-மேகலா இராமமூர்த்தி

இப்புகைப்படத்தை எடுத்திருப்பவர் திரு. ரகுநாத் மோகனன். இதனை, ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து, படக்கவிதைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

மலர்ந்த முகங்களோடிருக்கும் இவ்விருவரையும் காண்கையில் நம் அகங்களும் மகிழ்ச்சியில் மலர்கின்றன. இவர்கள் மகிழ்வின் பின்னணியை ஆய்ந்து கவியெழுத வல்லமைமிகு கவிஞர்கள் வரிசைகட்டி நிற்பதால், அவர்களை விரைந்தழைக்கின்றேன் நற்கவிகள் வரைந்தளிக்க!

*****

வழித்துணையாய் வந்த வாழ்க்கைத் துணையோ முல்லை மல்லிகைபோல் வெள்ளை மனங்கொண்டவள். தில்லையாண்டவன் அருளால் அவளோடு பேணும் இல்லறம் சிறக்கவேண்டும் என வாழ்த்துகின்றார் திரு. சு. பாஸ்கரன்.

வந்தாய் என் வழித்துணையாய் 

கண்ணே உன் காதோரக் கம்மல்
என்னைக் கவிபாடச் சொல்லுதம்மா
பெண்ணே உன் விழிபேசும் மொழியின்
மின்சாரத் தாக்கம் என் உயிருக்குள் செல்லுதம்மா

மன்னனானேன் நானுனக்கு மாலையிட்டு மகிழ்வுடனே
புன்னகையின் புதுவெள்ளமதில் என்னை நீந்தவைக்கும்
மென்னகையாளே வாழ்க்கை என்னும் பூவனத்தில்
என்னோடு வழித்துணையாய் என்றும் வருபவளே

கொஞ்சும் மழலைச் செல்வங்களிரண்டு
கொஞ்சி மகிழ்ந்திடத் தந்தாயே – திரைகூப்பி வெண்
பஞ்சாய்த் தலைநரைக்கும் காலத்திலும்
நெஞ்சமிரண்டும் அன்புடன் இணைந்திருப்போமே

வேலைமுடித்து நான் களைத்துவரும்
வேளையிலே கோலமயிலே நீ என்
களைப்புத்தீர அன்பு நீர்க் குவளைதனை ஆசையோடு
வளைக்கரங்களில் தாங்கி வந்து தருவாயே

கவலை மறந்து சிரித்திருப்போம்
கதைகள் பலபேசி மகிழ்ந்திருப்போம்
கருணை மாறாது பல்லுயிர்க்கும் உதவிடுவோம்
காலங்கள் கடந்தும் வாழ்ந்திருப்போம்

முல்லை மல்லிகை மலர்களைப் போல
வெள்ளை மனம்தான் கொண்டவள் நீ
எல்லையில்லா அன்போடு என்றும் நன்றாய் வாழ்வோம்
தில்லையாண்டவன் துணையோடு நாம்!

ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் புரிந்துவாழும் இல்லறமே பாரோர் போற்றும் நல்லறம் என்கிறது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை.

நல்லறம்…

சண்டை போட்டுக் கொண்டிருந்தால்
சரிவரா திந்த இல்லறமே,
அண்டை அயலார் மெச்சிடவே
அன்பாய்ப் பேசி இருவருமே
பண்புடன் வாழத் தெரிந்துகொண்டால்
பார்த்திதைப் பிறரும் தெரிந்திடுவர்,
பெண்ணும் ஆணும் புரிந்துதம்முள்
பழகி வாழ்தல் நல்லறமே…!

மனையறம் சிறக்க மனைவியும் நல்லவளாய் வாய்க்கவேண்டும்; கணவனும் கனிவாய் நடக்கவேண்டும். குலக்கொழுந்தாய் மனைவி தளிர்விட, கணவன் பாசத்தோடு அவளுக்குத் தாசனானாலும் தவறில்லை என்பது பெருவை திரு. பார்த்தசாரதியின் கருத்து.

பெண்டாட்டி தாசன்..!

மண்ணுலகில் பிறவியெடுத்து மனிதனாய் வாழ
……….மனைவியும் அமைய வேண்டும் நல்லவளாக.!
கண்ணாளனாக அமைய வேண்டும் கணவனும்
……….காலமதற்கு ஓரளவேனும் கைகூட வேண்டும்.!
எண்ணத்தில் எத்துணையோ ஆசைகள் நிறைய
……….ஏங்கும் மனைவியின் தேவையும் அறியவேணும்.!
வண்ணத் துணிமணிகளை வாங்கித் தருவீர்
……….வகையாய் கம்மல் ஜிமிக்கி அன்பளிப்பாக்குவீர்.!

தவமிருந்து பெற்றதைப்போல் அவளுமே நல்ல
……….தாரமாக அமைதல் வேண்டும் இறையருளால்.!
அவள் கொடுக்கும் அன்புக்கு வெகுமதியாக
……….ஆராய்ந்து பரிசளிப்பீர் இல்லறம் செழிக்கவே.!
தவறென்று அவளெதையும் சுட்டிக் காட்டினால்
……….தவறாமலவை நடக்காது பார்த்துக் கொள்வீர்.!
சுவரை வைத்தே சித்திரமும் என்பதுபோல்
……….சுகமாய்க் குறைவிலாமல் கவனித்துக் கொள்வீர்.!

இலக்கு ஒன்றை நிர்ணயித்து இல்வாழ்க்கை
……….இன்பமாக்க இல்லாளின் துணை அவசியமே.!
அலக்கழித்து அவளை அல்லல் படவைத்தால்
……….அத்துணையும் பாழாகும்! வாழ்வு நரகமாகும்.!
சலசலப்பு இல்லாத சஞ்சலமற்ற வாழ்க்கை
……….சம்சாரியின் கையில்தான் என்பதை உணருக.!
குலக்கொழுந் தாயவள் தளிர்விடக் குடும்பத்தில்
……….கட்டியவளுக்கு தாச னானாலும் தவறில்லை.!

”மச்சுவீடு கட்ட வேண்டும்; மழலையொன்று பிறக்கவேண்டும்” என்று தன் இல்லற ஆசைகளையெல்லாம் இனிக்கும் சொல்லெடுத்துப் பட்டியலிட்டிருக்கின்றார் திரு. ஆ.செந்தில் குமார். 

அச்சாரம் போட்டுட்டேன்டி என் அத்த மகளே – இந்த
மச்சான நீ கட்டிக்கடி என் அத்த மகளே…
அச்சாணி இல்லாம வண்டி ஓடுமா? .. இந்த
மச்சானும் இல்லாம உன் வாழ்க்கை இனிக்குமா…?

ஒட்டியாணம் வாங்கிப் போட்டு அழகு பார்ப்பேன்டி.. கழுத்துக்கு
ரெட்டவடச் சங்கிலியும் பூட்டிப் பார்ப்பேன்டி…
மாட்டலோட கம்மலும் வாங்கித் தருவேன்டி. உன்ன
பட்டணத்து கடைக்கெல்லாம் கூட்டிப் போவேன்டி…!

சச்சரவு இல்லாத வாழ்க்கை வாழுவோம்.. ஊரார்
மெச்சும்படி நல்லதோர் குடும்பம் நடத்துவோம்…
கச்சிதமாய் இருக்குமொரு நெலத்த வாங்குவோம்.. அதிலே
மச்சிவீடு ஒன்னு நாம பார்த்துக் கட்டுவோம்…!

உன்ன அச்சில்வார்த்த குழந்தையொன்னு பொறக்கவேணுன்டி.. அந்த
கண்மணியும் மழலைமொழி பேச வேணுன்டி..
சின்னச்சின்ன சேட்டையெல்லாம் செய்ய வேணுன்டி.. அதை
கண்டு நானும் ஆனந்தமாத் துள்ள வேணுன்டி..

கண்ணெதிரே நின்று கனிமுகத்தைக் காட்டும் பெண்ணைக் கண்டால் கணவனின் கவலை பறக்கும்; மகிழ்ச்சி பிறக்கும்; இல்லறம் சிறக்கும் என்பதைத் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார்  திரு. ரா. பார்த்தசாரதி. 

அன்பு உள்ளமே, பொங்கும் புன்சிரிப்பே
கண் எதிரே நிற்கின்றாய், கனிமுகத்தைக் காட்டுகின்றாய்
என்னை என்னவென்று உன் கண்ணால் கேட்கின்றாய்
மாலையிட்ட மணாளனைக் கண்டவுடன் உனக்கு
மனதிலே பல்வேறு நினைவுகள் தோன்றுதே!
ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று பெற்றோம்
கொஞ்சி மகிழ்ந்திட, இதுவே நம்முலகம் என்றோம்
வேலைமுடித்து வரும்போது களைப்புத் தீர தாகம் தீர்த்து,
வளைக் கரங்களில் நீ தரும் தண்ணிரே என் பசி தீர்க்கும்!
வேலை செய்த அன்று, சிரிப்புடன் நடந்ததைப் பகிர்வேன்
அதனை வேடிக்கையாய்க் கேட்டு உனக்குள்ளே சிரிப்பாய்
கவலைகள் மறந்து, கதைகள் பேசி இரவினைக் கழித்தோம்
என்றும் நமது உள்ளமே, பொங்கும் மகிழ்ச்சி என அறிந்தோம்!
நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் எனச் சொல்வதுண்டு
விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே, இல்லறம் கெட்டுப்போவதில்லை
என்றும் நம்மிடம் பிரிவில்லை, வாழ்க்கையில் ஒன்றானபின்னே
ஆனந்தம் இன்று ஆரம்பம், அன்பில் பிணைந்தாலே பேரின்பம்
நான் குடும்பப்பெண் என நினைக்கும் போதினிலே
என் எண்ணம் என்றும் ஈடேறும் போதினிலே
உன் முகச்சிரிப்பினை என் அருகினிலே

கண்டுகொண்டேன் என் ஆசை மணாளனை நேரினிலே!

இணையரைக் கண்ட எம் இணையிலாக் கவிகள், இல்லறத்தில் வெல்வதற்கான சூக்குமங்களை இனிய கவிதைகளாய்ப் பொழிந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு என் பாராட்டு!

அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

மணியோசையவள்! அவள் பின்னே தப்பாமல் வருஞ்சாமான்- எம்
மணிமாடத்தவை எத்தனை நாள் சாகையோ? அவளொன்றே அதுவறிவள்!
பணித்தமகனாய்ப் பகட்டத்திறந்து கைத்தலத்து ஒத்தாசை தரவேணும்
கணித்துக் காசுரைத்தால் எது தெறிக்குமெது பறக்கும் ஏதறியேன் நான்கணவன்!
துணிக்குக் கூடையா தூக்குப்பெட்டியா பாக்குப்பாயா பிளாஸ்டிக் கட்டிலா ஏன்
ஏணிக்கும் கூட வீட்டில் எண்ணிக்கையில்லை எம்பரணிலோ இமியிடமில்லை!
ஆணியடித்து ஓய்ந்து போயிற்று அலமாரிகள் வளர்த்து ஓய்ந்து போயிற்று
அணியணியாய்ச்சேரும் அட்டைப்பெட்டி வளருதலிங்கே மாபெரும் சாதனை!
வேணி முடிப்புக்கு மூணு மேசைகள் அரிதாரம் பூச நாலு கண்ணாடிகள் புதுப்
பாணியென்றே குப்பி-தொப்பிகள்! சந்தைவிரிக்கலாம் சுரிதார்கள் நிஜார்கள்!
மணிபார்க்க மாத்திரம் பத்துக் கடியாரங்கள் எனினும் நிதமும் தாமதச் சமையல்!
பணிபாணியிலிங்கே நவீனப்புரட்சி! நான் வீட்டிலிருந்தே வேலைசெய்பவன்!!
மணிக்குமணியமர்ந்துழைக்கும் மணியன்; வீட்டிற்குமோர் இலவச நாயகன்
மணியழைப்போயா வாசற்படியில் பணிவிட்டெழுவது எனக்குடற்பயிற்சி!
கணினிஆடவர் வாழ்க்கை போகுது! வயதேறிப் போனால் சிக்கலே மிஞ்சுது!
மணியாய்ப் பொறுமை உண்டெனக்கேன்றே பேசிமுடித்த இல்லறபந்தம்
“மணி!” மனைவிமக்கள் அழைப்பொலி! அவரடிபட நானொரு நல்மணி தானே?
துணியோ பொன்னோ போக்குவரத்தோ யாதுக்கும் நானொரு சத்தியச் சாட்சி
துணிந்து சொல்ல வாயிறந்தவன்; துணித்துப்போகவும் மனமில்லாதவன்
பணியில் நட்டம் எனக்காகாது! நானா அவரை முறைப்பேன்? எதிர்ப்பேன்?
பணிந்து போவதே பாதுகாப்பென மவுனம் காக்கும் நான் சிரிப்பொலிச் சித்தன்!

சிரிப்பொலிச் சித்தனாய், பொறுமைமிகு மணாளனாய், இல்லிருந்து உழைக்கும் கணினிப் பணியாளனாய், அனைத்திற்கும் மேலாய் மனையாள் வாங்கிக் குவிக்கும் ஆடம்பரப் பொருள்களுக்கு அட்டியேதும் சொல்லாமல் வட்டிகட்டிக் கொண்டிருக்கும் உத்தமக் கணவனாய்த் திகழ்பவனை நகைச்சுவை இழையோட அழகாய்ப் படம்பிடித்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. அவ்வைமகளை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “படக்கவிதைப் போட்டி 162-இன்  முடிவுகள்

  1. அவ்வை மகளுக்கு வாழ்த்துகள். “மணி” சிரிக்க காரணமே மணி தான்

    சிரிக்க மறந்த காலத்திலே சிரிக்க செய்தா அது தப்பா
    சிரிக்கும் முயற்சி செய்வதிலும் எத்தனை சங்கடம் இருக்குதப்பா

    பொம்பளை சிரிச்சா துன்புறுவாரென ஆம்பளை சிரிச்சேன் தயக்கத்திலே
    சம்பள நாளென தெரிந்ததனாலோ அடக்கி சிரிச்சேன் மயக்கத்திலே
    தம்பலம் தன்னை காமிக்க கம்மலை ஆட்டி பெண்டாட்டி
    கிம்பள மாவது தாடான்னு அம்மா தொடுத்தா ஆள்காட்டி
    வம்புள மாட்டி கிட்டதானல எடுத்தான் வைவோ எனும்பார்ட்டி
    கொம்புன ஆட்டி வல்லமையோ ஏத்திபுட்டாங்க படபோட்டி

    வாடாதிருக்க வருடி விடும் அன்னையிருக்கையில் வரும் சிரிப்பு
    வீழாதிருக்க அன்பு தரும் மனைவியின்கையில் வரும் சிரிப்பு
    தீராதிருக்க இருவரும் போட்டி உபசாரத்தில் வரும் சிரிப்பு
    பாராதிருக்கும் முகத்தில் விட்டு கொடுப்பதனாலே வரும் சிரிப்பு
    ஓயாதிருக்கும் ஒண்ணா தேதி ஒண்ணா சேர்க்கும் எங்களையும்
    தேயாதிருக்கும் எங்கள் அன்பில் கவிதைபாடும் உங்களையும்

  2. அன்பு இளவல் சத்யமணி!
    வணக்கம் சகோதர!
    செஞ்சட்டைக்காரர் நீர் தானோ?
    நெத்தியடியாய், பத்துபொருத்தமாய், உமக்கெனவே எழுதப்பட்டக் கவிதையாய் அமைந்தது கலையரசி அருளய்யா!
    அதுவும் அது தெரிந்தெடுக்கப்படவேண்டுமேன்றால் அது நம் கைவசம் இல்லையே!
    சத்யமணி என்று சத்தியமாய் வந்தது அவள் வாக்கு!
    நான் ஒரு கருவி!
    ஏதோ உமக்கும் எமக்கும் எங்கோ ஒரு தொலையலைத் தோழமை!
    நாளை சென்னைக்குப் பயணம்.
    இயலுமெனில் தொலைபேசி எண் தந்தால் பேசுவேன் நற்றமிழில்!
    முடியுமெனில் நேரில் சந்திக்கவும் முயலுவேன் – பலபணிகள் இருப்பினும்!
    வாழ்க பல்லாண்டு!
    எல்லா நமைக்ளும் சிறக்க இறையருளைச் சிந்தித்து
    அவ்வைமகள்

  3. எல்லா நன்மைகளும் சிறக்க இறையருளைச் சிந்தித்து
    அவ்வைமகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *