-முனைவர் அ.மோகனா

‘வைகாசி’ அருளாளர்கள் பல அவதரித்த மாதம். சைவ அடியார்களுக்கும் வைணவ ஆழ்வார்களுக்கும் உகந்த மாதம். பல விசேஷங்கள் நிறைந்த மாதமும் கூட. இந்த வைகாசி மாதத்தின் மூல நட்சத்திர நாளன்று அவதரித்தவர்தான் திராவிட சிசு என்று ஆதிசங்கரரால் அழைக்கப்பட்ட திருஞானசம்பந்தர். இதே நாளில்தான் திருநீலநக்கரும், திருநீலகண்ட பாணரும் அவதரித்தனர். சம்பந்தரின் வாழ்வில் இந்நாள் பல முக்கியத் தருணங்களைக் கொண்டதாக உள்ளது. சம்பந்தர் பிறந்த இதே நாளில்தான் அவருக்குத் திருமணமும் நிகழ்ந்தது. அந்நாளின் பின்னிரவு விடியலில்தான் இறைவனுடன் இரண்டறக் கலந்தது.

சம்பந்தர் தமிழ்ப் பக்தி இலக்கியத்தின் தலைசிறந்த முன்னோடி. இவர் பாடிய பாடல்களைக் காணும்போது இவர் பற்றிய நிகழ்வுகளின் உண்மையை உணரமுடிகின்றது. தம் மூன்றாம் வயதினிலே உமையம்மையாரிடம் திருமுலைப்பால் உண்டு அதன் பெருமையால் தேவாரம் பாடியவர். சிவபெருமானிடத்தே பொற்றாளமும், முத்துப்பல்லக்கும், முத்துச்சின்னமும், முத்துக்குடையும், முத்துப்பந்தரும், உலவாக் கிளியும் பெற்றவர். வேதாரணியத்திலே திருக்கதவு அடைக்கப்பாடியவர். திருநீற்றுத் திருப்பதிகம் பாடிப் பாண்டியனுக்கு வெப்பு நோயை நீக்கியவர். எலும்பைப் பெண்ணாக்கியவர் எனப் பல அற்புதங்கள் நிறைந்த வாழ்வினை வாழ்ந்தவர் திருஞானசம்பந்தர். தலங்கள் தோறும் சென்று சம்பந்தர் பாடிய பாடல்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாகக் கோளறு திருப்பதிகம். ஏனெனில் இறைவனிடம் சரணடைந்த அடியார்களை நாளும் கோளும் எதுவும் செய்வதற்கில்லை என்பதை உலகிற்கு உணர்த்த சம்பந்தரால் இப்பதிகம் பாடப்பட்டது. மதுரை அரசி மங்கையர்க்கரசி அழைப்பைஏற்று மதுரை செல்லக் கிளம்பினார். அப்போது அந்த நாள் நல்ல நாள் இல்லை என்று அவர் பயணத்தை தடுத்தார் திருநாவுக்கரசர். இறைவன் அடியார்களுக்கு எல்லா நாட்களுமே நல்ல நாட்கள்தான் என்று சொல்லி கோளறு பதிகம் என்னும் இந்த பத்துப் பாடல்களைப் பாடியருளினார் திருஞான சம்பந்தர். பத்துப் பாடல்களின் தொகுப்புக்குப் பதிகம் என்று பெயர். இதில் பதிகப் பயனுடன் சேர்த்து மொத்தம் பதினொரு பாடல்கள் இதில் உண்டு. இந்தப் பதிகத்தைப் படித்தால் கோள்கள் எந்த நேரத்திலும் நன்மையே பயக்கும் என்பது இன்றளவும் மக்களின் நம்பிக்கையாகஉள்ளது.

வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேலணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே. (இரண்டாம் திருமுறை, கோளறு திருப்பதிகம், பாடல்.1)

மூங்கிலைப் போன்ற தோளினை உடைய உமையினை ஒருபாகமாகக் கொண்டவன். விடத்தை உண்ட கண்டத்தினை உடையவன். அவன் திங்களையும் கங்கையையும் முடிமேல் அணிந்தவன். மகிழ்ச்சியுடன் வீணையை மீட்டிக்கொண்டு என் உள்ளத்தில் புகுந்துள்ளான். அதனால் ஞாயிறு, திங்கள் முதலிய ஒன்பது கோள்களும் எனக்குக் குறறத்தைச் செய்யாது. எனக்கு மட்டுமல்ல அவை அடியார்களுக்கும் நல்லதை மட்டுமே செய்யும் என்கிறார் சம்பந்தர். மேலும் கோள்கள் மட்டுமா அசுவினி முதலாக உள்ள நாள்களில் ஆகாதனவாகிய ஒன்பது, பது, பதினாறு, பதினெட்டு, ஆறு ஆகிய எண்ணிக்கையில் வருவனவும் பிறவுமான நட்சத்திரங்களும் அடியார்களுக்கு அன்போடு மிக நல்லனவே செய்யும். சினம் மிக்க காலன், அக்கினி, யமன், யமதூதர், கொடியநோய்கள் முதலிய அனைத்தும் மிக்க குணமுடையனவாய் நல்லனவே செய்யும். கொடிய சினமுடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியன நம்மைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்கட்கும் மிக நல்லனவே செய்யும். வலிய குரங்கு, புலி, கொலையானை, பன்றி, கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியனவும் நல்லனவே செய்யும்! கொடிய சினமுடைய அவுணர், இடி, மின்னல், செருக்குடைய பூதங்கள் ஆகியனவும் அடியார்களைக் கண்டு அஞ்சி நல்லனவே செய்யும் என அடியார்களுக்கு இப்பூவுலகில் உள்ள அனைத்து உயிர்களும், பொருட்களும் நல்லதை மட்டுமே செய்யும் என்கிறார் சம்பந்தர்.

சம்பந்தரின் பாடல்கள் பக்திச் சுவையில் மட்டுமன்றி இலக்கிய வடிவத்திலும் சிறப்புற்று இருக்கின்றன. இரண்டு சீர்களாலான அடியில் தொடங்கிப் ஒன்பது, பத்துச் சீர்களாலான அடிகள்வரைப் பாடல்களைப் புனைந்துள்ளார் சம்பந்தர். இரண்டு சீர்களால் ஆனவற்றைத் திருவிருக்குக்குறள் என்பர். ஒன்பது சீர்களைக் கொண்ட அடிகளால் ஆனது யாழ்முரிப்பதிகம். பத்துச் சீர்களால் ஆனது திருத்தாளச்சதி. ஒன்று யாழில் அடங்காதது. மற்றொன்று ஆடுவதற்கு உகந்தது. சம்பந்தர் பாடிய பதிகங்களுக்குள் தனிச்சிறப்பு வாய்ந்த பதிகமாக இவ்விரு பதிகங்களும் அமைகின்றன. யாழ்முரிப் பதிக வரலாறு சுவாரசியமானது. சம்பந்தரின் பாடல்களுக்கு யாழ்வாசித்துத் தொண்டு செய்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர். அவர் வாசித்த யாழ்க்கருவி சகோடயாழ் என்னும் பெயருடையது. அவரைச் சேக்கிழார் “சகோடயாழ்த் தலைவர்” எனப் போற்றுகின்றார். சகோடயாழின் பண்டைத் தமிழ்ப் பெயர் “செம்முறைக் கேள்வி” என்பது. இதில் பதினான்கு நரம்புகள் கட்டப் பெற்று இருக்கும். திருநீலகண்ட யாழ்ப்பாணரின் உறவினர்கள் யாழ்ப்பாணர் தேவாரப்பதிகங்களை யாழில் வாசித்து வருவதனைக் கேட்டு, “நீங்கள் அத்திருப்பதிகங்களை யாழிலிட்டு வாசிக்கும் சிறப்பினாலே அப்பதிகங்களின் இசை அகிலமெல்லாம் வளர்கின்றது” என்று பாராட்டி மகிழ்ந்தனர். யாழ்ப்பாணர் அந்த பாராட்டுரைக்கு மகிழவில்லை. அதற்கு மாறாகச் செவிபொத்தி உளம் நடுங்கினார். திருஞானசம்பந்தப் பிள்ளையாரை அடைந்து அவரது திருவடியைப் போற்றித், “திருப்பதிக இசை அளவுபடாத வகையில் இவர்கள் மட்டுமேயன்றி உலகிலுள்ளோரும் அறியும் வகையில் பலரும் புகழும் திருப்பதிகம் பாடியருள வேண்டும். அவ்வாறு பாடியருளப் பெற்றால் பண்புமிக்க அந்த இசை யாழின்கண் அடங்காமை யான் காட்டப் பெறுவன்” என்று விண்ணப்பித்தார். பிள்ளையாரும், “மாதர் மடப் பிடி”என்ற திருப்பதிகத்தை, “பூதலத்தோர் கண்டத்தும் கலத்தினிலு நிலத்தநூல் புகன்ற பேத நாதவிசை முயற்சிகளா லடங்காத வகை `காட்ட”ப் பாடியருளினார். கண்டம் என்றால் மிடறு என்று பொருள். கலம் என்றால் கருவி, யாழ் என்று பொருள். அதுவரையிலும் மிடற்றிலோ, யாழிலோ நாதவிசை முயற்சிகளால் இசைக்கப் பெற்றிராத, இசைநூல்களில் சொல்லப் பெற்றிராத இசை வகை காட்டிப் பிள்ளையார் பாடியருளினார், எனச் சேக்கிழாரும் இந்நிகழ்ச்சியைக் கூறியுள்ளார். பாடல் வருமாறு,

மாதர் மடப்பிடி யும்மட வன்னமு மன்னதோர்
     -நடையுடைம் மலைமகள் துணையென மகிழ்வர்
பூதவி னப்படை நின்றிசை பாடவு மாடுவர்
     -அவர்படர் சடைநெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசை பாடுவ ராழ்கடல் வெண்டிரை
     -இரைந்நுரை கரைபொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னைத யங்குமலர்ச் சிறை வண்டறை
    -எழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.

(முதல் திருமுறை, யாழ்முரிப் பதிகம், பாடல் 1)

இப்பாடல் ஒன்பது சீர்களைக் கொண்டிருந்தாலும் சந்த வாய்பாட்டில் தான தனத்தனனா – தன – தானன தானனா/ தனா – தனா – தனா தனதன தனனா என்றவாறு அமைந்துள்ளதை ந.சுப்புரெட்டியார் குறித்துள்ளார். அடிமுதற்கண் தொடங்கிய இயலும் இசையும் அவ்வடிக்குள்ளேயே முரிந்து மாறுபடும்படி அமைந்தமையால் முரி ஆனது. திருநீலகண்ட பாணர் யாழை முரிக்க முயன்றதனாலும் முரியாயிற்று.

திருஞானசம்பந்தர் தான் வாழ்ந்த பதினாறு ஆண்டுகளுக்குள் பல்லாயிரம் ஆண்டுகள் புரிய வேண்டிய சாதனையைப் புரிந்தவர். அவர்தம் பக்திச்சிறப்பையும் இலக்கியப்புலமையையும் கருத்து நிலைப்பாட்டையும் புரிந்து கொண்டதால்தான் ஆதிசங்கரர் அவரைத் திராவிட சிசு என்றார்.

*****

பார்வை நூல்கள்

சம்பந்தர்,   திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரப்  பதிகங்கள், திருமுறை (1,2,3), கயப்பாக்கம் சதாசிவ செட்டியாரால் பார்வையிடப்பெற்றன, கழகம், சென்னை, 1973.

சேக்கிழார்,பெரிய புராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணம் (பன்னிரண்டாந்திருமுறை), சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை, மூன்றாம் பதிப்பு, 1950.

ந.சுப்பிரெட்டியார், மூவர்தேவாரம் – புதிய பார்வை, நிவேதிதா பதிப்பகம், சென்னை, 2003

*****

கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
தியாகராசர் கல்லூரி
மதுரை
8056621869

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “திராவிட சிசு!

  1. அருமையான ஆய்வு. ஆசிரியருக்கு மிக்க நன்றி.
    சங்கரர் திராவிட சிசு என தனது சொளந்தர்ய லஹரியில்
    சம்பந்தரைப் பாடி உள்ளதால் சங்கரரின் காலம் சம்பந்தருக்குப் பின்னர் தோன்றியது என தெரிகிறது.அம்பிகையின் ஞானப்பால் பருகி அதனை நமக்கும் பருக அருளியுள்ளார் தன் பாசுரங்களை இயற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *