அன்பிற்கினிய நண்பர்களே!

கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன், உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

Photo by Shanthy Mariyappan

சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப்படத்தை திருமதி ராமலஷ்மி, ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.07.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்ந்தெடுப்பார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வலர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி (168)

  1. பல்லுயிரும் இன்புறத்தக்க பூவுலகம் படைத்திடுவோம்…
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
    -ஆ. செந்தில் குமார்.

    பண்டு ஒர் காலத்தில்… வண்டு உலாவும் சோலையில்…
    கண்டு மாந்தர் மகிழ்ந்திட்டார்… மனிதன் போன்ற குரங்கினை…
    இன்று உள்ள நிலையிலே… கானம் யாவும் அழிந்ததால்…
    உண்டு வயிற்றை நிரப்பவே… அது ஊரைநாடி வருகுதே…!

    வானரத்தைக் கண்டதும்… மனம் மகிழ்ந்திடும் மாந்தரும்…
    மன முவந்து உணவினை… அதற் களித்து களித்திட்டார்…
    அன்பு மிக்க இச்செயல்… அதன் இயல்புகளைக் குலைத்திடும்…
    என்பதை உணர்ந்து நாம்… இயற்கைச் சூழல் பேணுவோம்…!

    மனிதன் என்ற பிறவியே… பரிணாம வளர்ச்சியின் உச்சமாம்…
    ஆன போதும் இவ்வுலகமே… அனைத் துயிர்க்கும் சொந்தமாம்…
    வன உயிரினங்கள் வாழவோர்… உரிய சூழல் செய்குவோம்…
    காணம் போன்று கானத்தைப்… போற்ற நாமும் கற்குவோம்…!

  2. படைப்பின் அதிசயம்..!
    ===================

    உலகம் முழுதும் உயிர்கள் படைத்தான்
    உலகில் முதலாம் ஒருவனே இறைவன்.!

    அண்டவுயிர்க் கெல்லாம் அறிவைக் கொடுத்து
    ஆண்டுகள் பலவும் ஆயுளாய்க் கொடுத்தான்.!

    இயற்கை நமக்களித்த இன்ப வாழ்க்கை
    செயற்கை கலந்திடாது செலவ்ழிக்கப் பழகு.!

    எத்தனை உயிர்கள் எண்ணிலா உயிர்கள்
    அத்தனும் கொடுத்தான் ஆசை கொண்டே.!

    அன்புடன் நடக்க அனைத்து உயிரிடம்
    அன்பாய்ப் பழகும் அரிய பிறவியாம்.!

    அதுதான் மனிதப் பிறவி
    இதுவே நமக்கு ஈடிலா அருளே.!

    குரங்கு முதல் குதிரைபோலப் பலவாக
    இரக்கமிகு ஜீவியை இவ்வுலகில் காணலாம்.!

    அப்பன் உதவுவார் அம்மா காப்பாளென.!
    எப்பவுமே இவ்வுயிர் என்றும் வாழ்வதில்லை.!

    சனனம் முதற்கொண்டு சாவு வரையில்
    தனக்குதவி தன்கையில் தானேன அறியும்.!

    மனிதன் போலிதற்கு மனமாசு இல்லை
    தனித்தன்மை கொண்டு தானாக வாழ்ந்திடும்.!

    விலங்கின வாழ்வை வைத்து மனிதனும்
    உலகில் தெரிந்துலவ எத்துணையோ உளது.!

    பரந்தமனம் படைத்த பகவனுமே
    மரணத்தால் மனதை அறிய வைத்தானே.!

    ===================
    நேரிசை ஆசிரியப்பா
    ===================

    பொருள்:: அத்தன்=இறைவன்

  3. குறைவில்லை…

    குரங்கி லிருந்து பிறந்ததாகக்
    கூறிக் கொள்ளும் மானிடனே,
    குரங்கைக் குறைவாய் எண்ணாதே
    குட்டியை வயிற்றில் கொள்வதைப்பார்,
    குரங்குச் சேட்டை பண்ணாமல்
    குரங்கைத் துணையாய்க் கொண்டிடவே
    குரங்குப் படைக்கும் உணவளித்துக்
    கொள்வாய் உயர்வு இராமனாகவே…!

    செண்பக ஜெகதீசன்…

  4. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் எனவே குரங்குதான் மனிதனுக்கு மூலம். அதேபோல நம்முடைய மனமும் ஒரு குரங்கு போலத்தான், ஓரிடத்தில் நிலைபெறாது, நில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும். “மனித மனம் ஒரு குரங்கு”, என்கிற திரையிசைப் பாடல் நினைவுக்கு வருகிறதா.?

    இப்போது இதைப்பற்றிய ஒரு வெண்பா

    மனம் ஒரு குரங்கு..
    =================

    மனிதனின் மூலமாம் மந்திதான் ஆகும்
    மனித மனமொரு மந்தி.! – தனியாகச்
    சிந்திக்கும் நம்மனது சீராக நில்லாது.!
    சிந்தனை நிற்கச் சிறப்பு.!

    ===========================
    இரு விகற்ப நேரிசை வெண்பா

  5. ராமனொடு சுக்ரீவனும், அனுமனும் நண்பனானதைச் சிந்தித்தால், விலங்கும் மனிதனும் நட்புக்கு இலக்கணமாக இராமாயணத்தில் மிக உயர்வாகவே சொல்லப்பட்டிருக்கிறது. இது போற்றத்தக்க ஒன்று.

    இராமன் சுக்ரீவன்
    ================

    மந்தியும் மாந்தரும் மாண்புமிகும் நண்பர்கள்.!
    அந்தயிதி காசத்தில் அன்றைக்கே வந்தது.!
    விந்தையாம் வில்ராமன் வானர நண்பர்கள்.!
    புந்தியில் வைத்ததைப் போற்று.!

    =============================
    ஒரு விகற்ப இன்னிசை வெண்பா
    =============================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *