-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. வனிலா பாலாஜி எடுத்திருக்கும் இந்தத் தலையாட்டி பொம்மையை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து, இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருக்கிறார் திருமதி. இராமலக்ஷ்மி. மங்கையர் இருவர்க்கும் என் மனங்கனிந்த நன்றி!

மனத்தில் நாணம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் இயங்குதல், மரப்பாவையைக் கயிற்றால்கட்டி இயக்கி உயிருள்ளதைப் போல் மயங்கவைத்தலுக்கு ஒப்பானது என்று நாணில்லாதோரைப் பழித்துரைப்பார் செந்நாப்போதார்.

நாண்அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி யற்று. 
(1020)

பிறரால் அசைத்துத் தலையாட்ட வைக்கப்படும் தலையாட்டி பொம்மையின் நிலையும் அஃதே.

தலையாட்டும் பொம்மைகண்டு கலைவல்ல நம் கவிஞர் உள்ளத்துள் ஊறும் கற்பனையைக் கண்டுவருவோம்!

*****

தலைமைப் பதவியில் இருப்போர் தலையாட்டி பொம்மைகளாய் இருப்பதால் தமிழ்நாடு அடைந்துவரும் கேட்டைத் தன் பாட்டில் தொகுத்துரைக்கிறார் திரு. ஆ. செந்தில் குமார்.

ஞ்சாவூரு பொம்மையிது… தலையாட்டும் பொம்மையிது…

தஞ்சாவூரு பொம்மையிது…
தலையாட்டும் பொம்மையிது…
தொட்டுவிட்டால் போதுமே…
தைதையென ஆடுமே…!

தலைமைப்பதவி வகித்திட…
தகுதியிது போதுமா…?
ஆட்டுமந்தைக் கூட்டமாய்…
ஆகிடுதல் நியாயமா…? (தஞ்சாவூரு…)

தனதுபதவி நிலைத்திருக்க…
தாழ்பணிதல் ஆகுமா…?
தலைநிமிர்ந்துப் போராடும்…
துணிவிருக்க வேண்டாமா…? (தஞ்சாவூரு…)

காசுவாங்கி ஓட்டுப்போடும்…
கயமைத்தனம் ஒழியணும்…!
டாசுமாக்கு கடையெல்லாம்…
தமிழ்நாட்டைவிட்டு ஓடணும்…! (தஞ்சாவூரு…)

நீட்டுத்தேர்வு என்பதெல்லாம்…
நாட்டிற்குத் தேவையா…?
நியாயமானப் போராட்டத்தை
நசுக்கிடுதல் நல்லதா…? (தஞ்சாவூரு…)

நாதியற்ற மக்களுக்கு…
நல்லவழி பிறக்குமா…?
நேர்மையற்ற ஆட்சி நாட்டில்…
நிலைத்திடுதல் ஆகுமா…? (தஞ்சாவூரு…)

*****

மத்திய அரசுக்குக் காவடி தூக்குவதையும் அவர்தம் சேவடி தொழுவதையுமே முழுநேர வேலையாய்ச் செய்துவரும் தமிழ்மாநிலக் கரைவேட்டிகள் மக்களின் துயர்துடைப்பதில் அக்கறை காட்டவில்லையே என்று அங்கலாய்க்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

தலையாட்டும் நடன பொம்மை

நாடகமே உலகம், ஆடுவதோ ஓர் நாட்டியமாடும் பொம்மை
ஒருகை மேலே, ஒரு கை கீழே நின்று ஆடும் நடன பொம்மை
இன்றைய ஆட்சியும் மேலிடத்திற்கு கீழ்ப்படிந்து நடக்குதே
தன்னாட்சி கவிழாமல் இருக்க மேலிடத்திற்குப் பணிந்து நடக்குதே!
இன்றைய அரசியல்வாதிகளே தலையாட்டும் பொம்மைகள்
ஆட்சி கவிழாமலிருக்க மேலிடத்து உறவை நாடும் மனித பொம்மைகள்
கொடுமைகள் புரிந்துவிட்டு பூசி,மழுப்பி நிற்கும் கொடுங்கோலர்கள்
ஜனங்களை ஆட்டுமந்தையென நினைத்துச் செய்யும் கொடுமைகள்!
தன் பதவி நிலைக்க தன்மானத்தை அடகு வைக்கும் கூட்டம்
மக்கள் நலனை துன்பத்தையும் கண்டும் காணாத ஆட்சிக் கூட்டம்
பணத்தை சுரண்டி அதனை மறைக்க, எடுபிடி செய்யும் கூட்டம்
மக்கள் குறைகளை தீர்ப்பதுபோல், பொய்ப் பிரசாரக் கூட்டம்
பணத்திற்காக வோட்டு போட்டு மண்டியிடும் ஒரு கூட்டம்
அக்ஷய பாத்திரத்தைக் கொடுத்துப் பிச்சைஎடுக்கும் கூட்டம்
புதிய மதுபானக் கடைகளை எதிர்த்துப் போராடும் கூட்டம்
நடுத்தெருவில் கூடி நடத்தும் போராட்ட கூட்டம்
ஆளுநரும், மந்திரிகளும் கைப்பொம்மையாய் செயல்படுதே
இப்பொழுதும் மக்களின் குறைகளைத் தீர்க்கத் தயக்கம் காட்டுதே
மக்கள் எதிர்த்தாலும், அடக்கு முறையைத் தயக்கமுமின்றி செய்யுதே
ஜனநாயக நாடா, எதேச்சதிகாரம் கொண்ட அரசாக விளங்குதே
மக்களே! பணத்திற்காகத் தன்மானத்தை அடகு வைக்காதீர்
தண்ணீருக்காகவும், மணல்கொள்ளைக்கும் எதிர்த்து போராடுவீர்
தமிழனின் தனித் தன்மையை உணர்ந்து உயிருள்ளவரை போராடுவோம்
மக்களின் துயர் துடைக்காத அரசை பதவியில் இருந்து இறங்குவோம் !

*****

”தன்னலம் செழிக்கத் தலையாட்டும் பொம்மைகளாய் மனிதர்கள் மாறிப்போனதால் நாட்டைச் சூழ்ந்தது கேடு” என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

ஆட்டம்…

ஆடும் பொம்மை ஆட்டமென
ஆடியே அகில வாழ்வினிலே
நாடும் நன்மைகள் நமக்கெனவே
நாளும் தலையை ஆட்டிடுவர்,
கேடு சூழ்ந்து வருவதையே
கருத்தில் யாரும் கொள்வதில்லை,
தேடு வாழ்வில் நல்லதையே
தெரிந்து நடந்தால் இடரிலையே…!

*****

”களிமண் தந்த கொடையால் உருவாகித் தனியே கொலுவிருந்து, கண்களுக்கு விருந்துபடைக்கும் தலையாட்டி பொம்மையின் சிங்காரச் சிற்றுடையும் ஓர் அழகுதான்!” என்று வியக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

கலைக்கு அழகு

வாடாது முகம்மலர வந்தவரை
……….வரவேற்பதில் ஒரு மகிழ்ச்சியாம்..!
ஆடாது நிற்குமொரு காட்சியிலே
……….அருமை நடனமாடும் மங்கையாம்..!
மூடாது கண்ணிமை விழித்திருக்கும்
……….முந்தானை இல்லாத பொம்மைதான்..!
கூடாது மற்றொன்றுடன் தனிநின்று
……….கொலுவிலே வீற்றிருக்கும் நாயகி..!

வீட்டுக்குள் உள்ள அலமாரியில்
……….வியக்கு மாறுநீயும் அலங்கரிப்பாய்..!
பூட்டுப் போடவும் அவசியமில்லை
……….பொம்மைதானே எங்கே ஓடுவாய்..!
ஆட்டுவிப்போர் இல்லாமலே நீ
……….ஆட்டம் போடுவது கடினம்தான்..!
கூட்டுக் கொள்ளை அடிப்போரை
……….கண்டு விட்டால் கூத்தாடுவாயா..?

தலையாட்டும் செய்கையைத் தானே
……….தன்னிச்சையாய்ச் செய்ய முடியாது..!
விலை கொடுத்து வாங்கியபின்னே
……….விளையாடத் தட்டுவார் தலையை..!
சிலைபோல நின்றாலும் உனக்குச்
……….சிங்காரச் சிற்றுடையும் அழகுதான்..!
கலைப் பொருளாக உன்னையாக்க
……….களிமண்ணும் கொடுக்கும் கொடை..!

*****

பாவையே! அசையாது அசையும் அதிசயம் நீ! ஓசையொழிந்த உன் ஆடல் தெருக்கூத்தாவது திருக்கூத்தே! பயனில பேசாது நீ இதழ்மூடியிருப்பதும் சிறப்பே! என்று பொம்மையின் மெய்ப்பாடுகளைப் பாடுபொருளாக்கி நம்மை இரசிக்கவைக்கிறார் திருமிகு. அவ்வைமகள்.

அசையாதசையும் நினதிசயம் என்னென்பேன் என்னென்பேன் பாவாய்
ஆசைபடுமனம் தேடும் புனைவேடம் ஒழியெனக் காட்டுகிறாய் எம்பாவாய்
இசைவதுவசையாதென்றோ ஏதொன்றும் பேசாயடி எந்தன் பாவாய்
ஈசைவாழ்த்து ஈசை வாழ்த்துவெனவோ நின்வலக்கரம் வாழ்த்துது எம்பாவாய்
உசைத்தாலும் விசைத்தாலும் நிலைநடுங்காது நில் என்பாய் எம்பாவாய்
ஊசைமேனிமினுக்குள் மின்னமாய் ஞானம் சேரெனப் பார்க்குமென் பாவாய்
ஒசித்தயோசனை பின்னி நிமிர்நெஞ்சுகொள்ளெனப் பணித்தனை எம்பாவாய்
ஓசையொழிந்த உன்னாடல் தெருக்கூத்தாவது திருக்கூத்தே எம்பாவாய்
ஒளவியம் கூடாதென பயனில பழுதென இதழ்பூட்டி இறுக்குமென் பாவாய்
அஃ றிணைக்குயர்திணை சார்பெனவோ அபிநயநடை எடுத்தனை எம்பாவாய்?

*****

பொம்மைக்குச் செம்மையான கவிதைகளை அணிகளாய்ப் பூட்டிய பாவலர்க்கு என் பாராட்டு!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

பொம்மை சொன்ன உண்மை

நான் நடனம் ஆடுகின்ற பொம்மை!
காற்றிலாடும் பொம்மை!
சொல்வதெல்லாம் உண்மை!
இதைச் செவிமடுத்தால் விளையும் என்றும் நன்மை!
பயனில்லா நிகழ்வுதானே மனிதனின் ஆட்டம்!
நூல் இருக்கும் வரையில் தானே பட்டத்தின் ஆட்டம்!
இலக்கில்லாப் பயணம்தானே மனிதா உன் ஆட்டம்!
உயிர்இருக்கும் வரைதானே மனிதா உன் ஆட்டம்!
ஆணவத்தில் நீ ஆடுகின்ற ஆட்டம்!
உன் வாழ்வை அழித்துவிடும் ஆட்டம்!
மதுஅருந்தி நீ ஆடுகின்ற ஆட்டம்!
உன் குடும்பத்தை அழித்துவிடும் ஆட்டம்!
ஆடம்பரத்தில் நீ ஆடுகின்ற ஆட்டம்!
உன் அடுத்த தலைமுறையை அழித்துவிடும் ஆட்டம்!
கடலின் ஆட்டம் ஆழிப்பேரலையாகும்!
காற்றின் ஆட்டம் புயலாகும்!
பூமியின் ஆட்டம் பூகம்பமாகும்!
ஆற்றின் ஆட்டம் வெள்ளமாகும்!
அளவிற்கு மீறிய ஆட்டமென்றும் அழிவாகும்!
அடங்கி நடந்தால் உன் வாழ்க்கை இனிதாகும்!

”கடலின் ஆட்டம் ஆழிப்பேரலையாய், காற்றின் ஆட்டம் புயலாய், புவியின் ஆட்டம் பூகம்பமாய் உருமாறி உலகை அழிப்பதுபோல் மனக்கட்டுப்பாடின்றி மனிதன் ஆ(போ)டும் ஆட்டம் அவன் நல்வாழ்வைக் குலைத்துவிடும்!” என்று அமைதியாய் நிற்கும் பொம்மையின் மூலம் அரிய கருத்தை அவனிக்குச் சொல்லியிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 164-இன் முடிவுகள்

  1. நான் எழுதிய “பொம்மை சொன்ன உண்மை” என்ற இந்த கவிதையை இவ்வாரத்திற்கான சிறந்த கவிதையாய் தேர்ந்தெடுத்த திருமிகு. திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும், வல்லமை ஆசிரியர் குழுவிற்கும், என் சக கவிஞர்கள், மற்றும் கவிதாயினி நண்பர்களுக்கும் மனமகிழ் நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *