Featuredஇலக்கியம்கட்டுரைகள்

மதுவிலக்கும் மனிதனும்

மனித சமுதாயம் மாட்சிமை பெற்று விளங்க இலக்கியங்கள் பல தோன்றி நன்னெறி காட்டின. ஒருவனுக்கு ஏற்படுகின்ற தீமையும் நன்மையும் பிறரால் ஏற்படுவது கிடையாது என்னும் கருத்து, ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ முதலிய கூற்றுகளின் வழி உணர்த்தப்பட்டன. தனிமனிதனின் சுய ஒழுக்கமே அவனுடைய சமூகத்தின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் நிலைக்களனாக அமைகிறது. பேரின்பத்தைத் தேடாமல், சிற்றின்பத்தில் மகிழ்ந்தும், மூழ்கித் திளைத்தும் தங்களைத் தாமே அழித்துக் கொள்ளும் நிலைக்குப் பலர் சென்றனர். இந்நிலையில் தமிழ்மொழியில் இறவாத புகழுடைய பெருநூல்கள் பல தோன்றி தீய வழியில் செல்வோரை விலக்கி நல்வழிகாட்டப் பயன்பட்டன.

தனிப்பட்ட ஒருவனின் செயல்பாடென்று உலகில் எதுவும் இல்லை. ‘ஒருவரறிந்தது உலகறிந்தது’ என்பர். அதைப்போன்றே ஒருவர் செய்தது உலகம் செய்ததாக அமைந்து விட வாய்ப்புண்டு. நல்லொழுக்கம் இன்றி அறிவை மழுங்கச் செய்து, தன்னையும் தன்னைச் சார்ந்தோரையும் துயரத்தில் வீழ்த்தும் சக்தி மதுவிற்கு உண்டு. மதியை மழுங்கச் செய்யும் மதுவினால் ஏற்படும் தீங்குகளை இலக்கியங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.

நுண்மான் நுழைபுலம் கொண்ட சான்றோர் பெருமக்கள் அவ்வப்போது தோன்றி மதுவிற்கு எதிராகப் பரப்புரை மேற்கொண்டனர். சிலருக்குச் சான்றோர் கருத்துகள் தேன் வந்து பாய்ந்தது போலவும் பலருக்குத் தேள் கொட்டியது போலவும் அமைந்தன. உலகப்பொதுமறையாம் திருக்குறளில் கள் எனும் மதுவினால் ஏற்படும் தீங்கினை வள்ளுவப் பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
‘துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்’
(குறள்-926)
உறங்குபவர் உயிருடையரவராக இருப்பினும் அறிவும் மனவுணர்வும் அந்நிலையில் இல்லாமையால் இறந்தவராகக் கருதப்படுவர். அதுபோல், கள்ளுண்பவர் இறவாமல் இருப்பினும் அறிவையும் உடல்நலத்தையும் இழந்து கொண்டே இருப்பதால், நாள்தோறும் நஞ்சு உண்பவராகக் கருதப்படுவர். இக்குறளின் வழி உயிரை அணு அணுவாகக் கொல்லும் நஞ்சாக மது விளங்குவது புலனாகிறது.
சிலப்பதிகாரக்காப்பியத்தில் கோப்பெருந்தேவியின் சிலம்பைக் கோவலன் திருடினான் என்ற பொய்ச்செய்தி பாண்டிய மன்னன் காதில் விழ, ஆராய்ந்தறியாத மன்னன் திருடியவனைக் கொன்று அச்சிலம்பு கொணர்க என உத்தரவிட்டான். சூழ்ச்சி மிகுந்த பொற்கொல்லன், காவலர்களைக் கோவலன் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றான். அப்போது காவலர்கள்,நல்லவனுக்குரிய இலக்கணமுறைமையோடு இவன் காணப்படுகிறான். இவன் கள்வன் அல்லன் என்றனர். கொலை செய்வதில் குறிக்கோள் கொண்டிருந்த கொல்லன் கள்வர் திறன் பற்றிப் பலவாறு கதை கூறினான். இச்சூழலில் கள்ளுண்ட காவலன், தன் வாளால் கோவலன் உடலில் நடுவே வெட்டினான் என்பதை,

‘ கல்லாக் களிமகன் ஒருவன் கையில்
வெள்வாள் எறிந்தனன்! விலங்கு ஊடு அறுத்து’
– (சிலப்பதிகாரம்-கொலைக்களக்காதை)

என்ற வரிகள் உணர்த்தியுள்ளன. கள்ளுண்பவன் சிந்தை தெளிவற்றது. சூழ்ச்சிக்கு மதிமயங்கிய கள்ளுண்டவன், கோவலனைக் கொன்றானென்பதை அறிய முடிகிறது.

காவிரிப்பூம்பட்டினத்தில் ஆதிரை என்ற கற்பரசி வாழ்ந்தாள். அவள் கணவன் சாதுவன் என்பவன் மது முதலிய தீயசெய்கைகளால் பொன்னையும் பொருளையும் இழந்தான். பின்னர் நல்லறிவு பெற்று வணிகம் செய்யக் கருதி கடல் வழிப் பயணம் மேற்கொண்டான். நடுக்கடலில் கப்பல் செல்லும்போது சுழற்காற்றால் கப்பல் சிதைந்தது. சிதைந்ததில் கிடைத்த மரமொன்றை வைத்து ஒரு தீவில் கரையேறினான். அத்தீவானது நரமாமிசம் உண்ணும் நாகர்கள் வாழ்கின்ற பகுதி. சாதுவனைக் கண்ட நாகர்கள் தங்கள் தலைவனிடம் அழைத்துச் சென்றனர். நாகர் மொழியை அறிந்திருந்த சாதுவன் தலைவரிடம் தனக்கேற்பட்ட துன்பத்தை எடுத்துரைத்தான். மனமிரங்கிய தலைவன் சோர்வுற்ற இவனுக்கு வெம்மையான கள்ளும் மாமிசமும் வேண்டிய மட்டும் கொடுங்கள் எனச் சேவகர்களிடம் கூறினான். இதைக் கேட்ட சாதுவன் திடுக்கிட்டு, கொடுமையான சொற்களைக் கேட்டேன். இவை வேண்டேன் என்கிறான்.

தலைவன், மகிழ்ச்சியைத் தரும் கள் முதலானவற்றை வேண்டாம் எனக் கூறியதற்கான காரணத்தைக் கேட்க சாதுவன் பின்வருமாறு பதிலளித்தான்.
‘ மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும்
கயக்குஅறு மாக்கள் கடிந்தனர் கேளாய்’
– (மணிமேகலை- ஆதிரை பிச்சையிட்ட காதை)

தலைவனே! அறிவு ஒன்றே மானிடப் பிறவியில் நாம் பெற்ற செல்வங்களுள் முதன்மையானது. அவ்வறிவொன்றே விலங்குகளிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுகிறது. அவ்வறிவால் நன்மை தீமைகளைப் பகுத்து உணர்கிறோம். அறிவே நம்மை உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லும். மதுவானது அறிவை மயக்கி கீழ்நிலைக்கு நம்மைக் கொண்டு செல்லுமென்று உணர்த்தினான்.

திருவாங்கூரில் மதுவிலக்குத் தெடங்கியபோது, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கவிமணியால் பாடல் பாடப்பட்டது.

‘ வள்ளலெங்கள் காந்திமகான் வாக்குப் பலித்ததடா!
துள்ளுமுன் பேயாட்டம் தொலைந்ததடா!- கள்ளரக்கா!
வஞ்சிவள நாட்டிலுன் வாழ்வற்றுப் போச்சுதடா!
நெஞ்சிலுணர்ந் தோடடா! நீ.
– (மலரும் மாலையும்- மதுவிலக்குப் பாடல்கள்)

மனிதனின் சிந்தனையை அழிக்கும் கள்ளினை, ‘கள்ளரக்கன்’ எனப் பாடியுள்ள நிலை கள்ளினால் ஏற்பட்ட தீமையைப் பறை சாற்றுகிறது.
‘மதுவை ஒழிப்போம் , மதியைப் பெறுவோம்’

– முனைவர் கி.இராம்கணேஷ்

Share

Comment here