மானிடவியலின் அணுகுமுறையில் சங்க இலக்கியக் குடும்ப நிலை

2

-வீ. செல்வராணி

முன்னுரை 

மனித இனத்தின் பல்வேறு கூறுகளை விளக்குவது மானிடவியலாகும். அதில் மானிடப் பண்பாட்டை விளக்குவது மானிடவியலின் ஒரு பிரிவாகும். பண்பாட்டு மானிடவியல் என்ற  பிரிவில் மக்களின் குடும்பம் பற்றி அறிந்துகொள்ளும்போது அம்மக்களினுடைய சமுதாயம், கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், வாழ்க்கைமுறை, வழிபாட்டுமுறை, போன்றவற்றை உணர்ந்துகொள்ள முடிகிறது. இதனால் மனிதப் பரிணாமத்தின் வளர்ச்சியினையும் அறிந்து கொள்ளமுடிகிறது ஆகவே மானிடவியல் குறித்த குடும்ப இயல்புகளை உணர்த்தும் களமாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகிறது.

மானிடவியல் விளக்கம்

மானிடவியல் என்பது ஒரு முறையான அறிவியல் பார்வையாகும்.  மனிதனைப் பற்றி ஆராயும்  துறையாகச் செயல்படுகிறது. சர் எட்வர்ட் பர்னட் டைலர் கி.பி 1884-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறைக்கு வந்தபோதுதான் மானிடவியல் துறையானது முறையான தோற்றத்தைப் பெற்றது. ”மானிடவியல்” என்ற சொல்லாக்கம் ஆங்கிலத்தில் வழங்கப்பெறும் “ANTHROPOLOG” என்னும் சொல்லுக்கு நேரானது என்பர். இச்சொல் “ANTHROPOS” “LOGOS” ஆகிய கிரேக்கச் சொற்களின் மூலங்களைப் பெற்றது. கிரேக்கத்தில் இச்சொற்கள் முறையே “மனிதன் அறிவியல்” என்னும் பொருளுடைய “ANTHROPOLOGIST” என்ற சொல்லை முதன்முதலில் அரிஸ்டாட்டில் பயன்படுத்தினார். மனித சமுதாயத்தின் கடந்தகால மற்றும் நிகழ்கால வாழ்க்கை முறையையும், பழக்கவழக்கம், பண்பாடு, உயிரியல், போன்றவற்றை சமூக அறிவியலின் துணைகொண்டு படித்துணர்ந்து ஆய்வினை மேற்கொள்ளும் துறையே மானிடவியல் (“Anthropology”) எனக் குறிப்பிடுகின்றனர். (பண்பாட்டு மானிடவியல்- ப.17 ) ஆகவே தனி மனிதனோ அல்லது ஒரு சமுதாயமோ எத்தகைய தன்மைகொண்டு திகழ்கிறது என்பதைக் கண்டறிய மானிடவியல் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

இனத்தோற்றம்

 மானிட சமுதாயம் தோன்றியதற்கான ஆராய்ச்சிகள் பல நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இருப்பினும் முதல் மானிட இனம் இலெமூரியா கண்டத்தில் தோன்றியது என்பது அறிவியிலாளர்கள் கருத்தாகும். இக் கண்டத்தை மனித நாகரிகத்தின் தொட்டில் என்றழைப்பர். தென்கரை வழியாய் ஆப்பிரிக்காவின் கீழ்க்கரை வரைக்கும் பரவியிருந்த ஒரு கண்டமாயிருந்தது. களேற்றர் இப்பழங்கால பெருங்கண்டத்திற்கும் அதில் வந்த குரங்கொத்த உயிரிப் பற்றி இலெமூரியா என்று பெயரிட்டிருக்கின்றார். இக்கண்டம் மாந்தனின் பிறந்தகமாயிருந்திருக்கக் கூடுமாதலின், இதுவே மிக முதன்மையானதாகும் என்று கூறுகின்றார். பாவணர். (தமிழர் வரலாறு ப.6) அக்கண்டம் தமிழ் இலக்கியங்களில் குமரிக்கண்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை இளங்கோவடிகள்

“பஃறுளி யாற்றுடன் பன்மலையடுக்கத்துக்
குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள” என்று தாம் இயற்றிய சிலப்பதிகாரத்தில் எடுத்துரைக்கிறார். இதனை ஜான் இங்கிலாந்து என்னும் மேலைநாட்டு அறிஞர் லெமூரியா எனும் குமரிக்கண்டம் ஆப்பிரிக்கக் கண்டத்துடன் இணைந்திருந்தது என்பார். ஆகவே முதல் மானிட இனம் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்றும் முதல் மானிட இனம் தமிழ் இனம் என்றும் புலனாகிறது.

குடும்பம்

மனித சமுதாயத்தின் மிகத்தொன்மையான அமைப்பாகத் திகழ்வது குடும்பமேயாகும். இது எல்லாச் சமுதாயங்களிலும் எல்லாக் காலங்களிலும் பொதுவாக நிலவி வருகிறது. இன்று நூற்றுக்கணக்கான சமுதாயங்கள் காலங்காலமாகப் பல்வேறு நிறுவனங்களை ஏற்படுத்திக் கொண்டு அதன் அமைப்பாலும் செயலாலும் வேறுபடுகின்றன. ஆனால் அனைத்திலும் குடும்பம் என்னும் நிறுவனமே மிகவும் இன்றியமையாத, அடிப்படை அலகாகச் செயற்படுகின்றது. அவ்வாறே மக்கள் வாழ்நாள் முழுவதும் எண்ணற்ற குழுக்களில் பங்குபெற்று அவர்களின் வாழ்க்கைத் தேவைகளை நிறைவுசெய்து கொண்டாலும் குடும்பம் என்னும் அமைப்பே முதலிடம் பெறுகிறது. (பன்பாட்டு மானிடவியல் ப.350) கூடிவாழ்தல் குடும்பமாகும். இவை மானிட இனத்திற்கு மட்டுமல்லாது அனைத்து உயிர்களுக்கும் பொதுவாகத் திகழ்கிறது.

குடும்பங்களின் வாழிடங்கள்

குடும்பம் என்னும் அமைப்பு ஏற்படுவதற்கு அடிப்படை திருமணமேயாகும். குடும்பம், திருமணம், இரண்டும் ஒன்றெயொன்று சார்ந்தே செயல்படுகின்றன. ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல இன்று நாம் வழங்கும் திருமணம், குடும்பம் ஆகிய இரண்டு சொற்களும் புதிய சொல்லாட்சியாகும். பழந்தமிழ் நூல்களான தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் இச் சொல்லாட்சி இடம் பெற்றதாக தெரியவில்லை. மாறாக, குடிமை, குடி, கூடி போன்ற சொல்லாட்சிகள் இடம்பெறுகின்றன. ஆகவே குடும்பம் என்னும் சொல் பிற்காலத்தில் தான் தோன்றியிருக்க வேண்டும்.

குடும்பம் என்னும் சொல் முதன்முதலில் திருக்குறளில் தான் நேரடியாகப் பயின்று வருகிறது.

“இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு” (குறள்-1029)
என்ற குறளுக்கு உரைசெய்த டாக்டர் மு.வ அவர்கள், ”தன் குடிக்கு வரக்கூடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ”என்று உரை எழுதுகிறார். வள்ளுவர் பயன்படுத்திய குடும்பம் என்னும் புதிய சொல்லாட்சியைக் குடி என்றே குறிக்கிறார்.

சங்க இலக்கியத்தில் குடும்பம் என்னும் சொல்லுக்கு, “குடம்பை, குடும்பு, கடும்பு” ஆகிய சொற்கள் இடம்பெறுகின்றன. ”குடும்பை” என்ற சொல் இருபது இடங்களில் பயின்று வருகிறது என்பார் பேராசிரியர் மாதையன். மேலும் ”குடும்பு” என்னும் சொல் கூடிவாழ்தல் என்றும் பொருள்படுகின்றது என்கிறார்.  நற்றிணையில்,

”கருங்கலை கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும்” (நற்-119)

என்னும் பாடல் மலைஆட்டு இனத்தின் கூட்டு வாழ்வைச் சுட்டுகிறது. குடும்பு என்னும் சொல்லுடன் “அம்” விகுதி சேர்ந்து பொருண்மை விரிவாக்கமாக (SEMANTIC EXTENSION) குடும்பம் எனும் சொல் அமைந்தது. (இலக்கிய மானிடவியல் பக். 348,349)

தொல்காப்பிய நூற்பாக்களில் இல், மனை, குரம்பை, புலப்பில், முன்றில், குடில், கூரை, வனப்பு, முற்றம், நகர், மாடம் முதலிய சொற்கள் குடும்பங்களின் வாழ்விடத்தில் உள்ள வேறுபாடுகளையும், வகைகளையும் சுட்டுகின்றன. குடும்பம் என்னும் அமைப்பானது ஒர் ஆணும் பெண்ணும் அவர்களுடைய சமுதாய மரபுப்படி மண வாழ்வில் ஈடுபடும் நிலையால் மட்டுமே தோன்ற முடியும். அவ்வாறு இணைந்தால்தான் அச்சமுதாயத்தில் அவர்கள் ஒரு குடும்பமாக ஏற்று கொள்ளப்படுவர். அவ்வாறின்றி ஒரே வீட்டில் ஒர் ஆணும், பெண்ணும் உண்டு மகிழ்ந்து வாழ்ந்தாலும் அவர்களிடையை சமுதாயம் ஏற்றுக் கொள்ளக்கூடிய கணவன்-மனைவி உறவு அமையாதவரை அவர்கள் குடும்பம் என்னும் அமைப்பை ஏற்படுத்தவியலாது. இங்குக் குடும்பம் என்னும் அங்கீகாரம் அந்தந்தச் சமுதாயத்தின் அகவயக்கருத்தாக்கத்தின் (EMIC CONCEPT) மூலமே அளிக்கப்படும். சில பழங்குடிகளில் காதலர்கள் திருமணத்திற்கு முன்னரே தனிக்குடிசையில் ஒன்று சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுவர். சிலகாலம் கழித்துத்தான் திருமணம் நடைபெறும், ஆயினும் இப்பழங்குடிகள் திருமணத்திற்கு முன்னர் வாழும் நிலையிலிருந்தே குடும்பம் ஏற்பட்டு விடுகிறதென்று எண்ணுகின்றனர். (பண்பாட்டு மானிடவியல்- ப.352) குடியிருப்பைக் குறிக்கும் நகர் என்னும் சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. தொல்காப்பியத்தைக்காட்டிலும் சங்க இலக்கியங்களே அக்கால சமுதாயத்தின் எல்லா வகையான உயர்வு, தாழ்வுகளையும் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் மனைவியகம், கணவனகம், புதிய அகம் பரத்தையர் அகம் போன்ற வகையினங்கள் சங்ககாலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்ததை அறிய முடிகிறது. சங்க காலத்தில் பெண் திருமணம் செய்த பின்னரும் தன் இல்லத்திலேயே தொடர்ந்து வாழ்க்கை நடத்தும் “தாயக முறை”(matrilocal) இருந்துள்ளது. ஆண் திருமணத்திற்குப்பின் மனைவியகத்திற்குச் சென்று பெண்ணின் இல்லத்தில் வாழ்ந்திருக்கிறான். இத்தகைய பெண்ணின் இல், ”எம்இல்” என வழங்கப்பட்டிருப்பதைப் பல சங்கப்பாடல்கள் பதிவு செய்துள்ளன. நற்றிணையில்

……………..மாதோ எம்இல்
பொம்மல் ஒதியைத் தன்மொழிக்கொளீஇக்
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்றதாயே   
( நற்- பா-293)

என்றும், குறுந்தொகையில்

”எம் இல் அயல தோழி உம்பர்
மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி”
(குறு- பா-138)

என்றும், கலித்தொகையில்,

……………யாம் வாட ஏதிலார்
தொடியுள்ள வடுக்காட்டி ஈங்கு எம் இல்வருவதை
(கலி- பா-78)

விடா அது நீ எம்இல் வந்தாய் அவ்யானை
கடாஅம் படுமிடத்து ஓம்பு
(கலி- பா-97)

என்ற பாடல் வரிகள் மனை வாழ்க்கைக்குப் பின் தங்கும் பெண் இல்லத்தைச் சுட்டுகிறது. ஆனால் தற்போது பெண் இல்லத்தில் தங்குவது என்பது ஆண்மகனுக்கு இழிவாகக்கூடும் என்னும் தவறான பாதைக்குச் சமுதாயம் தள்ளப்பட்டுவிட்டது.

பெரியாழ்வார் தாம் இயற்றிய திருவாய்மொழியில் பெண் திருமணத்திற்குப் பின்னரும் தன்னுடைய தாயகத்திலேயே தொடர்ந்து வாழ்ந்த முறையைப் பதிவு செய்துள்ளார்.

பெருப்பெருத்த கண்ணாலங்கள் செய்து
பேணிநம் மில்லத்துள்ளே
இருத்துவான் எண்ணி நாமிருக்க   (திருவாய்மொழி 3; 7-10 )

திருமணத்திற்கு முந்தைய ஆணின் இல் ‘தம்இல்’ என வழங்கப்பட்டிருப்பதையும் காணமுடிகிறது.

…………அன்னை
தம்இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீம்பழம் தூங்கும் பலவின்
ஓங்குமலை நாடனை வரும் என்றோளே. 
( குறு. பா-83)

மேற்கூறிய பாடலில் திருமணம் செய்யவரும் ஆணின் இல்லம் ‘தம் இல்’ எனும் தனி வழக்கில் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டிள்ளது. சங்க இலக்கியத்தில் பொதியில் எனும் சொல்லையும் காணமுடிகிறது. வெளியூரிலிருந்து வரும் பாணர்கள் பொதியில் தங்கினர். என்ற குறிப்பு புறநானூற்றின் வழி அறிய முடிகிறது.

முடிவுரை

மானிடவியல் நோக்கினை சங்க இலக்கியங்களோடு பொருத்திப் பார்ப்பதன் மூலம் ஆய்வு செய்வதற்கான களங்கள் பலவற்றை கொண்டுள்ளதாகத் திகழ்கிறது. மக்களின் பண்பாடு, சமுதாயம், குடும்பம், திருமணம், உறவு முறை போன்றவற்றை ஆராயும்போது அவை முறையாகவும், நெறியாகவும் அமைந்துள்ளது என்பதை நாம்  அறிய முடிகிறது. தற்போது திசைமாறிப் போகும் நம் பண்பாட்டைச் சீர்பெறச் செய்ய மானிடவியல் ஆய்வுகள் மிக இன்றியமையாததாகத் திகழ்கிறது என்பதினைப் புலப்படுத்தும் நோக்கமே இக்கட்டுரையாகும்.

ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்

  1. பக்தவத்சலபாரதி, பன்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
  2. பக்தவத்சலபாரதி, இலக்கிய மானிடவியல் அடையாளம் பதிப்பு. திருச்சி பதிப்பு 2014
  3. தொல்காப்பியம், கழக வெளியீடு, திருநெல்வேலி.
  4. சங்க இலக்கியம் முழுவதும் நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
  5. திருக்குறள், வரதராசனார்.மு.வ (உ.ஆ) பாரிநிலையம் சென்னை.

*****

கட்டுரையாளர் – முனைவர்பட்ட ஆய்வாளர்,
அண்ணமாலைப் பல்கலைக் கழகம்,
அண்ணாமலை நகர்- 608 002.

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “மானிடவியலின் அணுகுமுறையில் சங்க இலக்கியக் குடும்ப நிலை

  1. கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *