தொன்மக் கதைகள் மீட்டுருவாக்கம்

-முனைவர் வீ. மீனாட்சி

தொன்மம் என்பது பழமை என்பதைக் குறிப்பதாகும். இதனை ஆங்கிலத்தில் ‘MYTH’ என்பர். இச்சொல்லானது ‘MYTHYS’’ என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது ஆகும். தொன்மங்கள் இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன்பான காலத்தில் தோன்றியவை எனக் கருதப்படுகின்றன. இத்தொன்மங்கள் ஒரு சமூகத்தின் பண்பாட்டின் ஒட்டுமொத்த பதிவுகளாக அமைகின்றன. சமூக நியதிகளை இவை எடுத்துரைக்கின்றன.

காலங்காலமாகச் சொல்லப்பட்டு வரும் இராமாயணம், மகாபாரதம் போன்ற தொன்மக் கதைகள் சமூகத்தில் மக்கள் வாழ்வோடு ஒன்றி இருக்கின்றன. இவற்றை மக்கள் வாழ்வை விட்டுப் புறந்தள்ளிவிட முடியாது. இத்தொன்மங்கள் என்பவை தனிமனிதனால் உருவாக்கப்பட்டவை அல்ல. பல்வேறு மனிதர்களால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சமூக அமைப்பு முறையினை பிரதிபலிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டவை. இத்தகைய தொன்மங்கள் மனித மனத்தில் ஆழப்படியும் வலுவினைப் பெற்றவை என்பதை, ‘தொன்மங்கள் உயிர்பொருளாக விளங்குகின்றன. சமூகத்துடன் துடிப்புள்ள உயிர்த்தொடர்பு கொண்டு விளங்குகின்றன. சமூகத்தின் ஒவ்வொரு நுண்கூறுக்குள்ளும் நுழைந்து ஊடுருவிச் செல்கின்றன’ எனும் கார்டுவெல்லின் கூற்றும்,

”இத்தொன்மங்கள் இவ்வாறு விளங்குவதற்கு, ‘இத்தொன்மங்கள் மானுட இனத்திற்கே பொதுவான நனவிலிக் கூட்டுமனத்தில் (collective unconscious) தொல்படிவங்களாகப் படிந்து கிடப்பவைகளின் வெளிப்பாடு’ எனும் உளவியல் அறிஞர் யுங்வின் கூற்றும் உறுதிசெய்கின்றன.

பெரும்பாலும் இத்தொன்மங்கள் ஆண் உயர்வு என்ற நிலைப்பாட்டை ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மனத்திலும் ஆழப்பதியும்படிச்செய்து பாலின வேறுபாட்டை (gender discrimination) பேணுவதாக அமைந்துள்ளன. இத்தகைய நிலைப்பாட்டை மாற்றிச் சமூகத்தில் ஆண் பெண் இருவரும் சரிநிகர் என்ற சிந்தனையை வலியுறுத்தும் வகையில் இன்றைய தமிழிலக்கியப் படைப்பாளிகள் கவிதை, சிறுகதை, புதினம் போன்ற தளங்களில் தொன்மங்களை மறுவாசிப்பு செய்து மீட்டுருவாக்கம் என்ற இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகிவருகின்றனர்.

சமூக மாற்றத்தை ஏற்படுத்த விளையும் இத்தகு படைப்பாளிகள் தொன்மங்களை மீட்டுருவாக்கம் செய்யும்பொழுது கதை அமைப்பு மாறுபடுவதில்லை. ஆனால் கதைமாந்தர்களின் கூற்றுக்களை மாற்றியமைத்து படிப்பவர்களின் சிந்தனையை விழிப்படையச் செய்து வருகின்றனர். பெரும்பாலும் பெண்ணுரிமைச் சிந்தனைகளைப் பறைசாற்றும் வகையில் இவர்களது படைப்புகள் அமைந்துள்ளன. இவற்றால் பெண்ணடிமை குறித்த சிந்தனைகள் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர் மத்தியிலும் சமூகக்கட்டமைப்பு குறித்த மாற்றுச் சிந்தனையினை ஏற்படுத்தி வருகின்றனர். இதனடிப்படையில் அகலிகை, சீதை, பாஞ்சாலி, நளாயினி, கண்ணகி, மாதவி, குந்தி, சந்திரமதி குறித்த தொன்மங்கள் இலக்கியங்களில் எவ்வாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதைக் குறித்து ஆராய்வதாக பின்வரும் பகுதி அமைகின்றது.

அகலிகை – மீட்டுருவாக்கம்

பெண்ணின் கற்பு குறித்த கருத்தாக்கத்தை வலியுறுத்தும் அகலிகை கதை தொன்மக்கதைகளில் குறிப்பிடத்தக்கதாகும். இத்தொன்மத்தை இக்காலப் படைப்பாளிகள் பல்வேறு தளங்களில் மீட்டுருவாக்கம் செய்துள்ளனர்.

புதுமைப்பித்தனின் ‘அகல்யை’ சிறுகதையில் வேதகாலத்தில் இந்திரனின் செயலால் அகல்யைக்குச் சாபம் இட்ட கௌதம முனிவரின் சிந்தனை மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

‘உணர்ச்சி தேவனையும் மிருகமாக்குகிறது. மனத்தூய்மையில்தான் கற்பு, சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்’ என்று காலம் காலமாக பின்பற்றி வந்த கற்பு என்ற கற்பிதத்திற்குப் புதுமைப்பித்தன் கௌதமரின் சிந்தனையை மாற்றி தொன்ம மீட்டுருவாக்கத்தின் வழி புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்திரனின் செயலுக்கு அன்று அகலிகைக்கு தண்டனை கொடுக்க கௌதமரை கற்பு என்பது மனம் சார்ந்தது என்ற சிந்தனை ஓட்டம் கொண்டவராக புதுமைப்பித்தன் மீட்டுருவாக்கம் செய்துள்ளார்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் ’திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ கவிதைத் தொகுதியில் இடம்பெறும்,

‘ஏடி அகலிகை
எப்போதடி பெண்ணாவாய்?
கானகத்தில்
அன்று
கதைக் கல்லாய்க்
கிடந்த நீ
சமூக சந்நிதியில்
இன்று
சதைக் கல்லாய்க கிடக்கிறாய்’

எனும் கவிதை சமூகத்தில் பெண் என்பவள் ஆணின் உடைமையாகப் பார்க்கப்படும் அவலநிலையை காட்டுவதோடு ‘அகலிகை’ குறியீட்டின் வழி பெண் தன்னை உணர வேண்டும் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

சீதை – மீட்டுருவாக்கம்

பெண்ணின் வரலாறு என்பது ஒரு சமூகத்தின் வரலாறு என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் அவர்களின் மீட்சி குறித்த புதிய சிந்தனைகளைத் தனது படைப்பில் வலியுறுத்தும் பிரபஞ்சன் தனது, ’நானும் நானும் நீயும் நீயும்’ புதினத்தில் இராமாயணக் கதையில் வரும் சீதையின் அக்னி பிரவேசத்தினை மீட்டுருவாக்கம் செய்துள்ளார். இக்கதையில் இடம்பெறும் அரசு என்ற கதைமாந்தர் கல்லூரியில் பணிபுரியும் தமிழ்ப் பேராசிரியராக உள்ளார். அவர் இராமாயணக் கதையை தன் சிந்தனை வடிவில் காலமாற்றத்திற்கேற்ப புதிய முறையில் படைக்கின்றார். அக்கதை பின்வருமாறு:

‘ராமன் இராவணவதம் முடித்துத் திரும்புகிறான். தன் தம்பியைப் பார்த்து, தம்பி ஓர் ஆழமான பள்ளம் வெட்டு, அதிலே நெருப்பை எரிய விடு. சீதை அக்னிப் பிரவேசம் செய்ய வேண்டும். அயலார் வீட்டில் பல மாதங்கள் இருந்தாள் அல்லவா? அவள் கற்பை நிரூபிக்க வேண்டும். உலகத்திற்கு என்றான். இது எல்லோருமே எழுதியதுதான். நான் கொஞ்சம் மாற்றி எழுதினேன். இராமன் சொல்லி முடிச்சதும் சீதை சொல்கிறாள்,

‘தம்பி இன்னொரு பள்ளம் வெட்டு’ ‘ஏன் அண்ணி?’ என்றான் லட்சுமணன்.

‘நான் ஊரில் இல்லாத சமயத்தில், ராமனின் சுத்தத்தையும் உலகத்துக்கு நிரூபிக்க வேணும் இல்லையா, அதுதானே நியாயமாக இருக்கும்’ என்கிறாள்.

இவ்வாறு கற்பு என்ற கருத்தாக்கம் ஆண்-பெண் இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற புதிய சிந்தனையை அரசு என்ற கதைமாந்தர் வெளிப்படுத்துகின்றார். இங்குப் பாலின வேறுபாடு களையப்பட்ட சமூகம் உருவாக ஆண்பாலினத்தின் சிந்தனை மாற்றப்பட வேண்டும் என்பதை சீதை சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பதன் வழி உணர்த்துவதாக பிரபஞ்சன் தனது விழைவை அரசு என்ற ஆண்கதைமாந்தர் வழிக் காட்டியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாஞ்சாலி மீட்டுருவாக்கம்

பெண்ணினத்தின் பிரச்சனைகளைக் களைய பெண் தனது சுயத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கில் படைப்புகளைத் தரும் வாஸந்தி தனது ‘வேர்களைத் தேடி’ புதினத்தில் மகாபாரதத்தில் பாஞ்சாலியின் பாத்திரத்தை மீட்டுருவாக்கம் செய்துள்ளார்.

‘பாஞ்சாலி வருகிறாள், விக்கித்து, அதிர்ந்து துயரத்தின் எல்லையைக் கடந்து, செத்துப் போனவர்களைப் போல ஒடுங்கிப் போன கணவன்மார்களைப் பார்க்கிறாள். ‘சட்’டென்று நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். சிறுமியின் முகத்தில் தோன்றியது அதிர்ச்சி மட்டும் இல்லை; இளக்காரம் ‘சீ பேடிகளா’ என்கிற வெறுப்பு, ரோசமுள்ளவர்களாக இருந்தால் அந்தப் பார்வையிலேயே பாண்டவர்கள் சாக வேண்டும். என்னை நானே காப்பாற்றிக் கொள்வேன் என்கிற வீம்பு தெரிகிறது; சிறுமியின் கண்களில். எனக்குச் சிலிர்த்துப் போயிற்று. துச்சாதனன் சேலையை இழுக்கிறான். டி.வி. பாஞ்சாலிபோல் இவள் கண்ணீர் விடவில்லை. ‘இழு’ என்கிறாள் கம்பீரத்துடன். உனக்குதாண்டா அவமானம், எனக்கு இல்லை. கண்ணை மூடிக்கொண்டு கிருஷ்ணா கிருஷ்ணா என்பது வெறும் பாவனை என்று தோன்றுகிறது……. வியாசர் காணாத பரிமாணங்களை உணர்ந்த குழந்தைச்சாமி. இது வெறும் ஞானம் இல்லை. பெண்மையின் விழிப்பு’  என்று இக்கதையில் மைதிலி என்ற கதைமாந்தர் காணும் மகாபாரதக் கதையில் வாஸந்தி நவீன சிந்தனைகளைப் புகுத்தியுள்ளார்.

பெண்ணினத்திற்கு ஏற்படும் அவமானம் என்பது ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கு ஏற்படும் அவமானம் என்பதை அனைவரும் உணர வேண்டும். பெண் பிறரைச் சார்ந்து வாழாமல் சுயச்சார்பு உடையவளாக மிளிர வேண்டும் என்பதை பாஞ்சாலி மீட்டுருவாக்கத்தின் வழி வலியுறுத்தியுள்ளார்.

மேலும்,

‘இலக்கியப் பெண்கள் மட்டும்
உயிர்பெற்று வாழ்ந்திருந்தால்
காவியமும், காப்பியமும்
இலக்கியமும், இதிகாசமும்
கதைமாறி போயிருக்கும்.
ஆம்…
கண்ணகி விழித்திருந்தால்
கோவலனைக் சுட்டிருப்பாள்!
மாதவி மயங்காதிருந்தால்
மணிமேகலையை மாய்த்திருப்பாள்
குந்தியவள் நினைத்திருந்தால்
கர்ணனையே கலைத்திருப்பாள்
சீதையவள் கொதித்தெழுந்தால்
இராமனையே எரித்திருப்பாள்.
சந்திரமதி வெகுண்டிருந்தால்
அரிச்சந்திரனைப் புதைத்திருப்பாள்’

எனும் செல்வகுமாரியின் ’இலக்கியத்தில் பெண்கள்’ எனும் தொன்ம மீட்டுருவாக்கக் கவிதையானது காலம்தோறும் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து ஒட்டுமொத்தப் பெண்ணினத்தின் எழுச்சிக் குரலாக ஒலிக்கிறது.

தொகுப்புரை

இவ்வாறு ஆண்டாண்டு காலமாக மனித சமூகத்தில் நிலவி ரும் தொன்மக் குறியீடுகள் மக்கள் மனத்தில் நீங்காது நிலைத்துவிட்டவை. இவற்றின் வழி ஆண் உயர்வு என்ற கற்பிதம் நிலைநிறுத்தப்பட்டு வருகிறது என்பதை அகலிகை, சீதை, பாஞ்சாலி, கண்ணகி, மாதவி, குந்தி, சந்தரமதி போன்ற தொன்மங்கள் காட்டுகின்றன. இத்தகைய தொன்மங்களை மீட்டுருவாக்கம் என்ற இலக்கியக் கோட்பாட்டின் அடிப்படையில் நோக்கியுள்ள படைப்பாளிகள் பெண் இனத்தின் உரிமைக்குக் குரல் கொடுப்பதற்கு ஆண் – பெண் இருவரும் சமூகக் கட்டமைப்பு குறித்த சிந்தனையில் தெளிவுபெற வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் தொன்மக் கதைகளை இக்காலத் தமிழ்ப் படைப்பாளிகள் மீட்டுருவாக்கம் செய்துள்ளனர்.

பார்வை நூல்கள்

  1. வீ.நிர்மலாராணி – பெண்ணியத் திறனாய்வு-காவ்யா-சென்னை-2003
  2. க.பஞ்சாங்கம் – தொன்மத் திறனாய்வு -அன்னம் – தஞ்சாவூர் – 2005
  3. வைரமுத்து – திருத்தி எழுதிய தீர்ப்புகள் – சூர்யா லிட்ரேச்சர் லிமிபுட்டர்  சென்னை – 2013
  4. ஜெ.செல்வகுமாரி – பெண்ணியம் பேசுகிறாள் – நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் – சென்னை – 2012
  5. http://wwwsirukathaigal.com/tag
  6. வாஸந்தி – வேர்களைத் தேடி – வானதி பதிப்பகம் – சென்னை – 1995
  7. பிரபஞ்சன் – நானும் நானும் நீயும் நீயும் – கலைஞன் பதிப்பகம் – சென்னை – 1998.

*****

கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
பிஷப் ஹீபர் கல்லூரி
திருச்சிராப்பள்ளி – 620 017.

 

 

 

 

 

 

Share

About the Author

has written 845 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]


seven − 4 =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.