படக்கவிதைப் போட்டி (159)

 

பவள சங்கரி

 

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?


லோகேஷ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.05.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1214 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

8 Comments on “படக்கவிதைப் போட்டி (159)”

 • சக்திப்ரபா wrote on 3 May, 2018, 21:59

  பெயரிலி
  _________

  நிறத்தைப் பாரத்து முகம் சுளிக்காதே;
  எளிமையைக் கண்டு எள்ளி நகையாடாதே;
  அமைதியாக இருப்பதால் அறிவுரைகள் அடுக்காதே;
  அயலான் என்பதால் அத்துமீறிப் பேசாதே;

  நான் கேளாமலே
  எனக்கும் ஜாதிக்குறியிட்டு – உன்
  சிறுமதியின் சிறையில் சீரழிக்காதே.

  போதும் நிறுத்து
  என்னைப் படச்சுருளில் புதைத்து விடாதே..
  நான் அடையாளம் தொலைத்தவன்.

  என்னைக் கேள்விக்கு உட்படுத்தாதே,
  நான் சுதந்திரத்தை நேசிப்பவன்
  தொல்லையின்றி திரிபவன்
  எல்லைகள் கடந்தவன்
  அவமானங்களுக்கு அப்பாற்பட்டவன்
  அசாதாரணமானவன்,

  நீயோ சராசரி பாதசாரி,
  ஆகையால்…
  எதையும் மதிப்பிடாமல்
  சலனமின்றி கடந்து போ!

 • ஆ. செந்தில் குமார்
  ஆ. செந்தில் குமார் wrote on 3 May, 2018, 22:56

  வாழ்வில் வெறுமை எதற்காக?
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
  -ஆ. செந்தில் குமார்.

  வையத்தில் படர்ந்த போலிகள் மிகுதியால்..
  பொய்யோவித் துறவியின் தோற்ற மென்று..
  ஐயம் தோன்றிட குழம்பும் மனதில்..
  மெய்நிலை உணர்தலே அனைத்திலும் மேன்மை..!

  முன்புள வினைகளை போக்கிட நினைக்கின்..
  அன்புளம் கொண்டு அனைத்துயிர் ஓம்ப..
  தென்புல தெய்வத்தின் அருளது கிட்டும்..
  துன்புள தெனினும் தெரித்து விலகும்..!

  துறவறம் பூண உருத்திராட்சை எதற்கு?
  துறவறத்திற் கென்றோர் அடையாளம் எதற்கு?
  அறநிலை வழுவாது சுற்றத்தைப் பேணல்..
  துறவறம் என்னும் நிலையினும் மேலாம்..!

  இறத்தலும் பிறத்தலும் இயற்கை எனினும்..
  துறத்தலும் ஒருவித அறமே எனினும்..
  வெறுத்தலை விட்டு பொறுத்து வாழ்ந்தால்..
  சிறத்தல் என்பது மாந்தர்க்கு திண்ணம்…!

 • Ar.muruganmylambadi wrote on 5 May, 2018, 16:41

  உயிரின் சலனம்..
  ================
  கடவுளைத் தேடுபவன்
  உடலிச்சை தாண்டியவன்
  எதையும் காட்டிக்கொள்ளாமல்
  எதார்த்தமாய் வாழ்கிறவன்
  இப்படித்தான் முகத்தைவிட
  திறமையை முன்நிறுத்துவான்!!
  வாழ்ந்து முடித்தவனுடைய
  தேய்ந்துபோன கரம் அல்ல!!
  ஆய்ந்து வாழ்கிறவனின்
  அர்த்தமுள்ள கையசைப்பு..
  அதிலுண்டு ஆயிரம்அர்த்தங்கள்!
  ஒவ்வொருவருவருக்குள்ளும்
  ஒளிந்துள்ளது தனித்திறமை
  வெளிக்கொண்டு வந்தால்
  வெளியுலகம் கொண்டாடும்!!
  சலனப்பட்டு சாய்ந்துவிட்டால்
  சரித்திரத்தில் இல்லை இடம்!
  விசனமுதறி எழுகிற போது
  விண்ணின்தூரம் பக்கமாகும்!
  ஐம்புலன்களடக்கம் கற்றால்
  அமைதிவழி மனம் இயங்கும்!!
  அனைத்தின்பமும் வசமாகும்!!
  💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
  ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி…
  பவானி…ஈரோடு….
  9442637264…
  💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 5 May, 2018, 21:14

  முகம் காட்டு…

  விதம்விதமாய் முகங்காட்ட
  விரும்புகிறவன் மனிதன்..

  புகைப்படம் தொடங்கி
  திரைப்படம் வரைக்கும்
  திரும்பிடும் பக்கமெல்லாம்
  மூழ்கிக் கிடக்கிறான் மனிதன்
  முகம்காட்டுதலிலேயே..

  விதிவிலக்குகள்
  வியப்பிலாழ்த்துகின்றன,
  நல்லது செய்பவன்
  விளம்பரம் பிடிக்காமல்
  முகம் மறைத்தால்,
  மேலும் உயர்த்திடும்
  மதிப்பை..

  சிலர்
  தப்பைச் செய்துவிட்டு
  தண்டனைக்குப் பயந்து
  தலைகுனிந்து
  முகங்காட்ட மறுப்பது,
  தள்ளிவிடுகிறது கீழே
  மதிப்பை..

  மனிதனே நீ
  முகத்தைக் காட்டு-
  (நல்ல) மனிதனாக…!

  செண்பக ஜெகதீசன்…

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 5 May, 2018, 22:07

  சித்தன் ஆனேன்..
  சித்தம் தெளிந்தேன்..!
  ========================

  சற்றே யோசித்தேன் சகலத்தையு மறிந்தேன்
  ……சித்தரின் வாழ்வியல் கூறுகளைக் கற்றேன்..!
  பற்றின்மை பற்றி அறிந்தபிறகு இல்லறம்
  ……விலக்கி பற்றறுத்து வாழும்கலை அறிந்தேன்..!
  புற்றீசல் போல் வாழ்வில் தொடர்ந்து வரும்
  …..பிரச்சினை அண்டாத தொரு வழியறிந்தேன்..!
  தற்காலிக வாசமாக எங்கும் அலைவேன்
  ……தரையும் மணலும் தங்கும் இருப்பிடமாகும்..!

  பொற்காலம் ஒன்று உண்டென்றால் அது
  …..பொய்மை நீக்கி மெய்யறியும் வாழ்வாம்..!
  முற்காலம் வாழ்ந்திருந்த முற்றும் துறந்த
  …..முனிவனும் இதைத் தானே மொழிந்தான்..!
  பற்பல வாழ்வியல் அனுபவமும் முடிவில்
  …..பற்றற்ற வாழ்வுக்கே வழி வகுக்குமன்றோ..!
  சிற்றின்பம் தானே நம்மையும் வதைக்கிறது
  …..சிறிது காலமதைத் துறக்கவும் நினைத்தேன்..!

  நடமாடும் நம்முடம்பைப் பேணிக் காக்க
  …..நல்லபல வழிகளை நவின்றார் ஆன்றோர்..!
  அடக்க ஐம்புலனை சித்தரிடம் கற்றேன்
  …..ஆறறிவின் பயனை அடைய வேண்டியே..!
  தடஙலிலாது தம்பிறவி கடக்க வொரு
  …..தகும் வழியென..சித்தனொடு சித்தனானேன்..!
  படமெடுத்து என்னைப் பிரபல மாக்காதீர்
  …..பன்முகத்தை நான் மறைத்துக் கொள்வேன்..!

 • அவ்வை மகள்
  அவ்வைமகள் wrote on 6 May, 2018, 11:42

  கற்றைச்சடைமுடித்தான் பூசிட்ட வெண்ணீர்மை
  ஒற்றைக்கரமுயர அவன் காட்டுமக் குறி காணீர்
  எற்றைக்கும் பேசும் நீர் பேசார்கள் பெரியோரே
  பொற்றைக் கருங்கல் போலசையாதசைந்திடுதல்
  நீற்றைப் புனைந்த நேர்மைமேல் நேர்மையென
  அற்றை நீதிகள் தாம் கூறியதவன் காட்டுகிறான்!
  சொற்றை போதனைகள் சொலாத சொல்லதனை
  இற்றைக்கேனும் நீர் பணிந்தவோ? பணிந்தார்கள்
  சோற்றுத் துருத்தியாய் வாழ்ந்தவோ? வாழ்ந்தார்கள்
  பேற்றை நினைந்தொழுகி சிறியரெவர் பெரியரென
  பெற்றைப் படம்பிடித்தோ சென்றனர் சென்றார்கள்?
  பூற்றைப் பொடிநிகழ்வைப் பாம்பாய்ப் படமெடுத்து
  போற்றிப் பொய்யுரைத்து பகட்டு மினுமினுக்கி வீழாதே! வீழாதே!
  நேற்றைக் கதைவிடுத்து பொறை பொறாமை விட்டு
  பிற்றைக்கும் நிலைக்குமாறு நீர் செய்த ஒழுக்கென்ன?
  தேற்றையொளிக்கூர்மை மழுங்காபுத்தியென வலக்கை
  தோற்றிடினும் நீ திடங்கொள்வாய்! மடங்கொள்வாய்!
  இறைக்கை நிலைத்திருக்க உன்கர லீலைதனை பேராயம் செய்யாதே!
  உறைக்கைக் காதலுடன் உடல்குழைய நெக்குருகி விழிநீரால் நீ உரையாடு!
  நெற்றைப் பயிர் காத்து, மைவிடாதெழுநீல வான்போர்வை நீ போர்த்து!
  புற்றைப் புறந்தள்ளி, கர்த்தவ்யம் நீ காத்து தாய் போற்று! சேய் போற்று!
  சொற்றைக் குறைத்தொழுகி வாயாற் பிதற்றாது நா போற்று! தொனி போற்று!
  சோற்றைக் குறைத்தொழுகி உடலால் பிறளாது கற்பெனும் காவல் போற்று!
  கற்றை நீ கல்விதனை, எழுத்ததனை விழுமியமாய் குற்றமற வார்த்துப் போடு!

 • சி.ஜெயபாரதன்
  சி. ஜெயபாரதன் wrote on 7 May, 2018, 8:11

  தீண்டத் தகாதவன்,

  சி. ஜெயபாரதன், கனடா

  கிழிந்த உடுப்பில் கிடக்கும்
  இழிந்த இனத்தைச்
  சேர்ந்தவன் !
  கழிப்பிடம் சுத்தம் செய்யும்
  கறுப்பி
  என் பெண்சாதி !
  மாடுகள் மேய்த்து
  காடுகளில் அலைவது
  என் மகன் !
  குப்பை வண்டி வாகனம்
  சப்பாணியின் தேர் !
  பெண்சாதிக்கு
  தினக்கூலி
  பிச்சைச் சோறு !
  குஷ்ட ரோகி நான்,
  தேமல் படந்திருக்கு
  முகத்தில் !
  படம் எடுக்க வேண்டாம்
  என்னை !
  பத்திரிக்கையில் முகத்தை
  வித்து உடனே,
  பணமாக்க வேண்டாம்
  சாமி !

  ++++++++

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 7 May, 2018, 21:40

  21 வது வரியில் எழுத்து பிழை… “தடங்கலிலாது”

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.