க. பாலசுப்பிரமணியன்

 

மாற்றங்களை சீரான மனநிலையோடு பார்க்கலாமே!

மாற்றங்கள் உலகத்தில் புறத்தில் மட்டும் ஏற்படுவதில்லை. நம்முடைய உடலிலும் உள்ளத்திலும் நாம் வாழ்கின்ற வாழ்க்கையிலும் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த மாற்றங்களைப் புரிந்து கொள்ளவும் சமாளிக்கவும் அவைகள் ஏற்படுத்தும் தாக்கங்களை அறிந்து புரிந்து வாழ்க்கையை மேலும் முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு நிறுவனத்தில் அங்கிருந்த ஊழியர்கள் அனைவருக்குமான ஒரு பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்தது. பயிற்சி கொடுத்துக்கொண்டிருந்த சொற்பொழிவாளர் தன்னுடைய உரையில் மிகவும் எளிதான முறையிலும் எல்லோரும் மகிழ்ந்து சிரிக்கும் வகையிலும் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய பேச்சைக் கண்டு மகிழ்ந்து அந்த அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அதில் பங்கேற்ற ஒருவர் மட்டும் எதிலுமே ஈடுபாடுயில்லாதவராய் ஏதோ பறிகொடுத்தவர் போல் அமர்ந்திருந்தார். இதைக் கவனித்த சொற்பொழிவாளர் அவர் அருகில் சென்று எல்லோரும் சிரிக்கும் வகையில் ஒரு கதையைச் சொன்னார். அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது. ஆனால் அந்த நபர் மட்டும் எந்தவித உணர்வையும் வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தார். சொற்பொழிவாளர் நொந்து போய் ‘ஒருவேளை அவருக்கு காதுகொஞ்சம் மந்தமோ’  என நினைத்தார்.

அந்த நிகழ்வு முடியும் நேரத்தில் அனைவருக்கும் அந்தப் பயிற்சி முகாம் பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்ய ஒரு விமர்சனக் குறிப்பேடு கொடுக்கப்பட்டது. அனைவரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தபின் அந்த சொற்பொழிவாளர் அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரியின் அறையில் அமர்ந்து அந்தக் குறிப்பேடுகளில் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை படித்துக்கொண்டிருந்தார்.

ஒரு பதிவினைப் பார்த்த அவருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. அந்தப் பதிவு கீழ்கண்டவாறு இருந்தது. ” இந்தப் பயிற்சியின் இடைவேளையில் கொடுக்கப்பட்ட சமோசா மிகச் சிறியதாக இருந்தது. அடுத்த முறை இதில் கவனம் செலுத்தவும்.”

சொற்பொழிவாளருக்கு மிகுந்த அதிர்ச்சி. அந்த மூத்த அதிகாரியிடம் இதைக் காட்டி “யார் இப்படி எழுதியது?” என்று கேட்க, அவரோ “நீங்கள் கடைசியில் அமர்ந்து சிரிக்காமலேயே ஒருவர் இருந்தார் என்று சொன்னீர்களே அவர்தான்.” என்றார். தொடர்ந்து “அவர் இந்த நிறுவனத்தில் எனக்கு அடுத்தபடியாக உள்ள அதிகாரி. அவர் என்னோடு நான் தற்போது இருக்கும் இந்தப் பதவிக்கு முயற்சி செய்தார். நேர்காணலில் அவருக்குத் தேர்ச்சியாகவில்லை. நான் இந்த நிறுவனத்திற்கு வெளியே இருந்து முயற்சி செய்தவன். எனக்கு இந்தப் பதவி கிடைத்ததிலிருந்து அவருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. நடக்கும் எல்லா நிகழ்வுகளிலும் ஏதாவது தவறான அல்லது ஒத்துப்போகாத கருத்துக்களை பதிவு செய்வதே அவர் வழக்கமாகிவிட்டது. யாரைப் பார்த்தாலும் சிரிக்க மாட்டார். தோல்வி மனப்பான்மை அவரை வாட்டி வதைக்கின்றது. நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லி மாற்ற முயற்சித்தோம். முடியவில்லை.”

பல நேரங்களில் தோல்விகள் நம்முடைய உறவு நிலைகளை மாற்றிவிடுகின்றன. வீடுகளிலும் சரி, வேலை பார்க்கும் இடங்களிலும் சரி எப்பொழுதுமே நாம் நினைத்தது நடக்க வேண்டும் என்று நினைப்பது மிகப் பெரிய முட்டாள்தனம். வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரே சீராகப் பார்த்து முன்னேறிச் செல்வது வாழ்க்கையின் அமைதிக்கு இன்றியமையாதது.

தோல்விகளிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ளவேண்டும் தவிர, சில சிறிய நிகழ்வுகளால் வாழ்க்கையின் முடிவுக்கே வந்துவிட்டோம் என்ற தவறான எண்ணத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது. சில நேரங்களில் நமக்கு ஏற்படும் தோல்விகளில் நாம் நம்மைவிடத் தகுதியில் குறைந்தவரையோ அல்லது நாம் செய்யும் தொழில்களில் சற்றும் அனுபவங்கள் இல்லாதவரிடமோ வேலை பார்க்க நேரிடும். அதனால் நமது திறமைகளோ அல்லது மதிப்போ குறைந்து விட்டது என்ற பொருள் கொள்ளுதல் தவறானது. “இதுவும் கடந்து போகும்” என்ற சிந்தனையை மனதில் கொண்டு தொழிலிலும், உறவுகளிலும், தொடர்புகளிலும் மேல்நோக்கான சிந்தனைகளைக் கொண்டு முன்னேற வேண்டும்.

பல நேரங்களில் நம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காத மாணவர்களும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குச் சென்று விடுகின்றனர். இது மிகவும் துயரமானது மட்டுமல்ல துரதிர்ஷ்டவசமானதும் கூட. சில நிகழ்வுகள் நம்முடைய வாழ்க்கையின் போக்கையும் வளத்தையும் வெற்றியையும் கட்டுப்படுத்துவதில்லை.

தோல்விகளாலும் வெற்றிகளாலும் ஏற்படும் மாற்றங்களை நாம் ஒரு சீரான மனநிலையுடன் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும். எவ்வாறு தோல்விகள் நம்மை பாதிக்கக்கூடாதோ அதே போல் வெற்றிகளும் நமக்கு தலைகனத்தையும் ஆணவத்தையும் ஏற்படுத்தக்கூடாது. வெற்றிகளின் மகிழ்வை மற்றவர்களோடு பகிர்ந்து செல்லுதல் அவசியம்.

நாம் பக்குவப்பட்ட மனநிலையுடன் வாழப் பழகிவிட்டால் வெளிப்புற மாற்றங்களும் உள்ளுணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களும் நம்மை பாதிக்காது. ‘மனத்தளவே வாழ்வு’ என்பதை நாம் புரிந்துகொண்டால் மகிழ்வு என்றும் நிலைத்திருக்கும்.

சீரான மனநிலையோடு வாழ்ந்து பார்க்கலாமே !

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *