பழந்தமிழர்கள் வாணிபத்தால் பெற்றவளம்

முனைவர் கு.சரஸ்வதி, 

உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,

சிதம்பரம்பிள்ளை மகளிர் கல்லூரி, திருச்சி.

 

சங்ககாலத்தில் தமிழகம் கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் நீண்ட கடற்கரையைக் கொண்டிருந்தது. கிழக்கே குணகடலும்,  மேற்கே குடக்கடலும், தெற்கே கடற்கரை பக்கமாக இருந்த சேரநாடு மிகப்பிற்காலத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளம் பேசப்படுகிற நாடாகப் பிரிந்து இப்போது கேரளம் என்று பெயர் பெற்றிருக்கிறது. கேரளம் தனியொரு மாநிலமாகப் பிரிக்கப் படுவதற்கு முன்பு நெடுங்காலமாகச் சேரநாடு என்று பெயர் பெற்று தமிழ்நாட்டின் ஒரு கூறாக இருந்தது.

 

“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

 பிறவும் தம்போற் செயின்”(குறள்-120).

 

என்கிறார் வள்ளுவர். பண்டைக்காலம் முதல் தமிழ்நாடு வாணிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. தம்மிடம் உள்ள பொருளை அல்லது நாணயத்தைக் கொடுத்துத் தம்மிடம் இல்லாத பொருளைப் பெறுவது வாணிகம் எனப்படும். ஒவ்வொரு நிலத்திற்கும் ஏற்பத் தொழில்கள் வேறுபடும். தொழில் வேறுபாடுகளுக்கு ஏற்ப வாணிகமும் வேறுபடும். தம்நிலத்தில் கிடைத்த பொருளை வேற்று நிலத்திற்குக் கொண்டு சென்று விற்றுப் பொருள்களைப் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டு வாணிபத்தை இருபிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று தரைவழி வாணிபம் மற்றொன்று கடல்வழி வாணிபம். அவற்றின் வழி பழந்தமிழர்கள் பெற்ற வளத்தினை இக்கட்டுரை ஆராய்கிறது.

 

தரைவழி வாணிபம்

                தரைவழி வாணிபக்குழுக்கு சாத்து என்று பெயர். அயல் நாடுகளுக்குத் தரை வழியாகச் சென்று வாணிகம் செய்த சாத்தர் கழுதைகள், எருதுகள்,வண்டிகள் ஆகியவற்றில் வாணிகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கூட்டமாகச் செல்வர். அவர்கள் செல்கின்ற பாலை நில வழிகளில் வழிபறிக் கொள்ளையர்கள் கொள்ளையடித்ததால் அவர்களிடமிருந்து தங்களைக் காத்து கொள்வதற்காக வாணிகச் சாத்தர் தங்களோடு வில்வீரர்களையும் அழைத்துக்கொண்டு சென்றனர்.

 

                வாணிகச்சாத்தை வேடர்கள் கொள்ளையடித்ததைச் சங்க நூல்கள் கூறுகின்றன. மருதன்இளநாகனார் பாலை நிலத்தின் வழியே சென்ற வாணிகச் சாத்தைக் கொள்ளையிட்ட வேடரைப் பற்றி,

 

“மழைபெயல் மறந்த கழைதிரங்கு இயவில்

செல்சாத்து எறியும் பண்பில் வாழ்க்கை

வல்வில் இளையர்”(அகநானூறு-பா.245)

என்று கூறுகிறார்.

“……………………………………… சாத்தெறிந்து

அதர்கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக்

கொடுவில் ஆடவர்” (அகநானூறு-பா.167).

 

                என்று வாணிகச்சாத்துடன் பாலை நிலத்து மறவர் செய்த போரை அகநானூறு குறிப்பிடுகின்றது.

 

                பலாப்பழம் அளவாகச் சிறு சிறு பொதிகளாகக் கட்டப்பட்ட மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு வாணிகச் சாத்து தங்களுடைய வில் வீரர்களோடு சென்றதையும், ஆங்காங்கே வழியில் இருந்த சுங்கச் சாவடிகளில் அரசனுடைய அலுவலர்கள் அவர்களிடமிருந்து சுங்கம் வாங்கினார்கள் என்பதையும் பெரும்பாணாற்றுப்படை எடுத்துரைக்கின்றது.

 

“தடவுநிலைப் பலவின் முழுமுதற் கொண்ட

சிறுசுளைப் பெரும்பழம் கடுப்ப மிரியல்

புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து

அணர்ச் செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்

உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்

வில்லுடை வைப்பின் வியன் காட்டி”                             (பாடல் 77)

 

என்ற பாடல் அடிகள் சுங்கவரி பெறப்பட்டமையை குறிப்பிடுகின்றது.

 

தரைவழிப் போக்குவரத்துச் சாதனங்கள்

                வாணிகப் பொருட்களை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்திற்குக் கொண்டு செல்ல எருது,கழுதை,வண்டி,படகு, பாய்மரக்கப்பல்களைப் பயன்படுத்தினர். சிந்து, பாரசீகம், அரபி நாடுகளிலிருந்து குதிரைகள் அக்காலத்தில் கொண்டு வரப்பட்டன. கோவேறு கழுதைகளுக்கு அத்திரி என்று பெயர் வழங்கப்பட்டது. நாகரிகமுள்ள செல்வ நம்பிகள் அக்காலத்தில் கோவேறு கழுதைகளை ஊர்தியாக பயன்படுத்தினார்கள். ஆனால் பொதி சுமக்கவும்,சரக்கு வண்டிகளை, இழுக்கவும் அவற்றைப் பயன்படுத்தவில்லை, ஊர்தியாக மட்டும் பயன்படுத்தினார்கள். அத்திரிக்கு இராசவாகனம் என்றும் பெயர் வழங்கப்பட்டது.

 

                பாண்டிநாட்டுக் கொற்கைக் கடலுக்கு அருகில் பரதவர் ஊருக்கு ஒருவன் அத்திரி பூட்டின வண்டியில் சென்றான் என்பதை,

 

“கொடுநுகம் நுழைந்த கணைக்கால் அத்திரி

வடிமணி நெடுந்தேர் பூண”(அகநானூறு-பா.350).

 

என்று அகநானூறு குறிப்பிடுகின்றது.

 

                வாணிகப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு எருதுகள் பயன்பட்டன. மாட்டுவண்டிகளில் வாணிகப் பண்டங்களை ஏற்றிக்கொண்டு சென்றனர். வணிகர்கள் தங்களோடு வில் வீரர்களையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

“ஆரை வேய்ந்த அறைவாய்ச் சகமம்”(பாடல் வரி 50).

என்று வாணிகப் பொருள்களை மாட்டு வண்டிகளில் எடுத்துச் சென்றதை பெரும்பாணாற்றுப்படை சுட்டுகின்றது.

 

                பாறைகளும், குன்றுகளும் உள்ள நாட்டிற்குள் செல்ல கழுதைகள் பயன்பட்டன. கழுதைகளின் முதுகின்மேல் பொதிகளை ஏற்றி வாணிகச் சாத்து ஒன்று சேர்ந்து சென்றதை,

 

 “நெடுஞ்செவிக் கழுதை குறுங்கால் ஏற்றைப்          

புறம்நிறை பண்டத்து பொறை” (அகநானூறு- பா.343)

 

என்ற அகநானூற்றுப் பாடல் கூறுகின்றது.

 

பண்டமாற்று

                சங்ககாலத்தில் வாழ்ந்த தமிழர் அன்றாடத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு, பால், தயிர், மீன், இறைச்சி முதலான பொருள்களைக் காசு கொடுத்து வாங்காமல் பண்டமாற்று செய்து கொண்டனர். பெரிய பட்டினங்களிலும் நகரங்களிலும், பணம்கொடுத்து பொருளை வாங்கும் முறை இருந்த போதிலும் ஊர்களிலும், கிராமங்களிலும் பொதுவாகப் பண்டமாற்று முறையே வழக்கத்தில் இருந்தது.

 

                முல்லைத்திணை பாடலொன்றில் இடையன் பாலைக்கொடுத்து அதற்கு ஈடாக மருத நிலத்து மக்களிடமிருந்து அரிசி, கேழ்வரகு, தினை போன்ற தானியத்தை பெற்றுக்கொண்டதை பின்வரும் அடிகள் சுட்டுகின்றன.

 

 “பாலொடு வந்து கூழொடு பெயரும்

ஆடுடைஇடைமகன்” (குறுந்தொகை-பா-221)

 

                குறிஞ்சி நிலத்து வேடன் தான் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லை மாற்றிக் கொண்டதை கோவூர் கிழார் புறநானூற்றின் வாயிலாக கூறுகிறார்.

 

 “கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்

மான்தசை சொரிந்த வட்டியும் ஆய்மகள்”(புறநானூறு-பா.33).

 

நெய்தல் நிலத்தில் வசித்த பரதவர் கடலிலே சென்று சுறா, இறால், முதலான மீன்களை பிடித்து வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த மீனைப் பரதவ மகளிர் எளிதில் தானியத்துக்கு மாற்றினார்கள் என்பதை நற்றிணையில் அமைந்த

 

 “இனிதுபெறு பெருமீன் எளிதினின் மாறி” (நற்றிணை-பா.239)

 

என்ற அடிகள் புலனாக்குகின்றது. இவ்வாறு உணவு பொருள்களை சங்காலத்தில் பண்டமாற்றமாகவும் கொண்டதை சங்க இலக்கிய பாக்கள் உணர்த்துகின்றன.

நாணய மாற்று

                பண்டமாற்று வழங்கிய காலத்திலும் காசு வழங்கப்பட்டது. செம்பு, வெள்ளி, பொன் முதலிய காசுகள் வழங்கி வந்தனர் என்பதையும், சங்க இலக்கிய அடிகள் பிரதிபலிக்கின்றன. காசுகள் நெல்லிக்காயின் வடிவம்போல உருண்டு சிறிது தட்டையாக இருந்தன என்றும் பாலை நிலத்து நெல்லிக்காய்கள் பொற்காசுகள் உதிர்ந்துகிடப்பன போலக் காணப்பட்டன என்பதையும்

 

                ‘’புல்இலை நெல்லிப் புகரில் பசுங்காய்

கல்லதர் மருங்கில் கடுவளி உதிர்ப்பப்

பொலஞ்செய் காசின் பொற்பத்தாஅம் அத்தம்”

                                                                                                                                                (அகநானூறு பா .363)

என்று வெண்ணாகனார் கூறியுள்ளார்.

 

நாளங்காடி அல்லங்காடி

                சங்ககால உள்நாட்டு வாணிபத்தில் இருவகையான அங்காடிகள் இருந்தன.அவை 1) நாளங்காடி 2) அல்லங்காடி என்பனவாகும். நாளங்காடி  என்பது பகல் நேரத்தில் இருந்த அங்காடியாகும். அல்லங்காடி என்பது இரவு நேர விற்பனைக் கூடமாகும். மதுரையில் அங்காடிகளில் வியாபாரம் நடந்த விதத்தையும் அங்கு கூடியிருந்த மக்களது கூட்டத்தையும் பற்றி மதுரைக்காஞ்சி சிறப்பாக கூறுகின்றது. அல்லங்காடியில் இருந்து வாணிகர் எங்கு வியாபாரம் செய்யச் சென்றாலும் கூட்டம் கூட்டமாகச் சென்றனர். இதற்கு காரணம் பெரும்சாலைகளில் கள்வர்கள் அதிகமாக இருந்ததால் வாணிகர்கள் ‘’வாணிகச் சாத்து” என்ற குழுக்களை ஏற்படுத்திக் கொண்டனர்.

 

கடல் வாணிபம்

                தமிழ்நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல்  சூழ்ந்திருந்தபடியால் தமிழர் இயற்கையாகவே கடற்பயணம் செய்வதிலும் கப்பல் வாணிகம் செய்வதிலும் தொன்றுதொட்டு ஈடுபட்டிருந்தார்கள். கிழக்கு கடற்கரை, மேற்கு கடற்கரை போன்ற இடங்களில் கடல் வாணிபம் சிறந்து விளங்கின என்பதை பத்துப்பாட்டு நவில்கின்றது.

 

                தமிழரின் கடல் வாணிகத்தைக் கிழக்குக்கடல் வாணிகம் என்றும் மேற்குக்கடல் வாணிகம் என்றும் இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். தெற்கே குமரிக்கடலுக்கு அப்பால் நிலம் இல்லாத படியால் தெற்கு கடலில் வாணிகம் நடக்கவில்லை. கிழக்குக் கடல் வாணிகம் என்பது குணக்குக் கடலாகிய  வங்காள விரிகுடாக்கடலில் உள்ள இலங்கை, ஆந்திரம், கலிங்கம், வங்காளம் காழகம்(பர்மா), சாவகம் முதலிய நாடுகளுடன் செய்யப்பட்ட வாணிகம் ஆகும். மேற்குக்கடல் வாணிகம் என்பது குடகுக்கடலாகிய அரபிக்கடலில் செய்யப்பட்ட வாணிகம். அங்கு கிரேக்க, ரோம, எகிப்து தேசத்து யவனர்களுடனும் அரபிநாட்டு அராபியருடனும் வாணிகம் நடந்தது.

 

கிழக்குக் கடல் வாணிகம்

                தமிழர்களின் வாணிகக் கப்பல்கள் மரப்பலகைகளில் இரும்பு ஆனி அடித்து இணைக்கப்படாமல் பனைநார், தென்னை நாரினால் இணைத்து கட்டப்பட்டிருந்தன. இந்தக்கப்பல்களின் பாய்மரங்களில் துணிப்பாய்கள் கட்டப்பட்டிருந்த படியால் காற்றினால் தள்ளப்பட்டு நினைத்த இடங்களுக்குச் சென்றன. இந்தப்பாய்மரக் கப்பல்களில் தமிழ் வாணிகர் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அயல்நாடுகளுக்குக் கொண்டு சென்றுவிற்று அங்குள்ள பொருள்களை ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு வந்தனர்.

 

                அக்காலத்தில் உலகப்புகழ் பெற்ற காவிரிப்பூம்பட்டினத்து துறைமுகத்தில் வெவ்வேறு மொழிகள் பேசும்  வெவ்வேறு நாட்டு கப்பல் வாணிகர் வந்து தங்கினார்கள் என்று சங்கச் செய்யுள் பின்வருமாறு கூறுகின்றன.

 

                                                மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப்

                                                புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும்

                                                முட்டாச் சிறப்பிற் பட்டினம்.       (பட்டினப்பாலை.பா.216-218)

 

                சாவகத்தீவுகளுக்கு அருகில் வடக்கே உள்ள காழகம், கடாரம், மலயம் முதலிய நாடுகளுடன் தமிழர் வாணிகம் செய்தனர்.’’ காழகத்து ஆக்கம்’’ என்று பட்டினப்பாலை கூறியபடியால் காழகத்துப் பொருள்களும் தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

 

                தமிழகத்துக்கு வடக்கேயுள்ள கிழக்குக்கடல் துறைமுகப் பட்டினங்களிலும் தமிழர்வாணிகம் செய்தார்கள். வடக்கே வங்காளத்தில் கங்கையாற்றுத் துறைமுகத்துடன் அவர்கள் வாணிகம் செய்ததை “வடமலைப்பிறந்த பொன்னும் மணியும்’’ ’’கங்கையும் வாரியும்’’ என்று பட்டினப்பாலை கூறுகிறது.    

 

மேற்குக்கடல் வாணிகம்

                அராபியரும், பாரசீகரும், எகிப்தியரும், யவனரும் மேற்குக் கரையில் தமிழர்களோடு வாணிகஞ் செய்தனர். அக்காலத்தில் சேர நாட்டில் முக்கியமான ஏற்றுமதிப் பெருளாக இருந்தது மிளகு. மேற்குக்கடற்கரைத் துறைமுகங்களில் ஆதி காலத்தில் வாணிகஞ் செய்யத் தொடங்கியவர்கள் அராபியர்.முசிறித் துறைமுகத்துக்கு அருகில் கொடுமனம், பந்தர் என்னும் ஊர்கள் இருந்தன. பந்தர் என்னும் இடத்தில் அராபிய வாணிகர் தங்கி வாணிகம் செய்தார்கள். அரபி மொழியில் பந்தர் என்ற சொல்லுக்கு அங்காடி அல்லது  வாணிகம் செய்யும் இடம் என்பது பொருள். பதிற்றுப்பத்தில் பந்தர் என்னும் இடம் குறிக்கப்படுகிறது.

 

                                                கொடுமணம்பட்ட வினைமாண் அருங்கலம்

                                                பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம். (எட்டாம்பத்து பா 74 வரி 4.5)

 

                பந்தரில் பொன்நகைகளும் முத்துக்களும் விற்கப்பட்டன என்பது அறியமுடிகிறது. யவனர்கள் வருவதற்கு முன்பே அராபியர் சேரநாட்டில் வந்து வாணிகம் செய்தனர். அவர்கள் முக்கியமாகத் தமிழ்நாட்டிலிருந்து மிளகை ஏற்றிக்கொண்டு சென்று எகிப்து நாட்டு அலக்ஸாந்திரியா துறைமுகப்பட்டினத்தில் விற்றனர்.

 

வாணிகர் பண்பு

                வணிகர்களின் பண்பினை பட்டினப்பாலை மிக நயம்பட கூறுகின்றது.

 

                நெடுநுகத்துப் பகல்போல

                நடுவுநின்ற நன்னெஞ்சினோர்

                வடுவஞ்சி  வாய்மொழிந்து

                தமவும் பிறவு மொப்பநாடிக்

                கொள்வதுஉ மிகை கொளாது

                கொடுப்பதூஉம் குறைகொடாது (பட்டினப்பாலை-பா வரி 206-210)

 

என்று நடுநிலைமையோடு நடந்ததை எடுத்துரைக்கின்றது.

 

தொகுப்புரை

                சங்ககாலத் தமிழக பொருளாதார வளர்ச்சியில் வாணிபம் முக்கிய பங்கு வகிக்கின்றது.உள்நாட்டு வர்த்தகம் பெரும்பாலும் பண்ட மாற்று முறையிலேயே நடைபெற்றபோது அயல்நாட்டு வர்த்தகம் நாணய மாற்றுமுறையில் நடைபெற்றது.

 

                வாணிபத்தொடர்பு  மட்டுமின்றி பண்பாட்டுத் தொடர்பு, நாட்டின் பொருளாதாரம் வாணிகர்களால் சிறப்புற்றது. பண்டைத் தமிழரின் வாணிகம் மிகச்சிறந்த முறையில் எக்காலத்தவரும், எந்நாட்டவரும் போற்றும் வகையில் அமைந்திருந்தது என்பதை சங்க இலக்கியங்கள் வழி அறியமுடிகின்றது.

பார்வை நூல்கள்

  1. கதிர் முருகு, பத்துப்பாட்டு , சாரதா பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை – 600 004 – முதற்பதிப்பு மே (2009)
  2. வெ.கிருஷ்ணசாமி, தமிழ் இலக்கியத்தில் பயணச் செய்திகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் – முதற் பதிப்பு – டிசம்பர் (2003).
  3. சீனி. வேங்கடசாமி, பழங்காலத் தமிழர் வாணிகம், நீயூ செஞ்சுரிபுக் ஹவுஸ், சென்னை-600098 – முதற்பதிப்பு மார்ச் (1974)
  4. 4. அ.மாணிக்கனார்(உரை),  அகநானூறு,  வர்த்தமானன் பதிப்பகம்,   சென்னை-600017 – முதற்பதிப்பு-1999.

 

Share

About the Author

has written 1093 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.