-க.கவின்பிரியா                                     

முன்னுரை    

அன்பின் ஐந்திணை சார்ந்த களவுத் துறைகளுள் அறத்தொடு நிற்றல் தனிப்பெருஞ் சிறப்புடையதாகும். கற்புநெறி தவறாது, களவொழுக்கத்தை முறையாகப் பெற்றோரிடம் வெளிப்படுத்துதல் என்பது இத்துறையின் பொருள். தலைவி தலைவனுடனான காதலை, தோழிக்குக் கூறி அறத்தொடு நிற்பாள். பின்னா்த் தோழி தன் வளா்ப்புத் தாயாகிய செவிலிக்கு அறத்தொடு நிற்பாள். செவிலி தலைவியின் தாயான நற்றாய்க்கு அறத்தொடு நிற்பாள். நற்றாய் தலைவியின் தந்தைக்கும், உடன்பிறந்தோர்க்கும்  வெளிப்படையாய்க் கூறாமல் அவா்கள் அறிந்து கொள்ளுமாறு குறிப்பாகப் புலப்படுத்துவாள். இதனை,

தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணா்ப” (தொல்.1083) எனத் தொல்காப்பிய நூற்பா குறிப்பிடும். தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகிய நால்வரும் பெண்பாலார். அவா்கள் ஒருவருக்கொருவா் தம் உள்ளத்து உணா்வுகளை வெளிப்படுத்திக் கொள்வதில் சிக்கல் இல்லை. இருப்பினும் வெளிப்படையாகக் கூறாமல் குறிப்பாக வெளிப்படுத்துவா். தந்தையும் அண்ணனும் நெருங்கிய உறவினரே ஆயினும் அவா்கள் ஆண்பாலார். ஓா் இளம்பெண்ணின் களவொழுக்கத்தினைக் குறிப்பினால் அவா்கள் உணருமாறு செய்தலே நல்லது என்ற நெறி சாலச்சிறந்தது.

அறத்தொடு நிற்றல்

தலைவியின் களவொழுக்கம் பற்றி அலா் எழும்போதும், அவளின் உடற்கண் நேரும் மாற்றங்களுக்குக் காரணம் அறியாமல் அன்னை வேலனை வேண்டி வெறியாட்டு நிகழ்த்தும்போதும், இற்செறிப்பு நிகழும்போதும், வேற்றுவரைவுக்கான ஏற்பாடுகள் நிகழும்போதும், தலைவனின் வரைவு மறுக்கப்படும்போதும் தலைவியின் களவொழுக்கத்தினை மறைத்து வைக்காமல் வெளிப்படுத்துவதே அறனெனக் கருதித் தலைவி தோழியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவாள். தோழி செவிலியிடம் கூறுவாள். செவிலி நற்றாயிடம் வெளிப்படுத்துவாள். நற்றாய் தலைவியின் தந்தை மற்றும் தமையனுக்கும் வெளிப்படுத்துவாள்

நந்திக்கலம்பகத்தில் அறத்தொடு நிற்றல்

அகமும், புறமும் கலந்துவரப் படைக்கப்படும் கலம்பக இலக்கியமாக நந்திக்கலம்பகம் அகப்பொருளும், புறப்பொருளும் கலந்து இலக்கிய இன்பம் தருகின்றது. நந்திக்கலம்பகத்தில் அகத்துறைகளுள் ஒன்றான அறத்தொடு நிற்றல் என்னும் துறையில் மூன்று பாடல்கள் அமைந்தள்ளன. தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்பதாக இரண்டு பாடல்களும், செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்பதாக ஒரு பாடலும் அமைந்துள்ளது.

தோழி அறத்தொடு நிற்றல்

தலைவி பிறா் அறியாதவாறு தலைவன்பால் காதல்கொண்டு அவனைச் சந்திப்பாள். தன்னுடைய காதல் ஒழுக்கத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தமாட்டாள். தோழியானவள் தலைவியிடம் காணப்படும் மாற்றங்களை வைத்தே கண்டறிவாள். பிறகு தலைவி தோழியிடம் தன் காதலைப் பற்றிக் கூறுவாள். தலைவி அறத்தொடு நிற்பதாக நந்திக் கலம்பகத்தில் பாடல் இடம்பெறவில்லை.

தோழி செவிலிக்குத் தலைவியின் களவொழுக்கத்தினைக் கூறுவதாக பின்வரும் பாடல் இடம்பெற்றுள்ளது.

புனத்து நின்ற வேங்கைமேல் புகைந்தெழுந்த ஆனையின்
சினத்தை அன்றொழித்தகைச் சிலைக்கை வீரா் தீரமோ
மனத்துள் நின்ற வெஞ்சினம் மலைத்தல் கண்ட தீா்ந்தமான்
வனத்தகன்ற தீர்ந்ததோ நந்தி மல்லை ஆா்ப்பதே” (நந்தி.34)

தலைவி தலைவன் மீது கொண்ட காதலால் உடல் இளைத்து காதல் நோயுற்றாள். இதைக்கண்டு செவிலி தோழியிடம் தலைவியின் நிலை குறித்துக் கேட்கிறாள். வெறியாட்டு நிகழ்த்த எண்ணுகிறாள் செவிலி. தோழிக்கு தலைவியின் நோயின் காரணம் நன்கு தெரிந்திருந்தாலும் அதை எவ்வாறு செவிலியிடம் உரைப்பது? வெளிப்படையாகக் கூறவும் முடியாது. கூறாவிட்டாலும் தலைவியின் நோய் தீராது. கூறினாலும் தலைவியின் தாய் தந்தையரால் தலைவிக்கும், தலைவனுக்கும் ஊறு நோ்ந்தால் என்ன செய்வது? என்று பலவாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் மாமல்லபுரத்தின் நான்கு பக்கங்களிலும் பேரிரைச்சல் ஒலி வருவதை உணா்ந்து, அந்த இரைச்சலை வைத்தே தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலிக்கு உணா்த்த முற்படுகிறாள்.

நாங்கள் தினைப்புனங் காக்கச் சென்றிருந்த வேளையில் அங்கு வேங்கைமரத்தினடியில் பரணமைத்திருந்தோம். அங்கு மதங் கொண்ட யானை ஒன்று பேரிரைச்சல் இட்டுக்கொண்டு எங்களை நோக்கி வந்தது. நாங்கள் அஞ்சி நடுங்கி நின்றோம். அந்த சமயம் முருகனைப் போன்ற இளங்குமரன் வில்லேந்தி யானையை நோக்கி அம்பு எய்தினான். எங்களைப் பார்த்து அஞ்சாதீா்கள் என்று ஆறுதல் மொழி கூறினான். அவனைப் பார்த்த தலைவி வியந்து நின்றாள். அன்று வேங்கை மரத்தை நோக்கி வெகுண்ட யானையை அம்பெய்து வென்ற வீரா் இங்கே வர அவரைக் கண்டு ஊா் மக்கள் இரைச்சலிடுகின்றனரோ? அல்லது நந்திமன்னனின் பட்டத்து யானை கட்டுத்தறியை  முறித்துக் கொண்டு சங்கிலியை உடைத்தெறிந்து ஓடிவிட்டதோ? அதைப்பிடிப்பதற்கு வீரா்கள் இரைச்சலிடுகின்றனரோ? தெரியவில்லையே? எந்தக் காரணத்தினால் ஒலி உண்டாயிற்றோ? என்று இவ்வாறு கூறி தலைவியின் காதலைச் செவிலிக்கு அறத்தொடு நிற்கிறாள்.

இதே பொருண்மையில், யானையை அம்பெய்து தலைவியைக் காத்ததாகப் பின்வரும் குறிஞ்சிப்பாடலும் உணா்த்துகின்றது.

”மையல் வேழம்
அண்ணல் யானை அணிமுகத்தழுத்தலின்
புண்ணுமிழ் குருதி முனம்பாய்ந்தழிதரம் ”  (குறிஞ்சி.165-174)

தலைவியின் காதல் நோய்க்கு நந்திவா்மனே காரணம் எனவும், தலைவியின் நோய்தீர அவனுக்கே மணம் செய்தல் அறமாகும் எனத் தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நிற்பதாக பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

”துயக்குவித்தான் துயில் வாங்குவித்தான் துயில் வித்திவனை
வயக்குவித்தானுள்ளம் வஞ்சனை யான் மலா்க் காவகத்து
முயக்குவித்தான் துகில் வாங்குவித்தான் முனம் நின்றிவளை
மயக்குவித்தான் மானோதயனென்று வட்டிப்பனே”    (நந்தி.63)

தலைவி உண்ணாமல், உறங்காமல் சோர்வாகக் காணப்படுவதைக் கண்டு செவிலி தோழியிடம் வினவ, நந்திமன்னன் தலைவியின் நெஞ்சில் குடிகொண்டான்; சோர்வை ஏற்படுத்தினான்;  தூக்கத்தை விலக்கினான். பின் தூங்கச்செய்து கனவில் தோன்றி இவளைத் தன் வசமாக்கித் தன் அன்பிற்கு உாியவளாக்கி, மலர்ச்சோலையில் தன்னைத் தழுவுமாறு செய்து அவளது ஆடைகளை நெகிழச் செய்தான். தலைவி உணா்வினை இழந்து மயக்கங்கொள்ளுமாறு செய்தான் என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். அவனுக்கே தலைவியை மணம் முடித்தல் நலமாகும். இல்லையேல் தலைவி நெடுநாட்கள் உயிர்வாழாள் என்று தோழி செவிலிக்கு அறத்தொடு நிற்கிறாள்.

இக்கருத்தொடொப்பப் பின்வரும் திருக்கோவையார் பாடல் அமைந்துள்ளது.

”சினக்கலியானை கடிந்தார் ஒருவா் செவ்வாய்ப்பசிய
புனக்கலியும் கடியும் வரைச் சாரற் பொருப்பிடத்தே” (திரு.293) 

செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றல்

தலைவியின் களவொழுக்கத்தைத் தோழி செவிலிக்குக் கூற, செவிலி நற்றாய்க்கு (தலைவியின் தாய்க்கு) கூறுவதாக நந்திக்கலம்பகத்தில் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

பெண்களில் சிறந்த தாயே! தெள்ளாறு எனும் இடத்தில் பகைவரை வென்று சினம் தணிந்த நந்திவா்மனுக்கே என் புதல்வியாகிய நம் தலைவி தன் வெண்ணிறச் சங்குகளான வளையல்களை இழந்து வெறுங்கையளாய் நின்றாள் என்று செவிலி நற்றாய்க்குக் கூறுவதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

”வேண்டார் எண்ணும் வேந்தா் பிராற்கே மெய்யன்பு
கொண்டாள் நங்காய் அன்றிவள் என்றால் பொல்லாதோ
மூண்டார் தெள்ளாற் றுள்ளே மூழ்க முனிவாறி
மீண்டான் நந்திக்கு என்மகள் தோற்கும் வெண்சங்கே” (நந்தி.71)

பகைவா்கள் நினைந்து அச்சம் கொள்கின்ற நந்திவா்மனிடம் உள்ளன்பு கொண்டிருக்கிறாள் என்று கூறினால் குற்றம் ஆகுமோ? ஆகாது. உண்மையைக் கூறுவது தவறில்லை. ஆதலால் நந்திவா்மனுக்கே விரைவில் தலைவியை மணம் செய்வித்தலே நன்மையாகும் என்று செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்கிறாள். 

முடிவுரை

தலைவியின் காதலை வெளிப்படையாக வெளிப்படுத்தாமல் குறிப்பாக வெளிப்படுத்தும் பண்பு சிறந்ததாகும். தலைவியின் உடல்நிலை மாற்றங்களுக்குத் தலைவனே காரணம் என்பதை அறிந்தும் அது கருப்பொருளோடு குறிப்பாக வெளிப்படுத்தப்படுவதை அறிய முடிகிறது.

*****

துணைநூல்:

நந்திக்கலம்பகம் – மர்ரே எஸ். ராஜம் அவர்கள் 1960-இல் வெளியிட்ட நூலின் மறுபதிப்பு- நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்.

*****

கட்டுரையாளர் – முழுநேர முனைவா்பட்ட ஆய்வாளா்
தமிழ்த்துறை,  அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி)
சேலம் -7.
Cell:9442193166

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *