-ரா. பிரசன்னாதேவி

முன்னுரை

பண்டைய தமிழக வரலாறு, பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், நாகரிகம், வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை அறிய தொல்வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ளத் தேவையான ஆதாரங்களில் பாறை ஓவியங்கள் முக்கியமானவை. ஓவியம், சிற்பம், இலக்கியம் முதலியவற்றின் செய்திகளும், பயன்பாடுகளும் அறிய பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவை வாழ்வியல் நெறிகளை வழிநடத்திச் செல்லும் சட்டங்களாகவும், சான்றுகளாகவும் உள்ளன. (தமிழ்ப்பொழில் கல்வெட்டுகளில் இலக்கியச் சான்றுகள்.ப.321) கலைகளைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து இன்றுவரை உலகின் எல்லாப் பகுதிகளிலும் பாறை ஒதுக்குகள் மற்றும் கற்குகைகள் ஆகியவற்றில் கற்செதுக்குகளாகவோ வண்ண எழுத்தோவியங்களாகவோ காணப்படுகின்றன. இந்த ஓவியங்கள் அந்தந்தக் காலகட்டங்களில் வாழ்ந்த மனிதர்களின் சமூகப் பொருளாதார மற்றும் கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் பதிவுகளாய் உள்ளன. பழைய கற்காலம், புதிய கற்காலம் அல்லது இரும்புக்காலம், வரலாற்றுக்காலம் என எல்லாக் காலகட்டங்களிலும் நடந்த பலநிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளவை இவை. இவைகளின் ஊடே பழங்குடியினாரின் பாறை ஓவியங்கள் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாறை ஓவியங்களின் நோக்கங்கள்

பொதுவாக இந்தப் பாறை ஓவியங்களை அவற்றின் நோக்கங்களின் அடிப்படையில் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். தகவல் பரிமாற்றம், அலங்காரம் என அவற்றைப் பெயரிட்டு அழைக்கலாம். பொதுவாக ஓவியம் ஒருவனது மனக்கிடக்கையில் இருக்கும் காட்சிகள், அவற்றுடன் இணைந்த உறவுகள் ஆகியன நிலைத்த வடிவமின்றி இலகுவாய் மாற்றியமைக்கும் கட்டமைப்புக்கு உரியனவாய், உகந்த காலம் மற்றும் இடத்திற்கேற்ப வெளிப்படுத்த விழையும் உந்துதலில், கோடுகளாய் உருவெடுத்து, அலங்காரமாய்ப் பரிணமித்து, கனபரிமாணமாய் நீண்டு, வண்ணங்களால் நிறைவுபெற்றுத் தகவல்களைப் பரிமாறும் கால ஓட்டத்தில் உருமாறிப் புதிய பரிணாமங்களோடு தொடர்ந்து பயணிக்கிறது.

தமிழகப் பாறை ஓவியங்கள்

தமிழகத்தில் இதுவரை சுமார் 75 இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் பாறை ஒதுக்குகளிலும் பெருங்கற்கால ஈமச் சின்னங்களிலும், சில இடங்களில் குகைகளிலும், வரையப்பட்டுள்ளன. தமிழகத்தில் பாறை ஓவியங்கள் தருமபுரி, கிருட்டிணகிரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை, தேனி போன்ற மாவட்டங்களில் பரவலாகக் காணப்படினும், இதுவரை வடக்கு மற்றும் வடமேற்குத் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் இவ்வோவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. (இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் ப.131) இவை பெரும்பாலும் இடைக்கற்கால, புதிய கற்கால, பெருங்கற்கால, இரும்புக்கால மற்றும் வரலாற்றுக்கால ஓவியங்கள் எனக் கருதப்படுகின்றன. மேலும் பல இடங்களில் தொல்லியல் சின்னங்களுக்கு அருகிலேயே பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. இதுவரை தமிழகத்தில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில் பெரும்பான்மையானவை இருளர் (நீலகிரி, தருமபுரி மற்றும் வடதமிழகப் பகுதிகளில் வாழ்பவர்கள்), குறும்பர், தோடர், கோத்தர், (நீலகிரி), இரவாளர், மலசர், பளியர், புலையர், முதுவர், மூப்பார் (கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்) போன்ற பழங்குடி மக்கள் வாழும் குறிஞ்சி நிலப்பகுதிகளில் தான் காணப்படுகின்றன. இருப்பினும் கால்நடை மற்றும் சிறு வேளாண்மை செய்யும் சமூகங்கள் வாழும் முல்லை நிலப்பகுதிகளிலும் இது போன்ற பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஓவியங்களின் வண்ணங்கள்

சிறுமலை, மயிலாடும் பாறை, உல்கோம்பை போன்ற இடங்களில் இடைக்கற்கால ஓவியங்கள் உள்ளன. தமிழகத்தில் புதிய கற்காலக் கருவிகளும் வாழ்விடங்களும் மயிலாடும் பாறை, மூனாண்டிப்பட்டி, கீழ்வாலை, பெருமுக்கல், மல்லப்பாடி, மையம்பள்ளி போன்ற இடங்களில் ஓவியங்களோடு காணப்படுகின்றன. அதுபோலவே சில தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் உள்ள குகைத் தலத்தின் விதானத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இவை அங்குள்ள எழுத்துக்களைவிடக் காலத்தால் முந்தியவையாகும். தமிழகத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் பெரும்பாலும் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களால் வரையப்பட்டுள்ளன. இருப்பினும் கறுப்பு மற்றும் மஞ்சள் வண்ண ஓவியங்கள் சில இடங்களில் கிடைக்கின்றன. சிவப்பு மற்றும் வெள்ளை ஓவியங்கள் சில இடங்களில் சேர்ந்தும், சில இடங்களில் தனியாகவும் உள்ளன.

பாறை ஓவியங்களின் தன்மைகள்

இப்பாறைகளில் பெரும்பாலும் ஓவியன் தான்கண்ட உருவங்களை எளிய முறையிலேயே வரைந்துள்ளான். இருப்பினும் வெள்ளாரிக்கோம்பை, ஆலம்பாடி போன்ற இடங்களில் உருவங்கள் நாம் எளிதில் புரிந்து கொள்ளமுடியாத நிலையில் வரையப்பட்டள்ளன. இவை அவ்வோவியனது உளக்கிடக்கையில் அமைந்த அச்சம், நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துபவைகளாகக் காணப்படுகின்றன. ஆனால் குறியீடுகளும் அலங்காரக் கூறுகளும் தமிழகப் பாறை ஓவியங்களில் அதிக எண்ணிக்கையில் காணக் கிடைக்கவில்லை. குறியீடுகள் பெரும்பாலும் தகவல் பரிமாற்றம் செய்யவும் அலங்கார ஓவியங்கள் சடங்குகளின்போது ஒப்பனைக்காகவும் வரையப்பட்டள்ளன. பாறை ஓவியங்கள் யாவும் அழகியல் நோக்கில் சிறப்பானவை அல்ல. இருப்பினும் அவற்றின் நோக்கம், காலம், கருத்து வெளிப்பாடு போன்ற தன்மைகளில் அவை சிறப்பிடம் வகிக்கின்றன.

பாறை ஓவியங்களின் சிறப்பு

இந்தப் பாறை ஓவியங்கள் கடும் மழைக்காலங்களில் ஒதுங்கிய பாறையின் விதானங்கள், சுவர்கள், நீர்நிலைகளுக்கு அருகில்உள்ள பாறை ஒதுக்குகள், உயரமான தேன்பாறையின் சுவர்கள், வழிபாடு மற்றும் வழித்தடங்களுக்கு அருகில் உள்ள பாறைமுகடுகள் எனப் பிறர்வந்து போகும் பொதுஇடங்கள் ஆகியவற்றில்தான் அதிகம் வரையப்பட்டுள்ளன. சில சமயங்களில் ஓவியன் மிக உயரமான பாறைகளில் ஏறிக் கடும் சிரத்தையை மேற்கொண்டு, தன் சாகசத்தை வெளிப்படுத்தும் விதமாக ஓவியங்களை வரைந்துள்ளான். இந்த ஓவியங்கள் நேர்த்தியான தோற்றம் உடையவைகளாகவும் குறியீடுகளாகவும் அடையாளப்படுத்த முடியாத உருவங்களாகவும் அமைந்துள்ளன. இப்பாறை ஓவியங்கள் உள்ள இடங்களுக்குப் பிற்காலத்தில் வந்த இனக்குழுக்கள் தங்க நேர்ந்ததால் அவர்களது ஓவியங்களும் ஏற்கனவே வரைந்த ஓவியங்களுக்கு மேல் வரையப்பட்டுள்ளன. பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ள இடங்கள் சில இன்று வரை உள்ளுர் மக்களால் வழிபாட்டுத் தலங்களாகக் கருதப்படுகின்றன.

பழங்குடிகளும் பாறை ஓவியங்களும்

பாறை ஓவியங்கள் தொல்மாந்தரின் சமகால வாழ்வியல் சூழலை மட்டும் அல்லாமல் நம்பிக்கை மற்றும் தத்துவார்த்த வாழ்வியலை குறியீடுகளாகவும் நேர்த்தியான உருவங்களாகவும் அலங்காரங்களாகவும் பதிவு செய்துள்ளன. ஒலிகளற்ற இம்மொழி நெடிய காலங்கடந்தும் இன்றுவரை தகவல்களைப் பரிமாற்றிக் கொண்டிருக்கின்றன. எழுத்து உருவாவதற்கு முன்னரே தொல்மாந்தரின் கற்பனை மற்றும் கலை உருவாக்கங்கள் பாறை ஓவியங்களில் காணப்படுகின்றன. பாறை ஓவியங்கள் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா என உலகின் எல்லாப் பகுதிகளிலும், இதுவரை சுமார் 50 மில்லியன் ஓவியங்கள் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. உலகில் இதுவரை கண்டறியப்பட்ட ஓவியங்களில் மிகத் தொன்மையானவை ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ளன. இவை சுமார் 30,000 – 40,000 ஆண்டுகளுக்கு முந்தையன என்று கார்பன் 14 போன்ற அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள பிம்பெட்காவில் கிடைத்த தீக்கோழியின் முட்டையின்மீது வரையப்பட்ட ஓவியங்கள், சுமார் 25,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கண்டறிந்துள்ளனர். (இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் ப.130) தொடர்ந்து இந்தியாவில் காஷ்மீர் முதல் தமிழ்நாடுவரை எல்லா மாநிலங்களிலும் பாறை ஓவியங்கள் பரவலாகக் காணப்படினும் மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஒரிசா போன்ற மாநிலங்களில் அவை அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன.

உலகில் கிடைக்கப்பெற்ற பாறை ஓவியங்களில் 80% சதவீதம் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. சமூக மற்றும் பொருளாதார நோக்கில் இந்த ஓவியங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

  1. தொன்மையான வேட்டைச் சமூகம்
  2. வளர்ந்த வேட்டைச் சமூகம்
  3. கால்நடைச் சமூகம்
  4. கலப்புப் பொருளாதாரச் சமூகம் 

தொன்மையான வேட்டைச் சமூகம்

இந்த வேட்டைச் சமூகத்தில் வில், அம்பு குறித்த அறிவு இல்லை எனலாம். இவர்களது ஓவியங்களில் உருவங்களும் குறியீடுகளும் பெரும்பாலும் சேர்ந்தே காணப்படுகின்றன.

வளர்ந்த வேட்டைச் சமூகம்

இச்சமூகத்தில் வில், அம்பின் பயன்பாடு உள்ளது. ஓவியங்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளும் தன்மையில் உள்ளன.

கால்நடைச் சமூகம்

கால்நடைகளைப் பிரதானமாய்க் கொண்டுள்ள சமூகத்தின் ஓவியங்களில் பெரும்பாலானவை கால்நடைகளைப் பழக்கப்படுத்துதல் மற்றும் அதன் தொடர்பானவை.

கலப்புப் பொருளாதாரச் சமூகம்

வேளாண்மையைப் பிரதானமாகக் கொண்ட இச்சமூகத்தில் பலதரப்பட்ட பொருளாதாரச் சூழலில் இருந்து கலைப்படைப்புகள் உருவாகியுள்ளன. மேலும் இறைநம்பிக்கை, இதன் தொடர்பான கதைகள், குறியீடுகள், திட்டமிட்ட உருவத் தொகுப்புகள் ஆகியன இவர்களது ஓவியங்களில் அதிகம் காணப்படுகின்றன.

காரிக்கையூர் ஓவியங்கள்

தமிழகத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாறை ஓவியங்களில் மிகப்பெரியன, அதிக எண்ணிக்கையில உருவங்கள் அமைந்தன. நீலகிரி மாவட்ட கோத்தகிரி தாலுகாவில், இருளர் பழங்குடிகள் வாழும் காரிக்கையூர் ஓவியங்கள் ஆகும். காலனிய சுலிவன் என்பவனின் அசுர பாதம் பதிந்த முதல் நீலகிரி மலைக்கிராமம் இது. இங்குள்ள பொறிவரை என்னும் பாறை ஒதுக்கு பவானி ஆறு பாயும் நீண்ட பள்ளத்தாக்கின் உயரமான விளிம்பில் கிழக்கு முகத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 200 அடி நீளத்திற்கு, 20 அடி உயரத்தில், 500 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் சிவப்பு மற்றும் வெள்ளைவண்ணங்களில் வரையப்பட்டுள்ளன. இங்கு விலங்குகள், மனிதர்கள், விலங்குகளுடன் மனிதர்கள், குறியீடுகள், அடையாளங் காணமுடியாத உருவங்கள் எனப் பல வகை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. உருவங்கள் தனியாகவும் தொகுப்பாகவும் உள்ளன. மேலும் இங்குள்ள ஓவியங்கள் தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஓவியர்களால் வரையப்பட்டவை. சில இடங்களில் ஏற்கனவே வரையப்பட்டுள்ள ஓவியங்களின் மேல் வேறு ஓவியங்களைப் பின்னால் வந்த ஓவியர்கள் வரைந்துள்ளனர். இங்குள்ள ஓவியங்களில் வேட்டையாடுதல், அதன் தொடர்பான சடங்குகள், விலங்குகளைப் பழக்கப்படுத்துதல், நடனம், இசை மற்றும் பிற வன வாழ்வியற் சூழல் ஆகியன சிறப்பிடம் பெறுகின்றன. மனிதன் வேட்டையாடும் விலங்குகள், மனிதனை வேட்டையாடும் விலங்குகளின் இயல்பான வாழ்க்கையையும் அவற்றின் விளையாட்டுகளையும் அதிகம் கொண்டுள்ளன. இருப்பினும் பறவைகள், தாவரங்கள் மற்றும் ஊர்வன ஆகியன குறைந்த எண்ணிக்கையிலேயே காணப்படுகின்றன. மனிதர்களைவிட, விலங்குகளே பிரதானமாக வரையப்பட்டுள்ளன. எருமை, பன்றி, மான், சருகுமான், உடும்பு மற்றும் யானை வேட்டை பற்றிய காட்சிகள் இங்குக் காட்டப்பட்டுள்ளன. அதுபோலவே, வேட்டைக்குப் பயன்படும் நாய்களும் வரையப்பட்டுள்ளன.

மனித உறவுகளைப் பல்வேறு நிலைகளில், வெவ்வேறு காலச்சூழல்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஆயுதங்களும் அவற்றைப் பயன்படுத்தும் விதமும் காட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ஆரம்பகால ஓவியங்களில் மனிதர்கள் வேட்டையின்போது, கையில் தடிமனான மரத்தடிகளுடன் உள்ளனர். பின்னர் வில், அம்பு, வில் அம்போடு வாள், வாளோடு கேடயம் என வெவ்வேறு வடிவங்களில் ஆயுதங்கள் காட்டப்பட்டுள்ளன. இங்கு வரையப்பட்டுள்ள போர்க்காட்சிகள் மிகவும் கவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மலைகளில் நடைபெற்ற மற்றும் தரைப்பகுதிகளில் நடந்த போர்க்காட்சிகளை வேறுபடுத்திக் காட்டும் விதமாக உருவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நீலகிரியில் வாழும் கோத்தர்கள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்து இரும்பின் பயன்பாட்டை அறிந்து, அதைத் தங்கள் தேவைக்குத் தகுந்தாற்போல் உருவாக்கியும்; பயன்படுத்தியும் வந்துள்ளனர். ஆயுதங்களைப் பெருமளவில் உற்பத்தி செய்து, பிற பழங்குடியினரான இருளர், குறும்பர், தோடர் போன்றவர்களிடம் விற்றுப் பண்டமாற்று வணிகம் செய்து வந்துள்ளனர். அக்காலத்தில் இவர்கள் உருவாக்கிய இரும்பு ஆயுதங்கள் இன்று இங்குள்ள ஓவியங்களின் வழியாக மட்டுமே நமக்குக் காணக்கிடைக்கின்றன.

தோடர்கள் காலங்காலமாக எருமை மாடுகளையே தங்கள் வாழ்வாதாரமாகக் கருதி வாழ்ந்து வருகின்றனர். தொல்பழங்காலத்தில் பெரும்பாலான சமூகத்தவர் வேட்டையைப் பிரதானமாகக் கொண்டிருந்த போது, தோடர் போன்ற பழங்குடியினர் கால்நடைகளைப் பழக்கப்படுத்தி அவற்றின் பயன்பாடுகளை அறிந்து பராமரித்து வந்தனர். இக்காட்சிகள் யாவும் காரிக்கையூர் பாறை ஓவியங்களில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. இங்குள்ள ஓவியங்கள் செய்நேர்த்தியோடும் அழகியல் தன்மையோடும் சிறப்பாகக் காணப்படுபவை. கூட்டமாய் மாடுகள் நடந்து செல்வது, நுனி மரக்கிளையில் குரங்குகள் ஏறுவது, கூட்டங் கூட்டமாய் மான்கள் மேய்வது, நீண்ட உடும்புகள் ஊர்வது, மனிதர்கள் ஒருவருக்கொருவர் வரவேற்பது, பன்றி வேட்டை, நடனம், விலங்குகள் தங்கள் குட்டிகளுக்குப் பால்கொடுப்பது, வேட்டை நாய்களுடன் உறங்கும் மனிதன், குழந்தையைப் பலி கொடுத்தல், போர்க்காட்சிகள் போன்றவைகளாகும். 

எழுத்துப்பாறை ஓவியங்கள்

இயற்கையின் மாற்றங்களைப் புரிந்து வாழ்வியலைத் தன் வசப்படுத்திய மனிதன் சில சமயங்களில் இயற்கையின் சீற்றங்களையும் மாறுபாடுகளையும் பற்றிய புரிதலின்றிப் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றான். அச்சத்திலிருந்து மீளத் தெரியாது. ஒன்றின் மேல் நம்பிக்கை கொண்டு, சடங்குகளும் நம்பிக்கைகளும் இடத்திற்கு இடம், இனத்திற்கு இனம் மாறுபடும். அது போல, நீலகிரியில் வாழும் பழங்குடிகள் மத்தியில் குறும்பர் இன மக்களின் வாழ்வியலும் நம்பிக்கைகளும் பிற மலைவாழ் மக்களிலிருந்து மாறுபடுகிறது. இவர்கள் பெரும்பாலும் அடர்ந்த வனப்பகுதிகளில் பாறைச் சரிவுகளிலும், இயற்கையாய் அமைந்த குகைகளிலும் வாழ்ந்து வந்தனர். இவர்கள் இயற்கையையும் பிற எதிரிகளையும் எதிர்கொள்ளச் சடங்குகளின் மீது அபார நம்பிக்கை கொண்டு, மாந்திரிக வழிபாட்டை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, இன்றுவரை, தங்கள் வழிபாட்டுத் தலமான “எழுத்துப்பாறையில் ஆண்டுக்கு ஒருமுறை சென்று வழிபாடு செய்கின்றனர். இவ்வழிபாட்டின் போது வெள்ளை மற்றும் சிவப்பு வண்ணங்களில் நேர்த்தியான குறியீட்டு ஓவியங்களை வரைந்துள்ளனர். இங்குள்ள பழமையான ஓவியங்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இந்த ஓவியங்கள் இயற்கைச் சீற்றம் மற்றும் பிற இனக்குழுக்களின் தொல்லைகளில் இருந்து தங்களைக் காப்பாற்றும் என்பது இவர்களின் நம்பிக்கை. இவ்வகை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் வெள்ளாரிக்கோம்பை, குறும்பவரை மற்றும் சேலகொரை போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

ஜவ்வாது மலைப் பாறை ஓவியங்கள்

ஜவ்வாது மலை மலையாளியினர் திருமணச் சடங்கின்போது, மணமகன் வீட்டில், திருமணத்திற்கு முதல் நாள், வாசலுக்கு அருகில் ஒரு சோடிக் கால் பாதங்களை வரைகின்றனர். அதுபோல் திருமணம் முடிந்த பின்னர் மற்றுமொரு சோடிக் கால் பாதங்கள் அருகிலேயே வரையப்படும். அது போல் கார்த்திகை தீபம், பொங்கல் மற்றும் துர்க்கை அம்மன் திருவிழாக்களின் போது வீடுகளைச் சுண்ணாம்பு கொண்டு வெள்ளையடித்துக் கோலம் போட்டு, அலங்கரிக்கின்றனர். குறிப்பிட்ட செம்மண்ணிலிருந்து சிவப்பு வண்ணமும் அவரை இலையை அரைத்துப் பச்சை வண்ணமும் தயாரித்துக் கம்பந்தாள் கொண்டு ஓவியங்கள் வரையப்படுகின்றன. இங்கு ஓவியங்கள் வரையும் மரபு பெண்களிடம் மட்டுமே காணப்படுகின்றது. இந்த ஓவியங்கள் சமயத்திருவிழாக்களின் போது மட்டுமே வரையப்படுகின்றன. இருப்பினும் தங்களின் முன்னோர்களை வழிபடும் விதமாக அவர்களையும் இத்திருவிழாக்களின் போது குறியீடுகளாக வரைந்து வழிபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்துச் சுவர் ஓவியங்கள்

மதுரை மாவட்டத்தில் வாழும் பழங்குடியினரான பிறன்மலைக் கள்ளர் சமூகத்தில் கல்யாணத்தின்போது, மணமகன் வீட்டின் முகப்புச் சுவர்கள் கல்யாணத்திற்கு முதல் நாள் பெண்களால் அலங்கரிக்கப்படுகின்றன. இவை “பச்சைக் கோலம்” என்று அழைக்கப்படுகின்றன. (இந்தியப் பழங்குடிப் பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் ப.137) இந்த ஓவியங்கள் பச்சை இலை மற்றும் தழைகள்கொண்டு உருவாக்கப்படுகின்றன. இந்த ஓவியங்களில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்ட சுவர்களிலேயே வரையப்பட்டு வந்தன. தற்போது சிமெண்ட் மற்றும் கான்கிரிட் கலாசாரம் வந்தபின் இந்த ஓவியமரபு மறைந்துகொண்டு வருகின்றது. இருப்பினும் அளவுகள் குறைந்து குறியீடுகளாக இன்றுவரை வரையப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர் பாறை ஓவியங்கள்

தஞ்சையிலுள்ள பிரகதீசுவர் கோயிலில் பிரதட்சண வீதிச் சுவர்களிலும், கர்ப்பக்கிருகத்தைச் சுற்றியுள்ள இருண்ட பாதையிலும் இரண்டு அடுக்கு ஓவியங்கள் காணப்படுகின்றன. மேலாகத் தெரியும் ஓவியங்கள் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. அவை முக்கியமானவையல்ல. அவற்றினடியில் உள்ளவை 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இராசராசசோழன் காலத்தில் தீட்டப்பெற்றவை. மேலேயுள்ளவை சில விடங்களில் மட்டுமே உரிந்து வந்திருக்கின்றன. இதில் சிவன் பிராமணக் கிழவன் போல் சுந்தரருடைய திருமணத்தன்று வந்து அவரை அடிமையாக உரிமை கொண்டாடுதல் வரையப்பட்டுள்ளன. (கலைக் களஞ்சியம் தொகுதி-2 ப.738)

முடிவுரை

பொதுவாக மலைவாழ் பழங்குடி மக்கள் தங்களது பூர்வீகக் கலை மற்றும் கலாசாரங்களோடு இணைந்து வாழ்ந்தாலும் சமவெளியில் வாழும் பிற மக்களுடைய கலாசாரம் இவர்களது வாழ்வியலோடு இரண்டறக் கலந்துள்ளது. இவர்களுக்குள் பண்டமாற்று வணிகம் காலங்காலமாக இருந்து வருகின்றது. இடையர்கள் போன்ற கால்நடை வளர்ப்புச் சமூகங்கள் மலைவாழ் பழங்குடிகளுக்கும் சமவெளியில் வாழும் மக்களுக்கும் இடையே நட்புப் பாலமாய் உள்ளனர். இவர்கள் வழியாகச் சமவெளியில் வாழும் மக்களுடைய நம்பிக்கை, சடங்குகள், திருவிழாக்கள் மற்றும் பிற கலாசாரப் பரிமாற்றங்கள் தொடர்ந்து இன்றுவரை இருந்து வருகின்றன. அதே சமயம் பழங்குடி மக்களது பூர்வீகக் கலாசாரமானது ஊடகங்கள் மற்றும் பிற மக்களின் தொடர்பால் அழிந்து வருகின்றது. குறிப்பாக இவர்களது நடனம், இசை, பாடல்கள், செவிவழி மரபுகள் ஆகியன பெரும்பாலான இடங்களில் வேகமாக மறைந்து வருகின்றன. நவீன தொழினுட்பத்தின் உதவியோடு இம்மரபுகளை ஆவணப்படுத்துதல் மிக அவசியமானதாகும்.

*****

ஆய்விற்குரிய நூல்கள்

  1. இந்தியப் பழங்குடிப்பண்பாடும் தமிழ்ப் பண்பாடும், முனைவர் அ. மரியசூசை, தூய நெஞ்சக் கல்லூரி திருப்பத்தூர்.
  2. தமிழ்ப்பொழில், தமிழாராய்ச்சித் திங்களிதழ், ஆவணி மலர்-7, ஆகஸ்ட் 2017.
  3. கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள், தி.வை.சதாசிவபண்டாரத்தார், மணிவாசகர் பதிப்பகம் சென்னை-08.
  4. இலக்கியமும் கல்வெட்டுக்களும், தி.வை.சதாசிவபண்டாரத்தார், மணிவாசகர் பதிப்பகம் சென்னை-08.
  5. கலைக்களஞ்சியம், தொகுதி இரண்டு, தமிழ் வளர்ச்சிக் கழகம்,பதிப்பு-1955 சென்னை.

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்
தமிழியல் துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலை நகர்,
சிதம்பரம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *