சங்க இலக்கியத்தில் அறிவியல் செய்திகள்

0

 முனைவர் ப. ஜெயகிருஷ்ணன்,

பேராசிரியர், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம், காரியவட்டம், திருவனந்தபுரம், 695 581.
முன்னுரை

சங்க இலக்கியம் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியல் முறைகளையும் அவர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த வாழ்க்கை முறையினையும் எடுத்துரைக்கும் காலக் கண்ணாடியாகவும் அழியாச்சான்றாகவும் விளங்குகின்றது. பழந்தமிழர் வாழ்வில் இடம் பெற்ற காதல் , மறம், புகழ் ஆகிய மூன்றும் ஆராயப்பட்ட அளவிற்கு அறிவியல் செய்திகள் ஆராயப்படவில்லை. அவை அறிவியல்  பூர்வமகாக ஆரயப்பட்டால் பழந்தமிழரின் ஆழமான அறிவியல் அறிவை அறிந்து கொள்ள  முடியும்.

சங்க இலக்கியத்தில் தாவரங்கள் பற்றி ஆராய்ந்த அறிஞர் .பி.எல்.சாமி ‘’சங்க இலக்கியங்களில் செடி கொடி மரங்கள்’’ பற்றிப் பல செய்திகள் விளக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் செடி நூலார் (Botanist)     கண்டுபிடித்தவையோடு  ஒத்திருக்கின்றன என்ற கூறுவார்.

தொல்காப்பியம் தமிழ் மொழிக்கு இலக்கணம் கூற வந்த நூலாயினும் அறிவியல், தத்துவம், மருத்துவம் ,வானவியல் ,சோதிடம், கணிதம் போன்ற கருத்துக்களை வெளியிடும் ஒரு நூலாகவும் அமைந்துள்ளது. மேலைநாட்டு அறிவியல் சிந்தனையாளர்களான தேல்ஸ் (கிமு 639-544), அனாக்ஸி மாண்டர் (611-547) ஷீனோபான்ஸ் (கிமு 576-480) எம்படோகில்ஸ் (கிமு 504-433) அரிஸ்டாட்டில் ( கிமு 384-322) போன்றோர் வெளியிடாத பல  அறிவியல் கருத்துக்களைத் தனது இலக்கண நூலில் தொல்காப்பியர் விளக்கியுள்ளார். அவற்றை உயிரியல் சிந்தனைகள், மருத்துவச்சிந்தனைகள், சார்பியல் கோட்பாட்டுச்சிந்தனைகள், தகவல் தொடர்பியல் சிந்தனைகள், வானவியல் சிந்தனைகள் எனப் பிரிக்கலாம். உயிரினப்பாகுபாட்டை உலகில் முதன்முதலில்  தொல்காப்பியர் பின்வருமாறு விளக்குகிறார்.

‘’ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றொடு மனனே’’

என்ற நூற்பாவால் (தொல்.., பொருள், மரபு, நூ.26-27 ) விளக்குகின்றார். உயிர்களின் பரிணாம வளர்ச்சியை உயிர்களின் உடம்பினோடும் அதனோடு இணைந்த மெய்,வாய், மூக்கு,கண்,செவி என்னும் ஐம்பொறிகளும், மனமும் ஆகிய ஆறுவகை வாயில்களையும்  பெற்று அறிவினால் சிறந்து விளங்கும் இயல்பினை அறிவியல் நோக்கில் குறிப்பிட்டுள்ள தொல்காப்பியரின் திறம் போற்றத்தக்கது.

‘’செஞ்ஞாயிற்றுச் செலவும்

அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்

வளி திரிதரு திசையும்

வறிது நிலைஇய காயமும் என்றிவை

சென்றளந்து அறிந்தோர்போல என்றும்

இனைத்து என்போரு முளரே  (புறம் 30.1-7)

செஞ்ஞாயிற்றின் வீதியும் அஞ்ஞாயிற்றின் இயக்கமும், அவ்வியக்கத்தால் சூழப்படும் பார்வட்டமும் காற்றியங்கும் திசையில் ஓர் ஆதாரமும் இன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் ஆகிய இவற்றை அளந்து அறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையவென்று எடுத்துக்கூறும் கல்விடையோரும் இருந்தனர் என்ற அறிவியல் குறிப்பினை இப்பாடல் வெளிப்படுத்துகிறது.

சூரியக்குடும்பம்

சூரியக்குடும்பத்தின் ஒரு கிரகத்திலிருந்து வந்தவர்கள் தான் மக்கள் என்ற வானியல் அறிஞர்களின் கருத்திற்கு ஏற்றவாறு சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சியும் பின்வரும் பாடலில் கூறுகிறது.

‘’சென்ற காலமும் வரூஉம் அமயமும்

இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து

வானமும் நிலனும் தாம் முழு துணரும்

சான்ற கொள்கைச்சாயா யாக்கை

ஆன்றடங் கறிஞர் செறிந்தனர்’’( மதுரை 477-481 )

பழங்காலத்தில் வாழ்ந்து வந்த சைனர் வானம் ஏறுதல், கடலில் நடத்தல் போன்ற அறிவியல் செயல்களைச் செய்வதில் திறம் பெற்றிருந்தனர் என்பதை குறுந்தொகை 130 –வது பாடல் விளக்குகிறது.

‘’நிலம் தொட்டுப் புகா அர்வானம் ஏறார் விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்’’ என்ற பாடலில் தோழி தலைவியிடம் உன் தலைவன் நிலத்தில் புக மாட்டார் வானத்தில் ஏறார் கடலின் மீது நடவார் கவலைப்படாதே என்ற தேற்றுவதாக  அறிவியல் செய்தி வருகின்றது.

வான வெளிப் பயணம் 

வான வெளிப் பயணம் முன்னோர்கள் அறிந்திருந்த ஒன்றுதான் என்றாலும், இன்றைய காலகட்டத்தில் விமானிகளே இல்லாத விமானங்களை வானவெளியில் செலுத்தமுடியும் என்ற அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி அடைந்துள்ளது இக்கருத்தினை

‘’ வலவன் ஏவா வானவூர்தி

எய்துப………….(புறம் பா 27)

என்ற பாடலில் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் குறிப்பிடுகின்றார். சிறந்த அரசர்கள் விண்ணில் பாகனால் செலுத்தப்படாத தானே இயங்குகின்ற திறன் வாய்ந்த வானவூர்தியில் சென்றனர்எ ன்ற குறிப்பின் வழி தமிழர்கள் விமான ஓட்டும் கலையில் வல்லவர்களாக இருந்தனர் என்பதை அறியமுடிகின்றது.

கணிதவியல் சிந்தனைகள்

வாழ்வியலோடு ஒட்டியதாகும் கணிதம். அதன் உதவியின்றி எதுவும் நடைபெறாது. இதை உணர்ந்தே

‘’எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு ( குறள் 392)

என்று வள்ளுவரும் கூறினார். ஔவையும்

‘’எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நெய்தலும் குவளையும்ஆம்பலும் சங்கமும்

மைஇல் கமலமும் வெள்ளமும் (பரி 2.13-14) இப்பாடலில் எண் கணிதம் கூறப்பட்டுள்ளது.

கணக்கற்ற பல ஊழிகள் பல கோடி ஆண்டு காலத்தைக் குறிக்கின்றது. இதில் ஆம்பல் என்பது பழந்தமிழர் கணக்கிட்ட ஆயிரம் கோடி என்ற  பேரியல் எண் வெள்ளம் என்பது கோடி கோடியைக் குறிக்கின்றது. கோடியை விடவும் பெரிய எண்களுக்கும் தமிழில் பெயர் இருப்பது தமிழரின் தனிச்சிறப்பை உணர்த்தும் குறிப்பாகும்.

மருத்துவச் சிந்தனைகள்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நலமுடன் வாழ முடியும். நீர்வேட்கைத் தீர்க்கும் பொருட்டு அக்காலத்தில் மூவகை மருந்தாக நெல்லிமரம் பயன்பட்டது. நெடுந்தூரம் வந்த நீர்வேட்கை மிக்க புதியவர்கள் உயிரைப் போகாது தடுக்க நெல்லிக்காயை சுவைத்தனர். நீர்ச்சத்து நிறைந்த தாவரங்களுள் நெல்லிமரம் ஒன்றாகும்.

-கோட்கரம் நீந்தி

நெட்ஞ்சேண் வந்த நீர்நசை வம்பலர்

செல்லுயிர் நிறுத்த சிவைக்காய் நெல்லி (புறம் 271 5-7)

இந்நெல்லிக்கனியை நீண்ட நாள் உயிர்வாழும் பொருட்டு ஒளவைக்கு அதியமான் வழங்கினான் (புறம் 97)

மண்ணறிவியல் சிந்தனைகள்

பழந்தமிழர்கள் மண்ணின் தன்மையை நன்கு அறிந்திருந்தனர். நீர் வற்றாத வைகை ஆற்றில் காணப்படும் மணல் செம்பழுப்பு அல்லது கருப்பாக இருக்கும் . இம்மணல் பயிர் செய்வதற்கு ஏற்றதாக இருந்ததை

வரும்புனல் வையை வார்மணல் அகன்றுறைத்

திருமருதோங்கிய விரிமலர்க்   காலின் ( அகம் 36.9-10)

இங்கு ஆற்று நீர் கொண்டு வந்த வெண் மணலின் தன்மையை அறிய முடிகிறது.

புவி வெப்பமடைதலும் பருவ மழை மாறுதலும்

புவி வெப்ப மாற்றத்தால் பாலை நிலம் பாதிக்கப்படுவதை பின்வருமாறு புறநானூறு பாடல் விளக்குகிறது.

கதிர் கையாக வாங்கி ஞாயிறு

பைதரப் பெறூதலின் பயங்கரந்து மாறி

விடிவாயப்பட்ட வியன்கண் மாநிலம் (அகம் 164.!-3)

என்ற பாடல் அடிகள் ஞாயிற்றின் கதிர்கள் ஈரத்தைக் கவர்ந்த்தையும் பசுமையற்ற நிலங்களில் வெடிப்புகள் ஏற்பட்டதையும் இலைகள் வாடிப்போய் உதிர்ந்ததையும் விளக்குகிறது.

நீர்க்கடிகாரம்

நல்ல காரியம் செய்வதற்கு முன் நேரத்தைப் பார்ப்பது உண்டு. சங்க காலத்தில் மன்னர்கள் போருக்குப் புறப்படுவதற்கு முன் நேரத்தைப் பார்ப்பதற்காக நாளிகைக் கணக்கர்கள் கோவில்களிலுள்ள கிடாரமாகிய நீர்க்கடிகாரத்தைக் கண்டு அதிலுள்ள நீரின் அளவைக் கொண்டு நாளிகையைக் கணக்கிட்டுக் கூறினர் என்பதை

‘’எறிநீர் வையகம் வெலீஇய செல்போய் நின்

குறு நீர்க்கன்னல் இனைத்து என்று இசைப்ப’’- (முல்லைப்பாட்டு 57-58)

இதே கருத்தை மாங்குடி மருதநாரும் குறிப்பிடுகின்றார்.

அக்கால மகளிர் நேரத்தை வட்டிலைக்கொண்டுதான் கணக்கிட்டனர்.

கதிரவனைக் கொண்டு அல்லது.

குறுநீர்க்கன்னல் எண்ணுநர் அல்லது

கதிர் மருங்கறியா தஞ்சு வரப்பா அய்  (அகம் 43;6,7)

தலைவன் வரவுக்காகக் காத்திருக்கும் தலைவி தன்னிலையில் துயிலாமல் இருப்பவர்கள் யார் என்று எண்ணும் போது நாளிகை வட்டில் அவள் கண்முன் தோன்றுகிறது. இரவெல்லாம் துயிலாமல் நாளிகை வட்டிலையே கூர்ந்து நோக்கியிருப்பது போல நானும் தலைவன் வரவையே எதிர்பார்த்து இருக்கிறேன் என்பதை குறு 261 ஆம் பாடல் விளக்குகிறது.

‘’ அஞ்சு வருபொழுதினானும் என்கண்

துஞ்சா வாழி தோழி காவலர்

கணக்கு ஆய் வகையின் வருந்தி என

நெஞ்சு புண்ணுற்ற விழுமந்தானே’’ (குறு 261)

நியூட்டனின் விதி

                              ‘’வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி

ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்

வல்வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்’’ (புறம் 152)

எய்த வில்லானது யானை , புலி, புள்ளிமான், பன்றி, உடும்பு போன்ற விலங்குகளை வீழ்த்திய வில்லின் வேகம் குறைந்து ஒன்றிலிருந்து மற்றொன்றைத் தாக்கி விசை நிலைப் பெற்றதாகக் கூறுமிடத்து நீயூட்டனின் விதி உணர்த்தப்படுகிறது.

ஆற்றின் வழியாக மிதந்து செல்லும் தெப்பமானது நீரின் விசையை மட்டும் பெற்றுச் செல்கிறது. இந்தத் தெப்பத்தினை வேறு எந்த விசையும் தாக்குவதில்லை. அதைப்போல வாழ்க்கை ஒரேச் சீராகச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் கீழ்கண்ட புறப்பாடலும் நீயூட்டனின் இரண்டாவது விதிக்குப் பொருந்தியுள்ளது.

‘’பேர்யாற்று

நீர்வழிப்படுஉம் புணைபோல் ஆருயிர்

முறைவழிப்படுஉம் என்பதும் ‘’ (புறம் 192 .8-10)

விண்மீன்கள் பற்றிய அறிவு

விண்மீன்கள் பற்றி அக்கால மக்களுக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. வருணனைப் பாங்கில் விண்மீன்கள் தோன்றுதலை ‘’ வெள்ளி முளைத்தல் ‘’ என்றே சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதை அறிகிறோம்.

‘’ வெள்ளி முளைத்த நள்ளிருள் விடிய ‘’ (பொரு – 72)

கண்ணுக்கு அழகுபட விளங்குவதன் காரணமாக விண்மீன்கள் தோன்றுவதை பூத்தல் என்று குறிப்பதும் இலக்கிய வழக்காக உள்ளது.

‘’ மீன் பூத்தன்ன உருவ ‘’ ( புறம் 21;4)

‘’வான்மீன் பல பூப்ப’’ ( புறம் 129;7)

விண்மீன்கள் அன்றன்று புதிதாக முளைப்பனவல்ல கதிரவனால் மறைக்கப்பட்டே பகலில் தோன்றாதுள்ளன என்ற அறிவியல் உண்மை அக்காலத்து மக்களுக்கு விளங்காமல் இல்லை.

விண்மீன்கள் என்பனவும்; நிலவும் சூரியனும் போல வானில் சுடர் விட்டுப் பிரகாசிப்பனவே ஆயினும் விண்மீன்களின் பிரகாசம் வேறுபடுகிறது. விட்டு விட்டுப் பிரகாசிப்பன அவை. அதனை காற்றில் அலைந்து அலைந்து எரியும் தீப்பந்தங்களுக்கு இலக்கியங்கள் ஒப்பிட்டுள்ளது பொருத்தமானதாகும்.இது பற்றியே இலக்கியங்கள் விண்மீன்கள் ஒளிவிடுவதை- இமைத்தல் என்றும் குறிக்கின்றன. ‘’ வானமின்னின் வயின் வயின் இமைக்கும்’’ (குறு 150; 2)

மின்னலிலிருந்து வேறுபடுத்துவதை அதனை மீன் என்றனர். மீன் பூத்தன்ன தோன்றலர் ( திரு 169)

‘’சிறுமீன் புரையும் கற்பின் ‘’(பொரு 303)

‘’கைம்மீன் புகையிலும் ‘’(புற 117 ;1)

‘’வடமீன் புரையும் கற்பின் ‘’ (புற 122 ;8)

‘’மீன்றிகழ் விசும்பின் ‘’ (புற 25;1)

பழந்தமிழ் இலக்கியங்களில் மீன் என்பது வானத்து மீனையும் வையத்துக் கயங்களின்  மீனையும் குறித்து வருகின்ற இருபொருள் காரணமாக அழகிய வருணனைகள் விளங்குகின்றன. மின்னுகின்ற காரணத்தால் மீன் என்று விண்மீன் குறிக்கப்பட்டதோடன்றி வெள்ளொளி அதன் ஒளி ஆதலின் ஒளிநிறத்தை வைத்து வெள்ளி என்றும் வழங்கப்பட்டது.

’’வெள்ளிஏர்தர ‘’(புறம்  398;1)

‘’வெள்ளி ஓடினும் ‘’ (புறம்  117;2)

‘’இலங்கு கதிர் வெள்ளி’’( புறம்  35;7)

வானத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் போன்ற கோள்களும் நட்சத்திரக் கூட்டங்களும் இவற்றுக்கெல்லாம் அப்பால் அழகிய மண்தளங்களும் உண்டு என்பது மாங்குடி மருதனாரின் அறிவியல் சிந்தனை

‘’ அங்கண்மால் விசும்பு புகையவளி போழ்ந்து (மதுரை 384)

பூமியிலிருந்து 200 மைல்களுக்கு மேலே காற்று மண்டலம் கிடையாது என்பதை புறப்பாடல் விளக்குகிறது ‘’வழியிடை வழங்கா வானஞ்சூடிய’’

சங்கப்புலவரின் பாடல்கலெல்லாம் அவர்களின் பட்டறிவே என்பதும் உள்ளதை உள்ளவாறே விளக்குவதும் அவர்களின் அறிவியல் சிந்தனையாகும். ஊர்வன. பறப்பன, நீர்வாழ்வன தாவர விலங்கு பற்றிய அறிவியல் சிந்தனைகளை உணர முடிகிறது.

உலகம் சுழல்கின்ற சுழற்சியை உலகம் தன் சுழற்சியினால் நல்ல இசையை உண்டாக்கும் தன்மை படைத்தது என்பதை                             ‘’மலையும் சோலையும் மாபுகழ் கானமும் தொலையா நல்லிசை உலகமொடு நிற்ப’’ என்கிறது மலைபடுகடாம் (170-171)

வானம் அளவிட முடியாததாகவும் காற்று நுழைந்து செல்லாத காற்றற்ற வெளியாகவும் விளங்குவதனை

‘’மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக

இயங்கிய இரு சுடர்

கண்ணெனப் பெயரிய ‘’ என்ற புறப்பாடல் விளக்குகின்றது (365)

நெம்புகோல், தராசு பற்றிய அறிவை புறம் 131 ஆம் பாடல் விளக்குகிறது. ஆய் என்ற வள்ளலை முடமோசியார் வட திசையில் மேரு மலைக்கு சமமாக ஆய் வள்ளலின் பெருங்குடி தென் திசையில் விளங்குவதால் தான் உலகம் ஒரு பக்கம் சரிந்து நிற்கிறது என்பதனை தராசு கோலுடன் உவமையாக விளக்குகிறார்.

குறிஞ்சிப்பூ பற்றிய விளக்கம்

  குறிஞ்சி என்ற சொல்லின் விளக்கம் சங்கத்தொகை நூல்களில் 19 இடங்களில் இச்சொல் ஆளப்பட்டிருந்தாலும் இவற்றில் ஏழு இடங்உகளில் மட்டுமே குறிஞ்சி மலர் பற்றிய விளக்கம் இடம் பெறுவதாக பேராசிரியர் இர. குளோரியா சுந்தரமதி குறிப்பிடுகிறார்.

ஒரு மலைத்தலைவனது நாட்டைச் சிறப்பித்துகூறும் ஒரு தலைவி

‘’கருங்கோற் குறிஞ்சிப்பூக்கொண்டு

பெருந்தேனிழைக்கும் நாடனொடு நட்பே ’(குறு .3 )’

என்கிறாள்.

குறிஞ்சிப்பூவின் தேனை மிகவும் அரியதாக கருதியதை இப்பாடல் வரிகள் சுட்டுகின்றன. குறிஞ்சித்தேன் பிறத் தேனை விடச் சிறப்புடையது. பல்லாயிரக்கணக்கில் பூப்பதாலும் தேனீக்கள் நிறையத் தேனைத்தொடுக்க வாய்ப்புண்டாகிறது.பொதுவாகத் தேன் கூடுகளில் பல வகைப்பூக்களின் தேன் காணப்படும் . ஆனால் குறிஞ்சிப்பூக்களின் தேனால் இழைக்கப்படும் கூட்டில்  பிற பூக்களின் தேன் கலப்பதில்லை ஏனெனில் குறிஞ்சி செடிப் பூக்க ஆரம்பித்தால் தேனீக்கள் குறிஞ்சித்தேனையே கூடுகளில் சேர்க்கின்றன. இத்தகைய தேனைத் தாவரவியல் அறிஞர்கள் தனிப்பூத் தேன்( Unifloral Honey ) என்று கூறுகின்றார்கள். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூப்பது ஆதலின் இதன் மலரில் சுரக்கும் தேன் அதாவது மலரின் செல்களில் உள்ளச் சாறு மிக முதிர்ந்து தேன் சுரப்பிகளின் வழியாக வெளிப்படுவது இனிதாக இருப்பதில் வியப்பில்லை.

முடிவுரை 

சங்க இலக்கிம் ஒரு கடல். கற்பவருக்குப் பல்துறை அறிவு இருந்தாலன்றி சங்க இலக்கியத்தின் முழுப்பொருளையும் அறிதல் சற்றுக் கடினமே. கருங்கோர் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருத்தேன் இழைக்கும் நாடன் என்ற ஒரு குறுந்தொகைப்பாடலை விளங்கிக் கொள்வதற்கே சில துறை அறிவுகள் வேண்டும்.அறிவியல் ஆய்வு முறையில் சங்க இலக்கியத்தை ஆய்வு செய்து பொருளை வெளிக்கொணர்ந்தால் செம்மொழியின் செவ்வியல் இலக்கியங்களை உலகு உணர்ந்து பாராட்டும் என்பதில் ஐயமில்லை

 பார்வை நூல்கள்

சங்க இலக்கியங்கள்

தமிழியல் புது நோக்கு ; முனைவர் ப. ஜெயகிருஷ்ணன்

தமிழ்ப்புதுக்கவிதைகளில் அறிவியல் ; முனைவர் க.முருகேசன்

அகநானூறு ஆய்வுக்கோவை ; குறிஞ்சிப்பதிப்பகம்

நற்றினை ஆய்வுக்கோவை   : விழிச்சுடர் பதிப்பகம்

`

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *