-ர.ஜெகன்

இசை என்பது யாவராலும் அறியத்தக்க மொழி ஆகும். ஐம்புலன்களில், காதுகளால் கேட்டு இன்புறத்தக்க ஓர் அரிய கலை இசைக்கலை ஆகும். இசை என்பது இசைவிப்பது; தன்வயப்படுத்துவது என்பது பொருள்படும். அன்பைப் பெருக்கி ஆருயிரையும் வளர்ப்பது இசையாகும். மரம், செடி, கொடி முதலிய ஓரறிவு உயிர்கள் முதலாக மக்கள் என்னும் ஆறறிவு உயிர்கள் வரையுமுள்ள எல்லா உயிர்களையும் இசையினால் வசப்படுத்த முடியும் என்பதை மெய்ப்பித்துள்ளனர்.

தொல்காப்பியத்தில் ஐவகை நிலத்திற்கும் உரிய பண்களை வரையறை செய்வதில் இருந்து தமிழிசையின் தொன்மை புலப்படுகின்றது. பண்களைப்  பற்றியும் இசைக்கருவிகளைப் பற்றியும் பல செய்திகள் புறநானூற்றில் கூறப்பட்டுள்ளது.

“தணிபிறை அறையும் அணிகொள் தோர்வழி”       (புறம் – 68 – 14)

“ஏம முரசம் இழுமென முழங்க”    (புறம் – 3-3)

“மண்முழா மறப்பப் பண்யாழ் மறப்ப”           (புறம் – 65-1)

“நுண்கோற் றகைத்த தெண்கண் மாக்கிணை”      (புறம் – 70-2,3) என்ற பாடல் வரிகளில் முரசு, முழவு, யாழ், பறை, உடுக்கை, சங்கு, துடி, தண்ணுமை முதலிய இசைக் கருவிகளின் பெயர்களை அறிய முடிகின்றது. முரசு போன்ற தோற்கருவிகள் மிகப் பழமையான இசைக்கருவிகள் ஆகும். கொம்பு, மகுடி, சங்கு, போன்ற தொன்மைக் கருவிகள் இதன் பின்னரும், யாழ், போன்ற நரம்புக் கருவிகள் கடைசியாகவும் தோன்றியிருக்க வேண்டும்.

இசைக்கருவிகளின் தோற்றம்

சங்க இலக்கியச் சமுதாயத்தில் காதலைப் போலவே, வீரமும் உயிர்ப் பண்பாகக் கொண்டுள்ளது. போரின் ஈடுபடும் மறவரின் உணர்வை வளர்த்தல் போர் உத்திகளில் ஒன்றாகும். இத்தகைய உணர்வுக் களத்தில் இசைக்கருவியின் பங்கு பெரியதாகும். போருக்கு அழைப்புவிடுக்கும் தொடக்க நிகழ்ச்சியிலிருந்து போர்த்திறனைக் காட்டி நடுகல்லாய் சமைத்த மறவன் புகழ்பாடுதல் வரையிலான பல்வேறு நிகழ்ச்சிக் கூட்டங்களிலும் இசைக்கருவிகள் முழங்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மன்னர்கள் இசைக்கலையை வளர்க்க இசைக் கலைஞர்களை ஆதரித்துப் போற்றி வந்திருகின்றனர். புலவர்கள், புரவலர்களை நாடிச்சென்று பரிசில் பெற்றமை இலக்கியங்களில் வெளிப்பட்டுள்ளது. ‘பாணர், விறலியர், கோடியர், இணையர், வயிரியர்’ போன்றோரை இசைக்கலையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாகவே இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

பாணர் குடி அக்காலக் குடிகளில் சிறப்புடைய ஒன்றாகக் கருதப்பட்டிருக்கின்றது. இதனை,

“துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை”  (புறம் 335 – 7-8)

என்ற பாடல் வரிகளின் மூலம் துடி கொட்டுபவன் குடி துடியன். யாழிசைக்கும் பாணர்குடி, பறையடிக்கும் பறையன்குடி, கடம்பனுடைய குடி ஆகிய நான்கு குடிகளைத் தவிர வேறு எந்த குடிகளும் இசைத்துறையில் இடம்பெறவில்லை என்பதை அறிய முடிகிறது.

“பண்டைக் காலத்தில் இசைக் கலையில் வல்லவராயிருந்தவர் பாணர் என்னும் இனத்தவராவர். எனவே சங்க காலத்திலே பாணர்கள் அரசர், சிற்றரசர், செல்வர் முதலியவர் வீடுகளுக்குச் சென்று இசைப் பாடல்கள் பாடினர். பாணர்களின் திறமையை அறிந்து பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினார்கள்”. எனவே பண்டைய காலத்தில் பாணர்கள் உயர்வாக இருந்துள்ளனர் என்று தமிழ்வளர்த்த அழகுக் கலைகள் என்னும் நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார்.

இசைக் கருவிகள் நான்கு வகைப்படும். அவை,

  1. தோல் கருவி
  2. துளைக் கருவி
  3. கஞ்சக் கருவி
  4. நரம்புக் கருவி

என்பனவாகும். இசைக் கருவிகள் பெரும்பாலும் மரத்தாலும், தோலாலும், நரம்புகளாலும் ஆனவை. புறநானூற்றில் கூறப்படும் இசைக்கருவிகள் பெரும்பாலும் மன்னரைப் புகழ்ந்து பாடுவதாகவும், போர்க்கு செல்லும் முன்பும் போரில் வெற்றி பெற்ற பிறகும் இசைக்கருவிகள் இசைக்கப்படுகின்றது.

நரம்புக் கருவிகள்

இக்கருவிகள் மரத்தினால் செய்யப்பட்டு நரம்புகள் அல்லது கம்பிகளால் பூட்டப்பட்டவை ஆகும். யாழ், சீறியாழ், பேரியாழ் என்ற மூன்று இசைக்கருவிகளும் நரம்புக் கருவிகள் வகையைச் சேர்ந்ததாகும்.

யாழ்

எழுத்து நிலைமாற்றத்திலிருந்து அமைத்தது ‘யாழ்’ என்னும் தமிழ்ச் சொல்லாகும். யா- கட்டு, யாக்கை – தசை நரம்பு, எலும்பால் கட்டப்பட்ட உடல், யாப்பு – சொல்லால் கட்டப்படுவது. யாத்தல் – கட்டுதல் எனவே யாழ் என்பது நரம்புகளால் கட்டப்பட்டது என்று பொருள்படும். புறநானூற்றில் யாழ் எளிய இசைக்கருவியாகவே கூறப்பட்டுள்ளது. யாழ் என்னும் இசைக்கருவி பாணர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகக் காணப்படுகிறது. “சங்க காலத்தில் யாழ் கொன்றை, கருங்காலி ஆகிய இரு மரங்களைக் கொண்டு செய்யப்பட்டது. புறநானூற்றில் கூறப்படும் யாழ் காளம்பழம் என்ற கரிய வளைந்த காம்பில் செய்யப்பட்டதாகும்” என்ற கருத்து லி.சி. சசிவல்லியின் பண்டைத் தமிழர் தொழில்கள்,என்னும் நூலினால் அறியமுடிகிறது.

யாழ் வகைகள்

யாழ் பொதுவாக நான்கு வகைப்படும். அவை. 1. பேரியாழ், 2. மகரயாழ், 3. சகோடயாழ், 4. செங்கோட்டுயாழ் என்பவையாகும். இவை நான்கும் மிகுதியாகப் பயன்படுத்தப்பட்டது.

சீறியாழ்

சீறியாழ் என்பது உருவத்தில் சிறியதாகும். இது கையடக்கமாகக் காணப்படும். இதுதான் முதலில் தோன்றியது. இதனிலும் பெரியதாகச் செய்யப்பட்டதே பேரியாழாகும். பாணர்கள் மன்னனை நாடிப் பரிசில் பெறச் செல்லும் போது விறலியை உடன் அழைத்துச் செல்லுதல் வழக்கம். அவ்வாறு காடும் மலையும் கடந்து செல்லும்போது பல்வேறு இன்னல்களுக்கிடையே பாணர் விறலியை தனது ஒரு கையில் பிடித்துக் கொண்டும், மற்றொரு கையில் யாழையும் பிடித்துக் கொண்டும் செல்வர். காடுகளில் பயம் தெரியாமல் இருக்க சீறியாழை வாசிப்பர் என்பதை,

“வளைக்கை விறலி என் பின்னள் ஆக
பொன் வார்த்தன்ன புரி அடங்கு நரம்பின்
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப
படுமலை நின்ற பயம் கொழு சீரியாழ்”  
(புறம் 135. 4-7)

என்ற பாடல் வரிகளின் மூலம் பாணர் நரம்புகளால் ஆன சீறியாழ் என்ற இசைக் கருவியை பயன்படுத்தியதை அறியமுடிகிறது.

பேரியாழ்

பேரியாழ் என்பது அளவில் பெரியதாகவும், சிறியதாகவும் காணப்படும். அதில் ஒன்பது வார்கள் காணப்படும். வடித்து முறுக்கிக் கட்டின நரம்புகளால் இனிய ஓசையைத் தருகின்றது. நேர்மையான வரகின் கதிர்கள் இரண்டு வரிசையாக ஒழுங்குபட்டு அமைந்திருப்பதுபோலத் தனது நடுநிலத்தில் வரிசையாகவும், நெருக்கமாகவும் அமைந்த சிறிய துளைகளில் சுள்ளாணிகள் தைக்கப் பெற்றிருக்கும். யானைக் கொம்பினால் புதிதாகச் செய்யப்பட்ட அழகிய ஆப்பு, அந்த யாழின் குறுக்கே செருகப் பட்டிருக்கும். யாமினி கோடு நுண்ணிய தூரத்தினால் நுட்பமாக அமைக்கப்பட்டிருக்கும். அது வளைந்து நிமிர்ந்த காளம்பழத்தின் நிறத்தினை ஒத்துக் கருமையாகக் காணப்படும்.

“இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
மூவேழ் துறையும் முறையளிக் கழிப்பி
‘கோ’ எனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன் பெயர் ஆகலின் நாணி மற்று ‘யாம்’.

என்ற பாடலில் மூவேழ் துறையும் முறையளிக் கழிப்பி என்ற வரியிலிருந்து வலிவு, மெலிவு, சமம் என்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்றிலும் ஏழுதாளம் சேர்த்து இருபத்தொரு நரம்பாலான பேரியாழ் என்னும் இசைக்கருவியினைக் கொண்டு பாடப்பட்டவையாகும்.

இசை மருந்து

இசைக்கருவிகள் போரில் புண்பட்டோருக்கு வலிதோன்றா வண்ணம் உள்ளத்தை ஈர்க்கவும், சிகிச்சை தரவும் பயன்படுத்தப்பட்டன. யாழ், பல்லியம், இசைமணி முதலிய இசைக்கருவிகள் மருத்துவத்திற்குப் பெரிதும் பயன்பட்டதை

வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க”    (புறம் 281 – 2)

என்ற பாடல் வரிகளில் உணர முடிகிறது.

“இசை மணி ஏறிந்து, காஞ்சிபாடி
நெடு நகர் வரைப்பில் கடிநறை புகைஇ”        (புறம் 281: 5-6)

என்ற பாடல் வரிகளின் மூலம் பல இசைக் கருவிகள் முழங்கி காஞ்சிப் பண்பாடியும், மனையின் கண் நறுமணம் கமழும் அகில் புகையை எழுப்பியும் இசை மருத்துவம் செய்வர் என்பதை அறியமுடிகிறது.

தோல் கருவிகள்

தோல் கருவிகள் மரத்தினால் செய்யப்பட்டுத் தோலால் கட்டப்பட்டவை, அவை ‘முழவு, தண்ணுமை, பதலை, சல்லி, தடாரி, பறை ஆகியவை ஆகும். தோற்கருவிகளை‘ வன்மைக் கருவி, மென்மைக் கருவி, சமக்கருவி’ என வகைப்படுத்தலாம்.

கிணைப்பறை

பறை         – வன்மைக் கருவிகள்

முழவு

தடாரி      – மென்மைக் கருவிகள்

மத்தளம்

எல்லரி    – சமயக்கருவிகளாக

பாகுபடுத்தப்பட்டுள்ளது.

முழவு

“முழவு என்னும் சொல் முழங்கும் இசைக் கருவிகட்குப் பொதுப் பெயராயும் அமைகின்றது. அகமுழவு, புறமுழவு, வீரமுழவு, நாண்முழவு, நாழிகை முழவு என்னும் தொடரால் முழவின் பயனும், பண்பும், பருமனும் அறியலாம். (த. கோவேந்தன், தமிழும் இசையும் ப. 69). குழலிசையும், யாழிசையும் இணையும்போது ஒன்றுக்கு மேற்பட்ட முழவுகள் கையாளப்படுகின்றன. முழவுத் திருவிழாக்களில் அதிகமாகப் பயன்படும் தாளவிசைக் கருவியாகும் என்பதை,

“முழவு மிக மகலாங்கண்
விழவு நின்ற வியன் மறு இற”     (கலி – 102)

என்ற பாடல் வரிகளின் மூலம் அறிய முடிகின்றது.

தண்ணுமை

தண்ணுமைக்கு ‘மத்தளம்’ அல்லது ‘மிருதங்கம்’ என்பது பெயர் உண்டு. ‘மத்து’ என்பது ஓசைப்பெயர், ‘தளம்’ என்பது இசையிடனாகிய கருவிகளுக்கெல்லாம். தாளமாக இருக்கும். அதனால் ‘மத்தளம்’ என்று பெயர் பெற்றது. இது தோல் கருவியாகும். அஞ்சாது போர்புரியும் மறப்பண்பு மிக்க வீரர்களுக்கு அரசன் சிறப்புச் செய்தலையும் போர்புரியும் பாசறையில் இன்று போருக்குரிய பூவை மறவர்க்குத் தரும் நாள் என்று அறிவிக்கும் கருவியாக மத்தளம் பயன்படுத்தப்பட்டது என்பதை,

“கோட்டியோ வழி – பாண! பாசறை
பூக்கோன் இன்று என்னறு அறையும்
மடிவாயத் தண்ணுமை இழிசின் இரலே”?
(புறம் – 289. 8-9)

என்ற பாடல் வரிகளில் அறியமுடிகின்றது.

சங்கு

சங்கு தொன்மையான கருவியாகும். இது இயற்கை செய்துதரும் இசைக்கருவி ‘ஆதிமனிதன் சங்கை ஊதி வழிபட்டான், குடும்பச் சடங்குகளுக்கும் சங்கைப் பயன்படுத்திதான், சங்கு முழங்குவது மங்களமாக கருதப்பட்டது. கோயில்களிலும், அரண்மனைகளிலும் சங்கு ஊதுவது வழக்கம். அரண்மனைகளில் காலை வேளையில் முரசு கொட்டியும் சங்கு முழங்கியும் அரசரைத் துயிலெழுப்பினார்கள் அரண்மனையில் வலம்புரிச் சங்கு காலையில் முழங்கியதை.

தூக்கணங்குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப
ஒரு சிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி”
“மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய
காலை முரசங் கனைகுரல் இயம்ப”
    (சிலம்பு – 14 : 12-14)

என்ற பாடல் வரிகளில் கோயில்களிலும், அரண்மனைகளிலும் இந்தச் சங்கு முழங்கியது அறிய முடிகிறது.

சல்லி

சல்லென்னும் ஓசையையுடையதனால் சல்லிகை என்னும் பெயர் பெற்றது. சல்லி அல்லது எல்லா என்பது தாளவிசைக் கருவியேயாகும். இந்த இசைக் கருவி பறை போன்று ஓசையைக் கொடுக்கும் என்பதை,

“எல்லரி தொடுமின் ஆருளி தொடுமின்”        (புறம் 152 – 16) என்ற பாடல் வரிகளின் மூலம் அறியமுடிகிறது.

முரசு

போரில் எழுச்சி தருவதற்கேற்பத் தோல் கருவிகளே முழக்கப்பட்டுள்ளன. போர் முரசு செய்தவற்குரிய தோலின் இசை நுணுக்கச் செய்தியைவிட, போர் முரசு செய்வதற்கேற்ற தோலின் மறப்பின் புலமே முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. மண்ணைக் கீறிய மிகக் கூரிய கொம்பினையிடைய பெருமை பொருந்திய நல்ல ஆனேறு இரண்டினைத் தம்முட்போர் செய்யவிடுத்து வெற்றி பெற்ற ஏற்றினுடைய தோலை மயிர் சீவாது போர்த்துத் திண்ணியதாய்க் கட்டி முரசு செய்யப்பட்டது என்பதை,

“மண் கொள வரித்த வைந்நுதி மருப்பின்
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மருந்து
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண் பிணி முரசம் இடைப்புலத்து இரங்க”
(புறம் 288: 1-4)

என்ற பாடல் வரிகளின் மூலம் அறிய முடிகின்றது.

பறை:-

பறப்பற என்ற ஒலிப்பின் அடியாகப் ‘பறைகள்’ எனப்பெயர் பெற்றன. பறைகள் தோற் கருவிகட்குப் பொதுப்பெயராகும். முழக்கப்படுவனயாவும் முழவுகள் எனப் பொதுப் பெயர் பெற்றுள்ளன.

“அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்து உரைக்கலான்”      (குறள்-1076)

என்ற குறளில் ஐவகை நிலத்திற்கும் பறை உரியதாகக் காட்டப்பட்டுள்ளது.

போர் வீரர்கள் தம்முடைய வீரம் நிறைந்த தோளினைத் தட்டுவர். அவ்வீரர்களின் மனத்தில் இருக்கும் பழிவாங்கும் உணர்ச்சியும் மறைந்து மன அமைதி ஏற்படுமாறு பறையோசை கேட்கும் மனயோசை போரின் முடிவில் அடிக்கப்படும் ஒரு வகை இசையாகும் இதனை,

“நீங்கா மறவார் வீங்கு தொன்புடைப்ப
தனிபறை அறையும் அணிகொள் தேர்வழி” 
(புறம் 68: 13-14)

என்ற பாடல் வரிகளில் பறையோசைப்பற்றி அறிய முடிகின்றது.

கருத்துரை:-

  • பழந்தமிழர் வாழ்வில் இசை முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. வாழ்வின் தொடக்கம் முதல் இறுதிவரை இசையின் ஆதிக்கம் அமைந்திருந்தது.
  • இசைக் கருவிகள் கண்டுபிடிக்கும் முன்னர் வாயிலிருந்து வெளிப்படுத்தும் ஓசையால் இசையை அறிந்து கொண்டனர்.
  • முன்பு காணப்பட்ட நால்வகைக் கருவிகளும் இன்று ஒரே கருவியினுள் அமைந்து விளங்குகின்றன. நாட்டுப்புறங்களில் மட்டுமே இன்றும் பழைய கருவிகள் வழக்கிலுள்ளன.
  • இயற்கையில் கிடைத்த பொருட்களைத் தட்டுவதில், ஊதுவதில், மீட்டுவதில் இசைப்பதில் கிடைத்த ஓசை வேறுபாட்டை அறிந்து அதற்கேற்ப இசைக்கருவிகளைத் தெரிந்து கொண்டனர்.

பயன்படுத்தப்பட்ட நூல்கள்:

  • புறநானூறு –     வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
  • கலித்தொகை   –     வர்த்தமானன் பதிப்பகம், சென்னை.
  • மயிலை சீனி. வேங்கடசாமி –      தமிழ் வளர்த்த அழகுக் கலைகள்.
  • லி.சி. சசிவல்லி –      பண்டைத் தமிழர் தொழில்கள்.
  • திருக்குறள்         –      சாரதா பதிப்பகம்.
  • சிலப்பதிகாரம்    –      உ.வே.ச பதிப்பகம், சென்னை.

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழ்த்துறை
பாரதியார் பல்கலைக்கழகம்
கோவை. -46

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *