நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 7

-மேகலா இராமமூர்த்தி

மக்கள் வாழ்க்கையானது இன்பமும் துன்பமும் கலந்தது; நன்மையும் தீமையும் நிறைந்தது. எனவே வாழ்க்கையில் எது வந்தாலும் கலங்காது, வாழ்க்கையின் மெய்த்தன்மையை உணர்ந்து வாழ்தலே சிறந்தது.

நாம் எத்தனையோ பேரை வாழ்வில் சந்திக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் இயல்பு இருப்பதையும் காண்கின்றோம். சிலரின் பண்புகள் நம்மை அவர்களிடம் நெருங்கச் செய்கின்றன. வேறுசிலரின் பண்புகளோ அவர்களைவிட்டுக் காததூரம் விலகி ஓட வைக்கின்றன.

சரியோ தவறோ யாருமே அவரவர் இயல்பை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பதில்லை. இதனைச் ’சுவை’யோடு விளக்குகின்றது நாலடியார்.

தக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மை
எக்காலுங் குன்றல் இலராவர் – அக்காரம்
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்
தேவரே தின்னினும் வேம்பு. 
(நாலடி – 112) 

”சான்றோரும் சான்றோர் அல்லாதாரும் தத்தம் இயல்புகளிலிருந்து குன்றுதல் இலர்.  கருப்பங்கட்டியை யார் தின்றாலும் கசக்காது; ஆனால் விண்ணாளும் தேவரே தின்றாலும் வேப்பங்காய் கசக்கவே செய்யும்.” இதைத்தான் நாட்டுவழக்கில் ’நாய் வாலை நிமிர்த்த முடியாது’ என்கிறார்களோ?

அறம் பொருள் இன்பம் என்ற முப்பொருளில் இடையிலுள்ள ’பொருளே’ அறத்துக்கும் இன்பத்துக்கும் ஆதாரமாக இருக்கின்றது என்பது அறிஞர்கள் துணிபு. முனிவர்களே ஆயினும் நாலடியாரின் ஆசிரியர்களும் அதற்கு எதிரானவர்கள் அல்லர்.

வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவண தெய்த இருதலையும் எய்தும்
நடுவண தெய்தாதான் எய்தும் உலைப்பெய்
தடுவது போலுந் துயர்.  
(நாலடி – 114)

”குற்றமில்லாத உலகத்தில் இன்றியமையாதனவாய்ப் பொருந்திய அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று உறுதிப் பொருள்களுள், நடுவில் நின்றதான ‘பொருள்’ என்பதை ஒருவன் அடைந்தால், அது காரணமாக, அதன் இருபக்கத்தனவான ‘அறம்’ ‘இன்பம்’ என்னும் இரண்டையும் அவன் அடைவான். அவ்வாறு நடுவில் நின்றதான செல்வப்பொருளை அடையாதவன், கொல்லன் உலையில் இட்டு இரும்பைக் காய்ச்சுவது போலும் வறுமைத் துன்பத்தை அடைந்து நைவான்” என்கிறது மேற்கண்ட நாலடியார் பாடல்.

ஆம், இல்லானை இல்லாளும் வேண்டாள்; ஈன்றெடுத்த தாயும் வேண்டாளே!

செந்நாப்போதாரும், இதே கருத்தைச் சுருக்கமாக,

”ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு” (760) என்று கூறிப் போந்தார்.

உலகத்தாரில் பலர், பணம் புகழ் பதவி இவை வலுத்தோரிடம் பல்லிளிப்பதையும், தமக்கு அவர்களால் ஏதேனும் ஆதாயம் கிடைக்கக்கூடும் எனும் ’குருட்டு’ நம்பிக்கையில் அவர்கள் தம்மை இழிவுபடுத்துவதைச் சகித்துக்கொள்வதையும் காண்கிறோம்.  இது சரியா?

நாலடியார் சொல்வதைக் கேட்போம்!

தம்மை இகழ்வாரை தாமவரின் முன்னிகழ்க
என்னை அவரொடு பட்டது – புன்னை
விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப
உறற்பால யார்க்கும் உறும். 
(நாலடி – 117)

”அவரவற்குரிய நன்மை தீமைகள் அவரவர்க்கு வந்துசேரும். ஆதலால், புன்னையின் வலிமைவாய்ந்த மலர்மணங் கமழ்கின்ற சோலைகளையுடைய கடற்கரைத் தலைவ! தம்மைப் புறக்கணிப்பவரை அவரினும் முற்படத் தாம் புறக்கணிக்கவேண்டும். அவமானப்பட்டேனும் அவர்களோடு அப்படி என்ன தொடர்பு வேண்டிக்கிடக்கிறது?” என்று கண்டிக்கிறது நாலடியார்.

நமக்கென்று உள்ளது நமக்குக் கிட்டாமல் போகாது. ’உறற்பால தீண்டா விடுதல் அரிது’ என்ற பிறிதொரு நாலடியார் பாடலை இங்கே நாம் நினையலாம். அதுபோல், என்னதான் ஓடிஓடித் தேடினாலும் நமக்கில்லாத ஒன்று நமக்குக் கிட்டாது. அப்புறம் எதற்குத் தன்மானத்தையும் கண்ணியத்தையும் இழந்து பிறரை நத்திக்கிடப்பது?

’எடுத்த காரியம் யாவினும் வெற்றி’ என்று பூரிப்போடு வெற்றிகளையே வாழ்வில் குவிக்கவும், வாழ்வின் ஒவ்வொரு நாளையும் மகிழ்வோடு கழிக்கவுமே சராசரி மனித மனம் அவாவி நிற்கின்றது. ஆனால் உலகின் இயல்பு அவ்வாறிருப்பதில்லை.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் மனிதன் மனிதனாக இருக்கமாட்டான் என்று கருதியோ என்னவோ இயற்கை அவனுக்குத் துன்பப் பாடங்களைப் பாடத்திட்டத்தில் சற்றுக் கூடுதலாக வைத்துத் தக்க அனுபவங்களைப் படிப்பினையாய்த் தருகின்றது.

யாஅர் உலகத்தோர் சொல்லில்லார்? தேருங்கால்
யாஅர் உபாயத்தின் வாழாதார்? – யாஅர்
இடையாக இன்னாத தெய்தாதார்? யாஅர்
கடைபோகச் செல்வம்உய்த் தார்? 
(நாலடி – 119)

”உலகியலை ஆராய்ந்து பார்த்தால், ஒரு பழிச்சொல்லைக்கூட அடையாதவர் இவ்வுலகில் யார்? ஏதேனும் ஓர் காரணம் பற்றி உலகில் வாழாதார் யார்? வாழ்வின் இடையே இடரும் இடுக்கணும் அடையாதார் யார்? வாழ்வின் இறுதிவரையிற் செல்வத்தை நுகர்ந்தவர் யார்?” என்று கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றது நாலடியார். இதற்கெல்லாம் ஒரே பதில் “யாருமில்லை!” என்பதுதான்.

ஆதலால் இன்ப துன்பமும் கலந்து வருவதே உலகியற்கை என்பதை உணர்ந்து, அவற்றுக்கு மனம் கலங்காதிருப்பவனே வாழத்தெரிந்த மனிதன் ஆவான்.

நமக்கு வாய்க்கும் வாழ்க்கை, ’இன்பமே எந்நாளும் துன்பமில்லை’ என்று மகிழ்ந்துபாடும்படி அமைந்தாலும் சரி, ’துன்பங்களே எமக்குத் தொடர்கதையோ’ என்று வருந்தும்படி இருந்தாலும் சரி… அதற்காக நல்வழியிலிருந்து நீங்கித் தீவினைகள் ஆற்றக்கூடாது; அவ்வாறு செய்தால் அது மேன்மேலும் நமக்குத் துன்பத்தையும் கெடுபலன்களையுமே கொடுக்கும் என்று குறிப்பிடும் நாலடியார், மனிதர்களுக்கு மட்டுமல்லாது பிற உயிர்களான பறவைகளுக்கும் விலங்குகளுக்கும்கூடத் தீங்குசெய்வதோ அவற்றைக் கொல்வதோ மா பாவம் என்கின்றது.

அக்கேபோல் அங்கை யொழிய விரலழுகித்
துக்கத் தொழுநோய் எழுபவே – அக்கால்
அலவனைக் காதலித்துக் கான்முரித்துத் தின்ற
பழவினை வந்தடைந்தக் கால். 
(நாலடி – 123)

”முற்பிறப்பில் நண்டின் ஊனை விரும்பித் தின்றவனுடைய பழவினை இப்பிறப்பில் வந்தடையும்போது, சங்குமணிபோல வெண்ணிறமாய் உள்ளங்கைகள் மட்டும் இருக்க, ஏனைய விரல்களெல்லாம் அழுகிக் குறைந்து துன்பம்தரும் தொழுநோய் உண்டாகப் பெறுவான் அவன்” என்று எச்சரிக்கின்றது நாலடியார்.

பிற உயிர்களை வருத்துபவன் அவ்வாறே தானும் துன்புறுவான் என்பதே இதன் வாயிலாய் நாம் பெறும் பாடம்!

”பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்”  (319) என்ற வள்ளுவத்தை ஈண்டு உள்ளுவம்; உயிர்க்கொலையைத் தள்ளுவம்!

சில நேரங்களில் நாம் ’உயர்ந்தவர்’ என்று கருதி ஒருவரிடம் பழகுவோம். நெருங்கிப் பழகியபின்தான் தெரியவரும் அச்சொல்லுக்கு அவர் சிறிதும் அருகதை அற்றவர் என்பது. அப்போது நமக்கு ஏற்படும் அதிர்ச்சியை அழகிய உவமை ஒன்றின்மூலம் விளக்குகின்றது நாலடியார்!

சான்றோ ரெனமதித்துச் சார்ந்தாய்மன் சார்ந்தாய்க்குச்
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்லாயின் சார்ந்தாய்கேள்
சாந்தகத் துண்டென்று செப்புத் திறந்தொருவன்
பாம்பகத்துக் கண்ட துடைத்து. 
(நாலடி – 126)

”நீ சிலரைக் குணம் நிறைந்தவர் எனமதித்து மிகுதியும் உறவு கொள்கின்றனை; அவ்வாறு உறவுகொள்ளும் நினக்கு நீ சார்வோரிடத்தில் குணநிறைவு காணப்படாதாயின், ஆராயாமல் உறவுகொள்வோனே, கேட்பாய்! அச்செயல், சந்தனம் உள்ளே இருக்கின்றதென்று கருதிச் சிமிழைத் திறந்த ஒருவன் பாம்பை அதனுள் கண்டாற்போன்ற தன்மையுடையது” என்பது இப்பாடலின் பொருள்.

மனித இயல்பு விசித்திரமானதுதான்! எவ்வளவு நெருங்கிப் பழகினாலும் சிலரை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. தன்னலம் ஒன்றே குறியாய், சூழ்நிலைக்குத் தக்கபடி நிறம் மாறும் அவர்களைத் தெரிந்து தெளிதல் மிகக் கடினம்.

”எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்” (514) என்று அறிவிற் சிறந்த வள்ளுவரே இப்பச்சோந்தி மனிதர்களைப் புரிந்துகொள்ள முடியாமல் உளம் சோர்ந்திருக்கிறார் எனும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்?

கூடுமானவரை நன்கு ஆராய்ந்தபின்னரே எவரோடும் நட்புக்கொள்ள வேண்டும். அந்நட்பு, தீ நட்பாகவோ கூடா நட்பாகவோ இருக்குமானால் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் அந்நட்பைக் கொல்லவேண்டும். அதுவே நம்மை நாம் காத்துக்கொள்ளும் நல்வழி!

[தொடரும்]

*****

துணைநூல்கள்:

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம் பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

 

மேகலா இராமமூர்த்தி

மேகலா இராமமூர்த்தி

Share

About the Author

மேகலா இராமமூர்த்தி

has written 318 stories on this site.

Write a Comment [மறுமொழி இடவும்]


− three = 2


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.