-மேகலா இராமமூர்த்தி

கரத்தால் தன் முகத்தை மறைக்கும் இந்தப் பெரியவரைத் தன் புகைப்படப் பெட்டிக்குள் பதுக்கி வந்திருப்பவர் திரு. லோகேஷ். இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவரும் என் நன்றிக்குரியோர்!

”ஐயன்மீர்! என் ஆடை கசங்கியிருக்கலாம்; அதில் கறைபடிந்திருக்கலாம். ஆனால் என் கரம் உழைத்து உரம்பெற்றது; கறையற்றது. அதனைக் காண்மின் காண்மின்!” என்று தன் கையகத்தை இவ்வையகத்துக்குக் காட்டுகின்றாரோ இப்பெரியவர்?

சிந்தனைக்கு விருந்தளிக்கும் இப்படத்துக்குச் சீரிய கவியெழுத வருக என்று கவிஞர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்!

*****

கூடா ஒழுக்கம்கொண்ட சிலரால் உண்மைத் துறவும் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளாகின்றது என்று சுட்டும் திரு. ஆ. செந்தில்குமார், துறத்தலும் ஒருவித அறமே எனினும் வெறுத்தலைவிட்டுப் பொறுத்துவாழ்தலே அதனினும் சாலச் சிறந்தது என்கிறார் முத்தாய்ப்பாய்!

வாழ்வில் வெறுமை எதற்காக?

வையத்தில் படர்ந்த போலிகள் மிகுதியால்
பொய்யோஇத் துறவியின் தோற்ற மென்று..
ஐயம் தோன்றிடக் குழம்பும் மனத்தில்..
மெய்ந்நிலை உணர்தலே அனைத்திலும் மேன்மை..!

முன்புள வினைகளைப் போக்கிட நினைக்கின்..
அன்புளம் கொண்டு அனைத்துயிர் ஓம்ப..
தென்புலத் தெய்வத்தின் அருளது கிட்டும்..
துன்புள தெனினும் தெரித்து விலகும்..!

துறவறம் பூண உருத்திராட்சை எதற்கு?
துறவறத்திற் கென்றோர் அடையாளம் எதற்கு?
அறநிலை வழுவாது சுற்றத்தைப் பேணல்..
துறவறம் என்னும் நிலையினும் மேலாம்..!

இறத்தலும் பிறத்தலும் இயற்கை எனினும்..
துறத்தலும் ஒருவித அறமே எனினும்..
வெறுத்தலை விட்டுப் பொறுத்து வாழ்ந்தால்..
சிறத்தல் என்பது மாந்தர்க்கு திண்ணம்…!

*****

”கடவுளைத் தேடுபவனும், உடலிச்சை தாண்டியவனும் தன் முகத்தை விடுத்துத் திறமையையே முன்னிறுத்துவான்! படத்தில் தெரியும் இந்தக் கரம் தேய்ந்துபோனதன்று! ஆய்ந்துவாழ்வோனின் அரத்தமுள்ள கையசைப்பே இது! மனிதா! உன் தனித்திறமையை அறி! வெற்றிக்கனியைப் பறி” என்று மாந்தர்க்கு நல்வழி காட்டுகின்றார் திரு. ஏ.ஆர்.முருகன்மயிலம்பாடி.

உயிரின் சலனம்

கடவுளைத் தேடுபவன்
உடலிச்சை தாண்டியவன்
எதையும் காட்டிக்கொள்ளாமல்
எதார்த்தமாய் வாழ்கிறவன்
இப்படித்தான் முகத்தைவிட
திறமையை முன் நிறுத்துவான்!!
வாழ்ந்து முடித்தவனுடைய
தேய்ந்துபோன கரம் அல்ல!!
ஆய்ந்து வாழ்கிறவனின்
அர்த்தமுள்ள கையசைப்பு…
அதிலுண்டு ஆயிரம்அர்த்தங்கள்!
ஒவ்வொருவருவருக்குள்ளும்
ஒளிந்துள்ளது தனித்திறமை
வெளிக்கொண்டு வந்தால்
வெளியுலகம் கொண்டாடும்!!
சலனப்பட்டுச் சாய்ந்துவிட்டால்
சரித்திரத்தில் இல்லை இடம்!
விசனமுதறி எழுகிற போது
விண்ணின்தூரம் பக்கமாகும்!
ஐம்புலன்களடக்கம் கற்றால்
அமைதிவழி மனம் இயங்கும்!!
அனைத்தின்பமும் வசமாகும்!!

*****

”விதவிதமாய் முகங்காட்ட விரும்பும் மனிதர்க்கிடையே முகத்தை மறைத்துக்கொள்ளும் விதிவிலக்குகள் வியப்பைத் தருகின்றன. மனிதனே! நீ முகங்காட்டு நல்ல மனிதனாக!” என்று அர்த்தமுள்ள அறிவுரை தருகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

முகம் காட்டு…

விதம்விதமாய் முகங்காட்ட
விரும்புகிறவன் மனிதன்..

புகைப்படம் தொடங்கி
திரைப்படம் வரைக்கும்
திரும்பிடும் பக்கமெல்லாம்
மூழ்கிக் கிடக்கிறான் மனிதன்
முகம்காட்டுதலிலேயே..

விதிவிலக்குகள்
வியப்பிலாழ்த்துகின்றன,
நல்லது செய்பவன்
விளம்பரம் பிடிக்காமல்
முகம் மறைத்தால்,
மேலும் உயர்த்திடும்
மதிப்பை..

சிலர்
தப்பைச் செய்துவிட்டு
தண்டனைக்குப் பயந்து
தலைகுனிந்து
முகங்காட்ட மறுப்பது,
தள்ளிவிடுகிறது கீழே
மதிப்பை..

மனிதனே நீ
முகத்தைக் காட்டு-
(நல்ல) மனிதனாக…!

*****

சிற்றின்பப் பற்றறுத்துப் பேரின்பம் காணவிழையும் சித்தம் தெளிந்த சித்தனின் சத்தான மொழிகளைத் தன் கவிதையில் தந்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

சித்தன் ஆனேன்..சித்தம் தெளிந்தேன்..!

சற்றே யோசித்தேன் சகலத்தையு மறிந்தேன்
……சித்தரின் வாழ்வியல் கூறுகளைக் கற்றேன்..!
பற்றின்மை பற்றி அறிந்தபிறகு இல்லறம்
……விலக்கிப் பற்றறுத்து வாழும்கலை அறிந்தேன்..!
புற்றீசல் போல் வாழ்வில் தொடர்ந்து வரும்
…..பிரச்சினை அண்டாத தொரு வழியறிந்தேன்..!
தற்காலிக வாசமாக எங்கும் அலைவேன்
……தரையும் மணலும் தங்கும் இருப்பிடமாகும்..!

பொற்காலம் ஒன்று உண்டென்றால் அது
…..பொய்ம்மை நீக்கி மெய்யறியும் வாழ்வாம்..!
முற்காலம் வாழ்ந்திருந்த முற்றும் துறந்த
…..முனிவனும் இதைத் தானே மொழிந்தான்..!
பற்பல வாழ்வியல் அனுபவமும் முடிவில்
…..பற்றற்ற வாழ்வுக்கே வழி வகுக்குமன்றோ..!
சிற்றின்பம் தானே நம்மையும் வதைக்கிறது
…..சிறிது காலமதைத் துறக்கவும் நினைத்தேன்..!

நடமாடும் நம்முடம்பைப் பேணிக் காக்க
…..நல்லபல வழிகளை நவின்றார் ஆன்றோர்..!
அடக்க ஐம்புலனைச் சித்தரிடம் கற்றேன்
…..ஆறறிவின் பயனை அடைய வேண்டியே..!
தடங்கலிலாது தம்பிறவி கடக்க வொரு
…..தகும் வழியெனச் சித்தனொடு சித்தனானேன்..!
படமெடுத்து என்னைப் பிரபல மாக்காதீர்
…..பன்முகத்தை நான் மறைத்துக் கொள்வேன்..!

*****

”வரம்பின்றிப் பேசித்திரியும் மனிதர்கள் மத்தியில், ’மோனம் என்பது ஞானவரம்பு’ என்பதை உணர்ந்த பெரியோர் வெற்றுச்சொல் பேசார். மானுடனே! நீ பகட்டும் படாடோபமும் விடுத்துத் தாய் சேய் நலம் போற்று! நாவினையும் நன்முறையில் போற்று!” என்று பொருள்செறிந்த பொன்மொழிகளைத் தன் கவிதையில் பொதிந்து தந்துள்ளார் திருமிகு. அவ்வைமகள்.

கற்றைச்சடைமுடித்தான் பூசிட்ட வெண்ணீர்மை
ஒற்றைக்கரமுயர அவன் காட்டுமக் குறி காணீர்
எற்றைக்கும் பேசும் நீர் பேசார்கள் பெரியோரே
பொற்றைக் கருங்கல் போலசையாதசைந்திடுதல்
நீற்றைப் புனைந்த நேர்மைமேல் நேர்மையென
அற்றை நீதிகள் தாம் கூறியதவன் காட்டுகிறான்!
சொற்றை போதனைகள் சொலாத சொல்லதனை
இற்றைக்கேனும் நீர் பணிந்தவோ? பணிந்தார்கள்
சோற்றுத் துருத்தியாய் வாழ்ந்தவோ? வாழ்ந்தார்கள்
பேற்றை நினைந்தொழுகி சிறியரெவர் பெரியரென
பெற்றைப் படம்பிடித்தோ சென்றனர் சென்றார்கள்?
பூற்றைப் பொடிநிகழ்வைப் பாம்பாய்ப் படமெடுத்து
போற்றிப் பொய்யுரைத்து பகட்டு மினுமினுக்கி வீழாதே! வீழாதே!
நேற்றைக் கதைவிடுத்து பொறை பொறாமை விட்டு
பிற்றைக்கும் நிலைக்குமாறு நீர் செய்த ஒழுக்கென்ன?
தேற்றையொளிக்கூர்மை மழுங்காபுத்தியென வலக்கை
தோற்றிடினும் நீ திடங்கொள்வாய்! மடங்கொள்வாய்!
இறைக்கை நிலைத்திருக்க உன்கர லீலைதனைப் பேராயம் செய்யாதே!
உறைக்கைக் காதலுடன் உடல்குழைய நெக்குருகி விழிநீரால் நீ உரையாடு!
நெற்றைப் பயிர் காத்து, மைவிடாதெழுநீல வான்போர்வை நீ போர்த்து!
புற்றைப் புறந்தள்ளி, கர்த்தவ்யம் நீ காத்துத் தாய் போற்று! சேய் போற்று!
சொற்றைக் குறைத்தொழுகி வாயாற் பிதற்றாது நா போற்று! தொனி போற்று!
சோற்றைக் குறைத்தொழுகி உடலால் பிறளாது கற்பெனும் காவல் போற்று!
கற்றை நீ கல்விதனை, எழுத்ததனை விழுமியமாய் குற்றமற வார்த்துப் போடு!

*****

”பெருநோய் கொண்ட என்னைப் படமாக்கிப் பத்திரிகையில் போட்டு வருவாய் ஈட்ட முயலாதீர்!” என்று எச்சரிக்கும் மனிதரைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

தீண்டத் தகாதவன்

கிழிந்த உடுப்பில் கிடக்கும்
இழிந்த இனத்தைச்
சேர்ந்தவன்!
கழிப்பிடம் சுத்தம் செய்யும்
கறுப்பி
என் பெண்சாதி!
மாடுகள் மேய்த்து
காடுகளில் அலைவது
என் மகன்!
குப்பை வண்டி வாகனம்
சப்பாணியின் தேர்!
பெண்சாதிக்கு
தினக்கூலி
பிச்சைச் சோறு!
குஷ்ட ரோகி நான்,
தேமல் படந்திருக்கு
முகத்தில்!
படம் எடுக்க வேண்டாம்
என்னை!
பத்திரிகையில் முகத்தை
வித்து உடனே,
பணமாக்க வேண்டாம்
சாமி!

*****

மனத்தைத் தொடும் மகத்தான சிந்தனைகளைத் தம் கவிதையில் பளீரிட வைத்த வித்தகக் கவிஞர்கள் அனைவருக்கும் என் மனங்கனிந்த பாராட்டும் நன்றியும்!

இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுபெற்றிருப்பது…

பெயரிலி

நிறத்தைப் பாரத்து முகம் சுளிக்காதே!
எளிமையைக் கண்டு எள்ளி நகையாடாதே!
அமைதியாக இருப்பதால் அறிவுரைகள் அடுக்காதே!
அயலான் என்பதால் அத்துமீறிப் பேசாதே!

நான் கேளாமலே
எனக்கும் ஜாதிக்குறியிட்டு – உன்
சிறுமதியின் சிறையில் சீரழிக்காதே!

போதும் நிறுத்து!

என்னைப் படச்சுருளில் புதைத்து விடாதே!
நான் அடையாளம் தொலைத்தவன்

என்னைக் கேள்விக்கு உட்படுத்தாதே!
நான் சுதந்திரத்தை நேசிப்பவன்
தொல்லையின்றித் திரிபவன்
எல்லைகள் கடந்தவன்
அவமானங்களுக்கு அப்பாற்பட்டவன்
அசாதாரணமானவன்!

நீயோ சராசரி பாதசாரி,
ஆகையால்…
எதையும் மதிப்பிடாமல்
சலனமின்றிக் கடந்து போ!

தம் முகத்தைக் காட்டிப் பிறர் அகத்தைக் கவர நினைக்கும் மாந்தர்களே இந்த அவனியில் அதிகமாய்ப் பவனி வருபவர்கள். அத்தகு சராசரிகள் நடுவில் படச்சுருளில் புதையவும், சாதிக்குறிக்குள் சிக்கிச் சிதையவும் விரும்பாத அசாதாரண மனிதர் இவர் என்று இந்தப் புகைப்பட மனிதருக்குத் தனித்ததோர் தகைமையைத் தந்திருக்கும் இந்தக் கவிதையின் ஆசிரியர் திருமிகு. சக்திப்ரபா இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் பெருமையைப் பெறுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *