உயிரில்  கலந்த உறவே….

கண்தோன்றிய காலத்திலேயே

கற்பனையின்

கதைக்களமாக

வீறுகொண்டு

காதலித்தவளே…

குறிஞ்சியில்

குளித்து,

முல்லையில்

முகிழ்ந்து,

மருதத்தில்

ஊடல் கொண்டாய்….

வேப்பங்காயாய்

வெந்து தம்பியது

இணையிலா – நமது

காதல்….

பாண்டியனின்

துணையொடு,

குமரியிலிருந்து

குதூகலமாய்

வேங்கடத்திற்கு

பல்லக்கில் வந்த

மருமகளே….

சற்றும் எதிர்பார்க்காத

தருணத்தில்

இமயம் வரை

போர்புரிந்து,

பெண்மையின்

வன்மையையும்

மென்மையையும்

திண்மையையும்

உலகறியச்செய்தவளே……

உறக்கமில்லாத

இரவுகளில்

கால்களால் நடந்த கதையைக்கூறி

குமுறுவாய்…..

தொல்காப்பியனையும்

வள்ளுவனையும்

தோளில் சுமந்து,

நடைபயில்வித்து,

தலைசால் சான்றோன் ஆக்கியவளே….

பக்தியின்

பொருட்சுவையைச்

சுவைத்துச் சுவைத்து,

பரம் பொருளை

அறிந்தவளே…..

சிற்றின்பத்தேனை

சிற்றிலக்கியங்களில்

வழி நுகர்ந்தவளே….

பாரதிக்கும்

பாரதிதாசனுக்கும்

ஊன்றுகோலாய் நின்று,

எழுத்தாணியாய்

உருமாறி

வையம் முழுதும்

உலா வந்தவளே…..

மின்னூடகங்களிலும்

தகதகவென மின்னி,

ஒளிமயமாய்

ஒய்யாரியாய்

வாழ்பவளே…..

காற்றோடு

கை கோர்த்து,

நாமிருவரும்

கவி புனைந்த,

பல தருணங்களில்,

முரண்பட்டாலும்

நீயே – எந்தன்  பிம்பத்தின் பிரதி….

 

குமறும் எரிமலை

எல்லையற்ற

தருணங்களில்

கட்டுக்கடங்காத

மௌனங்கள்

குமுறுகின்றன

எரிமலைகளாய்…..

வசந்தத்திற்கான

போக்குகளெல்லாம்

வாய்ப்பினையெண்ணியே

தவம் இருக்கின்றன….

தனக்கான

தன்மானங்களெல்லாம்

கடன்வாங்கப்பட்டு

கந்துவட்டியினால்,

குட்டிமேல் குட்டி

போடுகின்றன..

சுயமரியாதையில்….

அசாதாரண மனிதர்களெல்லாம்

குகைக்குள் புகுந்த

புலிகளாய் உருமாறி

மென்று தின்று

தண்ணீர் குடிக்கின்றனர்

எலிகளை….

விண்ணப்பங்களை

கையில் ஏந்தியபடியே

இனம்புரியாத

தவிப்புகளும்

தழைகளும்

கைமீறி,

கடலைக்கடந்து

சென்றுவிட்டது

மௌனத்தைத்தேடி….

வலுவான வன்மங்கள்

சங்கமிட்டு,

கூட்டுக்கிளிகளாய்

குதூகலிக்கின்றன

தானும் பறந்துசெல்வதை மறந்து….

அலைக்கழிக்கின்ற

பொழுதுகளெல்லாம்

அதீத பிரியங்களோடு

இணையலாய்

தொற்றிக்கொள்கிறது

பாதங்களை….

மென்மையான

எண்ணங்களும்

வன்மையான

தருணங்களில்

கருத்தறித்து,

கூட்டுக்கிளிகளாய்

அடைபடுகின்றன….

தொட்டுவிடும்

தூரங்களைத்

தொடமுடியாதபடி

நிதமும்

களவாடப்படுகிறது

ஒவ்வொரு நம்பிக்கையும்….

 

முனைவர் வே. சுமதி,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.

About the Author

has written 4 stories on this site.

கவிஞர் பற்றிய குறிப்பு: நிசப்தத்தின் மொழி என்னும் கவிதை நூலின் ஆசிரியர். கவிதைப்புலமையை பாராட்டும் விதமாக கடந்த 18.11.2017 அன்று தினமலர் நாளிதழில் கோவைப்பதிப்பில் என்னுடைய நேர்காணல் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும், எனது கவிதைகள் புதுப்புனல், தீராநதி, புன்னகை முதலிய இதழ்களிலும் வெளிவந்துள்ளது. பொள்ளாச்சியில் அமைந்துள்ள நல்லமுத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியில், தமிழ் இலக்கியத்தில், தன்னுடைய இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளேன். கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்தே, கோவை தமிழ்ச்சங்கமும், கற்பகம் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய 1001 கவிஞர்கள் பங்கேற்ற 72 மணி நேர தொடர் கவியரங்கத்தில் எனது கவிதையைப் பாராட்டி, உலக மகா சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தற்பொழுது, பொள்ளாச்சியில் அருகேயுள்ள ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் தமிழ் உதவிப்பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறேன். முகவரி: முனைவர் வே. சுமதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி - 642 107 மின்னஞ்சல் : sumathi.tamilmozhi@gmail.com