க. பாலசுப்பிரமணியன்

மாற்றங்களைக் கண்டு ஏன் பயப்படவேண்டும் ?

கற்காலம் தொட்டே  மனிதனின் ஆர்வமும் தேடல்களும் அவனுடைய துணிவுக்கு வித்தாக அமைந்திருந்தன. கற்களைத் தட்டி நெருப்புப்பொறியைக் கண்ட மனிதன் நெருப்பின் உபயோகத்தை சிந்தனையின் மூலமாகவும் அனுபவத்தின் மூலமாகவும் உணர்ந்தான். உணவுகளைப் பக்குவப்படுத்தவும் குளிரிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும் நெருப்பை உபயோகித்தான். அவன் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டது. கற்களை செதுக்கி ஆயுதங்களைப் படைத்தான். அவன் வேட்டையாடும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டன.. தொடர்ந்து உலோகங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தான். கூட்டாக வாழ ஆரம்பித்தன. விவசாய முறைகளைத் தேர்ந்தெடுத்து உண்பதற்கு பல தானிய வகைகளை வளர்க்க ஆரம்பித்த்தான். மாற்றங்கள் தொடர்ந்தன. பல ஆயிரம் ஆண்டுகள் விவசாயம் சார்ந்த சமூகத்தில் தரமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தான். உடுக்கும் முறைகள் வாழும் முறைகள், தொழில் முறைகள், உறவு முறைகள், சிந்தனை முறைகள் மற்றும் திறன்கள் ஆகியவற்றில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வந்தன. இந்த மாற்றங்களின் பின்னால் என்ன நடந்து கொண்டிருந்தது ?

மாற்றங்களைக் கண்டு வியந்து மனமுவந்து அவற்றை ஏற்றுக்கொண்டது ஒரு சார்பு. மாற்றங்களைக் கண்டு பயந்து அவைகளால் தங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுமோ என்று அவற்றை மறுத்தது மட்டுமின்றி அவற்றிற்குத் துணையாக இருந்தவர்களை தாக்கவும் அழிக்கவும் முற்பட்டது மற்றொரு சார்பு. மாற்றங்களுக்கு எதிரான போராட்டங்கள் சரித்திரத்தின் போக்கையும் சமுதாயங்களின் முற்போக்கு வளர்ச்சியையும் நிர்ணயித்தன. அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் மாற்றங்களின் வேகத்தையும் திறன்களையும் தேவைகளையும் ஊக்குவித்தது மட்டுமின்றி அவற்றிற்குத் துணையாகவும் இருந்து வந்தன.

மாற்றங்களை எதிர்த்தவர்களுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் உள்ள சில காரணங்கள்:

  1. மாற்றத்தினால் தற்போது இருக்கின்ற பாதுக்காகாப்பான நிலைக்கு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்ற பய உணர்ச்சி.
  2. மாற்றங்கள் நம்மிடம் புதிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்துமே. அவைகளை நாம் எப்படி சமாளிப்பது என்ற தயக்க உணர்ச்சி.
  3. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் படச்சத்தில் புதிய கற்றலும் புதிய திறன்களும் நமக்குத் தேவைப் படுமே. அவைகளை நம்மால் கற்றுக்கொள்ளவோ சாதிக்கவோ முடியுமா என்ற இயலாமை உணர்ச்சி
  4. இருப்பது நன்றாகத்தானே இருக்கின்றது. இருந்துவிட்டுப் போகட்டுமே. மாற்றம் இப்பொழுது எதற்கு என்ற முயற்சியைத் தடுக்கும் துணிவின்மை.
  5. மாற்றங்கள் வரும்பொழுது அவைகளில் திறனுள்ளவர்களால் நாம் பின்தள்ளப்படுவோமே? அது ஏற்புடையதா ? அதை எப்படி சமாளிப்பது என்ற தாழ்வு மனப்பன்மை
  6. எனக்கு வயதாகி விட்டதே. இதற்கு மேல் இவைகளை எல்லாம் என்னால் எப்படிக் கற்க முடியும் ? எனவே மாற்றங்கள் எல்லாம் இளைய சமுதாயத்திற்குத் தான் நமக்குத் தேவையில்லை என்ற வளர்ச்சியை விட்டு விலகி நிற்கும் தட்டிக்கழிக்கும் மனப்பான்மை.

இன்னும் இது போல பல காரணங்கள் நமது மாற்றங்களைக் கண்டு அஞ்சி நிற்பதற்கும் அதில் பங்குதாரர்களாக இல்லாததற்கு காரணமாக இருந்துள்ளது; இருக்கின்றது.

மாற்றங்கள் – இயற்கையின் வரப்பிரசாதம்

மாற்றங்கள் – வாழ்க்கைக்குப் பொருள் கொடுக்கும் விளக்கங்கள்

மாற்றங்கள் – புதுமையின் சுயசரிதைக்கு முன்னுரை

மாற்றங்கள் – மற்ற உயிருள்ள உயிரில்லாத வாழ்வினங்களின் கருத்துக்களையும் தேவைகளையும் சாராமல் இயற்கை எழுதும் புதுக்கவிதை.

விரும்பியோ விரும்பாமலோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். மாற்றங்களைத் தவிர வேறு எதுவும் மாறுவதில்லை !

மாற்றங்கள் இயற்கையின் இயல்பென்றால் அவைகளை நாம் எப்படித் தடுக்க முடியும்? எனவே துணிவுடன் வாழ்வில் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும் அவைகளின் உதவியுடன் வாழ்வில் முன்னேற்றப்பாதையை வழிவகுத்துக்கொள்ளவும் அவைகளைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.

“நாம் எப்படி இருக்கவேண்டும் என்னவாக இருக்கவேண்டும் என்பதை நாம் இருக்கும் இடத்திலிருந்தே முடிவு செய்ய முடியாது. நம்முடைய மாற்றங்களே அவைகளுக்கு வழிவகுக்கும்” என்று பல தத்துவ மேதைகள் கூறியிருக்கின்றனர்.

மாற்றங்கள் நமக்குத் தயக்கத்தை உருவாக்கலாம். மாற்றங்கள் நமக்கு பய உணர்ச்சியை உருவாக்கலாம். மாற்றங்கள் நமக்கு எதிர்ப்புகளை உருவாக்கலாம். மாற்றங்கள் நம்முடைய தற்போதைய நிகழ்வுகளின் அழிவுக்கு அடிக்கல்லாக அமையலாம். ஆனால் மாற்றங்களை நாம் ஏற்கப் பழகிக் கொள்ளவேண்டும். மாற்றங்களையும் அவற்றின் தேவைகளையும் நாம் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.

மாற்றங்களை ஏற்க மறுக்கின்றவர்கள் இருக்கும் இடத்திலேயே நிலைத்துவிடுகின்றனர். மாற்றங்கள் உயிர்ப்பிற்கும் துடிப்பிற்கும் ஒரு சாட்சி. மாற்றங்களை மறுத்து ஒதுங்குபவர்கள் தங்கள் தேக்கத்திற்கும் வளர்ச்சியின் முடிவிற்கும் ஒப்புதலை அளித்து விடுகின்றனர்.

நான் படித்த ஒரு புத்தகத்தின் கதை நினைவுக்கு வருகின்றது. (The iceberg is melting  by John Kotter). இது அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகளில் நடக்கும் ஒரு நிகழ்வு. அந்தப் பனிப்பாறையில் பென்குவின் பறவையினத்தைச் சார்ந்த பல பறவைக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. ஒவ்வொரு பறவையும் ஏதாவது ஒரு வேலையைச் செய்து கொண்டு வருகின்றது. ஆனால் ஒரே ஒரு பறவை மட்டும் அந்தப் பனிப்பாறையின் முகப்பில் அமர்ந்து அடுத்த பனிப்பாறையில் என்ன நடக்கின்றது என்பதை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கின்றது. அது இரண்டு முக்கியமான நிகழ்வுகளைப் பார்க்கின்றது.

ஒன்று;  எதிரே உள்ள பனிப்பாறையின் உயரம் குறைந்துகொண்டே வருகின்றது.

இரண்டு: பனிப்பாறையிலிருந்து உருகும் நீரின் வேகத்தின் சத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்குகின்றது.

இந்தப் பார்வை அதனுடைய சிந்தனையைத் தூண்ட அதற்குப் புரிகின்றது – ” எதிரே உள்ள அந்த பனிப்பாறை உருகுகின்றது. அதனால் தான் நீரின் வேகமும் அதிகமாகின்றது. அந்தப் பனிப்பாறையின் உயரமும் குறைகின்றது.

இந்தக் கருத்து மீண்டும் அதனுடைய சிந்தனையைத் தூண்ட எழுகின்ற சில கேள்விகள் :

  1. அந்த பனிப்பாறை உருகினால் அதில் உள்ள பறவைகளின் கதி என்ன? அவைகள் தங்களைக் காத்துக்கொள்ள வேறு ஏதாவது பனிப்பார்வைக்கு மாறிச் செல்ல வேண்டுமா ?
  2. அவை வேறொரு பனிப்பாறைக்கு மாறினாலும் அந்தப் பனிப்பாறை உருகாது என்பது என்ன நிச்சயம்? அவ்வாறென்றால் அதுவும் உருகினால் அவைகள் அங்கிருந்து இன்னொரு பனிப்பாறைக்கு மாறவேண்டிய நிலை ஏற்படுமா ?
  3. அந்த பனிப்பாறை உருகும்பொழுது நான் இருக்கின்ற பனிப்பாறை உருகாமல் இருக்குமா? நானும் எனது குடும்பமும் இன்னொரு பனிப்பாறைக்குச் செல்ல தயார் நிலையில் இருக்க வேண்டுமா ?
  4. இவ்வாறு பனிப்பாறைகள் உருகிக்கொண்டிருந்தால் நாம் மாற்றங்களை சந்தித்துக் கொண்டே இருக்கவேண்டுமே! மாற்றங்களே வாழ்க்கையின் உண்மை நிலையென்றால் மாற்றங்களுக்கு நாம் எவ்வாறு நம்மைத் தயார் செய்துகொள்வது?

இந்தக் கதை விடுக்கும் செய்தி: பனிப்பாறைகள் உருகிக்கொண்டுதான் இருக்கும். நாம் மாற்றங்களுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

நமது அறிவு, திறன்கள், வாழ்வு முறைகள், அறிவியல் கருத்துக்கள், தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் பனிப்பாறைகளே ! அவைகள் உருகிக் கொண்ட இருக்கும். நாம் மாற்றங்களுக்கு நம்மைத் தயார் செய்து கொண்டே இருத்தல் அவசியம்.

மாற்றங்கள் புதுமைகளாக இருக்கலாம்; புதிர்களாக இருக்கலாம் ! ஆனால் மாற்றங்கள் இயற்கை அயராது நமது வாழ்விற்கும் சிந்தனைக்கும் கொடுத்துக்கொண்டிருக்கும் சவால்கள் .. அவைகளை நாம் ஏற்றுக்கொள்ளலாமே !

மாற்றங்களுக்கு ஏற்றபடி வாழ்ந்து பார்க்கலாமே !

தொடரும்..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *