அண்ணாகண்ணன்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு, 2010 மே 16 அன்று செல்வ முரளி உதவியுடன்  வல்லமையைத் தொடங்கினோம். பேரா.இ.அண்ணாமலை உடனான இ-நேர்காணலே முதல் இடுகை. அந்தப் புள்ளியிலிருந்து சிற்றடிகளை எடுத்து வைத்து, இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். இப்போது 2018 மே 16 அன்று ஒன்பதாம் ஆண்டில் வல்லமை நுழைந்துள்ளது. இந்த எட்டு ஆண்டுகளில் வல்லமை, 14,276 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 12,551 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.

Vallamai in 9th Year

வல்லமை, 2017 மே மாதம், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் [University Grants Commission (UGC) (யுஜிசி)] அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழாக அறிவிக்கப்பெற்றது. 2018 மே 2ஆம் தேதி அறிவிக்கப்பட்ட புதுப்பிக்கப்பெற்ற பட்டியலிலும் வல்லமை தொடர்ந்து இடம் பெற்றுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில், 4305 ஆய்விதழ்களைப் பட்டியலிலிருந்து யுஜிசி நீக்கியுள்ளது. ஆயினும் தமிழ்ப் பிரிவில் வல்லமை நீடிக்கிறது.

இந்தக் காலக் கட்டத்தில் சுமார் 200 ஆய்வுக் கட்டுரைகளை வல்லமை பதிப்பித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி, இதர மாநிலங்களிலிருந்தும் வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளைச் சேர்ந்த ஆய்வாளர்களின் ஆக்கங்களை வல்லமை வெளியிட்டுள்ளது. தமிழ் இலக்கியம், இலக்கணம், சமூகவியல், பக்தி, வரலாறு, உளவியல், அறிவியல், இணையம், மொழிபெயர்ப்பு, ஒப்பீடு, பறவையியல், இன வரைவியல், நாட்டுப்புறவியல், கல்வி, இசை… எனப் பற்பல துறைகள் சார்ந்த கூர்நோக்கும் புதிய பார்வையும் கொண்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம்.

இவை மட்டுமின்றி, கனடாவிலிருந்து ஜெயபாரதன், அறிவியல் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என 700க்கும் மேலான படைப்புகளை நல்கியுள்ளார். கேசவ் அவர்களின் கிருஷ்ணர் ஓவியங்களுக்குக் கிரேசி மோகன், நாள்தோறும் நவரசங்களில் வெண்பா விருந்து படைத்து வருகிறார். தொடர்கள் எழுதி வரும் இன்னம்பூரான் (இந்தியா), நிர்மலா ராகவன் (மலேசியா), அவ்வை மகள் (அமெரிக்கா), நாகேஸ்வரி அண்ணாமலை (அமெரிக்கா), மேகலா இராமமூர்த்தி (அமெரிக்கா), சக்தி சக்திதாசன் (இங்கிலாந்து), ஜெயராம சர்மா (ஆஸ்திரேலியா), முனைவர் சுபாஷிணி (ஜெர்மனி), கல்வியியல், வாழ்வியல் தொடர்களைச் செம்மையாக வழங்கி வரும் க.பாலசுப்பிரமணியன், செண்பக ஜெகதீசன் உள்ளிட்ட பலரும் வல்லமையின் படைப்புச் செழுமைக்குப் பங்களித்து வருகிறார்கள். ஆசிரியர் பவளசங்கரியின் தலையங்கங்கள், நம் கவனத்தை ஈர்ப்பவை. பெரும்பாலான தமிழ் மின்னிதழ்களில் தலையங்கம் என்ற பகுதி இல்லை என்பதையும் இணைத்துப் பார்க்கலாம்.

மேலும், படக்கவிதைப் போட்டி 161 வாரங்களைக் கடந்து வெற்றி நடை போடுகிறது. உலகம் முழுவதுமிருந்து கவிஞர்கள் பங்கேற்க, மேகலா இராமமூர்த்தி நடுவர் பொறுப்பில் திறம்படச் செயலாற்றி வருகிறார். இந்த வார வல்லமையாளர் விருதினை 270 வாரங்களாக வழங்கி வருகிறோம். கடந்த 50 வாரங்களாகச் சிறப்புறத் தேர்ந்தெடுத்த பேராசிரியர் செல்வன் விடைபெற, அந்தப் பொறுப்பினை இளைஞர் கௌதம் ராஜ் ஏற்றுள்ளார். அத்துடன் வல்லமை ஆசிரியர் குழுவில் முனைவர் விஜய ராஜேஸ்வரி, கவிஞர் ராமலட்சுமி ஆகியோர் இணைந்துள்ளனர். புதியவர்களை வரவேற்கிறோம்.

வல்லமை வாசகர்களின் கேள்விகளுக்குப் பேராசிரியர் இ.அண்ணாமலை அளித்த பதில்களின் தொகுப்பினைத் தமிழ் இன்று – கேள்வியும் பதிலும் என்ற தலைப்பில் அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. தேமொழி தேர்ந்தெடுத்த வல்லமையாளர்கள் 100 பேர்களின் தொகுப்பும் மின்னூலாக வெளிவந்துள்ளது. இந்த ஆண்டில் வல்லமையாளர்கள் மறவன்புலவு க.சச்சிதானந்தன், பெஞ்சமின் லெபோ, முனைவர் சுபாஷிணி, ஜெயராம சர்மா, சுப்ரபாரதி மணியன் உள்ளிட்டோர், தமிழக அரசின் பல்வேறு விருதுகளை வென்றதில் உள்ளம் உவக்கின்றோம்.

ஆண்டிராய்டு திறன்பேசி வைத்திருப்போர், தங்கள் செல்பேசியிலேயே வல்லமையைப் படித்து மகிழலாம். வல்லமையின் ஆண்டிராய்டு செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க இங்கே சொடுக்குங்கள் – https://play.google.com/store/apps/details?id=com.vallamai.android விரைவில் வல்லமை மின்னிதழின் வடிவமைப்பினை மாற்ற உள்ளோம். வல்லமை வளர்தமிழ் மையத்தை அறக்கட்டளையாகப் பதியும் திட்டம் உள்ளது. மேலும் பல ஆக்கப்பூர்வமான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளோம். இவை அனைத்திற்கும் உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.

இந்தப் பயணத்தில் உடன் நிற்கும் ஆசிரியர் பவளசங்கரி, மேகலா இராமமூர்த்தி, முனைவர் காயத்ரி பூபதி, முனைவர் விஜய ராஜேஸ்வரி, சாந்தி மாரியப்பன், ராமலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர் குழுவினர், வழங்கி நிர்வாகி ஆமாச்சு, தள நிர்வாகி சீனிவாசன், ஆலோசகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வறிஞர்கள், வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்கி மகிழ்கிறோம்.

உங்கள் அனைவரின் ஆதரவுடன் இன்னும் பல முத்திரைகளைப் பதிப்போம். முயற்சி திருவினையாக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “ஒன்பதாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

  1. அன்பர்களே! வல்லமை யாளர்களே! தமிழ்
    .
    ……….ஆர் வலர்களே! ஆன்றோர்களே! உங்கள்
    .
    இன்பத்தமிழ் எழுத்தை யெல்லாம் ஏந்திய
    .
    ……….இதழாய் இணையத்தில் இன்ப உலாவந்து
    .
    ஒன்பதாம் ஆண்டில் நுழையுமித் தினத்தில்
    .
    ……….உவகையுடன் நாமெலாம் வாழ்த்து வோம்.!
    .
    என்றென்றும் இணையத்தில் சிகரமாய் இது
    .
    ……….எவர்புதுமை தந்தாலும் ஏற்றுக் கொள்ளும்.!

    வல்லமை வளர்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்..!

    பெருவை பார்த்தசாரதி

  2. மின்னிதழில் சிறந்து விளங்கிடும் நற்றமிழ் இதழே

    சிந்தனை, செயல்,முன்னேற்றம் எனும் கோட்ப்பாடுடைய இதழே

    அண்ணா கண்ணன் சிந்தனையால் வளர்ச்சியடையும் மின்னிதழே

    பவள சங்கரியும் . மற்றும் பலபேர் சிறப்பாக நடந்திடும் சிறப்பிதழே
    ஒன்பதாம் ஆண்டில் தடம் பதித்து, வல்லமை வளம்பெற வாழ்த்துகின்றேன்

    ரா.பார்த்தசாரதி

  3. மனமார்ந்த வாழ்த்துக்கள். இலக்கியச் சிந்தனையை வளர்ப்பதிலும் தமிழுணர்வைப் போற்றுவதிலும் வல்லமையின் மிகச் சிறப்பான பங்கிற்குப் பாராட்டுக்கள்

  4. எட்டு போட்டு ஏறுபோல் பீடுநடை போட்டு
    ஒன்பதில் கால்பதிக்கும் வல்லமையே!
    நீ மென்மேலும் தொடர்ந்து வளர்ந்தவாறு இருப்பதாக!
    உன்னால் தமிழ்க்கருவூலம் மென்மேலும் வளர்வதாக!!
    உன் பணியால் இத்தரணியில் எல்லா நன்மைகளும் மென்மேலும் சிறப்பதாக!!
    வாழிய நீ என்றென்றும் மெருகேறும் புதுப்புது உவகையுடன்!!
    வாழ்த்துக்கள் கோடி!

  5. வல்லமை யான போதும்
    வல்லமை யாகும் போதும்
    வல்லமை யாளும் போதும்
    வல்லமை வாழ்க்கையானோம்

    அன்பதில் ஆற்றல் பெற்று
    ஒன்பதில் ஏற்றம் உற்று
    என்பதில் நாளும் கற்று – வ்ல்லமைத்
    தின்பதில் ஏக்கமுற்றோம்

    செந்தமிழ் மந்திரத்தில்
    செந்தமிழ் தந்திரத்தில்
    செந்தமிழ் எந்திரத்தில்
    செந்தமிழ் சித்தரானோம்

    மென்தமிழ் வித்தையோடு
    மின்னிடும் தத்தையோடு
    முன்னிடும் முறுவலோடு
    பின்னிடும் பருவமானோம்

    துள்ளிடும் கவிகள்-கோடி
    முள்ளிடும் உரைகள்-கோடி
    அள்ளிடும் ஆய்வில்-கோடி
    அடங்குமோ ஆற்றல்-கோடி

    தொட்டதும் மலரும்போல
    சுட்டதும் கனகம்போல
    பட்டதும் கனியும்போல
    கிட்டிய புதையலானோம்

    படைத்து நாம் பாசம் தந்தோம்
    படித்து நாம் நேசம் செய்தோம்
    கொடுத்து நாம் குடும்பம் ஆனோம்
    கலந்து நாம் கதம்பம் ஆவோம்

    இன்னும் கொடுப்போம் குறையாமல்
    இன்னும் வளர்ப்போம் கரையாமல்
    இன்னும் இசைப்போம் தளராமல்
    இன்னும் கிடைப்போம் மறையாமல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *