-மேகலா இராமமூர்த்தி

கரத்தில் நீரெடுத்துச் சிரத்தையொடு வானரத்துக்கு ஊட்டும் மனித மாண்பைப் படமெடுத்து வந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி.  இவ்விரு பெண்மணிகளுக்கும் என் நன்றி!

மன்னுயிர்கள் அனைத்தும் இன்பமாய் வாழ்வதற்கென்றே படைக்கப்பட்டது இப்புவி! இதில் கவிக்குலங்களும் விலக்காமோ? ஆதலால், ஒருவரை ஒருவர் அடுதலும் தொலைதலும் விடுத்து, ஆருயிர்க்கெல்லாம் அன்பு செயல் வேண்டும்!

இந்நிழற்படத்திற்குப் பொருத்தமாய்க் கவியெழுதக் கவிஞர்கள் எழுக! கவிமழை பொழிக! என வாழ்த்தி அமைகின்றேன்!

*****

கானம் அழிந்ததால் அங்கு  மகிழ்வோடு வாழ்ந்த வானரங்கள் உணவுதேடி ஊரைநாடி வருகின்றன; இதனைத் தவிர்க்க, பல்லுயிர் ஓம்பும் பண்புகொண்ட மானுடன், காடுகளை அழியாது காக்கவேண்டும். கானுயிர்களின் வாட்டத்தைப் போக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

பல்லுயிரும் இன்புறத்தக்க பூவுலகம் படைத்திடுவோம்…
பண்டு ஓர் காலத்தில்… வண்டு உலாவும் சோலையில்…
கண்டு மாந்தர் மகிழ்ந்திட்டார்… மனிதன் போன்ற குரங்கினை…
இன்று உள்ள நிலையிலே… கானம் யாவும் அழிந்ததால்…
உண்டு வயிற்றை நிரப்பவே… அது ஊரைநாடி வருகுதே…!

வானரத்தைக் கண்டதும்… மனம் மகிழ்ந்திடும் மாந்தரும்…
மன முவந்து உணவினை… அதற் களித்து களித்திட்டார்…
அன்பு மிக்க இச்செயல்… அதன் இயல்புகளைக் குலைத்திடும்…
என்பதை உணர்ந்து நாம்… இயற்கைச் சூழல் பேணுவோம்…!

மனிதன் என்ற பிறவியே… பரிணாம வளர்ச்சியின் உச்சமாம்…
ஆன போதும் இவ்வுலகமே… அனைத் துயிர்க்கும் சொந்தமாம்…
வன உயிரினங்கள் வாழவோர்… உரிய சூழல் செய்குவோம்…
காணம் போன்று கானத்தைப்… போற்ற நாமும் கற்றிடுவோம்…!

*****

”குரங்கைக் குறைவாய் எண்ணாதே மனிதா! அதற்கு(ம்) உணவளித்து உயர்வாய் இராமனாய்!” என்று தன் கவிவழியாய்ப் புவிக்கு மொழிகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

குறைவில்லை…

குரங்கி லிருந்து பிறந்ததாகக்
கூறிக் கொள்ளும் மானிடனே,
குரங்கைக் குறைவாய் எண்ணாதே
குட்டியை வயிற்றில் கொள்வதைப்பார்,
குரங்குச் சேட்டை பண்ணாமல்
குரங்கைத் துணையாய்க் கொண்டிடவே
குரங்குப் படைக்கும் உணவளித்துக்
கொள்வாய் உயர்வு இராமனாகவே…!

*****

வானரத்தைப் போற்றித் தேனான பாக்கள் தந்த பாவலர்க்கு என் பாராட்டு!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

படைப்பின் அதிசயம்..!

உலகம் முழுதும் உயிர்கள் படைத்தான்
உலகில் முதலாம் ஒருவனே இறைவன்.!

அண்டவுயிர்க் கெல்லாம் அறிவைக் கொடுத்து
ஆண்டுகள் பலவும் ஆயுளாய்க் கொடுத்தான்.!

இயற்கை நமக்களித்த இன்ப வாழ்க்கை
செயற்கை கலந்திடாது செலவழிக்கப் பழகு.!

எத்தனை உயிர்கள் எண்ணிலா உயிர்கள்
அத்தனும் கொடுத்தான் ஆசை கொண்டே.!

அன்புடன் நடக்க அனைத்து உயிரிடம்
அன்பாய்ப் பழகும் அரிய பிறவியாம்.!

அதுதான் மனிதப் பிறவி
இதுவே நமக்கு ஈடிலா அருளே.!

குரங்கு முதல் குதிரைபோலப் பலவாக
இரக்கமிகு ஜீவியை இவ்வுலகில் காணலாம்.!

அப்பன் உதவுவார் அம்மா காப்பாளென…
எப்பவுமே இவ்வுயிர் என்றும் வாழ்வதில்லை.!

சனனம் முதற்கொண்டு சாவு வரையில்
தனக்குதவி தன்கையில் தானென அறியும்.!

மனிதன் போலிதற்கு மனமாசு இல்லை
தனித்தன்மை கொண்டு தானாக வாழ்ந்திடும்.!

விலங்கின வாழ்வை வைத்து மனிதனும்
உலகில் தெரிந்துலவ எத்துணையோ உளது.!

பரந்தமனம் படைத்த பகவனுமே
மரணத்தால் மனத்தை அறிய வைத்தானே.!

இயற்கை நமக்களித்த இன்பவாழ்வில் செயற்கைக் கலப்பைத் தவிர்த்து, மன மாசில்லாது, தன் கையே தனக்குதவி என வாழ்வும் விலங்குகள்போல் மனிதனும் புனிதனாய் வாழ வேண்டும் எனச் சாற்றியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் போற்றுகின்றேன். இக்கவிதையே அல்லாது மந்தியையும் மனிதனின் புந்தியையும் (புத்தி) ஒப்பிட்டும், மந்தியினத்தையும் அதனைத் தோழனாய் ஏற்ற சுந்தர ராமனை ஏத்தியும் மற்றுமிரு வெண்பாக்களை இயற்றியுள்ள அவருடைய கவி ஆர்வத்தையும் பாராட்டுகின்றேன். 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 168-இன் முடிவுகள்

  1. இந்த வாரத்தின் (09-07-18 – 15-07-18) சிறந்த கவிதையாகவும், கவிஞராகவும் தேர்ந்தெடுத்த நடுவர் திருமதி மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கும், கவிதைக்குப் படத்தைக் கொடுத்த திருமதி ராமலஷ்மிக்கும் படக்குழுமத்தின் ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பனுக்கும், ஆசிரியர் திருமதி பவளசங்கரிக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    ஒரு சில பிராணிகளை நம் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பதுபோல் இந்தப் பிராணிக்கு அப்பாக்கியம் கிடைக்கவில்லை, இருந்தாலும் மரியாதையாக நடத்துக்கிறோம், பழங்கள் தருகிறோம். அன்பாக நேசிக்கிறோம், ஆச்சர்யத்தோடு அதன் சேட்டையைப் பார்த்து ரசிக்கிறோம்.

    இப்பிராணிகளின் ஒரு விஷேசம் என்னவென்றால், மற்ற விலங்குகள் இறந்துவிட்டால் அதன் உடல் அழுகுவதையும், அங்கேயே பலநாட்கள் கிடப்பதையும் நாம் பார்க்கிறோம். ஆனால் குரங்கின் இறந்த உடலை யாரும் எளிதில் காணமுடியாது. இது ஏனோ எனக்கு எப்போதும் வித்தியாசமாகவே தெரியும். நானும் பலரிடம் இது பற்றிக் கேட்டிருக்கிறேன். எவரும் இறந்த குரங்கின் உடலைப் பார்த்ததாகச் சொன்னதில்லை.

    போட்டியின் வென்ற இக்கவிதையை, நாம் அன்பாக நேசிக்கும், வணங்கும் குரங்குக்கு அர்ப்பணிப்போம்.

    கவிதை எழுதிய ஏனைய கவிஞர்களுக்கு நன்றி. அனைத்து வல்லமை வாசகருக்கும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *