படக்கவிதைப் போட்டி (166)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

 

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

நித்தி ஆனந்த் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.06.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1214 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

6 Comments on “படக்கவிதைப் போட்டி (166)”

 • திருமதி. துளசி அருள்மோகன் wrote on 19 June, 2018, 1:12

  தன் பசி நினையாமல் தேநீருடன்
  இந்த பாச பெண்மணி இவ்வளவு மகிழ்ச்சியுடன் காத்திருப்பது
  தன் கணருக்காகவோ
  பிள்ளைக்காகவோ
  பேரக்குழந்தைக்காகவோ
  பாவம் இந்த பெண்மணியின் பசி தீர்க்க இவர்களில் யார் வருவார்?
  எந்த எதிர்பார்ப்புமில்லா
  பெண்ணே 🙏நீயே கடவுள்🙏

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 22 June, 2018, 20:04

  உண்மை தெய்வம்…

  சூடாய்க் கொடுத்தால் சுடுமெனவே
  சுவையாய்க் காய்த்தே ஆறவைத்து,
  தேடிப் பிள்ளை குடித்திடவே
  தேனீர் தந்திடும் தாய்மறவேல்,
  கோடி கொடுத்தும் கிடைக்காதே
  கொட்டிக் கொடுக்கும் தாயன்பே,
  வாட மட்டும் விட்டிடாதே
  உண்மை தெய்வம் தாயவளே…!

  செண்பக ஜெகதீசன்…

 • ரா. பார்த்த சாரதி
  Parthasarathy Ramaswamy wrote on 23 June, 2018, 12:31

  தன் மகனுக்கோ, கணவனுக்கோ
  தேநீர் ஆற்றும் பெண்மணியே !

  வாய் பொறுக்கும் சூட்டிற்கு குடிக்க ஆற்றுகின்றாய்
  உன் தாகத்தை மறந்து குடும்பத்திற்காக பணிசெய்கின்றாய் !

  கொடுத்திடும் உன் தாயன்பிற்கு ஈடு இணையில்லை
  உன் அருமை அறியாத மனிதனும் பெருமையடைவதில்லை !

  இன்முகம் காட்டி, பாசத்தை தேநீரில் கலந்து, மகிழ்ந்து
  கொடுப்பதற்காக எதிர்நோக்கும் குடும்ப பெண்மணியே !

  களைப்புடன் வீடு திரும்புவனுக்கோ இது உற்சாகப் பானம்
  உன் கையால் கொடுப்பது அன்பும், பாசமும் கலந்த உறவாகும் !

  ரா.பார்த்தசாரதி

 • பழ.செல்வமாணிக்கம் wrote on 23 June, 2018, 19:31

  அருமை மகளாக பூமியில பிறந்தேனே!
  அப்பா மடிமேலே அரசாட்சி செஞ்சேனே!
  தரை மேல நான் நடந்தா என் பாதம் நோகுமுன்னு தோளிலே சுமந்தாரு!
  பதினெட்டு வயசினிலே வாழ்க்கைப்பட்டு வந்தேனே!
  அப்பாவின் சொத்தெல்லாம் சீர் தனமா கொண்டு வந்தேன்!
  என்னைத் தொலைச்சுப்புட்டு, கணவனை தேடி வந்தேன்!
  என் புருசன் அழகில சுந்தரன் தான்!அறிவில சூரியன் தான்!
  அம்மா பேச்ச தட்டாத உத்தமந்தான்!
  அம்மாவின் பேச்ச கேட்டு என்ன அழ வச்ச ஆம்பளதான்!
  மாமியார் பதவி வந்தா மனசு கெட்டு போயிருமா!
  மருமகளும் பொண்ணு என்னும் உண்மை மறந்திருமா!
  மாமியார் கொடுமைய. அப்பா பாத்தாரு! வாய் விட்டு அழுதாரு!
  மனுசியா நடத்தச் சொல்லி மாமியாரக் கேட்டாரு! கை கூப்பி நின்னாரு!
  மாமியார் மகராசி இரக்கம் காட்டலையே!
  தாலி தந்த. மகராசன் தயவு செய்யலையே!
  போதும் இந்த வாழ்க்கையின்னு நானே முடிவு செஞ்சேன்!
  அப்பா கண் தொடச்சு, அவரோட நான் நடந்தேன்!(
  வருசம் பல போச்சு! வாழ்க்கையும் தொலைஞ்சாச்சு!
  சூடான காபித்தண்ணி ஆத்துனா ஆறிடுமே!
  சூடான நிகழ்வுகளை காலம் தான் ஆற்றிடுமே!
  உள்ளுக்குள் அழுதாலும், வெளியில சிரிக்கின்றேன்!
  அம்மா சொல் கேட்டு, மனைவியை வதைக்காதே!
  மனைவி சொல் கேட்டு மாதாவை ஒதுக்காதே!
  இரு கண்ணில் ஒரு கண்ணை குருடாக்க நினைக்காதே!குருடாகப் போகாதே!

 • பெருவை பார்த்தசாரதி
  பெருவை பார்த்தசாரதி wrote on 23 June, 2018, 22:53

  இளமையில் கல்
  ===============

  பெற்ற மகனும்
  ……….பிரிந்து விட்டான்
  உற்ற மகளும்
  ……….ஓடியே விட்டாள்
  பற்றி ருப்போர்
  ……….பக்கத்தில் இல்லை
  ஆற்றப் படுத்த
  ……….அண்டியவர் இல்லை
  எத்தனை துன்பம்
  ……….இடரிவிட்டது
  கத்தினால் என்ன
  ……….குழப்பம் தீர்ந்ததா
  என்னைப் போல
  ……….எவரும் இராதீர்.!
  முன்பேநீ யோசி
  ……….முடிவிலே சுகமே.!

  சிறிய வயதில்
  ……….சிறிதளவுக் கல்வி
  அறிவு பெற்றிடும்
  ……….ஆவலெனக் கில்லை
  முதிய வயதிலும்
  ……….முடியாத போதிலும்
  புதிதாய் யோசித்துப்
  ……….பயனும் இல்லை
  இளமையில் கற்பது
  ……….இயலாது போன(அ)து
  அளவிலாத துன்பம்
  ……….அள்ளிக் கொடுத்தது
  மூப்பு வந்தபோது
  ……….முக்கி முனகியிப்போ
  காப்பியாற்றி வாழ்வைக்
  ……….கழிப்பதென் தொழிலே

  (நிலைமண்டில ஆசிரியப்பா)
  16 அடிகள் (32 அரையடிகள்)

 • ஆ. செந்தில் குமார்
  ஆ.செந்தில் குமார் wrote on 24 June, 2018, 10:39

  இன் முகத்தோடு செய்யும் வினைகள்… !
  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
  -ஆ. செந்தில் குமார்.

  இன் முகத்தோடு செய்யும் வினைகள்…
  இதயம் மகிழச் செய்யும் வினைகள்…
  பன்முகத் திறமைகள் பளிச்சிடும் வினைகள்…
  பலன்கள் பலவும் அளித்திடும் பாரீர்…!

  மென் மலரொத்த கைகளே எனினும்…
  மெல்லிய தேகம் கொண்டவ ரெனினும்…
  அன்பைப் பொழியும் உள்ள மதற்கு…
  அகிலத்தை வெல்லும் ஆற்றல் காணீர்…!

  தேனீ ராற்றும் செயலே ஆயினும்…
  தெய்வம் தொழுதிடும் செயலே ஆயினும்…
  ஒன்றிடும் மனமது இருந்து விட்டாலே…
  ஒளியாய்த் திகழ்ந்திடும் வாழ்வை உணர்வீர்…!

  கண்மூடித் தனமாய் செய்யும் வினைகள்…
  கடமைக் கருதி செய்யும் வினைகள்…
  நன்மையை என்றும் தந்திடா வினைகள்…
  நமக் குதவாது நினைவிற் கொள்வீர்…!

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.