-நிலவளம் கு.கதிரவன்

இன்றைய விஞ்ஞான வளர்ச்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகத்தில் ஒரு நாடு மற்றொரு நாட்டோடு தொடர்பு கொள்ளவும், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் தூதரை நியமித்து, ஒவ்வொரு நாட்டிலும் தூதரகத்தைத் திறந்து நிர்வகித்து வருகிறது.  ஆக தூது என்பது கால மாற்றங்கள் ஏற்பட்டாலும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம். இதற்கெல்லாம் முன்னோடியாக நமக்கு தூது என்பதை அறிமுகப்படுத்துவது சங்க இலக்கியங்கள் ஆகும்.  பொதுவாக அகத்திணையில் தூது பற்றிய நிகழ்வுகள் அதிகமாக இருக்கும்.  அதே போன்று புறத்திணையிலும் தூதுக் காட்சிகள் காணக் கிடைக்கின்றன.

 சங்க இலக்கியங்களின் தோற்றத்திற்குப் பின்னர் கி.பி.14ஆம் நூற்றாண்டில் தூது நூல் தோன்றியது. தமிழ் மொழியில் தோன்றிய முதல் தூது நூல்  ”நெஞ்சுவிடு தூது”  என்னும் நூலாகும். ”எந்த ஓர் இலக்கியமும் திடீரென்று தோன்றிவிடாது;  ஓர் இலக்கிய வகை தோன்றுவதற்குரிய கூறுகள் அதற்கு முன்னால் உள்ள இலக்கண நூல்களிலும், இலக்கிய நூல்களிலும்  காணப்படும்” என்கிறார் முனைவர். தா. ஈஸ்வரபிள்ளை.  நெஞ்சுவிடு தூது என்ற நூலிற்குப் பிறகு தமிழ்விடு தூது, அன்னம்விடு தூது, மேகம்விடு தூது, பழையதுவிடு தூது, மான்விடு தூது, கிள்ளைவிடு தூது போன்று நூற்றைம்பதற்கும் மேற்பட்ட தூது நூல்கள் தமிழ் இலக்கியத்தில் தோன்றியுள்ளன.

 சங்க இலக்கியங்கள், காப்பிய இலக்கியங்கள், புராணங்கள் போன்றவற்றில் தூது பற்றிய நிகழ்வுகள் ஏராளமாக உள்ளன.  புறநானூற்றில் பிசிராந்தையார் அன்னத்தை தூது விடுவதாக அமைந்த நிகழ்வு, அநேகமாக தூது இலக்கியத்தில்  முதல் பாட்டாக இருக்கும் என்று கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

தூது செல்வோர் இலக்கணம்:

தூது  செல்வோரும், தூதைப் பெறுவோரும் ஆணாக இருக்கலாம்.  பெண்ணாக இருக்கலாம். தூது அனுப்புவோர் உயர்திணை மாந்தராகவோ அல்லது ஓர் அஃறிணைப் பொருளிடம் தம் செய்தியாகக் கூறி  அனுப்பலாம்.  சங்க இலக்கியத்தில் அரசனுக்காகப் புலவர்களும், காதலர்களுக்காகத் தோழியும், பறவைகள், மேகங்கள் எனத் தூது சென்றதற்கான காட்சிகள் பல உள்ளன.  தூது செல்பவருக்கு முக்கியமான பண்புகளாக அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை ஆகியவை முக்கியக் கூறுகளாக கூறப்படுகின்றன.  மேலும் தூது செல்வபவருக்குத் துணிவு, துணை, தூய ஒழுக்கம் ஆகிய மூன்றும் அவசியம் என்கிறார் திருவள்ளுவர்.

       ” தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
        வாய்மை வழியுரைப்பான் பண்பு.”       (தூது: 688)

புறநானூற்றில் தூது:

 சங்க இலக்கியத்தில் எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான புறநானூற்றில் தூது பற்றிய பதிவுகள் உள்ளன.  ஈகை, வீரம், புகழ் கொண்டிருந்த  அதியமான் நெடுமான் அஞ்சி மீது தொண்டைமான் பகைகொண்டு படை திரட்டியிருந்தான்.  இதனையறிந்த ஔவையார் போரினை நிறுத்தும் பொருட்டு, தொண்டைமானிடம் தூதாகச் சென்று அறிவுரை சொல்லி போரினை நிறுத்துகிறார்.  அதேபோன்று பிசிராந்தையார் என்னும் புலவர் உறையூர் கோப்பெருஞ்சோழனுக்கு அன்னச் சேவலையே தூதாக விடுகிறார்.  இக்காட்சியை மிகவும் நயம்பட புறநானூறு படம்பிடித்துக் காட்டுகிறது.

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!

தூதில் அன்னப் பறவைக்கு சங்கஇலக்கியங்கள் சிறப்பிடம்  தந்துள்ளன. கலித்தொகை, நெடுநல்வாடை, புறநானூறு, பரிபாடல், கம்பராமாயணம், திவ்யப்பிரபந்தம், பொருநராற்றுப்படை, சீவக சிந்தாமணி போன்ற இலக்கியம் மற்றும் காப்பியங்களில் அன்னத்தைப் பற்றிய குறிப்புகளும், அவை தூது சென்றதற்கான நிகழ்வுகளும் விரிவாக கூறப்பட்டுள்ளன.

 வடமொழியில் ”ஹம்ஸம்” என்றால் அன்னத்தைக் குறிக்கும். ஆண் அன்னம் அன்னச் சேவல் என குறிப்பிடப்படுகிறது. ”சேவலோங்கு உயர்கொடி யோயே” ( பரிபாடல்: 4: 40 ) ஒப்பற்ற உயரப் பறக்கும், உயர்ந்து விளங்கும் கருடச் சேவலை கொடியாக உடையவனே  என பரிபாடல் திருமாலைப் போற்றுகிறது.

       ” மாவிசும்பு ஓழுகு புனல் வறள
        அன்னச் சேவலாய்ச் சிறகர்ப் புலத்தி யோய் ” ( பரி : 3 : 25 – 26 )

கடும்புயலுடன் கூடிய மழை பொழிந்தபோது திருமால் ஒரு  நெடிய அன்னச் சேவலாக வடிவெடுத்து தனது இரண்டு சிறகுகளையும் விரித்து  இந்த உலகத்தை காத்ததாகவும் பரிபாடல் புகழ்கிறது.

நான்முக பிரம்மாவின் மனத்தில் தோன்றிய மகன்களான சனகர்,  சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும், யோகத்தின் சூட்சுமம் மற்றும் அதன் எல்லைகள் குறித்து ஹம்ஸப் பட்சி ( அன்னப் பறவை) வடிவத்தில் உபதேசம் செய்ததாகவும், இதையே ஹம்ஸ கீதை என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

 ஸ்வாமி நிகமாந்த மஹாதேசிகர் ”ஹம்ஸ ஸந்தேசம்” என்ற 110 ஸ்லோகங்களைக் கொண்ட காவியத்தை எழுதியுள்ளார்.  சீதையின் பிரிவாற்றாமையால்  மிகவும்  துன்பப்பட்ட ராமன், சீதையை மீட்க முடிவுவெடுத்து, அதற்கு முன்னர்த் தான் சீதைக்கு தெரிவிக்க வேண்டிய செய்திகளையும், இலங்கைக்குச் செல்லும் வழியையும் ஓர் அன்னத்திடம் கூறி, தூதாக இலங்கைக்கு அனுப்பி, பின்னர் சீதையை  மீட்டதாக ஹம்ஸ ஸந்தேசம்  கூறுகிறது.

 சேவல் என்பதற்கு ”அழகு பொருந்திய” என்று பொருநராற்றுப்படையும், சீவக சிந்தாமணியும் விளக்கம் அளிக்கிறது.  அதே போல் ”சேவலான்” என்றால் விலங்கு, பறவை  போன்றவற்றால் கேடுவிளையாமல் காப்பவன் என்றும், விளை புனங்களைக் காப்பவன் என்றும் கூறுகிறது.

அன்னம் என்பது வெண்மை நிறம் உடைய பறவை என்பது மட்டும்தான் என பலரும் அறிவர். ஆனால் ”காரன்ன முண்மையின் வெள்ளன்னம்” கருமை நிறத்திலும் அன்னம் உள்ளதாக நச்சினார்க்கினியர் கூறுவதிலிருந்து நம்மால் அறியமுடிகிறது.

 பாண்டியன் நெடுஞ்செழியன் அவையில், அரண்மனை முற்றத்தில் அன்ன நிற கவரிமா மற்றும் அன்னப்  பறவை துள்ளி விளையாடின என்கிறது நெடுநல்வாடை.

       ” நெடுமயிர் எகினத் தூநிற வேற்றை
         குறுங்கால் அன்னமோ டுகளும் முன்கடை ”   ( நெடு : 91 – 92 )

பாண்டியன் தனது மரபுக்கு இழுக்கு வருவதாக கருதினால் மயிர் நீப்பின் உயிர் வாழாத கவரிமா போல் உயிர் நீப்பான் என்றும், நீர் நீக்கி பால் உண்ணும் அன்னம்போல் பொய் வழக்கை அறிந்து நீக்கிவிட்டு மெய் வழக்கறிந்து முடிவு கூறுவான்  என்பதை மக்கள் உணர வேண்டும் என்பதற்காக தனது அரண்மனை முற்றத்தில் இடம்பெறச் செய்தான் என்று கூறுகிறார் வித்துவான் வேங்கடராமச் செட்டியார்.

இத்தகைய சிறப்புகள் பல வாய்ந்த அன்னப் பறவையை பிசிராந்தையார் என்னும் புலவர் கோப்பெருஞ்சோழனிடத்தில் தூதாக அனுப்புகிறார்.

அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடுகொள் வென்றி அடு போரண்ணல்
நாடு தலையளிக்கும் ஒண்முகம் போலக்
கோடு கூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலை யாம் கையறுபு இனையக்
குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலை பெயர்குவையாயின்
இடையது சோழ நல்நாட்டுப் படினே
கோழி உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு
எம் பெருங்கோக் கிள்ளி கேட்க
இரும் பிசிர் ஆந்தை அடியுறை எனினே
மாண்ட நின் இன்புறு பேடை அணிய,
நினக்கே தன் நன்புறு நன்கலம் நல்குவன்   ( புறம்: 67 )

பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டதில்லை. ஆனால் இருவருக்குள்ளும் உறுதியான நட்பு.  சோழனை நேரில் பார்க்க மாட்டோமா என்ற  ஏக்கத்தில் அவனின் புகழ், வலிமை, கொடை, அருள் என்னும் நல்லியல்புகளைச்  சொல்லி அன்னத்தை தூது விடுகிறார்.

குமரியின் துறையிலிருந்து வட இமயம் வரை பறக்கும் அன்னச் சேவலை அழைத்து, நீ இமயமலை செல்லும்போது இடைவழியில் உறையூரை ஆளும் எனது நண்பன் கோப்பெருஞ்சோழன் என்னும் மன்னன் உள்ளான்.  நீ சென்று அவனை சந்திக்கும்போது, நான் பிசிர் என்னும் ஊரிலிருந்து ஆந்தையாரின் அடியவன் வந்துள்ளேன் என்று கூறினால், அம்மன்னவன் மனம் மிக மகிழ்ந்து உனது பேடைக்குப் பொன்னாலான அணிகலன்களை மிகுதியாக வழங்குவான் எனக் கூறித் தமது நட்பின் நெருக்கத்தை பிசிராந்தையார் இப்பாடல் வழியே நிறுவுகிறார்.

தொகுப்புரை:

  • சங்க இலக்கியம், காப்பியங்கள், புராணங்களில் தூது செல்வதில் அன்னப்  பறவை முக்கிய இடம் வகிப்பதை அறியமுடிகிறது.
  • நெடுமயிர் எகினத் தூநிற வேற்றை, குறுங்கால் அன்னமோ டுகளும்  முன்கடை, என்ற நெடுநெல் வாடை பாடல் வரிகளில் எகினம் என்பது    கவரிமாவையும், ஏற்றை என்பது ஆண்பாலையும், அன்னம் என்பது      பெண்பாலையும் குறிப்பதால் கவரிமா என்பது ஆண் அன்னத்தை         குறிப்பதாகக் கொள்ளலாம்.
  • மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் – எனப் பல உரையாசிரியர்கள்    கூறினாலும் கவரிமா என்பதே சரியான உச்சரிப்பாகும்.  மற்றும்    கவரிமானுக்கும், கவரிமாவுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதையும்  அறியமுடிகிறது.
  • குளிர் காப்பாம் மயிர் நீங்கினால் உயிரோடு வாழாத கவரிமா என்று  இயற்கைச் சூழலின் தட்பத்தின் விளைவினை அடிப்படையாகக் கொண்டு   இளங்குமரனார் எனும் உரையாசிரியர் கூறுவதைக் கொண்டு, கவரிமா, அன்னம் இரண்டும் குளிர் பிரதேசங்களில் வாழும் ஆண் மற்றும் பெண் பறவைகள் என்பது புலனாகிறது.
  • பிசிராந்தையார் குறிப்பிடும் வடமலை என்பது இமயமலையே ஆகும். சில உரையாசிரியர்கள் வடமலையைத் திருமலையோடு உருவகஞ்  செய்கிறார்கள்.  கவரிமாவும், அன்னமும் குளிர் பிரதேசங்களில் மட்டுமே     வாழும் இயல்புடையது.  வெப்ப காலத்தில் தென் பகுதியை நோக்கி    அவை வரும் இயல்புடையதாக இருக்கலாம்  என்பது இப் பாடல் மூலம்        புலனாகிறது.

முடிவுரை:

புறத்திணையில் பெரும்பாலும் பறவைகளையே தூது செல்வதற்காக உருவகப்படுத்துவதை மேற்கண்ட இலக்கியங்கள் வழியே நம்மால் அறிய முடிகிறது.  அதிலும் அன்னப் பறவைக்கு முதன்மையான இடம் இருப்பதையும் உணர முடிகிறது.  காரணம் புகழ்வதைக் காரணமாகக் கொண்டே இத்தகைய  தூது அமைவதாலும், அன்னம் என்பது மிக அழகான வெண்மை நிறத்தோடு அழகிய இறக்கைகளோடும், மிக நளினமான நடையழகையும் கொண்டதால் அன்னம்விடு தூது நம் மனத்தைக் கொள்ளை கொள்கிறது.  உலகில் உள்ள 8650 பறவையினங்களில் 1200 இந்தியாவில் காணலாம்.  ஒரு காலத்தில் பறவைகளுடன் மிகவும் இணக்கமாக இருந்த மனிதன் தற்போது பறவைகளை ஒரு நுகர்வுப் பொருளாகவோ அல்லது அது மனிதனுக்கு தொடர்பில்லாத ஜீவராசியாகவோ பார்க்கத் தொடங்கிவிட்டான் என்பது வருத்தத்திற்குரியதாகும்.  என்றாலும் இலக்கியங்களோடு தொடர்புகொண்ட பறவைகள் மற்றும் ஜீவராசிகளைப் படித்து ரசிப்பதோடு இல்லாமல் நம்மோடு வாழும் பறவையினங்களை போற்றிப் பாதுகாப்பதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

துணை நின்ற நூல்கள்:

1.புறநானூறு மூலமும், உரையும் – புலியூர்க்கேசிகன் – சாரதா பதிப்பகம்,  சென்னை – 14.

2.பரிபாடல் (அகமும் புறமும்) மூலமும்  உரையும் – புலியூர்க்கேசிகன் –  சாரதா பதிப்பகம், சென்னை – 14.

3.ஹம்ஸ ஸந்தேசம் – உரை – ஸ்ரீ நிகமாந்த மகாதேசிகர்.

4.ஸ்ரீமத் பாகவதம் – அகிலஉலக கிருஷ்ண பக்தி இயக்கம், சென்னை.

5.சங்கத் தமிழ் ( நெடுநல்வாடை ) – முனைவர் ருக்மணி ராமச்சந்திரன்.

6.பொருளறம் – புலவர்.கோ.அருளாளன்., – திருவள்ளுவர் பதிப்பகம்,    நல்லாண்பிள்ளைபெற்றாள்.

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *