண்பர்களுக்கா பஞ்சம்! இப்படித்தான் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிறார்கள்.

சில மாணவர்களே என்னிடம் கூறியிருக்கிறார்கள், `வீட்டில் யாரும் எங்களைக் கவனிப்பதில்லை. நண்பர்களுக்குத்தான் எங்களைப் புரிகிறது. அதனால் அவர்களுடன் காலத்தைக் கழிக்கிறோம்,’ என்று. நீலப்படங்களைப் பார்ப்பதைக்கூட விவரித்திருக்கிறார்கள்.

எது நல்லது, எது கெட்டது என்று அறியாத பருவம். பெற்றோருக்குத் தம் பிள்ளைகளுடன் உணர்ச்சிபூர்வமான தொடர்பே கிடையாது. அவர்கள் யாருடன் பழகுகிறார்கள் என்பதிலும் அக்கறை செலுத்தமாட்டார்கள். எந்தவித வழிகாட்டலும் கிடையாது. இளைய வயதினர் திசை மாறுவது யாருடைய தவறு?

சில பெற்றோருக்கு எப்படி வழிகாட்டுவது என்று புரிவதில்லை.

ஒரு தாய் என்னைச் சந்தித்து, “என் மகனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க எனக்குத் தெரியவில்லை. அதுதான் குறைந்த மதிப்பெண்கள் வாங்குகிறான். அந்தக் காலத்திலே படிப்பு வேறு விதம் இல்லையா?” என்று சப்பைக்கட்டு கட்டினாள்.

நானும், “ஆமாம். ஆமாம்,” என்று ஆமோதித்தேன். அப்போதுதானே அவள் நான் அடுத்துச் சொல்லப்போவதைக் கவனிப்பாள்!

“தினமும் ஒரு மணி நேரமாவது அவனைப் படிக்கச் சொல்லுங்கள். அப்போது பக்கத்தில் உட்கார்ந்து, உரக்கப் படிக்கச் சொல்லுங்கள். அவ்வளவுதான்! நீங்கள் வேறு எதுவும் செய்யவேண்டாம்,” என்றேன்.

(என் மகள் முதல் வகுப்பு படிக்கையில், “நீ ரொம்ப டிஸ்டர்ப் பண்றே! என்னாலே படிக்க முடியலே,” என்று குற்றம் சாட்டினாள்.

நானோ, வாய்பேசாது, ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தேன்! “நான் என்ன செய்யணும்?”

“என் பக்கத்திலே உட்காரேன்!”

அப்போதுதான் புரிந்தது, தாம் செய்வதில் பெரியவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்ற குழந்தைகளின் எதிர்பார்ப்பு).

அம்மாவுக்குத் தன் முன்னேற்றத்தில் எவ்வளவு அக்கறை என்ற பூரிப்பில் பையன் கடுமையாக உழைத்தான். அம்மாவை மாற்றிய என்னையும் பிடித்துப்போனது!

பொது இடத்தில் பாருங்கள். எத்தனை பெற்றோர் பிள்ளைகளுடன் பேசுகிறார்கள்? சிறிய குழந்தைகளானால், பார்ப்பதையெல்லாம் விளக்குகிறார்கள்? `உன்னை ஹோட்டலுக்கு அழைத்து வந்திருக்கிறேனே! அதற்காக சந்தோஷப்படு!’ என்பதுபோல், தன் கைப்பேசியில் ஆழ்ந்திருக்கும் தந்தையோ, தாயோதான் அதிகம் இருப்பார்கள்.

கதை

பல ஆண்டுகளுக்கு முன்னர், நானும் என் உறவினர் ஒருத்தியும் காரம்ஸ் விளையாடிக்கொண்டிருந்தோம்.

என் பாட்டி உள்ளே போய் பார்த்துவிட்டு, “குழந்தைக்கு நல்ல பசி. உங்களுக்கு என்ன விளையாட்டு?” என்று இரைந்தார்.

“நான் போட்டுவிட்டு வந்தேனே!” என்றேன்.

“எதுக்கு அவ்வளவு கஷ்டப்படணும்? `நீயே எடுத்துப் போட்டுண்டு சாப்பிடுடி,’ என்றால் சாப்பிட்டுவிட்டுப்போகிறாள்!”

அவள் மூன்று வயதுக்குழந்தை!

இருவரும் குற்ற உணர்ச்சியுடன் முழித்தோம்.

அன்று நான் கற்ற பாடம்: ஒருவர் உணவருந்தும்போது கூடவே இருப்பது நல்லது. குழந்தைகளானால் கதை சொல்லலாம்.

வளர்ந்தவர்களிடம் அன்றைய நடப்புகளை, முதல்நாள் பார்த்த திரைப்படத்தைப்பற்றிய விமரிசனத்தை, இப்படி எதையாவது பகிரலாம்.

உறவுகள் பலப்படுவது இப்படித்தான்.

தொடருவோம்.

Share

About the Author

நிர்மலா ராகவன்

has written 267 stories on this site.

எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.