-கி. ரேவதி

தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தவை கிராமியக் கலைகள். கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையில் இருக்கும் இன்ப துன்பங்களில் முதன்மையானவையாக இருப்பது கிராமியக் கலைகள். இதனை நாட்டுப்புறக்கலைகள் என்றும் அழைக்கின்றோம். வழிபாட்டுச் சடங்குகளின் ஒரு பகுதியாகவோ, பொழுதுபோக்கிற்காகவோ மக்களால் உருவாக்கப்படும் அல்லது நிகழ்த்தப்படும் மரபுவழிக் கலைகள் நாட்டுப்புறக் கலைகள் எனலாம்.

நாட்டுப்புற கலைகள்

பழந்தமிழகத்தில் கிராமங்களே மிகுதியாக இருந்தன. கிராம மக்களின் உயிரோடும் உணர்வோடும் ஓங்கி வளர்ந்தவை கிராமியக் கலைகளாகும். நாட்டுப்புறக்கலை என்பது வளர்ந்து கொண்டேயிருப்பது. மனித உள்ளத்தில் சிந்தனை வளம் இருக்கும் வரை கலைகள் இருந்துக்கொண்டேயிருக்கும். நாட்டுப்புறக்கலைகள் தொடந்து வளர்ந்து கொண்டே போவதற்கு அடிப்படைக்காரணம் அக்கலைகளுடன் பழகும் மனிதனது உணர்ச்சியே ஆகும்.

கூத்துக்கலை

தமிழர் போற்றி வளர்த்த கலைகளில் கூத்தும் ஒன்றாகும். இசைக் கலையோடு இணைந்து வளர்ந்த கலை இதுவாகும். விழாக்களின்போது மக்களைத் தம் ஆடல்பாடல்களால் மகிழ்வித்தனர். பண்டையக் காலத்தில் கூத்து நடத்தியவர்கள், கூத்தர், பொருநர், விறலியர், கோடியர் எனப்பெயர் பெற்றனர்.

வள்ளிக்கூத்து

பண்டைய மக்கள் ஆடிய ஆடல்களில் வள்ளிக்கூத்து என்பதும் ஒன்று. நாட்டுக்கு வளமும், வெற்றியும் பெற்றுத்தந்த வள்ளிக்கொடியின் பெருமையைப்பாடி ஆடுவது ஆகும்.

“வாடா வள்ளியின் வளம்பல தருஉம்
  நாடுபல கழிந்த பின்றை”     (பெரும்.பாண்.370- 371)

என்ற பாடல்வரிகள் இக்கூத்துப் பற்றி விளக்குகின்றன. இக்கூத்தினை ஆடவரும், பெண்டிரும் ஆடுவர்.

குரவைக்கூத்து

பண்டைய கலைகளின் நினைவுச் சின்னங்களில் ஒன்றாகக் குரவைக்கூத்து விளங்குகின்றது. சிறுபறையைக் கொண்டு மகிழ்வோடு ஆடியது இக்கூத்தாகும்.

”பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப    (மதுரைக்காஞ்சி 96-97) என்னும் அடியின் மூலம் குரவை ஆடினர் என்ற செய்தியை அறிய முடிகின்றது.

துணங்கை ஆட்டம்

துணங்கை என்பது மற்றொரு வகைக் கூத்தாகும். பண்டைய மக்கள் விழாக்களின் போது துணங்கை ஆடினர். இதனை,

”விழவு நின்ற வியன் மறுகில்
துணங்கை
         (மதுரைக்காஞ்சி 327 – 329) என்ற பாடல் அடிகள் உறுதிப்படுத்துகின்றன. துணங்கைக் கூத்தில் ஆண்கள், பெண்கள் எனக் குடிமக்களும் அரசரும் கலந்து கொண்டனர்.

துடிக்கூத்து

வெட்சித்திணையில் இடம்பெறும் கூத்துகளில் துடிநிலையும் ஒன்றாகும்.

”மறங்கடை கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை
நிலையும் அகத்திணைப்புறனே  (தொல்.பொருள்.புறத்.நு.4)

தங்களின் விருப்ப தெய்வமாகிய குலதெய்வத்தை வணங்கித் தாங்கள் நிகழ்த்தவிருக்கும் போரினை வெற்றிமுகமாகச் செய்யுமாறு வேண்டுதல்  நிகழ்த்துவர். போர் மறவர்கள் துடி என்னும் இரு முகப்பறையை முழக்கிக் கொற்றவையை வணங்குதலே துடிநிலை எனப்படும்.

போர்க்காலங்களில் போருக்கு முன் வெற்றி பெறவேண்டும் என்று கொற்றவையை வணங்கித் துடியை இயக்கிக்கொண்டு ஆடியதால் இக்கூத்து எனப்பெயர் பெற்றது. மிகுந்த வெறியுடன் ஆடப்பட்டதாக இருந்திருக்க வேண்டும். துடிக்கூத்து போர் மறவர்களால் மட்டுமின்றி முருகனாலும் ஆடப்பட்டுள்ளதாகப் பத்துப்பாட்டு பதிவு செய்துள்ளது.

முருகன் திருச்சீரலைவாய்க் கடலில் சூரபதுமனை அழித்ததான். அவனது ஆறு முகங்களில் ஐந்தாவது முகம் இச்செயலைச் செய்துள்ளது என்பதைச்,

”செறுநர்த் தேயத்துச் செல்லும் முருக்கி
கறுவுகொள்
நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒருமுகம்”  (திரு.99-100)

என்னும் திருமுருகாற்றுப்படை அடிகள் கூறுகின்றன. கடலில் மரமாக நின்ற சூரபதுமனை அழிக்க அன்னை பார்வதியிடம் வேல் வாங்கிச் சென்றவன். கெட்டவனை அழிக்கக் கொற்றவையிடம் வேலை வாங்கிச் சென்றான். போரில் எதிர்க்கும் எதிரிகளை வேலால் குத்தி வீசித் துடியடித்து அவன் அன்னை கொற்றவையைப் பரவினான். திருப்பரங்குன்றத்து இயல்புகளைப் பேசும் பரிபாடலில்,

”துடியின் அடி பெயர்த்து தோளசைத்து தூக்கி
அடுநறா மகிழ்தடப ஆடுவான் தகைமையின்” (பரி.21)

என்னும் அடிகள் முருகன் ஆடிய துடிக் கூத்தையே குறிப்பதாகப் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் நாடகம் என்னும் நூலில் காணலாம்.

துடியின் ஓசை

துடியின் ஓசை மிகக் கடுமையுடையதாக இருக்கும் என்பதைப் பல சங்கப் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.

உருள்துடி மகுளியின் பொருள்தெரிந்து இசைக்கும்
கடுங்குரற்
குடிஞையநெடும் பெருங்குன்றம்” (அகம்.19)

என்றும்,
இழிபிறப் பாளன் கருங்கை வன்கண் கடுந்துடி
புலிதுஞ்சு
நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்” (புறம்.170)

என்றும்,
கடுந்தடித் தூங்கும் கணைக் காற் பந்தர்”              (பெரு.124)
என்றும்,
கோள் தெங்கின் குலை வாழை
கொழுங்காந்தள்
மலர் நாகத்து
துடிக்
குடிஞைக் குடிப் பாக்கத்து”                    (பொரு.208)

என்றும் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன.

துடியன்

துடியை இயக்குபவர் துடியன் என்று அழைக்கப்பட்டுள்ளனர்.

உவலைக் கண்ணித் துடியன் வந்தென” (புறம்.269-6)
துடியன் கையறு வேலே அடிபுணர்” (புறம்.285-2)

துடியர்கள் போர்க்காலங்களில் மட்டும் துடியை இசைக்கும் கலைஞர்களாகப் பதிவு பெற்றுள்ளனர்.

துடியன் எனப்படுபவன் பலப்பல மலர்களால் ஆன மாலைகளைச் சூடிக்கொண்டு போரைத் தொடங்குவதற்கான துடியை முழங்குவான். துடியின் கடுமையான ஒலியால் எதிரிகள் மிரண்டு செல்வர். அவ்வாறு மிரண்டு ஓடும்போது கடுமையான ஒலியை எழுப்பி வீரர்கள் துடியை இசைத்துள்ளனர். இதனை,

அருமுனை அலைந்த பெரும்புகல் வலத்தார்
கனைகுரற்
கடுந்துடிப் பாணி தூங்கி” (அகம்.159-8-9)

என்றும்,

வில்லோர் குறும்பில் ததும்பும்
வல்வாய்க்
கடுந்துடிப் பாணியும் கேட்டே” ( அகம்.261 14-15)

என்றும் அகப்பாடல்கள் பதிவு செய்துள்ளன.

தொகுப்புரை

நாட்டுப்புற ஆடல்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மாற்றங்கள் மரபு சார்ந்த கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

அடிக்குறிப்பு:

1.வையாபுரிப்பிள்ளை, சங்க இலக்கியம், பாரிநிலையம், சென்னை,2004.

2.நாகராசன். வி, குறுந்தொகை, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

3.நாகராசன். வி, புறநானூறு, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக்கழகம், சென்னை, 2002.

4.நாகராசன். வி, அகநானூறு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

5.நாகராசன். வி, பத்துப்பாட்டு, நியூசெஞ்சுரி புத்தக நிலையம், சென்னை, 2004.

*****

கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
தெய்வானை  அம்மாள்  மகளிர்க்  கல்லூரி, (தன்னாட்சி), விழுப்புரம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *