நிர்மலா ராகவன்

நொண்டிச்சாக்கு ஏன்?

“நான் ஏன் மற்றவர்களைப்போல இல்லை?”

“என்னை யாருக்குமே பிடிக்கலே!”

“எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!”

இப்படிக் கூறுபவர்கள் பலரைப் பார்த்திருக்கிறோம். இந்த மூன்று வாக்கியங்களிலும் நான், என்னை, எனக்கு என்ற வார்த்தைகளுக்குத்தான் முக்கியத்துவம். சுய பரிதாபம் மிகுந்தவர்கள் இவர்கள்.

ஒருவர் எல்லா சந்தர்ப்பங்களிலும் தன்னைப் பொருத்திக்கொண்டு பார்த்தால் இப்படித்தான் ஆகும். இப்படிப்பட்டவர்களுக்கு அவர்களுடைய பிரச்னைகள்தாம் புரியும். தம் நலன் மட்டுமே அவர்களுக்கு முக்கியம். அவர்களால் பாதிக்கப்படும் பிறருடைய மனப்போக்கைப்பற்றிய கவலை கிடையாது.

ஒருவர் தம் கண்ணோட்டத்திலிருந்துதான் எதையும் அலசுவதால்தான் இந்தக் கோளாறு எழுகிறது.

கதை

ராவ் நன்றாகப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் இருந்தார். இருந்தாலும், போட்டி மனப்பான்மை அதிகம். பிறரைத் தாழ்த்திப் பேசினால், தான் உயர்ந்துவிட்டதாக எண்ணி அற்ப சந்தோஷம் அடையும் அறிவிலி. யாரைப் பார்த்தாலும், அவர்களுடைய குறை என்று அவர் நினைப்பதைப் பெரிதுபண்ணி, கேலி செய்வார். இதனாலேயே அவருக்கு நெருங்கிய நண்பர்கள் என்று எவரும் இருக்கவில்லை. அவருடைய புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்டு சற்று நெருங்குபவர்கள் அவரது ஓயாது குற்றம் கண்டுபிடிக்கும் தன்மையால் விரைவிலேயே விலகிவிடுவார்கள்.

தவறு தன்மேல்தான் என்று உணராது, `ஏனோ என்னை யாருக்குமே பிடிப்பதில்லை!’ என்று மறுகுவார்.

புத்திசாலியோ, முட்டாளோ, மனிதராகப் பிறந்த எவரையும் கவலைகள், துன்பங்கள், விட்டு வைப்பதில்லை. ஆனால், என்றோ பட்ட துன்பத்தையும், துயரத்தையும் விடாமல் பிடித்துக்கொண்டிருப்பது அறிவீனம்.

எனக்கு நன்கு அறிமுகமான ஒரு மாது, பார்ப்பவர்களிடமெல்லாம்,“எனக்கு ஒடம்பே முடியலே!” என்று முகமன் கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வாள். எந்தவித உடற்குறையும் தென்படவில்லை. எல்லாருக்கும் அவளுடைய அந்த வசனம் கேலியாகப் போயிற்று.

அவள் இறந்தாள் – நாற்பது வருடங்களுக்குப்பின்! அத்தனை காலமும், தனக்காகப் பரிதாபப்பட்டே வாழ்ந்து, மகிழ்ச்சி இல்லாது காலத்தைப் போக்கி இருக்கிறாள்!

நாம் அனுபவித்த துன்பங்களைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தால், அதைச் செவிமடுக்க நேர்ந்தவர்கள் முதலில் அனுதாபம் காட்டலாம். அதன்பின், சலிப்படைந்து விலகி விடுவார்கள்.

நம்மைப் பாதித்தவைகளைப்பற்றியே பேசினாற்போல், வேண்டாத அனுபவங்கள் நீங்கி விடுமா, என்ன?

கதை

மூன்று வயதுக் குழந்தை கலா கீழே விழுந்து காலில் சிறு காயம் பட்டுக்கொண்டாள். அம்மா உடனே பிளாஸ்திரி போட்டபோது, அந்த கவனிப்பை `அன்பு’ என்று எண்ணிய வயது அது.

அன்றையிலிருந்து, அனுதினமும், “இங்கே வலிக்கிறது. பிளாஸ்டர் போடு,” என்று கையையோ, காலையோ காட்டி, நச்சரிக்க ஆரம்பித்தாள். அதற்குத் தேவையே இருக்காது. அது புரிந்து, அவளுடைய தாய், “அதைவிட நல்ல மருந்து ஒண்ணு இருக்கு,” என்று முகத்திற்குப் பூசும் பௌடரை அந்த இடத்தில் தூவ, சிறுமி சமாதானமானாள்.

உறவினர் இல்லங்களுக்குப் போகையில், “இங்கே வலி. அம்மா பிளாஸ்டர் போட மாட்டேங்கறா!” என்று தன்னிரக்கத்துடன் குற்றம் சாட்ட, அம்மா சிரித்தபடி, “ஒங்க வீட்டில சகல ரோக நிவாரணி இருக்கோ?” என்று கேட்பாள். உறவினர் விழிக்க, “பௌடர்!” என்று சிரிப்பாள் மெல்ல.

சிறுவர்களாக இருக்கும்போது, பெற்றோர் அளவுக்கு மீறி காட்டும் கரிசனம் பெரியவர்களான பின்னர், பிறரும் தம்மிடம் அப்படியே நடக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடுகிறது.

பிறர் நம்மீது காட்டும் பரிதாபம் அன்பல்ல. நோயாலோ, வேறு ஏதாவது இழப்பாலோ பிறர் துயரப்பட்டால்தான் சிலருக்கு அவர்களிடம் அருமையாக நடந்துகொள்ள முடியும்.

கதை

சிறு வயதில் அன்பைப் பெறாது, வன்முறை பிரயோகித்த கணவரையும் அடைந்த துர்பாக்கியசாலி நாகலட்சுமி. தான் பெறாததைப் பிறருக்கு கொடுப்பது நடக்கும் காரியமா? அவள் தான் பெற்ற குழந்தைகளிடம் எப்படி அன்பாக இருக்க முடியும்?

தான் ஏதாவது சொல்லி, அதன்படி குழந்தைகள் நடக்காவிட்டால், `நான் உங்களுக்காக எவ்வளவோ பண்ணி இருக்கிறேன். ஆனால், யார் நான் சொன்னபடி கேட்கிறீர்கள்?’ என்று பெருமூச்சுடன், தன்மேல் பரிதாபம் எழச் செய்து, காரியத்தைச் சாதித்துக்கொள்வாள். அக்குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால் மட்டும் ஆதரவாக இருப்பாள். அதனால், தாயிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், அவர்கள் துன்பப்படுவதுபோல் நடிப்பது வழக்கமாகப் போயிற்று. தம்மையுமறியாது, தாயிடமிருந்தே சுய பரிதாபத்தைக் கற்றார்கள்.

எனக்குத் தெரிந்த பல முதுமையான பெண்களுக்கு Depression என்கிறார்கள். பிறருடைய மனப்போக்கை இவர்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனதாலா, இல்லை, தாம் சொல்வதை இளையவர்கள் கேட்க மறுக்கிறார்களே என்ற ஆதங்கமா?

கதை

லட்சுமி அம்மாள் தனது எழுபதாவது வயதில் கீழே விழுந்து, சில மாதங்கள் படுக்கையிலேயே கழிக்க நேரிட்டது. அதன்பின் கால் குணமாகி, மருத்துவரும், `நீங்கள் பழையபடி நடமாடலாம்,’ என்று பச்சைக்கொடி காட்டிவிட்டார்.

ஆனாலும், பத்து வருடங்களுக்கு மேலாக `படுக்கையைவிட்டு எழுந்தால் மீண்டும் கீழே விழுந்துவிடுவேன்,’ என்று பிடிவாதமாக இருக்கிறாள் அந்த அம்மாள், எவ்வளவோ சௌகரியங்கள் செய்துகொடுத்த பின்னரும்.

இப்படி, தான் மட்டுமே முக்கியம் என்றிருப்பவரால் உடன் இருப்பவர்களுக்கு மிகத்தொல்லைதான். ஆனால், பிறரது உணர்ச்சிகளைப்பற்றிக் கவலைப்படாது, வேண்டாத பயத்துடன் தன்மேலேயே பரிதாபப்பட்டுக்கொண்டு, தன் வாழ்வை நரகமாக்கிக் கொண்டிருப்பவர்களைப்பற்றி என்ன சொல்ல! இப்போக்கினால் நெருங்கிய உறவினர்களை மட்டுமா, நிம்மதியையும் இழக்கும் அபாயம் இருக்கிறதே!

சிறு வயதில் அன்பு கிடைக்கப் பெறாதவர்கள் தம்மைப்பற்றியே நினைத்துக்கொண்டிருப்பது இயற்கை. இவர்கள் மாற்றங்களை எதிர்கொள்ளப் பயந்தவர்களாக இருக்கலாம்.

வேறு சிலர், முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் குறுக்கு வழியை நாடுவார்கள். இச்சகத்தால் மேலதிகாரியை கைக்குள் போட்டுக்கொள்வார்கள். பிறருக்கு அடிமைபோல் நடந்து, எதிர்பார்த்த அளவு முன்னேற இயலாதுபோக, அதனாலேயே தம்மீது இரக்கம் கொள்வதும் உண்டு.

பரிதாபத்திற்கு எதிர்மறையான குணம் சுய கௌரவம். இது திமிரோ, கர்வமோ அல்ல. நம்மைப் பிறர் தாழ்த்தும்போது அந்த அவமானத்தைப் பொறுத்துப் போகாத இயல்பு. முன்னேறுவதற்கு இன்றியமையாதது.

நம் மகிழ்ச்சிக்கோ, முன்னேற்றத்திற்கோ பிறரை எதிர்பார்ப்பது வீண். நம் நலனில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை? அத்துடன், பிறர் அளிக்கும் அறிவுரையும் வழிகாட்டலும் நம் திறமைக்கு ஏற்றதாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்?

தன் தோல்விகளுக்கு ஏதாவது நொண்டிச்சாக்கு கூறுவது அற்ப திருப்தியை உண்டாக்குவதால், இவ்வழியை அடிக்கடி கடைப்பிடிக்க வைக்கிறது. ஒரு விதத்தில், இதுவும் போதைதான்.

`எனக்கு ஊக்கமளித்த பெற்றோர், செல்வச் செழிப்பு இதெல்லாம் அமையவில்லை. அதுதான் முன்னுக்கு வரமுடியவில்லை,’ என்று என்றோ நடந்ததையே நினைத்து மறுகிக்கொண்டிருந்தால், எதிர்காலம் செழிப்பாகிவிட முடியுமா? இது கோழைத்தனமன்றி வேறென்ன?

நாம் அனைவருமே ஏதாவது தருணத்தில், `எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடந்துவிட்டது?’ என்று நம்மீதே இரக்கம் பாராட்டுவோம். அப்போது, `வேண்டாம் இந்த சுய பரிதாபம்!’ என்று ஒதுக்கினால், உடனே அடுத்து வரும் சவாலை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிடுகிறோம். (துணிவு இல்லாவிட்டால், கிடைத்ததை ஏற்கும் மனப்பக்குவத்தையாவது வளர்த்துக்கொள்ளலாம்).

தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சியில், நாற்பத்திரண்டு வயதான ஒருவர் பங்கேற்றார். ஆறு மாதங்களுக்குமுன்னர், ஸ்ட்ரோக் வந்து, மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. பிழைப்பதே சந்தேகம் என்ற நிலை. பிழைத்ததும், `இனி உடற்பயிற்சி செய்யலாம்,’ என்று மருத்துவர்கள் கூற, இடைவிடாத முயற்சி செய்ய ஆரம்பித்தார். அன்றைய நிஞ்சா (NINJA) நிகழ்ச்சியில், நாலடி தாவி, முப்பதடி சறுக்கு மரத்தில் ஏறிக் குதித்து, என்று பார்ப்பவர்களை அதிரவைக்கும் சாதனைகளைச் சில நிமிடங்களிலேயே செய்து முடித்தார். ஆரோக்கியமாக இருந்த எல்லாரையும் வெல்ல அவர் ஒருவரால் மட்டுமே முடிந்தது.

துணிவுடன் எதையும் எதிர்கொண்டால், `வாழ்க்கை என்பது இவ்வளவுதானா!’ என்ற சிரிப்பு எழும். நம்மைப் பார்த்து நாமே சிரிக்கும் முதிர்ச்சியும் ஏற்படும். மேற்கண்டவர்போல், பிறருக்கு நல்ல உதாரணமாக அமையலாம்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *