-மேகலா இராமமூர்த்தி 

மனித யாக்கையும் செல்வமும் நிலையில்லா இயல்புடையவை என்பதை நாலடியார் பாடல்கள் பலவும் திரும்பத் திரும்ப நினைவுறுத்தி மனிதர்களை மனப்பக்குவமும் புலனடக்கமும் கொண்டவர்களாய் வாழ வலியுறுத்துகின்றன.

வாழ்க்கை நிலையில்லாத் தன்மையுடையதே எனினும், உயிரோடு வாழும்வரை மனிதர்கள் செல்வத்தைத் தேடித் தொகுக்க வேண்டியவர்களாகவே இருக்கின்றார்கள். அப்போதுதான் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பமுடியும். எனினும், வாணாள் முடியும்வரை பொருளைத் துரத்திக்கொண்டே இருப்பதில் பொருளுண்டோ? 

முன்னரே சாநாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள – கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதுங்
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. 
( நாலடி 92 )

மனிதர்கள் தம்மை வரவேற்கக் காத்திருக்கும் கிழப்பருவத்தையோ மரணத்தையோ தள்ளிப்போட முடியாது. அதுபோதாதென்று, உடல்நலத்தைக் குலைக்கும் பிணிகளுக்கும் வாழ்வில் பஞ்சமில்லை. இத்துணைத் துன்பங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் வாழ்வில் அணிவகுத்து நிற்பதால், செல்வம் உள்ள ஒருவன், மேலும் செல்வத்தைத் தேடி அலைவதிலோ, இருக்கும் செல்வத்தைத் தனக்குமட்டுமே பயன்படவேண்டும் என்று ஒளித்து வைப்பதிலோ, வாழ்வைக் கொன்னே கழியாது, பகுத்துண்ண வேண்டும் என்பது நாலடியார் வழங்கும் அறிவுரை.

ஈதல், இசைபட வாழ்தலே உயிர்களுக்கு உண்மையான ஊதியமாகும்.

ஈகை, வாழ்வில் அனைவரும் கைக்கொள்ளவேண்டிய நல்லறம் என்பதில் ஐயமில்லை. எனினும், நாம் யார்க்குக் கொடுக்கிறோம் எதற்குக் கொடுக்கிறோம் என்பதன் அடிப்படையும் ஆராயவேண்டிய ஒன்றாகும். ”இன்று இவருக்கு நான் நூறு ரூபாய் ஈந்தால் நாளை இவரிடமிருந்து இருநூறு ரூபாய் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்” என்று மனக்கணக்குப் போட்டுச் செய்யும் உதவியெல்லாம் அறமென்றோ ஈகையென்றோ கொள்ளத்தக்கவை அல்ல. அவை பயனை எதிர்பார்த்துச் செய்யும் வணிகம் போன்றவையே.

இதனைப் பின்வரும் நாலடியார் பாடல் சிறப்பாக விளக்குகின்றது. 

ஏற்றகைம் மாற்றாமை என்னானுந் தாம்வரையா
தற்றாதார்க் கீவதாம் ஆண்கடன் – ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து
.  (நாலடி – 98)

வளம் நிறைந்த கடலின் குளிர்ந்த கரையை உடையவனே, ஒருவர்க்கு ஒன்று உதவுவதானால், இரந்த கையை மாற்றாமல் (மறுக்காமல்) இயன்றது எதையேனும் வேறுபாடின்றி, கைம்மாறு செய்ய இயலாத வறிஞர்க்கு உதவுவதே ஓர் ஆண்மகனின் கடமையாகும். எதிருதவி செய்வார்க்கு ஒன்று உதவுதல் ’விளக்கமான கடன்’ என்னும் பெயருடையது; அஃது ஈகையில் சேராது!

இதே கருத்தையே வள்ளுவரும்,

வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து”
என்றார்.  (ஈகை – 221)

புறநானூற்றுப் பாடலொன்றும் இதே கருத்தை ஒரு மன்னனின் செயலோடு தொடர்புபடுத்திச் சுவைப்படச் செப்புகின்றது.

”இம்மையில் ஒருவருக்கு உதவுவது இம்மைப் புகழுக்கும், மறுமையில் கிட்டும் துறக்கவின்பம் கருதியுமே என்பது உலகத்தார் பலரின் எண்ணம். ஆனால் எம் மன்னனாகிய ஆய் அண்டிரனோ இம்மைச் செய்தது மறுமைக்காகும் என்றெண்ணி அறத்துக்கு விலைகூறும் வணிகன் அல்லன். இல்லாதோர்க்குக் கொடுத்துதவ வேண்டியது இருப்போரின் கடன் எனும் சான்றோர் நெறிபற்றி அமைந்ததே அவன் கொடைப்பண்பு” என்று ஆய் அண்டிரனைப் பாராட்டுகின்றார் ஏணிச்சேரி முடமோசியார்.

இம்மைச் செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிக னாயலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன் றவன்கைவண் மையே.
  (புறம் – 134)
 

கையிலுள்ள பொருளைப் பிறர்க்கு ஈந்துவிட்டால் நாளை நம் நிலைமை என்னவாகும்? என்று அஞ்சும் குணம்படைத்த பணம்படைத்தோரையும் குவலயத்தில் குறைவின்றிக் காணலாம். அவர்கட்கும் ஏற்றதொரு பதிலைச் எடுத்துரைக்கின்றது நாலடியார்.

நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்
இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால். 
(நாலடி – 93)
 

பிறருக்குப் கொடுத்துத் தான் துய்ப்பினும், பொருள்சேரும் காலமென்றால் சேரும்; அதுவே நல்வினைப்பயன் முடிந்துபோய்விட்டதென்றால், சேர்த்த செல்வத்தை எவ்வளவுதான் நாம் இறுக்கிப்பிடித்தாலும் அது நில்லாது போய்விடும். இவ்வுண்மையை அறியாதோரே வறுமை வந்துவிடுமோ என்று நடுக்குற்றுத் தம்மைச் சேர்ந்தோரின் வாட்டத்தைப் போக்காது தம் செல்வத்தைப் பூட்டிவைப்பர். 

”பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
” (ஊழ் – 376) என்று நம் உளங்கொளும் வகையில் வள்ளுவமும் இதே கருத்தை விளம்பியிருப்பதை ஈண்டு நாம் எண்ணிப் பார்க்கலாம்.

மனிதர்கள் வாழ்வில் நற்பலன்கள் பெறுவதற்கும் கெடுபலன்கள் அடைவதற்கும் அவர்தம் முன்வினைப்பயனே காரணம் என்கின்றனர் நாலடியார் இயற்றிய சமண முனிவர்கள்.

பண்டை வினைகள் தக்க காலத்தில் தம் பலனைத் தராமல் போவதில்லை என்பதை அறிந்துகொள்ளச் சிலப்பதிகாரத்தினும் சிறந்த சான்றில்லை. ”ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்” என்பதைக் காப்பிய உண்மைகளில் ஒன்றாகவே படைத்தளித்தவர் அல்லரோ அடிகள்!

பல பசுக்களின் இடையில் விடப்பட்டாலும் இளைய ஆன்கன்றானது தன் தாயினைத் தேடித் தெரிந்தடைதலைப்போலத் தொன்று தொட்டுவரும் பழவினைகளும் தன்னைச் செய்த உரிமையாளனைத் தப்பாமல் தேடி அடையும் தன்மையுடையவை என்கிறது நாலடியார்.

பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று
வல்லதாம் தாய்நாடிக் கோடலைத் – தொல்லைப்
பழவினையும் அன்ன தகைத்தேதற் செய்த
கிழவனை நாடிக் கொளற்கு. 
(நாலடி – 101)
 

உலக வாழ்க்கையில் நாம் புரிந்துகொள்ள முடியாத புதிர்கள் பலவுண்டு. அவற்றில் ஒன்று…”நல்லறிஞர்களெல்லாம் விரைவில் வீழ்வதும் (மாள்வதும்), பயனற்ற வீணர்கள் புவியில் நெடுநாள் வாழ்வதும் ஏன்?” என்பது. அதற்குத் தக்கதோர் விடையிறுத்து நம்மைத் தெருட்டுகின்றது நாலடியார்.

பலவகைப்பட்ட பரந்த நூற்கேள்விகளின் பயனை அறிந்தொழுகுங் கற்றோர் உலகில் விரைவில் இறக்கவும், கல்லாதார் நீடுவாழ்வது எங்ஙனமென்று கருதுவீராயின், அதற்குக் காரணம் அறிவென்னும் அப்பிழிவு வீணர்களிடம் இன்மையால் அவர்களை வெறுங்கோது (சக்கை) என்று கருதிக் கழித்துவிடுகின்றான் கூற்றுவன்.

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிதிரேல் – கல்லாதார்
சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று. 
(நாலடி – 106)
 

கற்றார் அறிவுச்சாறு பெற்றுக் கனிந்துவிட்டவராதலின் பிறவிப்பயனை அவர்கள் அடைந்துவிட்டமை கருதி அதனினும் மேனிலையுறும் பொருட்டு அவர்தம் ஊனுடல் விரைவில் கழற்றப்பட்டதெனவும், கல்லாதார் இன்னும் அத்தகுதி பெறாமையால் இவ்விடமே கழித்து விடப்பட்டனரெனவுந் தெரிவித்து, அதன்வாயிலாக, விரைவில் நல்வினை செய்து நன்னிலையுறுகவென அறிவுறுத்துகின்றது இச்செய்யுள்.

”…இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா
உளநாள் வரையாது ஒல்லுவ தொழியாது
செல்லுந் தேஎத்துக் குறுதுணை தேடுமின்
மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென்.” 
( சிலம்பு – வரந்தரு காதை: 199-202)  
என்ற வரந்தரு காதை அடிகள் மூலம் இளங்கோ அடிகள் நமக்கு வலியுறுத்துவதும் இதைத்தானே?

[தொடரும்]

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *