வாழ்ந்து பார்க்கலாமே 26

க. பாலசுப்பிரமணியன்

மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது?

மாற்றங்கள் எப்படி ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன?  மாற்றங்களின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்ததால் பல உண்மைகள் நமக்கு வெளிப்படுகின்றன.

கற்காலம் தொட்டே மனிதனின் அறிவு வளர்ச்சிக்குத் தகுந்தவாறு மாற்றங்களும், மாற்றங்களுக்குத் தகுந்தவாறு அறிவின் வளர்ச்சியும் ஏற்பட்டுக்கொண்டேதான் இருந்திருக்கின்றன. முதலில் கற்களை உரசி நெருப்பினைக் கண்ட மனிதன் அந்த நெருப்பைப் பயன்படுத்தி வாழ்வின் முறைகளையும் வளத்தையும் காக பெருக்கக் கற்றுக்கொண்டான். பின்பு உலோகங்களைக் கண்டுபிடித்தபின் அவைகளை ஆயுதங்களுக்கும் மற்றும் மேம்பட்ட வாழ்விற்கும் எவ்வாறு பயன்படுத்துவது என்று அறிந்துகொண்டான். பின்பு சக்கரத்தைக் கண்டுபிடித்த மனிதன் தன தொழிலுக்கும் வாழ்க்கைச் சாதனைகளுக்கும் அதன் மூலமாக புதிய சிந்தனைகளை வளர்த்துக்கொண்டான். மேற்கண்ட மாற்றங்கள் மனித இனத்தின் வளர்ச்சிப்பாதைக்கு வித்திட்டது மட்டுமின்றி அதன் வேகத்தையும் சற்றே முடுக்கிவிட்டன.

சில நூற்றாண்டுகளுக்குப் பின் இயந்திரங்களை படைக்கக் கற்றுக்கொண்டவன் சிந்தனையால் ஒரு தொழில் புரட்சியே நடந்தது.. இயந்திரங்கள் மூலமாக படைப்புத்திறன்களையும் தரத்தையும் வளர்க்கவும் சீர்படுத்தவும் கற்றுக்கொண்டு தரமான பொருட்களைத் தயாரிக்கக் கற்றுக்கொண்டான் தொழில்சார் சமுதாயத்தில் படைக்கப்பட்ட அச்சு இயந்திரம் மனிதனுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.

வாய்வழியாகவும் மனிதனின் நினைவுச்சக்தியை மட்டும் சார்ந்து வளர்ந்த அறிவு எழுத்துக்களில் வடிக்கப்பட்டு புத்தகங்களாகி கால நேரங்களுக்கு அப்பாற்பட்டு தேவைக்கேற்றவாறு அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் ஆராய்ச்சி செய்வதற்கும் பயன்பட்டது. தனிப்பட்ட அறிவுசேர்க்கும் நிகழ்விலிருந்து சமுதாயம் கூட்டாக அறிவினைச் சேர்ப்பதற்கும் அலசுவதற்கும் மேம்படுத்திக்கொள்ளவும் இந்த புதிய கண்டுபிடிப்புக்கள் பயன்பட்டன.

வளர்ச்சிப் பாதையில் ஏற்பட்ட அடுத்த மிகப் பெரிய மாற்றம் கணினி. கணினி முதன்முதலாக ஒரு கணக்கிடப்படும் இயந்திரமாகத் தோன்றினாலும் நாளடைவில் அதன் பரிமாணங்கள் பெருகி வளர்ந்து மலர்ந்து அது ஒரு பல்நோக்கு இயந்திரமாக மட்டுமின்றி மனித சிந்தனைக்குச் சவால் விடும் ஒரு இயந்திரமாக மாறிவிட்டது. இந்தக் கணினியின் மூலமாகவும் அது சார்ந்த மற்ற தொழில்நுட்பங்கள் மூலமாகவும் அறிவையும் கருத்துக்களையும் நிகழ்வுகளையும் மற்றும் பல வித அறிவுசால் முறைகளையும் வகைப்படுத்தி நுட்பப்படுத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் நமக்கு தெரியப்படுத்த ஒரு வாய்ப்புக்க கிடைத்தது. இந்த கணினி சமுதாயத் சிந்தனையிலும் வாழ்க்கை முறைகளிலும், செயல் திறன்களிலும் ஏற்படுத்திய மாற்றங்கள் இந்த மனித இணைத்தல் சற்றும் எதிர்பார்க்கப்படாதவை. ஆயினும் மனித இனம், இந்த மாற்றங்களை மகிழ்வுடனும் ஆர்வத்துடனும் முற்போக்குச் சிந்தனையுடனும் ஏற்றுக்கொண்டு தங்கள் வாழ்க்கை முறைகளை தக்கவாறு மாற்றிக்கொண்டு வருகின்றது. இந்த கணினியுகத்தின் மிகப்பெரிய உண்மை: மாற்றங்களின் வேகம். மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி மாற்றங்களின் வேகம் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. கணினிகளின் வளர்ச்சிவேகமும் அவைகளின் ஆதிக்கமும் ஊடுருவலும் மனித இனத்தை வியக்க வைத்தது மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கைக்கு கோட்பாடுகளின் அடித்தளத்தை ஆசைப்பதற்கும் வித்திட்டன. இந்த மாற்றத்தினால் உலக தூரங்கள் தகவல்களாலும் தொடர்புகளால் கருத்துக் பரிமாற்றங்கள் வளந்தினால் மிக அதிக அளவில் குறைக்கப்பட்டு சிந்தனிக் கூடாரங்கள் இணைத்தளங்களில் அமைக்கப்பட்டன. கருத்தால் ஒன்று பட்ட மனித இனம் வளங்களின் பரிமாற்றங்களால் தங்கள் தேவைகளையும் வியாபார வெறியையும் மிக எளிதில் நிறைவேற்றிக்கொண்டது. ஆனால், சிந்தனைக்கு கூடங்களின் வலிமையையும் ஆதிக்கமும் அடுத்த கட்ட மாற்றத்திற்கும் பரிமாண வளர்ச்சிக்கும் வழிவகுத்தன. நாம் “அறிவுசார்” சமுதாயத்தை  (KNOWLEDGE SOCIETY ) நோக்கி நம்முடை  போக்கை வழிப்படுத்திக்கொண்டோம் இதன் விளைவு? தொழிலைத் தேடி கடல் கடந்த மனித இனம் இப்போது தங்கள் அறிவின் ஆதிக்கத்தினால் இருக்கும் இடத்திலிருந்தே தொழில்களைக் கவர ஆரமிப்பித்தது. மனிதர்கள் இடம் பெயர்வதற்குப் பதிலாக திறன்களைத் தேடி தொழில்கள் இடம்பெயரத் தொடங்கின. இந்த புதிய மாற்றத்தில் ‘திறன்களே” வளத்திற்கும் வளர்ச்சிக்கும் ஆன்மாவாக மாறியது.

“வருங்காலத்தில் அதிர்ச்சி” (THE FUTURE SHOCK) என்ற புத்தகத்தில் ஆல்வின் டாபிளேர் என்ற ஒரு ஆராய்ச்சியாளர் வெகு அழகாகச் ல்லுகின்றார்: ” நிலத்தை முதலாக வைத்து வாழ்ந்த மனித இனம் பின் இயந்திரங்களை மூலதனமாக வைத்து வாழ ஆரம்பித்தது. பின்பு இயந்திரங்களிலிருந்து விலகி தகவல் சார் சமுதாயமாக மாறி அறிவின் சேர்க்கைக்கும் வளத்திற்கும் மீட்புக்கும் துணையாக வளர்ந்தது. வெறும் தகவல் சார் சமுதாயத்திலிருந்து மனித இனம் “அறிவு சார் சமுதாய”மாக மாறி வந்துள்ளது. இந்தப் பயணத்தில் முதல் மாற்றம் ஏற்பட பல ஆயிரம் ஆண்டுகள் ஆயின. அடுத்த மாற்றம் சில நூற்றாண்டுகளுக்கும் நடந்தது. மூன்றாவது மாற்றம் சில பத்தாண்டுகளுக்குள் நடந்தது. தற்போது இருக்கின்ற அறிவுசார் சமுதாயத்தின் ஆயுட்காலம் மிகக் குறைவு. அறிவும் திறன்களும் மிக விரைவில் மிக எளிதாகவும் தங்கள் வாழ்வின் காலத்தை இழந்துகொண்டு இருக்கின்றன.”

இந்த மாற்றங்களை நாம் எப்படி எதிகொள்ள வேண்டும்?

  1. இந்த மாற்றங்களை முற்றிலும் நாம் வெறுத்து ஒதுக்கலாம் .
  2. இந்த மாற்றங்களை விரும்பி ஏற்காமல் அவைகளுக்கு வழிவிட்டு நாம் ஒதுங்கி நிற்கலாம்.
  3. இந்த மாற்றங்களுக்கு அடிமையாகி நாம் அவைகள் அடித்துச் செல்லும் வெள்ளத்திற்கு இரையாகலாம்
  4. இந்த மாற்றங்களை அலசி ஆராய்ந்து தேவைக்குத் தக்கவாறு ஏற்றுக்கொள்ளலாம்.

இந்த மாற்றங்களை முற்றிலும் வெறுத்து ஒதுக்குவது சாத்தியமானதல்ல. அந்த நிலையை நாம் இப்போது கடந்து விட்டோம்.

அவைகளுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றால், காலமும் வாழ்க்கை நடைமுறைகளும் நம்மை இருக்கும் இடத்திலே விட்டுவிட்டு முன்னே சென்று கொண்டிருக்கும். நாம் தனிமையில் ஏங்கி வேண்டப்படாதவர்களாக நிற்போம்.

இந்த மாற்றங்களுக்கும் அடிமையாகி அந்தக் காட்டாற்று வெள்ளத்திற்கு இறையானால் இந்தப் பிறவியின் சீரிய பயனை இழந்து நிற்போம். வாழ்க்கை தொழில் நுட்பத்தாலும் அது சார்ந்த இயலிகளாலும் கட்டுப்படுத்தப்பட விடக்கூடாது.  அது நமக்குத் தோல்வியின் அறிகுறி.

இந்த மாற்றங்களை அலசி ஆராய்ந்து அவற்றை நமக்குத் தேவைக்குத் தகுந்தவாறு ஏற்றுக்கொண்டால் நாம் அவற்றை நமது வாழ்க்கைப் பயணத்திற்கும் முன்னேற்றத்திற்கும் மகிழ்வுக்கும் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள முடியும்

மாற்றங்களை அறிவோடும் தைரியோத்தோடும் எதிர்கொள்ளலாமே !

மாற்றங்களோடு வாழ்ந்து பார்க்கலாமே !

(தொடரும் )

Share

About the Author

க. பாலசுப்பிரமணியன்

has written 417 stories on this site.

க. பாலசுப்ரமணியன், முன்னாள் இயக்குனர் (கல்வி). மத்திய இடைநிலைக் கல்விக் கழகம், டில்லி ஆர்வம்: இலக்கியம், கவிதை, கல்வி, உளவியல், மனித வள மேம்பாடு கல்வி பற்றிய இவருடைய பல கட்டுரைகளும் புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.