எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

 

பக்கத்து வீட்டில் புதிதாக ஒரு குடும்பம் வந்துசேர்ந்தது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கணவனும் மனைவியுமாய் வந்தார்கள். வேற்று நாட்டவராய் காணப்பட்டார்கள். எங்களுக்கு அயலில் குடும்பத்துடன் அவர்கள் வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எங்களின் அயலில் இருந்தவர்களில் பாதிப்பேர் தனித்தே இருந்தார்கள். எப்ப வருவார்கள் எப்ப போவார்கள் என்றே தெரியாது.

 

ஒருமாதம் ஒருவரும் அடுத்தமாதம் இன்னொருவருமாய் மாறி மாறி வருவார்கள். எங்களுக்கு நல்ல அயல் இல்லாதபடியால் நல்ல குடும்பங்கள் இருக்கும் பக்கமாக பார்த்து வீடு வாங்கவேண்டும் அல்லது வீடுமாற வேண்டும் என்னும் எண்ணம் மனத்தினினுள் புதைந்தே கிடந்தது. ஆனால் இந்த வாரம் எங்களின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் புதுக்குடும்பம் வந்தது எங்களின் அபிப்பிராயத்தைத் தள்ளிப் போட்டுவிட்டது.

 

எனது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல சந்தோசம். பக்கத்தில் குடும்பமாய் வந்தபடியால் எல்லாவற்றுக்கும் நல்லதுதானே என்ற எண்ணமே ஏற்பட்டது. எனது மனைவி பக்கத்துவீட்டுப் பெண்ணுடன் பேசத்தொடங்கினாள். அந்தப் பெண்ணும் நன்றாகவே பேச்சைக் கொடுத்தாள். தாங்கள் வேலையின் நிமித்தம் இங்கு வந்ததாயும் பிள்ளைகளின் படிப்பும் இங்கு நல்லதாய் இருப்பதால் இந்த   இடத்தைத் தேர்ந்தெடுத்ததாயும் அவள் பேசியதாக மனைவி என்னிடம் கூறினாள்.

 

ஒருநாள் என்னிடம் அந்தப் பெண் பேச்சுக் கொடுத்தாள். நல்ல ஆங்கிலத்தில் பேசினாள். நீங்கள் எந்த நாடு என்று கேட்டதற்கு வியட்நாம் என்று பதிலளித்தாள். எனக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. வியட்நாமியர், சீனர்கள், ஆங்கிலம் பேசினால் விளங்குவது சற்றுக் கடினம். அவர்களின் உச்சரிப்பு நச்சரிப்பாய்த்தான் அமையும். அப்படியிருக்க இவள் எப்படி நல்ல ஆங்கிலத்தைப் பேசுகிறாளென்று என்னுள் வியந்து கொண்டேன். அவளின் குடும்பம் பற்றி விசாரித்தேன். தான் ஏழுவயதில் அவுஸ்திரேலியா வந்ததாயும் இங்குதான் படித்ததாயும் தனது கணவன் ஒரு சீனக்காரர் என்றும் சொன்னாள். அவள் இங்கு சின்னவளாய் இருந்து படித்த படியால்த்தான் நல்ல ஆங்கிலம் பேசமுடிந்தது என்பதை அப்பொழுது உணர்ந்துகொண்டேன். கணவன் தன்னைவிடப் படிப்புக் குறைந்தவன் என்றும் ஆனால் நல்ல குணமுள்ளவன் என்றும் அதனால்த்தான் அவனைத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினாள். தான் ஒரு நிறுவனத்தில் கணக்காளராக இருப்பதாகவும் தனது கணவன் பாண் போறணையில் வேலை செய்வதாகவும் தெரிவித்தாள்.  “நீங்கள் குடும்பத்துடன் இங்கு இருப்பது எங்களுக்குப் பெரிய திருப்தியும் மகிழ்ச்சியும்” என்று தெரிவித்தாள். நானும் முறுவலுடன் தலையாட்டி விட்டு வந்தேன்.

 

கணவன் மாலை வேலைக்குப் போய் அதிகாலைதான் வருவான். அவள் காலையில் போய் மாலையில் வந்துவிடுவாள். பிள்ளைகளை அவளே பாடசாலைக்குக் கூட்டிச் செல்லுவாள். எங்கள் பிள்ளைகளும் அவர்களும் சேர்ந்து விளையாடுவார்கள். எங்கள் வீட்டு விசேசங்களுக்கு அவர்கள் வருவார்கள். நாங்களும் அவர்களின் விசேசங்களில் பங்குபற்றுவோம். உணவைப் பொறுத்தவரை வேறு பட்டாலும் உள்ளத்தால் இணைந்து நின்றோம். நல்லவொரு குடும்பம் அயலாக வந்ததை நாங்கள் அனைவரும் மனதார விரும்பினோம். அவள் நல்ல அழகான பெண். எடுப்பான மூக்கு. கவர்ச்சியான கண்கள். பார்ப்பதற்கு பளிச்சென்ற நிறம். கட்டான உடல்வாகு. மொத்தத்தில் பார்பவர்களைத் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு அவளிடம் கொட்டிக்கி டந்தது.

 

அதற்கு மாறாக அவள் கணவனிருந்தான். நிறம் குறைவு. சற்றுக் குட்டையான உயரம். சப்பை மூக்கு. ஆனால் மல்யுத்த வீரன்போல் உடலமைப்பு அழகுப் பதுமையும் அவனும் அன்புடன் குடும்பத்தில் இணைந்து பிள்ளைகளுடன் இருப்பதைப் பார்க்கும் பொழுது எங்களுக்கே உள்ளூர ஆச்சரியம்தான். பிள்ளைகள் தாயைப்போல இருந்ததால் வடிவாக இருந்தனர். அந்தக் குடும்பம் வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவளின் கணவன் விடுமுறை நாட்களில் மட்டுமே வீட்டில் நிற்பான். அப்பொழுதுதான் அவனைப் பார்க்க முடியும்.  அவனுடன் பேச முயன்றும் அவன் அதனைத் தவிர்த்தே நின்றான். அவனின் முகத்தில் சிரிப்பென்பதை மருந்துக்கும் காணவே முடியாது. ஆனால் வீடும் வேலையுமாகவே அவனிருக்கிறான் என்பது மட்டும் எங்களுக்குத் தெரியும்.

 

அவளிடம் ஒருநாள் துணிவுடன் கேட்டே விட்டேன். ” உனது கணவன் பேசுவதை ஏன் தவிர்க்கிறான் ? முகத்தில் சிரிப்பையே காணவில்லையே ! குடிக்கிறானா ? ” அவள் சொன்னாள். அப்படி ஒன்றும் இல்லை. அவர் மிகவும் நல்லவர். அவர் சீனப் பெளத்தர். சமய நம்பிக்கை மிக்கவர். அவருக்கு ஆங்கிலம் சரளமாகப் பேசவராது. அதனால் உங்களுடன் பேச அவருக்குப் பயம். அவரின் சுபாபமே அப்படித்தான். சீன மொழியில் கவிதைகூட இயற்றுவார். நல்ல சீன மொழி எழுத்தாளரும் கூட. என்று அவள் கணவனைப் பற்றிக் கூறியதும் என்னால் அதனை நம்பவே முடியாமல் இருந்தது. “இவ்வளவு திறமைசாலியா இப்படி!” என வியந்து கொண்டேன்.

 

ஐந்து வருடம் என்பது எப்படி ஓடியதோ தெரியவில்லை. எங்கள் பிள்ளைகள் பல்கலைக்கழகம் சென்றுவிட்டார்கள். பக்கத்து வீட்டுப் பிள்ளைகளும் பத்தாம் வக்குப்பில் படிக்க வந்துவிட்டார்கள். அடிக்கடி வந்து கதைக்கும் அவள் இப்போது கதைப்பது குறைந்து விட்டது. அவளின் கணவனின் நடமாட்டமும் கண்ணில் படவே இல்லை.அவள் மட்டும் காரில் போவாள் வருவாள். அவள் கணவனின் காரையும் காணவில்லை. அவன் வேலைக்குப் போய் வருவதாகவும் தெரியவில்லை. வாசலிலே கண்டவுடன் சிரித்த முகத்துடன் நிற்கும் அவள் சிந்தனையில்த்தான் காணும் பொழுதெல்லாம் இருந்தாள். கதைப்பதுகூடக் குறைந்துவிட்டது. கையை மட்டும் அசைத்துவிட்டுச் சென்றுவிடுவாள். அடிக்கடி பல ஆண்கள் மட்டும் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். கணவனைக் காணவில்லை. அவளின் முகமும் மாறிவிட்டது. புதியவர்கள் அடிக்கடி வருகிறார்கள். பிள்ளைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இப்படி நடப்பது எங்களை சிந்திக்க வைத்தது.

 

அவள் புருசனைத் துரத்திவிட்டு கண்டவன்களுடன் உல்லாசம் காண்கிறாள் என்று எனது மனைவி சொல்லிக் கொண்டே இருந்தாள். எனது பிள்ளைகளும் பக்கத்து வீட்டுக் காரியைக் கெட்டவள் என்றே நாளும் பொழுதும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் எனக்குள் அந்த எண்ணம் எழவே இல்லை.  ஒருவரிடம் பேசும் பொழுது, ஒருவரைப் பார்க்கும் பொழுது அவரை எடை போட்டுவிடலாம் என்பது எனது கருத்தாக இருந்தது. அதன்படி பக்கத்து வீட்டுக்காரி பக்குவமானவள் என்று நான் தீர்மானித்துவிட்டேன். ஆனால் நேரமும், காலமும் சூழலும் அவளின் நடத்தையில் சந்தேகம் கொள்ளும்படியே ஆக்கியிருந்தது.

 

எனது மனைவியும் பிள்ளைகளும் வீட்டைவிட்டு மாறவே வேண்டும் என்று ஒரே பிடிவாதமாகவே இருந்தார்கள். நடத்தை கெட்டவளுக்குப் பக்கத்தில் இருந்தால் வருகிற எங்கட நண்பர்களும் உறவினரும் கூட எங்களையும் ஒரு விதமாகவே பார்ப்பார்கள் என்று என்னை நச்சரித்தபடியே இருந்தார்கள். அன்று ஞாயிற்றுக் கிழமை. வெயிலும் குறைவாக இருந்ததால் பக்கத்து வீட்டுக்காரி புல்லுவெட்ட ஆயுத்தமானாள். நானும் புல்லுவெட்ட மெசினுடன் முன்னுக்கு வந்தேன்.அவள் பழையநிலையில் என்னைப் பார்த்துச் சிரித்து தானாகவே சுகம் விசாரித்தாள்.

 

இதனைச் சாக்காக வைத்து அவளுடன் பழையமாதிரி பேசத்தொடங்கி கணவனைப் பற்றியும் விசாரித்துவிட்டேன். கணவனைப் பற்றிக் கதை வந்ததும் அவளின் முகம் மாறியது. கண்கள் கலங்கின. பேச்சுக்கள் தடுமாறின. புல்லை வெட்டுவதை விட்டு விட்டு என்னை வரும்படி அழைத்தாள். பின் உடனேயே உங்கள் மனைவியையும் கூப்பிடுங்கள் என்றாள். அவளின் எண்ணப்படி மனைவியையும் அழைத்தேன். இருவரையும் தனது வீட்டுக்குள் கூட்டிச் சென்றாள்.  அவளின் வீட்டுக்குள் செல்வது இதுதான் முதல் தடவை. வீடு மிகவும் நேர்த்தியாக இருந்தது. புத்தர் சிலை ஒன்று எங்களை வரவேற்றது. அதன் முன்பாக ஊதுவத்தி நறும் புகையினை விட்டபடி வீட்டினை வாசமாக்கி நின்றது.

 

ஒரு அறையினுள் எங்களைகூட்டிச் சென்றாள். அங்கு நாங்கள் கண்ட காட்சி எங்களையே உலுக்கிவிட்டது. எங்களை அறியாமல் எங்கள் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. அவளின் கணவன் கட்டிலில் படுத்தபடி இருந்தான். அவனுக்குப் பக்கத்தில் பலவித மருந்துகள் நிறைந்து இருந்தது. அங்கும் ஒரு புத்தர் சிலையும் புத்தர் படமும் இருந்தது.  அவளையும் கணவனையும் மாறி மாறிப் பார்த்தோம். எங்களுக்கே வெட்கமாயும் துக்கமாயும் இருந்தது. அந்தப் பெண் இமயமாய் தெரிந்தாள். நாங்கள் சரிந்து நிலத்திலே கிடந்தோம். எடுத்த எடுப்பிலே காணும் தோற்றத்தைத்தைக் கணக்குப் போட்டு நாங்கள் எடுத்த தப்பான முடிவு அப்பளுக்கில்லா அவளை. பின்புதான் கேள்விப் பட்டோம் அவளின் கணவன் விபத்தில் அகப்பட்டு சுயநினைவு திரும்பாநிலையில் கோமாவில் இருக்கிறான் என்று.

 

கணவனை வேறு இடங்களில் விடாமல் தனது வேலையையும் பார்த்து அன்புக் கணவனையும் அருகிருத்திப் பார்க்கும் அவளை என்ன சொல்லி அழைப்பது ! அவள் பெண்ணல்ல. அவள் அன்பின் திருவுருவம் ! ஆண்டவனின் அனுக்கிரகம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *