சங்க கால நிலவியல் பகுப்புகளின் அடிப்படையில் விளைந்த குறிஞ்சிநிலத் தொழில்கள்

3

-த. வாசுகி 

முன்னுரை

தொல்காப்பியர் தொழில் என்பதனை வினை என்ற பொருளில் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். இதனை, “வினைவயின் பிரிந்தோன் மீண்டுவரு காலை இடைச் சுர மருங்கில் தவிர்தல் இல்லை” (தொல். பொருள். அகத்திணையியல், நூ.1140) என்ற நூற்பாவின் மூலம் அறியலாம். தமிழகராதியானது தொழில் என்பதற்குச் செயல், வேலை, ஏவல் என்ற பொருளினைத் தருகின்றது. நிலவியல் பகுப்புக்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்றவற்றில் சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து செயல்பட்டனர். இவ்வாறு இயற்கையோடு நேரிடையாக தொடர்புடைய தொழிலானது தற்காலத்தில், முதன்மைத் தொழில்கள் அல்லது முதல்நிலைத் தொழில்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை பழைமையான தொழில்கள் என்று தற்காலத்தில் வரையறை செய்கின்றனர். இவற்றில் அடங்கும் தொழில்களாகக் கருதப்படுபவை:

1. உணவு சேகரித்தல்
2. வேட்டையாடுதல்
3. மரம் வெட்டுதல்
4. வேளாண்மை
5. மீன்பிடிப்பு
6. சுரங்கத் தொழில்
7. காடுகள் பராமரிப்பு

போன்றவை ஆகும். இத்தகைய தொழில்களில் சங்க காலத்திலேயே மக்கள் ஈடுபட்டிருந்தனர் என்பதனைச் சங்க நூல்களின் மூலம் அறிய முடிகின்றது. மேலும் சங்க இலக்கியங்களில் நிலம்சார்ந்த தொழில் முறைகள், நுணுக்கங்கள் போன்ற தொழில்சார்ந்த செய்திகள் ஏராளமாக அடங்கியுள்ளன. சங்க காலத்து நிலவியல் பகுப்புகளின் அடிப்படையில் விளைந்த குறிஞ்சிநிலத் தொழில்கள் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் முக்கியமான நோக்கமாகும்.

குறிஞ்சிநிலத் தொழில்கள்

குறிஞ்சி நிலம் என்பது மலை சார்ந்த பகுதிகளைக் குறிக்கின்றது. மலைக்குன்றுகள், அடர்ந்த மரங்கள், கொடிகள், சுனைகள், அருவிகள், பறவைகள், விலங்குகள் போன்றவை மலையின் அங்கங்களாகும். இந்த நிலப் பகுதிகளுக்கு ஏற்ப மக்கள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டு, அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை, பருவ காலங்கள், அந்நிலத்தின் தன்மை போன்றவைகளை அறுதியிட்டு அதற்கு ஏற்ப தங்களது தொழில்களை அமைத்து செழிப்புடன் வாழ்ந்தனர் என்பதனை சங்கப் பாடல்களின் மூலம் அறியலாம். உழவரால் உழுது விதைவிக்கப்படாத இயற்கை வளத்தை உடையது குறிஞ்சி நிலம் என்பதனைப் புறநானூற்றுப் பாடல் (புறம். 109: 3-8) குறிப்பிடுகின்றது.

வேளாண் தொழில்கள்

குறிஞ்சி நிலத் தொழில் என்பது மலைவளத்தையும், புன்செய் வேளாண்மையையும், வேட்டைத் தொழிலையும் அடிப்படையாய்க் கொண்டமைந்துள்ளது. தினை, ஐவன வெண்ணெல்லும், புல்லரிசியும், மூங்கிலரிசியும், அவரையும், கிழங்கும், தேனும், வேட்டைப் பொருள்களும் குறிஞ்சி நில மக்களின் அடிப்படை உணவுகள் ஆகும்.

தினை (ஏனல்)

எக்காலத்திலும் புன்செய் நிலங்களில் வளர்வதற்கு ஏற்ற பயிராக தினை விளங்குகின்றது. புன்செய் நிலம் என்பது மழை நீரினால் விளைச்சலைத் தரக்கூடிய நிலத்தினைக் குறிக்கும். குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலைசார்ந்த இடமுமாக இருப்பதினால் அங்கு மழையின் அளவு அதிக அளவில் இருக்கும். இதனால் மனித முயற்சியின்றி இயற்கையாகவே நீராதாங்களைப் பெற்ற நிலமாக குறிஞ்சி நிலம் அமைகின்றது. இந்நிலத்தின் முக்கிய பயிராகிய தினையினைப் பற்றியப் பல குறிப்புகள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. தினை, தினை வகைகள், தினை விதைத்தல், கொல்லையில் விதைத்தல், தினை முளைத்தல், களை நீக்குதல், முதிர்ந்த தினை கதிர்கள், தினை விளைந்த பதம், தினைப்புனத்திற்கு வரும் பாதிப்புகள், யானை தினைப்புனம் புகுதல், பன்றிகள் தினையைச் சேதப்படுத்தல், கானங்கோழி, கிளி போன்றவை தினையினைக் கவர்தல், தினையைப் பாதுகாத்தல், பன்றியைப் பொறி வைத்துப் பிடித்தல், அம்பெய்து விரட்டுதல், விளக்கேற்றி விரட்டுதல், தொண்டகப் பறை முழக்குதல் போன்று பல விதமான உத்திகளைத் தினையினைக் கவர வரும் விலங்கு, பறவைகளை விரட்டப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், பரணில் இருந்து புனம் காத்தல், தினையின் அறுவடைக் காலம், தினையைக் காயவைத்தல், தினை இடித்தல் போன்ற தினையினைப் பற்றிய செய்திகளை அறியலாம். இதனை,

மலை அயற் கலித்த மைஆர் ஏனல்”32   (நற். 108 : 1) என்னும் நற்றிணைப் பாடலானது தினையினை, ‘மலைப்பக்கத்தே முளைத்துச் செழித்துக் கரிய நிறமுடைய தினை’ என்று குறிப்பிடுகின்றது.

தினை அறுவடைக்குப் பின் தினைத்தாளைக் கொண்டு குடிசை வேயப்பட்டது என்பதனை,

இருவி வேய்ந்த குறுங்காற் குரம்பை”33   (குறிஞ்சிப்பாட்டு, வரி. 153) என்னும் குறிஞ்சிப்பாடலானது குறிப்பிடுகின்றது. இதன்மூலம் குறிஞ்சி நில மக்களின் நிலம் சார்ந்த வாழ்வியல் திறத்தினை அறிய முடிகின்றது.

ஐவனம் அல்லது மலைநெல்

குறிஞ்சி நிலத்தில் ஐவனநெல் என்னும் வெண்ணெல், தோரை என்னும் நெல், மூங்கிலரிசி போன்றவற்றை விளைவித்தனர். புல்லரிசியானது எறும்புப் புற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற உணவாக இருந்திருக்கின்றது. மதுரைக் காஞ்சியானது குறிஞ்சி நிலத்தில் விளையும் நெல் பற்றியும், அவற்றுடன் எவையெவை பிணைந்து வளரும் என்பதனை,

நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை, நெடுங்கால் ஐயவி,
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி;
இஞ்சி, மஞ்சள், பைங்கறி, பிறவும்

பல்வேறு தாரமொடு, கல்லகத்து ஈண்டி” (மதுரைக்காஞ்சி, வரி. 286-290) என்ற பாடல்வரிகள் குறிப்பிடுகின்றன. இப்பாடலானது, மணம் கமழும் அகிலையும், சந்தனத்தையும் வெட்டி, மேட்டு நிலங்களில் விதைக்கப்பட்ட குறிய கதிர்களையுடைய தோரை என்னும் நெல்லும், நெடிய தாளினையுடைய வெண்சிறு கடுகும், ஐவன நெல் என்னும் வெண்ணெல்லுடன் பிணைந்து வளர்ந்த இஞ்சியும், மஞ்சளும், பசுமை வாய்ந்த மிளகுக் கொடியும், ஒழிந்த பல்வேறு பண்டங்களும் கல் தரையில் குவிக்கப்பட்டிருப்பதனைச் சுட்டுகின்றது. 

குறுந்தொகையில் வரும் குறிஞ்சிப் பாடலொன்று, ‘காந்தளை இயற்கை வேலியாக உடைய இச்சிறுகுடியில் வாழ்பவர், அருவியை உடைய பரந்த நிலத்தில் மலை நெல்லை விதைப்பர். அவற்றிடையே களையாக வளர்ந்துள்ள பருத்த இலையையுடைய காட்டு மல்லிகையையும், பசிய மரலை எனப்படும் ஒருவகை கற்றாழையையும் பறித்து எறிவர். இதனை,

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருஇலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி”  (குறுந். 100 : 1-3) என்றப் பாடலின் மூலம் அறியலாம்.

எள்

எள் பற்றிய செய்தியானது சங்கப் பாடல்களில் காணக்கிடைக்கின்றது. கார் காலத்தில் முதலில் தோன்றும் மழை, புதுப்பெயல் எனவும், இளமழை எனவும் கூறப்படும். அக்காலத்தில் தொடர்ந்து பெய்யும் மழை, ‘பழமழை’ எனப்படும். அப்பருவத்தின் இறுதியில் பெய்யும் மழை ‘சில் பெயல்’ எனப்பட்டது. எள்ளிற்கு அதிக மழை பெய்தால், காய்கள் பதனழிந்து, உள்ளீடின்றிப் போகும். உள்ளீடில்லாத காய்கள் ‘சிதட்டுக் காய்’ என்றும் கூறப்படும். இத்தகைய கருத்துக்களைத் தாங்கி நிற்கும் குறுந்தொகைப் பாடலொன்று, பழமழையால் பதம்கெட்டு உருகிய எள்ளின்காய், சின்மழையால் இனிதாய் விளங்கினாற் போல என்பதனை,

பழமழை பொழிந்தெனப் பதன் அழிந்து உருகிய
சிதட்டுக்காய் எண்ணின் சில்பெயற் கடைநாள்”   (குறுந். 261 : 1-2) என்ற பாடல் வரிகளின் மூலம் விளக்குகின்றது. எள்ளிலிருந்து எண்ணெய் பிழிந்து எடுக்கப்பட்ட செய்தியை நற்றிணைப் பாடலானது எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது”  (நற். 328 : 8) என்ற வரிகளில் குறிப்பிடுகின்றது. மேலும், மலைபடுகடாம் என்ற பாடலானது, ‘பலவாகக் கிளைத்த பசிய எள்ளின் இலைகள் எல்லாம் நீலமணியின் நிறத்தையுடையனவாய் வளர்ந்தன. அவை விதைக்கப்பட்ட கொல்லையின் பக்கத்தில், நீர் இறைக்கும் சால் போன்ற வடிவத்தையுடைய நீர் நிறைந்த சுனைகள் விளங்கின. அக்காட்டின்கண் அரக்குப் பாயாமல், மழைத்துளி தழுவுதலால், இளங்காயாகிய தன்மை நீங்கி, ஒரு பிடியில் ஏழு காய்களைப் பெற்று, எள், நெய் உள்ளே கொள்ளும்படி வளர்ந்தன. இதனை (மலைபடுகடாம், 102-106) என்ற பாடல் வரிகளின் மூலம் அறியலாம். இவற்றிலிருந்து குறிஞ்சி நில மக்களின் வாழ்வில் எள் இடம்பெற்றிருந்தது என்பதனை அறியலாம்.

அவரை

குறிஞ்சி நில மக்கள் தினைக்கு ஊடுபயிராக அவரையைப் பயிரிட்டுப் பயன்பெற்றனர் என்பதனை சங்கப் பாக்கள் அறிவிக்கின்றன. மலைபடுகடாம் என்ற பத்துப்பாட்டு நூலானது, ‘அவரைகள், தினை அரிந்த தாள்களில் முற்றிய தயிரின் பிதிர்ந்த சிதறல் போன்ற பூக்கள் உதிர்ந்து, அரிவாள் போன்ற வளைந்த காய்களைக் கொண்டன’  என்றுக் குறிப்பிடுகின்றது. இதனை விளைதயிர்ப் பிதிர்வின் வீஉக்கு, இருவி தொறும், குளிர் புரை கொடுங்காய் கொண்டன, அவரை” (மலைபடுகடாம், 109-110) என்ற பாடலின் மூலம் அறியலாம். மேலும், குறுந்தொகைப் பாடலொன்று இதே செய்தியினைப் பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால் கொழுங்கொடி அவரை பூக்கும்” (குறுந். 82 : 4-5) என்பதில், தினைப் புனத்தில் விதைத்த அவரை, அதன் மறுதாளில் படர்ந்து, பூத்துக் காய்களை உண்டாக்கும். அதாவது, குறவன் ஒருமுறை விதைத்த தினையின் கதிர்களைப் பெற்று மகிழ்வதோடு, அவற்றின் மறுகாலில் விளையும் அவரைக் காய்களையும் பெற்று இன்பம் நுகர்வான் என்பதனை அறியலாம்.

கிழங்கு அகழ்தல்

சங்க கால மக்களின் உணவுப் பொருளாக கிழங்கு வகைகள் இருந்துள்ளன. கவலைக் கிழங்கு, வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு, நூற் கிழங்கு, சேமங்கிழங்கு போன்ற பல கிழங்கு வகைகளைப் பற்றிய செய்திகளும், அவை உணவாகப் பறிமாறப்பட்டன என்ற செய்திகளும் சங்கப் பாடல்களில் காணக்கிடைக்கின்றது. கிழங்கினைப் பண்டமாற்றுப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தியுள்ளனர் என்பதனையும் அறிய முடிகின்றது. கிழங்கு அகழ்வதற்காக வெட்டப்பட்ட குழி, முதலில் அகழ்ந்தவர்க்கு உரித்தாதலும், அதனைப் பிறர் அகழாமையும் மலைவாழ் மக்களிடம் காணப்படும் இயல்பாக இருந்துள்ளதனை அறியமுடிகின்றது. இத்தகைய ஒழுங்குமுறையினைக் காணும் பொழுது, குறிஞ்சி நில மக்கள் கிழங்கினைப் பயிர் செய்யாமல் இயற்கையாகவே மலைகளில் கிடைக்கப்பெற்ற உணவுப் பொருளாக இருந்துள்ளதை ஒருவாறு உணரமுடிகின்றது. கானவன், அகழ்ந்த குழியில் கிழங்கு முற்றாமை கண்டு, பிற்றை நாள் அகழ்ந்ததை, குறுந்தொகைப் பாடலானது (குறுந். 379 : 1-2) குறிப்பிடுகின்றது. கானவர் கிழங்ககழ்வதற்கு நெடுங்குழி தோண்டிய செய்தியினை ஐங்குறுநூற்றுப் பாடலானது (ஐங். 208 : 1-2) குறிப்பிடுகின்றது.

தேனெடுத்தல்

குறிஞ்சி நிலத்தில் மரங்கள் மிகுதியாகக் காணப்பட்டதால் தேன் மிகுந்து காணப்பட்டது. குறிஞ்சி நில மக்கள் தேனெடுக்கும் தொழிலில் ஈடுபட்டனர். தேன் என்பது மலையின் வளத்தினைக் குறிக்கும் ஒரு பொருளாக திகழ்ந்திருக்கின்றது. தேன் சிறந்த உணவுப் பொருள் என்பதனை நற்றிணைப் பாடலானது, வண்டுகள் உண்ணுமாறு மலர்ந்த கரிய அடிப்பகுதியைக் கொண்ட வேங்கை மரத்தின் பெரிய கிளையிலே தொடுத்த கொழுவிய கண்களையுடைய தேனடையில் தேனீக்கள் மொய்த்தலால் தேன் கசிந்து கல்லின் குழிகளிலே வடியும். குறவர்களின் இளமகார் அதனை வழித்துண்பர். அவர் உண்டது போக எஞ்சியதை மெல்லிய தலையுடைய மந்தியின் வலிய குட்டிகள் சென்று உண்ணும் என்பதனை  (நற். 168 : 1-5) என்ற பாடல் வரிகள் விளக்குகின்றது. தேனை எடுப்பதற்குக் கருவிகளை பயன்படுத்தியுள்ளனர் என்பதனை மலைபடுகடாம் பாடலானது (மலைபடுகடாம், 315-317), முசுக்கலை தன்னால் ஏறமுடியாது என்று செயலற்றுப் போகக் காட்சிக்கு இனிய உயர்ந்த மலையில் நிலைபேறுண்டாகக் கூட்டி நட்ட கண் ஏணி வழியாகச் சென்று, பெரிய பயன் உண்டாகுமாறு, தேனீக்கள் திரட்டிவைத்த தேனை அழித்துக் கொண்டு வந்ததனைக் குறிப்பிடுகின்றது. இதனைப் போன்றே, மலையின் பக்கத்தில் உயர்ந்த மரங்களிலும், பாறைகளிலும் உள்ள தேனடைகளை எடுப்பதற்கு கண்ணேணி மற்றும் தமாலம் என்னும் கொடியினைப் பயன்படுத்தி ஏறியுள்ளனர் என்பதனை (நற். 292 : 1-3), (கலி. 39 : 9) என்ற இருபாடல்களின் மூலம் அறியலாம்.

வேட்டையாடுதல்

ஆதிகாலத்தில் உணவிற்காக வேட்டையாடிய மனிதன், உணவினை உற்பத்தி செய்யக் கற்றுக்கொண்ட பின்னரும் இன்றுவரை வேட்டையாடுதல் என்னும் தொழிலினைத் தொன்மமாகத் தொடர்கின்றான். வேட்டைத் தொழில் என்பது வீரத்தினை வெளிப்படுத்தும் கலையாக இன்று விளங்குகின்றது. குறிஞ்சி நில மக்கள் வேட்டைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்பதைச் சங்கப் பாக்கள் எடுத்துரைக்கின்றன. அவர்கள் புலி வேட்டை, யானை வேட்டை, மான் வேட்டை போன்ற பல வேட்டைகளில் ஈடுபட்டுள்ளனர். நாய்களைப் பழக்கி வேட்டைக்குப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், வலையைப் பயன்படுத்துதல், பொறி வைத்தல் போன்ற நுட்பமான முறைகளை கையாண்டுள்ளனர் என்பதனை (அகம். 172 : 6-10), (அகம். 58 :3-4), (நற். 276 : 1-3), (குறுந். 272 : 4-5), (அகம். 182 : 5-8), (அகம். 272 : 13-15), (நற். 212 : 1) என்ற பாடல்களின் மூலம் அறியலாம்.

முடிவுரை

குறிஞ்சிநிலப் பகுதிகளுக்கு ஏற்ப மக்கள் தங்கள் வாழ்விடங்களை அமைத்துக் கொண்டனர். அங்கு நிலவும் தட்ப வெப்பநிலை, பருவ காலங்கள், அந்நிலத்தின் தன்மை, நீர் நிலைகள் போன்ற இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து தங்களது தொழில்களை அமைத்து செழிப்புடன் வாழ்ந்தனர் என்பதனையும், குறிஞ்சி நிலம் சார்ந்த தொழில் முறைகள், நுணுக்கங்கள் போன்ற செய்திகளையும் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. நிலவியல் பகுப்புகளினால் விளைந்த தொழில்களானது, பழைமையான தொழில்கள் என்று தற்காலத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள தொழில்களுடன் ஒத்துப்போவதனையும் அறியமுடிகின்றது.

துணைநூற்பட்டியல்

  1. இளம்பூரணர் (உரை), தொல்காப்பியம் பொருளதிகாரம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. முதற்பதிப்பு (1986)
  2. கார்த்திகேசு சிவத்தம்பி, பண்டைத் தமிழ்ச் சமூகம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, இரண்டாம் பதிப்பு (2017)
  3. முனைவர் ப. சரவணன், சங்க காலம், கிழக்கு பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு (2015)
  4. பெ. மாதையன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, இரண்டாம் பதிப்பு (2010)

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி – 627 008.

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சங்க கால நிலவியல் பகுப்புகளின் அடிப்படையில் விளைந்த குறிஞ்சிநிலத் தொழில்கள்

  1. ஆய்வாளருக்கு வணக்கம் 
    கட்டுரைக்கு வாழ்த்துக்கள்… 
    ஆய்வாளர் சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டாமல் எண்களை மட்டும் சுட்டுவது ஆய்வின் சரியான போக்கல்ல தலைப்பு முழுமையடையா நிலையும் ஏற்பட்டுள்ளது.

  2. Dinesh. K அவர்களுக்கு வணக்கம்..தங்கள் கருத்துக்கு நன்றி!..ஆய்வுக் கட்டுரையின் நீளம் கருதி்யே பாடல் எண்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்..மேலும், ஆய்வுத் தலைப்புக்கு ஏற்ப போதுமான இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளேன் என்பது என் கருத்து..நன்றி!

  3. மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.எளிய முறையிலும், சிறியவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.மேன்மேலும் சிறப்புடைய கட்டுரைகளை வழங்க எனது வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *