அன்பினியவர்களே !

அன்பான வணக்கங்களுடன் இந்தவார மடலில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். வாரமொன்று என்பது வாழ்வின் காலத்தின் அளவினைக் குறுக்கிக் கொண்டே போகும் அளவுகோல் போன்று தோன்றுகிறது. ஒவ்வொரு வாரமும் வந்து போக வேண்டியது தமது காலக்கட்டாயக் கடமை போன்று யார் விரும்பினாலும் அன்றி விரும்பாவிட்டாலும் தன்பாட்டுக்கு வந்து போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் சரித்திரத்தில் அவை ஒவ்வொன்றும் ஏதோ ஒரு பதிவுகளைத் தமது சார்பில் விட்டுத்தான் சென்றிருக்கின்றன என்பதுவே உண்மையாகிறது.

அப்படியான ஒரு சரித்திர நிகழ்வின் நூற்றாண்டு இவ்வாண்டில் இம்மாதத்தில் நிகழ்வதென்பது இப்போது பலவகைகளில் இங்கிலாந்தில் பேசப்பட்டு, விவாதிக்கப்பட்டுக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியான அந்நிகழ்வுதான் என்ன? இங்கிலாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்து இவ்வாண்டு தூற்றாண்டாகத் திகழ்கிறது. இங்கிலாந்தில் பெண்களும் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று அவர்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது 1918ம் ஆண்டேயாகும். இவ்வாக்குரிமையை இங்கிலாந்திலுள்ள மக்கள் மிக இலகுவாகப் பெற்று விடவில்லை. அதற்காக இங்கிலாந்திலுள்ள பெண்கள் பெரும் போராட்டம் நடத்த வேண்டிய தேவையிருந்தது.

இங்கிலாந்தில் 1865ம் ஆண்டு பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும் எனும் போராட்டம் வலுப்பெற்று பல வடிவங்களெடுத்து முற்றிலுமாக 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தேர்தல்களில் வாக்களிக்கலாம் எனும் உரிமை இறுதியாக 1928 ம் ஆண்டுதான் அளிக்கப்பட்டாலும். பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது 1918ம் ஆண்டேயாகும். இத்தருணத்தில் இன்றைய பெண்களின் நிலையைப் பற்றிய ஒரு கேள்வி பலரது மனங்களிலும் எழுவது இயற்கை. இன்றைய உலகில் பெண்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள் மட்டுமல்லாமல் பல நாடுகளின் தலைவர்களாக அந்நாட்டின் அரசியல் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தகமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இருந்திருக்கிறார்கள் என்பதுவே உண்மையாகிறது.

ஆனால் அதேசமயம் பெண்கள் தமக்கு கலாச்சாரக் கட்டுப்பாடு எனும் பெயரில் இடப்பட்ட தடைகளை உடைத்தெறியக் கூடிய சந்தர்ப்பங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் நிலையிலிருக்கிறார்களா ? என்பது கேள்விக்குறியே ! இங்கு மிக முக்கியமாக நாம் நோக்க வேண்டிய பதம் “காலாச்சாரம்” எனும் சொல்லே. இதன் முழுஅர்த்தமும் சரியான வகையில் உள்வாங்கப்பட்டிருக்கப் பட்டிருக்கிறதா என்பது சந்தேகமே ! இன்றைய இந்த நவீன உலகில் கலாச்சாரம் எனும் பதத்தின் உபயோகத்தைப் பெண்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக உபயோகிக்கும் பல ஆண்கள் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயமே ! பெண்களுக்கென சில குறிக்கப்பட்ட வேலைகளை நிர்ணயித்து அவர்களை அந்த எல்லைகளை விட்டு வெளியே வரவிடாதபடி கதவுகளை ,ஊட்டி வைத்து சமுதாய அமைப்புகளை ஏற்படுத்தி வைத்திருப்பதை பல இடங்களில் பார்க்கக்கூடியதாக உள்ளது. ஒரு பெண் பிரதமரைக் கொண்ட இந்த இங்கிலாந்து நாட்டில் கூட இன்றும் பெண்களுக்கான முன்னேற்றக் கதவுகள் அடைக்கப்பட்டிருக்கிறது என்பதுவே கசப்பான உண்மையாகிறது.

இன்றும் பலரால் பெண் என்பவள் தமது தாய், சகோதரி, மனைவி எனும் நிலைகளில் இருந்தாலும் பெண்களை காமப்பொருளாகக் கண்டு சிலாகிக்கும் பலரைக் காணும்போது நெஞ்சம் கொஞ்சம் வருந்தத்தான் செய்கிறது. அதேசமயம் பாரதி கண்ட புதுமைப்பெண் என்பவளின் உண்மையான சமுதாயப் பங்களிப்பின் முழுஅர்த்தத்தையும் விளங்கிக் கொண்டிருக்கிறோமா? என்பது சந்தேகமே ! இதன் அர்த்தத்தை ஆண்கள் மட்டுமல்ல சில பெண்களும் விளங்கிக்கொள்ளவில்லை என்பதுவே உண்மை. தம்மை கவர்ச்சியின் அடையாளமாகக் காட்டுவதற்க்குச் சாதகமாக புதுமைப்பெண் எனும் விளக்கத்தை உபயோகப்படுத்தும் சில பெண்களினால் வரம்புகளை மீறும் ஆண்கள் தம்மை நியாயப்படுத்தும் பல நிகழ்வுகளைக் காண்கிறோம்.

அன்னை எனும் ஸ்தானத்தில் எமது பிறப்புக்கும் இன்று நாம் சமுதாயத்தில் நடமாடும் நிலைக்கும் காரணமாக இருந்த பெண்ணின் திறமை இல்லம் எனும் நான்கு சுவர்களுக்குள் மட்டும் விளங்குவது எந்தவொரு சமுதாயத்திலும் முன்னேற்றத்துக்கு ஏற்ற ஒரு செயலாக அமையாது. இராணுவம், போலிஸ் போன்ற பணிகளில் பெண்கள் அமர்வது முடியாத ஒன்று எனும் நிலைமாறி இன்று அத்தகைய பணிகளில் பெண்களுக்கும் முன்னிடம் கொடுப்பது நிகழாமல் இல்லை. இங்கிலாந்தின் மெட்ரோபோலிடன் போலிஸ் இலாகவின் தலைமைப்பதவியில் இப்போது ஒரு பெண் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இன்றும் இங்கிலாந்தில் முன்னனி ஸ்தாபனங்களில் நிர்வாக இயக்குனர்களாக அவற்றை வழிநடத்துபவர்களில் பென்களின் விகிதாசாரம் குறைவாகவே உள்ளது.

இங்கிலாந்தில் ஒரே பணியில் இருக்கும் ஆண்களின் ஊதியத்துக்கும் பெண்களின் ஊதியத்துக்கும் வித்தியாசமிருப்பது பெண்களின் நிலை இன்னமும் குறைவாக மதிப்பிடப்படுவதையே காண்பிக்கிறது. இதைப்பற்றிய கரசாரமான விவாதங்கள் முன்னனி ஊடகங்களில் நிகழாமல் இல்லை. இருப்பினும் இதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கைகள் இன்னமும் மந்தமாக இருக்கிறது என்பதுவே உண்மை. பெண் பிரதமரின் வழிநடத்தலில் இயங்கும் நாட்டில் இந்நிலை இருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது என்கிறார்கள் பல ஊடகவியலாளர்கள். அதேசமயம் நானொரு பெண் எனக்கு இப்போது கிடைத்திருப்பதுவே பெரும் விடயம் என்று தம்மைக்குறித்த தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்களின் பங்களிப்பும் இம்முன்னேற்றத்துக்கு தடையாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

ஆண், பெண் எனும் இருவரிமே மனிதர்கள் தான் காலத்தோடு உலகம் சந்தித்த மாற்றங்கள் பல . அவற்றோடு பெண்களை நோக்கிய சமுதாயப் பார்வைகளும் மாற்ற வேண்டியது அவசியமே ! அம்மாற்றங்கள் எங்கெங்கே, எவ்வாறு நிகழ வேண்டும் என்பது முக்கியம். பெண்கள் தமக்கு இணையாக அனைத்துப் பணிகளையும் புரியும் ஆற்றல் கொண்டவர்கள் என்று ஆண்களும், தாம் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதைப் பெண்களும் புரிவது எத்தனை முக்கியமோ கலாச்சார மாற்றத்தின் உண்மையான புரிதலையும், நாகரீகம் என்பதின் முழுஅர்த்தத்தையும் ஆண்கள், பெண்கள் இருவருமே புரிந்து கொள்வதும் அத்தனை முக்கியம். அன்னை என்பவளின் உறவு அன்றும், இன்றும், என்றும் அன்னையே ஆனால் அவளின் அறிவின் ஊடுருவல் குடும்பம் எனும் எல்லைகப்பாலும் விரிவடைவது அன்றை விட இன்று மாற்றமடைந்திருக்கிறது.

பெண்மையைப் போற்றுதும் !

பென்மையைப் போற்றுதும் !

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *