-மேகலா இராமமூர்த்தி

சவால்கள் நிறைந்த வாழ்வைச் சமூகம் சான்றோர்க்களித்தாலும் அதற்காக அவர்கள் சிந்தை கலங்குவதில்லை; நிலைதாழ்ந்து போவதில்லை. எத்தகு சூழலிலும் நற்குணம் கொண்ட பொற்புடைய மேன்மக்களாகவே வாழ்வர்.

மேன்மக்களின் இயல்பை இருசுடர்களில் ஒன்றான நிலவோடு ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் செப்பும் நயமிகு நாலடியார் பாடலொன்று!

அங்கண் விசும்பின் அகனிலாப் பாரிக்குந்
திங்களுஞ் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
மறுவாற்றும் சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின். 
(நாலடி – 151)

அழகிய இடமகன்ற வானத்தில் விரிந்த நிலவொளியைப் பரவச் செய்யும் திங்களும் மேன்மக்களும் தம்மில் ஒத்த பெருமையுடையவர் ஆவர். ஆனால், திங்கள் களங்கத்தைத் தாங்கும்; மேன்மக்கள் தமது ஒழுக்கத்திற் சிறிது கறையுண்டானால் அதனைப் பொறாது உளங்கலங்கி அழிவர்.

திங்களைப்போல் சான்றோரும் புகழுடையவர் என்று முதலில் ஒத்த தன்மையைக் கூறி, பின்னர்த் திங்கள் களங்கத்தைத் தாங்கும் ஆனால் சான்றோர் அதனைப் பொறார் என்று அவரின் வேறுபட்ட தன்மையையும் விளம்பி நிற்பதால் இப்பாடலை வேற்றுமையணிக்குச் சான்றுகாட்டலாம்.

மேன்மக்கள் பிறர்க்கு இன்னாசெய எண்ணாத இயல்புடையவர்கள் என்பது வையம் அறிந்ததே. அதனைத் தாண்டியும் செல்லும் அவர்களின் உயர்சிந்தனையின் உன்னதத்தைப் பின்வரும் நாலடியார் நமக்குச் சுட்டுகின்றது.

புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவுங் கண்ணோடி
நல்லார் வருந்தியுங் கேட்பரே மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.     
(நாலடி – 155)
 

பொருந்தாக் கல்வியையுடைய, மெய்யுணர்வில்லாத வீணோர் அவையில் கல்வியறிவு நிரம்பப்பெறாத ஒருவன் உரையாடவும், அதனைக் கண்ட மேன்மக்கள் அந்தப் பேதையின் உரையை அவையில் பலரும் கேலிசெய்யவும், அதனால் அவன் நாணவும் நேருமே எனும் வருத்தத்தோடும் இரக்கத்தோடும் அதனைத் தாம் கேட்டுக்கொண்டிருப்பராம்.

பேதை ஒருவனின் பொருளற்ற பேச்சையும் பொருட்படுத்தி அருளோடும் அன்போடும் செவிமடுக்கும் மேன்மக்களின் மாட்சி வியப்பினும் வியப்பே!

மேன்மக்களாய் வாழ்தற்கு என்னென்ன அடிப்படைப் பண்புகள் அவசியம் என்பதை நமக்கு அறியத்தருகின்றது நாலடி.

பிறர்மறை யின்கட் செவிடாய்த் திறனறிந்
தேதிலா ரிற்கட் குருடனாய்த்  தீய
புறங்கூற்றின் மூகையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு. 
(நாலடி – 158)

பிறருடைய மறைந்த/அந்தரங்கக் கருத்துக்களைக் கேட்டலிற் செவிடுடையனாய், அயலார் மனைவியரைக் காமக் கருத்துடன் நோக்குதலிற் குருடனாய், தீயவான புறங்கூற்று மொழிகளைக் கூறுதலில் ஊமையுடையனாய், வாழ்க்கையில் துன்பம் உண்டாகுங் கூறுகள் இவை என்றறிந்து ஒருவன் ஒழுகுவானாயின், அவனுக்குப் பிறர் வேறு யாதும் அறம் அறிவுறுக்கவேண்டா என்பது இச்செய்யுளின் பொருள். 

தீயதைக் கேட்காதே; தீயதைப் பார்க்காதே; தீயதைப் பேசாதே என்பதைக் காட்ட காந்தியார் வைத்திருந்த மூன்று குரங்குபொம்மைகளை நாம் மேற்கண்ட நாலடியாரின் கருத்துக்களோடு வைத்தெண்ணலாம்.

வள்ளுவரோ இதனை இரத்தினச் சுருக்கமாக,
”மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” என்றுவிட்டார். மனந்தானே நம்மை மடவராக்கி எல்லாத் தவறுகளுக்கும் உடந்தையாக்குகின்றது? ஆதலால் மனத்தூய்மையே எல்லா நற்செயல்களுக்கும் தாய் என்று கருதலாம்!

மாந்தர்கள் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகளில் ஒன்று, தம்மைவிட அறிவிலும் அனுபவத்திலும் மூத்த பெரியாரை அவமதிக்காது அவர்மாட்டுப் பண்போடும் அன்போடும் நடந்துகொள்வது.

சிலர், தம் வாழ்வில் நல்லறிவும் புலமையும் உடைய சான்றோரின் நற்றுணை வாய்க்கப்பெற்றும் அவர்களிடம் நல்லனவற்றைக் கற்றுத் தெளிவதில் கவனம் செலுத்தாது கொன்னே நாட்களைக் கழித்துக்கொண்டிருப்பர். அன்னாரின் பேதைமையை என்னென்பது?

பேதையாரின் இன்னொரு வகையினர் தம்மைப்பற்றிப் பெருமைபேசித் திரிவதிலேயே பொழுதைக் கழிக்கும் வீணராயும் வெற்றராயும் இருப்பர். அவர்களின் புத்திக்கு உரைக்கும்படி நாலடியார் நவிலும் செய்தியைக் கேண்மின்!

எம்மை யறிந்திலிர் எம்போல்வார் இல்லென்று
தம்மைத்தாம் கொள்வது கோளன்று – தம்மை
அரியரா நோக்கி அறனறியுஞ் சான்றோர்
பெரியராக் கொள்வது கோள். 
(நாலடி  – 165)
 

எம் தகுதியை நீவிர் அறிந்திருக்கவில்லை; எம்மைப் போன்ற திறனுடையோர் வையத்தில் யாங்கணுமே பிறக்கவில்லை என்று தம்மைத் தாமே பெருமைப்படுத்திக்கொள்வது சிறவாது; தம்மை அருமையுடையோராய்க் கருதி அறனறியுஞ் சான்றோர் பெரியராய் மதித்துப் போற்றுவதே பெருமையாகும் என்கிறது நாலடியார். 

”பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து”
என்று பெருமைப் பண்பையின் பெற்றியையும் சிறுமைப் பண்பின் இயற்கையையும் மன்பதைக்குச் சொன்ன தெய்வப்புலவர், 
”வியவற்க எஞ்ஞான்றும் தன்னை” என்று எச்சரித்திருப்பதையும் நாம் சிந்தித்து ஒழுகுதல் சிறப்பு. 

நம் வாழ்வின் பல தருணங்களில் நாம் சிந்தியாது பலரை நண்பர்களாக்கிக் கொள்கின்றோம். பழகப் பழகத்தான் அவர்களின் அருவருக்கத்தக்க உண்மைத் தோற்றம் வெளிப்படுகின்றது. அதன்பின், அவர்களைவிட்டு விலகிவிடவேண்டும் என எண்ணுகின்றோம். எனினும் பழக்கதோஷம் அவ்வளவு சுலபத்தில் அதனைச் செய்யவிடுவதில்லை. எனவே, ஆராய்ந்து நட்பு கொள்வது அவசியம் என்று அறிவுறுத்துகின்றது நாலடியார்!

தெரியத் தெரியுந் தெரிவிலார் கண்ணும்
பிரியப் பெரும்படர்நோய் செய்யும் – பெரிய
உலவா இருங்கழிச் சேர்ப்ப யார்மாட்டும்
கலவாமை கோடி யுறும். 
(நாலடி – 168)
 

நூற்பொருள்களை விளங்கத் தெளியும் தெளிவில்லாதவரிடத்தும், (பழகியபின்) அவரைப் பிரிய நினைப்பது பெருந்துன்பம் உண்டாக்கும்; ஆகவே, கருநிறமான பெரிய கழிக்கரையை உடையோனே! பெரியோரிடத்தன்றிப் பிறர் யாரிடத்திலும் நேயங் கொள்ளாமை கோடிப்பங்கு நன்மையாகும்.

”குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு” என்று நல்ல நட்புக்கு வள்ளுவமும் வழிகாட்டுகின்றது.

நல்லியல்புடைய பெரியோர்கள் கற்றற்குரிய நூல்களைக் கல்லாமலும், தாமறியாத பொருள்களை அவற்றை அறிந்தோரிடத்துக் கேளாமலும், தம்மால் இயன்ற வகையில் பிறர்க்கு உதவாமலும் வாழும் வாழ்க்கையை ஒருபோதும் விரும்புவதில்லை.

கல்லாது போகிய நாளும் பெரியவர்கண்
செல்லாது வைகிய வைகலும் – ஒல்வ
கொடாஅ தொழிந்த பகலும் உரைப்பின்
படாஅவாம் பண்புடையார் கண்.  
(நாலடி – 169)

எனவே, நல்லனவற்றைக் கற்றலும், சான்றோரிடத்து நற்பொருளைக் கேட்டலும், புன்னெறி தவிர்த்து நன்னெறியில் ஒழுகலும் மனித வாழ்க்கைக்குப் பல்லாற்றானும் பொலிவூட்டும்! புகழ் கூட்டும்!

[தொடரும்]

*****

துணைநூல்கள்:

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *