-முனைவர் ம. தமிழ்வாணன்

தொல்தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். அதனைத் தாங்கள் படைத்த இலக்கியங்களில் பதிவு செய்து வந்துள்ளனர். செவ்விலக்கியங்கள் அக்கால மக்களின் இயல்பான வாழ்க்கையை எடுத்துக் காட்டுகிறது. மனித சமுதாயத்தில் அன்றாட வாழ்வில் நடைமுறைக்கு ஏற்ற வகையில் நலம் விளையக்கூடிய செயல் எதைச் செய்தாலும் அது அறச்செயலாகும். அறம் என்றால் தொண்டு, தூய்மை என்பது பொருளாகும். இத்தொண்டை எக்காரணம் கொண்டும் சுயநலம் கருதாமல், பொதுநலம் கருதியே செய்ய வேண்டும். என்பதை வலியுறுத்தும் விதமாக, ‘அறம் செய விரும்பு’ என்று ஔவையாரும், ‘அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க’ என்று வள்ளுவரும் கூறியுள்ளனர். தொல்தமிழர் அறத்தில் சிறந்தது ஈகையே என்பர். செவ்விலக்கியத்தை ஆய்வு செய்கின்றபோது அவர்களது ஈகைத்தன்மையை ஆங்காங்கே காணலாம். இத்தகைய தொல்தமிழரின் ஈகையின் மகத்துவத்தைச் சுருக்கமாகக் கீழே காண்போம்.

ஈகை விளக்கம்

ஈகை என்றால் கொடுத்தல்; இல்லாதவர்க்குக் கொடுத்தல். இரப்போர்க்கு இல்லையென்னாது கொடுப்பது சிறந்த அறமாகும். ஈகை என்பது பொருள் உடையவர்கள், இல்லாதவர்களுக்கு வழங்குவது. இது எவ்வித எதிர்பார்ப்பும், திரும்பப் பெறும் தன்மையும் அற்றது. உலகத்தாற் போற்றும் அறங்களில் முதன்மை இடம் பெறுவது, அறங்களில் சிறந்தது, மனித நேயத்தின் அடிப்படையாகத் திகழ்வது ஈகைப் பண்பாகும்.

செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே
(புறம்.189:7-8) என்கிறார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.

பிறருக்குக் கொடுத்துத் தானும் உண்டு வாழ்வதே வாழ்க்கையாகும். ஈகை குணம் தனிமனிதச் சிந்தனையில் தோன்றிச் சமுதாயப் பயனுடையதாக அமைகின்றது. வறுமையில் வாடும் மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்யும் போது அச்செயல் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆதலால் தான் உலக இன்பங்களில் ஈகை இன்பம் உயர்ந்ததாக உலகத்தார் போற்றி வருகின்றனர்.  வறுமையில் வாடும் புலவரான பெருஞ்சித்திரனார் தான் பெற்றுவந்த பொருளைத் தன் மனைவியிடம் கொடுத்து, அதனைத் தம் சுற்றத்தாருக்கும் பகிர்ந்தளிக்கச் சொல்கிறார். இது தான் ஈகையின் மாண்பாகும்.

இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே! (புறம்.163.5-7)என்ற பாடலின் வழி விளக்குகிறார் அவர்.

சங்க காலத்திலும் சிறுகுடி பண்ணன் போன்ற வண்மையாளரை புலவர் பசிப்பிணி மருத்துவன் என்று கூறிப் புகழ்ந்தனர். அக்காலத்தில் பகிர்ந்துண்ணல், கொடை, பரிசில், உணவிடல் என்ற பலநிலைகளில் சமூக வழக்கிலிருந்த ஈகை, குறள் காலத்தில் வறியவனின் பசி தீர்த்தல் என்ற பொருளில் இறுக்கம் பெற்றது என்பர். விருந்தோம்பல் என்பதும் அன்று ஈகையைச் சார்ந்ததாகவே கருதப்பட்டது. ஈகை என்பது தனி உயிர்த் துன்பம் நீக்கும் சிறப்புக் கொடையாகக் கருதப்படுகிறது.

ஈகை என்று வள்ளுவர் சிறப்பித்து உரைப்பது வறியவர்க்குப் பசிபோக்கும் ஈகைக்(வயிற்றீகை) குணமாகும். இத்தகைய பண்பு இயல்பான நிலையில் உண்டாவதாகும். தன்னிடம் இல்லை என்ற துயரை எடுத்துரைக்கும் முன்பே கொடுக்கப்படுவது. அது எதையும் எதிர்பார்த்துச் செய்வதில்லை. ‘இம்மைச் செய்தது மறுமைக்காம்’ என்று புதிதாய் அன்று கூறப்பட்ட வினைக் கொள்கையைப் புலவர் மரபு ஏற்றதில்லை. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடலைக் காண்போம்.

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறி என
ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே (புறம். 134)

இப்பாடலில், ஆய் அறம் செய்யும் வணிகம் அல்லன். தன் பணத்தை இந்த உலகில் முதலீடு செய்து மறு உலகில் அதன் ஊதியத்தைப் பெறுவதில்லை. சான்றோர்களின் மரபார்ந்த வழியில் அவன் வாரி வழங்குகின்றான் என்கிறார் புலவர். அறம் அறத்திற்காகச் செய்யப்படவேண்டும். ஈகை ஈர உள்ளத்துடன் ஈகைக்காகச் செய்யப்படுவதாகும்.

வறியவர்க்குக் கொடுப்பதில் ஒரு மகிழ்ச்சியான இன்பம் இருக்கின்றது; இதை ஏன் ஈயாதவன் உணர்வதில்லை என வியக்கிறார் வள்ளுவர். ஈயாமல் செல்வத்தைச் சேர்த்து வைப்பவர் இகழப்படுகிறார். நிரப்பிய உணவைத் தனித்து உண்பது, இரப்பதைவிட பார்வைக்கு அருவருப்பானது என்று கூறப்படுகிறது. சாதலை எவரும் விரும்புவதில்லை; ஆனால் கண்முன் பசித்தவன் இருக்க அவன் துயர் தீர்க்க முடியாத நிலையில் சாதலை ஒருவன் விரும்பலாம் எனவும் கூறப்படுகிறது.

ஈகைக்குரிய இலக்கணம்

கொடைப் பண்பிலிருந்து முற்றிலும் வேறுபட்ட பண்புடையது ஈகையாகும். திருவள்ளுவர் ஈகைக்கு இலக்கணம் வகுத்துள்ளமை சிறப்பாகப் பேசப்படுகிறது.

வறியார்க்குஒன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து. (குறள்.221)

என்ற குறளின் பதிவில் திரும்ப உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும்; பிற கொடைகள் யாவும் பயன்எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்குப் பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். வறியோர் பசி தீர்த்தலே ஒருவன் தான் செல்வத்தைச் சேர்த்து வைக்கும் இடமென்று சங்ககால மக்கள் எண்ணி வாழ்ந்து வந்துள்ளனர்.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. (குறள்.231)

வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழவேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை என்று வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.

ஈகைக் குணம் உடையவர், ஊரின் நடுவே பலரும் அணுகிப் பயன் பெற முடியும் மரம் போன்று பலருக்கும் பயன் தருபவர்; ஊர் நடுவே இருப்பதால் பெண்பனையைப் போன்றவர். ஈயாதவர் சுடுகாட்டில் உள்ள ஆண்பனையைப் போன்று பயன் தராதவர். மேலும் அணுக இயலாத இடம் என்று பனை மரங்களின் இயல்புகளை மக்களின் பண்புக்கு உவமையாக்கும் நயம் சிறப்பிற்குரியதாகும்.

நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.            (நாலடி.96)

முரசின் ஒலி ஒரு குறிப்பிட்ட தூர அளவுக்குக் கேட்க இயலும். இடியின் ஒலி இன்னும் அதிக தூரம் கேட்கும். சான்றோர் ஒருவர் யாசித்தவர்க்கு ஒன்றைக் கொடுத்தார் என்ற சொல் மூன்று உலகங்களிலும் கேட்கப்படும் சிறப்பை உடையது என்று ஈகையின் சிறப்பைச் சுவைபடச் சொல்கிறது நாலடியார்.

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல் (நாலடி.100)

ஒரு சிறிய அரிசியின் அளவாவது – நாள்தோறும் உங்களால் இயன்ற அளவு பிறருக்குக் கொடுத்துப் பின் உண்ணுங்கள்! ஏனென்றால், ஆழமான கடல் சூழ்ந்த இவ்வுலகில் சமைத்தல் இல்லாத அடுப்பினையுடைய வறியவர்களை, முற்பிறப்பில் பிறருக்கு ஒன்றும் உதவாது இருந்தவர்கள் என்று சான்றோர் உரைப்பர் என்பதைக் கீழ்க்குறிப்பிட்ட நாலடியார் பாடல் விளக்குகிறது.

இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் – உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர். (நாலடி.94)

வறியவர்க்கு உணவளித்தல்

பூவுலகில் தானத்திலே சிறந்த தானம் அன்னதானம்; அது மட்டும்தான் போதும் என்று சொல்லக் கூடியது மற்ற எது கொடுத்தாலும் போதும் என்று மனம் வராது அதனால்தான் அதை சிறந்த தானம் என்கிறோம். அன்னதானத்தை வள்ளுவரும் போற்றுகிறார். ஈகை என்ற  இருபத்தி மூன்றாம் அதிகாரம் பொதுவாக ஈகையைப் பற்றிச் சொன்னாலும் அதில் நான்கு குறட்பாக்கள் அன்னதானச்  சிறப்பையே எடுத்துரைக்கின்றன.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் (குறள்.225)

தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியை உணவுக் கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள்.226)

வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள்பெற்ற ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. (குறள்.227)

தான்பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுதல் இல்லை.

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். (குறள்.229)

பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத் துன்பமானது.

தேடிய உணவைத் தாமே தனித்து உண்ணும் தன்மையானது, பிச்சையெடுத்தலை விடவும் தீயது. சங்க காலத்தில் ஒரு  சேரமன்னன், உதியன் சேரலாதன் என்பவன். மகாபாரதப் போரில் பங்குகொண்ட இருதரப்புப் படை வீரர்களுக்கும் உணவளித்ததாகச் சங்கச் செய்தி சொல்கிறது. (சங்க காலம், மகாபாரதப்  போர்க்காலத்தை ஒட்டிய  தொன்மை வாய்ந்தது என்று சில ஆராய்ச்சியாளர்கள் ஊகிக்கிறார்கள்.) அதனாலேயே அவன் ‘பெருஞ்சோற்று உதியன்  சேரலாதன்’ என வழங்கப்பட்டான் என்று நம்பப்படுகிறது.

பெருஞ்சோறு படைத்த அவனது மாபெரும் அன்னதானம், இலக்கியப் புகழ் பெற்றுவிட்டது. வானவரம்பன் என்றும்  அவனுக்கு ஒரு பட்டம் உண்டு. வானவரம்பன் என்கிற வகையில் வானத்தையே எல்லையாகக் கொண்டு பேரரசாட்சி  கண்டவன் என்பது இந்தப் பட்டத்திற்கான பொருளாகும்.

ஈதலின் தனிச்சிறப்பு

ஈதலின் அவசியத்தை உணர்த்துகின்ற வகையில் ஐந்து குறள்கள் விளக்கம் தருகின்றன.

நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்எனினும் ஈதலே நன்று (குறள்.222)

பிறரிடமிருந்து பொருள்பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம் இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.

இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள (குறள்.223)

`யான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு. (குறள்.224)

பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுதலும் துன்பமானது.

சாதலின் இன்னாது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை. (குறள்.230)

சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்? (குறள்.228)

தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் வன்கண்மை உடையவர் பிறர்க்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ? என்று ஈகையின் சிறப்பைக் குறள் மெய்ப்பிக்கின்றது.

இல்லறவியலின் புகழ் அதிகாரத்திலும் ஈதல் அவசியத்தை உணர்த்திய வள்ளுவர் மூன்று குறள்களில் தனது மிகச் சிறப்பான பதிவினை இட்டுள்ளார். அத்தகைய குறளையும் விளக்கத்தையும் கீழே காணலாம்.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். (குறள்.232.)

புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதுஒன்று இல்.  (குறள்.233)

உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு. (குறள்.234.)

நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ்செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.

ஈகைக்காகவே செல்வம் எனச் செல்வம் நியாயப்படுத்தப்படுகிறது. உபரி உணவும் சொத்தும் பொருளும் அறத்தோடு பிணைக்கப்பட்டு விட்டதால் குற்றமற்றதாகி விடுகின்றன.

ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் (குறுந்.63:1)

என்றும் பொருளைத் தேடுவதே பிறருக்குக் கொடுக்கத்தான் என்னும் பொருளில்,

பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு
காமர் பொருட் பிணி போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே. (நற்.186:8-10)

என்றும் செவ்விலக்கியங்கள் அறத்தின் பேரால் ஈகையின் சிறப்பை விளக்குகின்றன.

மனித குலத்தின் சிறப்புகளில் ஈகையும் ஒன்று. அது பிறர்படும் துன்பத்தைக் கண்டு இரங்கலும், அத்துன்பத்தைப் போக்க முயல்வதும் ஆகும். அந்த வகையில் எழுந்த செயலே ஈகையாக மலர்ந்துள்ளது. வாழ முடியாதவர்களையும், வாழத் தெரியாதவர்களையும், வாழ்வை இழந்தவர்களையும் ஏற்றுக் காப்பது சமுதாய நலத்தைக் காக்கும் நற்செயலாகும். எல்லோரும் ஈகையை மேற்கொள்ள வேண்டும். அவரவர் தங்கள் உழைப்பின் பலனில் ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து, மற்றவர்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும்.(தென்கச்சி கோ.சுவாமிநாதன், வானொலியில் இன்று ஒரு தகவல், பாகம் – 8, பக். 106-108) அவ்வாறு உதவும் போது மனமும் எளிதாகும், ஏற்பவரின் வாழ்வும் வளமாகும்.

மேற்கண்ட செய்திகளால் ஈகை என்னும் வறியவர்க்கு உதவும் அரும்பெரும் பண்பு தொல்தமிழர்களிடையே அக்காலத்திலேயே இருந்தமை வியப்பிற்குரியதாக உள்ளது. இத்தகைய ஈகைப் பண்பால் அம்மக்களின் பழக்க வழக்கப் பண்பாட்டுச் சிறப்பு வெளிப்பட்டு நிற்பதை உணரமுடிகிறது. மேலும் இடைக்காலத்திலும் பிற்காலத்திலும் தமிழ்மன்னர்கள் வறியவர்க்கு உணவளிக்கும் அன்னசாலைகளை நிறுவி பசியாற்றிய செய்திகள் காணக்கிடைக்கின்றன. தற்காலத்திலும் கிராமங்களில் கோயில் திருவிழா, சல்லிக்கட்டு, விளையாட்டுப்போட்டி போன்ற பொதுநிகழ்ச்சிக்கு வருகின்ற யாவர்க்கும் உணவு அளித்து இன்புறுவதைக் காணமுடியும். எனவே நாமும் வறியவர்க்கு உதவி நற்பேறுகளைப் பெறுவோம்.

கருவிநூற்கள்

  1. திருக்குறள், மணக்குடவர் உரை, கோ. வடிவேலுசெட்டியார் பதிப்பு 1925
  2. திருக்குறள், பரிமேலழகர் உரை, ஏ.ரங்கசாமிமுதலியார் & சன்ஸ் பதிப்பு, மதராஸ் 1931
  3. திருக்குறளுக்கு மிக எளிய உரை, சாமி சிதம்பரனார் உரை, திருவள்ளுவர் வரைகலையகம், சென்னை 2001
  4. திருக்குறள், வ.உ.சிதம்பரனார் உரை, இரா.குமரவேலன் பதிப்பு, பாரிநிலையம் சென்னை 2008
  5. தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008

*****
கட்டுரையாளர் – முதுநிலை ஆய்வு வல்லுநர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
தரமணி, சென்னை – 113

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *