நலம் .. நலமறிய ஆவல் (107)

நிர்மலா ராகவன்

தாம்பத்தியத்தில் தோழமை

கல்யாணம் எதற்கு?

நான் இக்கேள்வியைக் கேட்டபோது, ஆண் ஒருவர்,   `முறையான உடலுறவுக்கு,’ என்ற பதிலை அளித்தார், தர்மசங்கடத்துடன். (“Let us face it. I can’t think of having sex any other way!”) பெண்களோ, “பாதுகாப்பு’ என்றார்கள்.

நிற்பது,  நின்றிருந்தால் உட்கார்வது, நடப்பது எல்லாமே முதுமையில் பெருமுயற்சியாகிவிடுமே! அப்போது, `காமத்துக்குத் துணைபோகாத வாழ்க்கைத்துணையால் என்ன பயன்?’ என்று யோசனை போகுமா?

திருமணம் செய்துகொள்வது எதற்கு என்பதில் மட்டுமல்ல, மணமுடித்தபின், ஆண்களின் எதிர்பார்ப்பும், பெண்களின் எதிர்பார்ப்பும் வெவ்வேறு விதமாக இருக்கிறது. ஒரு பெண் கணவன் தன்னுடன் எப்போதும் இருக்கவேண்டும் என்று நினைக்கிறாள். ஆணுக்கோ, அந்நிலை மூச்சுமுட்டுவதுபோல் இருக்கும்.

இயன்றவரை பிற ஆண்களுடன் பொழுதைக் கழிப்பதுதான் ஆணுடைய சுபாவம். இதைப் பெண்கள் புரிந்துகொண்டாலே போதும். பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

தம்பதிகள் என்றால், கணவன் சொற்படி மனைவி நடக்கவேண்டும், தனக்கென ஆசைகள் இருந்தால் அவற்றை அவள் மறந்துவிட வேண்டும் என்பது போல்தான் கடந்த சில தலைமுறைகளில் நடந்துவந்தது. அதைப் பார்த்து இக்காலப் பெண்கள் மிரள்கிறார்கள். அதனாலேயே ஏதேதோ நிபந்தனைகளை விதிக்கிறார்கள்.

“எனக்கு வரப்போறவரோடு Companionship (தோழமை)  இருக்கணும் என்கிறாள் அபி. அப்படின்னா என்ன?” என்று என்னைக் கேட்டாள் நடுத்தர வயதான ஒரு மாது. முப்பது வயதாகியும் மணம் செய்துகொள்ளத் தயங்கிய மகளின் நிபந்தனை அவளுக்குப் புரியத்தானில்லை. “நாங்களெல்லாம் அப்படியெல்லாம் பார்த்தா கல்யாணம் செய்துகொண்டோம்?” என்று பொருமினாள். ஒரே பார்வையில் எவருடனும் நட்பு பெருகிவிடாது என்பது சில இளம்பெண்களுக்குப் புரிவதில்லை.

புதிதாக மணமான தம்பதிகள் ஒன்றாக வாழ நேரிடும்போது மற்றவரின் வேற்றுமைதான் பூதாகாரமாகத் தெரிகிறது. அதைப் பழிப்பதால் இடைவெளி விரிவடையும் என்பதைப் புரிந்துகொள்ளாது, கேலி செய்பவர்களும் உண்டு.

நண்பர்கள் கேலி செய்தால் பொறுத்துப்போகலாம். ஆனால் கணவனோ, மனைவியோ பழிப்பதை ஏற்க முடிவதில்லை. மனதில் தோன்றுவதையெல்லாம் வெளியில் கூறினால், பாதிக்கப்பட்டவர் சிறுமைப்படுத்தப்படுகிறார். ஆத்திரம் பெருகுமே!

`தாம்பத்தியத்தில் ஒரு நாளைக்கு ஆறு முறையாவது சொல்ல வந்ததைச் சொல்லாமலிருக்க வேண்டும்,’ என்கிறார் திரு.அனுபவசாலி. `நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்!’ என்று திரைப்படத்தில் காதலர் பாடலாம். நடைமுறையில், `soulmate” என்ற ஒருவருடன்தான் இது சாத்தியம். உரிய காலத்தில் அப்படி ஒருவரைச் சந்திப்பதே துர்பலம். வாழ்க்கைத்துணையாக அடைவதோ..!

ஒருவர் தன் மனைவியிடம், “உன்னை என்னைப்போலவே மாற்றிவிட இந்த இருபத்து ஐந்து வருடங்களாக முயன்று பார்த்துவிட்டேன். அது நடக்காத காரியம் என்று இப்போதுதான் புரிகிறது!” என்று கூறினார், அனுபவம் அளித்த விவேகத்துடன். “எல்லாம் இந்த தமிழ்சினிமாவால் வந்த வினை!” என்று காலங்கடந்து நொந்து கொண்டார்!

 அப்பாமாதிரி இல்லையே!

இளம்பெண்கள் தம் தந்தையுடன் கணவரை ஒப்பிட்டுக்கொள்கிறார்கள்.

`அப்பா எப்படி அம்மா சொல்வதைக் கேட்பார்! இவர் என்ன, பிடிவாதமாக இருக்கிறாரே!’ என்று ஆத்திரப்படுவது வீண். திருமணமான புதிதில் அப்பா இப்படியேவா இருந்திருப்பார்? அம்மாவை மாற்ற முயன்றிருப்பார். பிறரை மாற்றுவதைவிட தன்னையே மாற்றிக்கொள்வது எளிது என்று முடிவெடுத்திருக்கலாம்.

`இந்தப் பெண்களைப் புரிந்துகொள்ளவே முடியாது! மனைவி என்பவள் ஒரு பிரச்னை இல்லை, அவள் இருப்பதுபோலவே ஏற்றுக்கொண்டால்தான் வாழ்க்கையில் அமைதி நிலவும்,’ என்ற ஞானோதயம் ஏற்பட்டிருக்கும். கணவரை மாற்ற முயலும் பெண்களும்  தம் முயற்சியில் வெற்றி பெறமுடியாது.  ஆத்திரப்பட்டால், அவர்கள் உடல்நிலைதான் கெடும். நிலைமை என்னவோ மாறப்போவதில்லை.

உத்தியோகம் முதல் மனைவியா?

விவாகரத்து கோருவது பெரும்பாலும் பெண்களாகத்தான் இருக்கிறார்கள்.

கணவர் தங்களுக்குப் போதிய நேரம் ஒதுக்குவதில்லை, எப்போதும் உத்தியோகமேதான் நினைப்பு என்பது அவர்கள் வாதம். வேலை கிடைப்பதே பெரும்பாடாக இருக்கும் இந்நாளில் கடிகாரத்தைப் பார்த்தபடி வேலை செய்பவன் எப்படி முன்னேற முடியும்? இரவு நெடுநேரம் உழைக்க வேண்டியிருக்கும். அடிக்கடி வெளிநாடு செல்ல வேண்டிய உத்தியோகமும் அமையலாம்.

செலவச்செழிப்பான வாழ்க்கை அமைய வேண்டும், ஆனால் கணவனுடைய அருகாமையும் எப்போதும் வேண்டும் என்றால் நடக்கிற காரியமா? (ஒரேமாதிரியான உத்தியோகத்தில் இருப்பவர்கள் கணவன் அல்லது மனைவியின் இக்கட்டான நிலையை ஓரளவு புரிந்துகொள்ளக்கூடும்).

எங்கும் பிரச்னைதான்

வீட்டிலோ, வெளியிலோ, பிரச்னை இல்லாத இடமே கிடையாது. வீட்டில் நாள்பூராவும் வேலை செய்து, குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளும் பெண்ணானவள் கணவன் வேலை முடிந்து வீடு திரும்பும்போதே குற்றப்பத்திரிகை படித்தால், அவனுக்கு எப்படி இருக்கும்?

அவன் அலுத்துச் சலித்து வீடு திரும்பும்போது, இன்முகமாக வரவேற்க வேண்டாமா? அப்படி இல்லாவிடில், தன் பங்குக்கு அவனும் கத்துவான், இல்லை, உடனே வெளியில் போய்விடுவான். 

பாராட்டுங்கள்!

பொதுவாக, பெண்கள்தாம் உணர்ச்சிபூர்வமானவர்கள். தம் இயலாமையை வெளிப்படுத்த சண்டை பிடிப்பார்கள், இல்லையேல் அழுவார்கள். அவ்வப்போது, `மௌன விரதமும்’ உண்டு! (ஒரு சிறு பெண்ணிடம்கூட இந்தக் குணத்தைக் காணலாம்).

இது புரிந்து, ஆண்கள் மனைவிக்கும் சிறிது நேரத்தை ஒதுக்கி, பாராட்டுதலால் தம் அன்பை வெளிக்காட்டினால் பிரச்னையே கிடையாது. நண்பர்களிடம் கூற நினைப்பதை மனைவியிடமும் கூறலாமே!

அதைவிட்டு, `நான் நம் குடும்பத்திற்காகத்தானே உழைக்கிறேன், என்னை நீ பாராட்டுவதே இல்லையே!’ என்று குற்றம் சாட்டுவது அவர்களிடையே உள்ள இடைவெளியை இன்னும் பெரிதாக்கும்.

வாயை மூடு, செவியைத் திற!

தம்பதிகளின் உரையாடல் நடக்கையில்: “கணவன் காதில் வாங்கிக்கொள்வது பாதி, புரிந்துகொள்வது கால் பங்கு, சிந்திப்பது பூஜ்யம், பதிலளிப்பதோ இரு மடங்கு!” (திரு. அனுபவசாலி).

மனைவி அன்றைய தினம் தன்னைப் பாதித்த சமாசாரங்களைப்பற்றிக் கூறிவருகையில், `நான் நீயாக இருந்தால் இந்த சந்தர்ப்பத்தில் என்ன சொல்லி இருப்பேன், தெரியுமா?’ என்று கணவன் ஆரம்பித்தால், எந்த மனைவிக்குத்தான் எரிச்சல் வராது?

`நான் நீங்களில்லையே!’ என்று சொல்லத்தான் தோன்றும், தன் பிரச்னைகளைத் தனக்குத் தோன்றிய விதத்தில், தானேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பாளவள்.

அம்மாதிரி சந்தர்ப்பங்களில், எதுவும் பேசாது கேட்பது உத்தமம். தீர்வை எதிர்பார்த்து அவள் சொல்லவில்லை. சும்மா பகிர்ந்துகொள்கிறாள். அவ்வளவுதான். அத்துடன், பெண்களும் ஆண்களைப்போலவே யோசிக்கமாட்டார்களே!

பிரச்னையா, துணையா?

திருமணமான புதிதில், ஒருவரது வாழ்க்கை முறையை மற்றவர் புரிந்துகொண்டு, அதன்படி நடப்பது எளிதல்ல. ஆனால், வாழ்க்கைத்துணையைவிட பிரச்னை முக்கியமானதல்ல என்று புரிந்துகொண்டு, அதைப் பற்றிப் பேசினாலே போதும். தீர்த்துவிட முடியும்.

ஐம்பது வயதுக்குமேலாகிய, மெத்தப் படித்த  ஒரு மாது என்னிடம் கூறினார், “நானும் என் கணவரும் தினமுமே சண்டை போடுவோம்!” அவர் குரல் சாதாரணமாகத்தான் இருந்தது. அதில் வருத்தமோ, கோபமோ இருக்கவில்லை.

அவள் `சண்டை’ என்று குறிப்பிட்டது கைகலப்பில்லை. அபிப்ராயபேதம். இருவரும் ஒரேமாதிரி யோசிக்க முடியுமா? ஒரு பொருளைப்பற்றி விவாதித்து, யார் கூறுவதில் உண்மை இருக்கிறது என்று ஆராய்கிறார்கள்.  

கல்யாணமாகி சுமார் முப்பது வருடங்களாகியும் வாய்ச்சண்டை தொடர்ந்துகொண்டே இருக்கிறதென்றால், அவர்கள் இன்னும் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

`நாங்க ரெண்டுபேரும் அதிகமா பேசிக்கறதே கிடையாது!’ என்று அலட்சியமாகச் சொல்வது  வெறுப்பைக் காட்டுவதைவிட மோசமானது. `நீ எப்படியோ தொலை!’ என்பதற்குச் சமானம். கசப்பை ஏன் அவ்வளவு தூரம் வளரவிட வேண்டும்?

Share

About the Author

நிர்மலா ராகவன்

has written 222 stories on this site.

எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/

Write a Comment [மறுமொழி இடவும்]


four − 3 =


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.