தொல்காப்பிய உரையாசிரியர்களின் சங்கநூல் பயிற்சி

0

-முனைவர். இரா. இலக்குவன்                                              

இன்று கிடைக்கின்ற தமிழ் இலக்கண நூல்களுள் முதன்மையானதாகவும் வளமான உரைமரபுடனும் விளங்குவது தொல்காப்பியம் ஆகும். இதற்குப் பல்வேறு காலகட்டங்களில் ஏழு உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகள் உள்ளன. காலவரிசைப்படி தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியர் என்று போற்றத்தகும் இளம்பூரணர் (கி.பி.11 ஆம் நூற்றாண்டு), அவருக்குப்பின் சேனாவரையர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச்சிலையார், ஆத்திரேயர் ஆகியோர் தொல்காப்பிய உரையாசிரியர்களாவர். இவர்களுள் சேனாவரையர், கல்லாடர், தெய்வச்சிலையார், ஆத்திரேயர் ஆகிய உரையாசிரியர்கள் சொல்லதிகாரத்திற்கு மட்டுமே உரை எழுதியுள்ளனர்.

வியாகரணம் (சொல்) என்பது வடமொழியாளர்களிடையே ஒரு தனிக் கல்வியாகப் பயிலப்பட்டும் போற்றப்பட்டும் வந்ததும் வேதப்பயன்பாட்டுக்காக உருப்பெற்றதும் ஆகும். எனவேதான் வடமொழி முனைப்பு மிக்க அக்காலத்தில் தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு மட்டும் அதிகமான உரைகள் எழுந்தன.

தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியரான இளம்பூரணர் காலத்திலும் அதற்கு முன்னருமாக ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், அதனடியாகத் தோன்றிய வடமொழி மரபின் மேலாதிக்கம், இலக்கிய வளர்ச்சி மற்றும் பாடுபொருட்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை தொல்காப்பியம் தவிர்த்த வடமொழிச்சார்பு இலக்கண மரபுகளை வளர்த்தெடுத்தன. உரையாசிரியர் காலங்களில் சங்க இலக்கியப்பயிற்சி பொதுவாக எந்நிலையில் இருந்தது என்பதும் ஆய்வுக்குரியதாகும்.

கி.பி 7ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழகத்தில் நிலவிய சமூக அரசியல் சூழல்களும் வடமொழி மரபின் தாக்கங்களும் அவற்றுடன் தமிழ் நடத்திய கொள்வினை கொடுப்புவினை உறவுச்சூழல்களும் அகமும் புறமுமான சங்கச்செய்யுள் மரபினை பின்னுக்குத் தள்ளுவனவாய் அமைந்தன.     சங்ககாலத் தமிழ் வழக்கு நின்று போய் வெகுகாலமாகி விட்டது. அதன் சிறப்பியல்புகளான இனிமை தெளிவு சுருக்கம் நேர்மை முதலிய பண்புகள் யாவும் பெரும்பான்மை இலக்கியங்களின்றும் நீங்கிப் பல நூற்றாண்டுகள் கழிந்து விட்டன” என்று கூறும் வையாபுரிப்பிள்ளை பின்னர் நடந்த மீட்சியியக்கத்தில் உரையாசிரியர்களின் பங்கு முக்கியமானது என்று கருதுகிறார், (தமிழ்ச்சுடர் மணிகள்).

இக்காலத்தில்தான் இளம்பூரணர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதுகிறார். பேராசிரியர் உரை பொருளதிகாரத்தின் பின்னான்கியல்களான செய்யுளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல், மரபியல் ஆகியவற்றிற்கு மட்டுமே கிடைத்துள்ளது. எனினும் தொல்காப்பியம் முழுமைக்கும் அவர் உரை எழுதியமைக்குச் சான்றுகள் அவரது உரையினுள் காணக்கிடைக்கின்றன. நச்சினார்க்கினியரும் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவராவார்.

சங்க இலக்கியம் என்பது பாட்டும் தொகையும். தொல்காப்பியத்தின் காலம் வேறு; சங்க இலக்கியக் காலம் வேறு. உரையாசிரியர்கள் காலம் வேறு. இவற்றைப் பற்றி முடிந்தமுடிவு எதுவும் இல்லையெனினும் தொல்காப்பியத்தின் மூலத்தோற்றம் கி.மு. முதல் நூற்றாண்டினது என்றும் அதன் இறுதி வடிவம் கி.பி.500 க்கு முன் இருக்க முடியாது என்றும் கமில் சுவலபில் கருதுகிறார். (kamil zvelebil). சங்ககாலத்தின் காலம் தொல்காப்பியத்தின் காலத்திற்கு முன்னும் பின்னுமான விரிந்த காலப்பரப்பை அடக்கியது.

இளம்பூரணர்

இளம்பூரணர் தமது உரையில் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, பரிபாடல், புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து ஆகிய எட்டுத்தொகை நூல்களையும் சிறுபாணாற்றுப்படை தவிர்த்த பிற பத்துப்பாட்டு நூல்களையும் பயன்படுத்துகிறார். இளம்பூரணர் தமது பொருளதிகார உரையில் 1308 இடங்களில் மேற்கோள் பாடல்களைத்தருகிறார்.

சங்க நூல்களைக் குறிப்பிடும் முறைகள்:

 அரிமான் இடித்தன்ன என்னும் பாலைக்கலியுள் (செய்.67 உரை)
நகையா கின்றே தோழி என்னும் நெடுந்தொகைப் பாட்டினுள்
(மெய்ப்.4.உரை)
அறனின்றி அயல் தூற்றும்’ என்னும் கலியுள் (செய்.72.உரை) எனப் பாடலின் முதல் தொடரையும் நூற்பெயரையும் (கலித்தொகை) நூலின் உட்பிரிவையும் (பாலைக்கலி) இளம்பூரணர் குறிப்பிடுகிறார்.

தொடியுடை தோள் மணந்தனன் என்னும் பாட்டுள் (செய்.68 உரை)
பூந்தாமரைப் போதலமர என்னும் பாட்டுள் (செய்.68. உரை)
நெடுங்கயிறு வலந்த என்னும் பாட்டினுள் (செய்.59.உரை) என்று நூற்பெயர் சுட்டாமல் பாடலின் முதல் தொடரை மட்டுமே குறிப்பிட்டு நூல்பெயரைக் குறிப்பிடாத போக்கும் அவரிடம் காணப்படுகிறது.

கலி முதலாகிய சான்றோர் செய்யுளகத்துக் கண்டு கொள்க (அகத்.15.உரை)
கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் (புறத். முகப்புரை) எனச் சான்றோர் செய்யுளில் முதலாவதாகக் கலித்தொகையை வைத்துப் பேசுகிறார். கலித்தொகையை அவர் கலி (அகத்.15.உரை) என்றும் கலிப்பா (செய்.132.உரை) என்றும் கலித்தொகை (செய்.132.உரை) என்றும் கலிப்பாட்டு (புறத்.27) என்றும் தமது உரையில் குறிப்பிடுகிறார். கலித்தொகையை முதலாவதாக வைத்து எண்ணும் மரபு அவருடையது என்பது விளங்குகிறது. எட்டுத்தொகை நூல்களை வரிசைப்படுத்தும் ஒரு வெண்பா கலித்தொகையை இறுதியாக வைக்கிறது.

மையற விளங்கிய என்னும் மருதக்கலியுள் (கற்பு.6.உரை)
இகல்வேந்தன் சேனை என்னும் முல்லைக்கலியுள் (களவு.21 உரை)
என்று கலித்தொகையின் உட்பிரிவுகளான மருதக்கலி, முல்லைக்கலி, பாலைக்கலி, நெய்தற்கலி, குறிஞ்சிக்கலி ஆகியவற்றையும் இளம்பூரணர் குறிப்பிடுவர்.

பேராசிரியர்:

பேராசிரியர் பொருளதிகார உரையில் எட்டுத்தொகை நூல்களிலிருந்தும் குறிஞ்சிப்பாட்டு தவிர்த்த பிற பத்துப்பாட்டு நூல்களிலிருந்தும் மேற்கோள்களை எடுத்தாள்கிறார். 

மணி நிற மலர்ப்பொய்கை என்னும் கலிப்பாவினுள் (செய்.76.உரை)
அறவோ ருள்ளா ரருமறை காப்ப (செய்.121.உரை) என்னும் பரிபாடலுள்”‘ என நூலின் பெயரைக்குறிப்பிடுகிறார்.  சங்க இலக்கியத்தைப் பாட்டும் தொகையும் என்று குறிப்பிட்டவர் பேராசிரியரே ஆவர்.

நச்சினார்க்கினியர்:

நச்சினார்க்கினியர் அதிகமான நூல்களிலிருந்து மேற்கோள்கள் எடுத்தாள்பவர் ஆவார். இவரது பன்னூல் பயிற்சியால் உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர் என்று போற்றப்படுகிறார். இவர் சங்க இலக்கியங்களான கலித்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றிற்கு உரை எழுதியவர். மேலும் குறுந்தொகையின் கடைசி 20 பாடல்களுக்கு உரை எழுதினார் எனவும் கருதப்படுகிறது. (இளங்குமரன், இரா,) நச்சர் தமது உரையில் 2536 மேற்கோள் பாக்களைக் காட்டுகிறார்.

சங்க இலக்கியங்கள் அனைத்தையும் எடுத்தாளும் நச்சர் நூலின் பெயர் , அதன் உட்பிரிவு ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார். நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து என நூல்களின் பெயரையும் மணிமிடைபவளம், களிற்றியானை நிரை, நித்திலக்கோவை, பாலைக்கலி, முல்லைக்கலி போன்ற நூலின் உட்பிரிவுகளையும் நச்சர் குறிப்பிடுகிறார்.

விசும்புற நிவந்த என்னும் அகப்பாட்டும் அது (புறத்.5.உரை)
இக்களிற்றியானைனிரையுள் (அகத்.3.உரை)
சுணங்கணி வனமுலை என்னும் குறிஞ்சிப்பாட்டும் அது. ‘வீங்குநீர்’ என்னும் மருதக்கலியுள்…………….(அகத்.3.உரை) எனப் பாடல் மற்றும் பாடல்களின் முதற்தொடரையும் நூற்பெயரையும் நச்சர் எழுதுகிறார்.

தொல்காப்பிய உரையாசிரியர்கள் சங்க அக இலக்கியங்களை தத்தமது உரைகளில் மேற்கோளாகப் பயன்படுத்தும் விதத்தைக் காணலாம்.

நற்றிணை

இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள்  60
பேராசிரியர் காட்டும் மேற்கோள்கள்   11
நச்சர் காட்டும் மேற்கோள்கள்       129

குறுந்தொகை

இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள்  129
பேராசிரியர்                         101
நச்சர்                              227

ஐங்குறுநூறு

இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள்  70
பேராசிரியர் காட்டும் மேற்கோள்கள்   22
நச்சர்   காட்டும் மேற்கோள்கள்      169

அகநானூறு

இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள்  93
பேராசிரியர் காட்டும் மேற்கோள்கள்  177
நச்சர் காட்டும் மேற்கோள்கள்        263

கலித்தொகை

இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள்  159
பேராசிரியர் காட்டும் மேற்கோள்கள்  186
நச்சர் காட்டும் மேற்கோள்கள்        313

பரிபாடல்

இளம்பூரணர் காட்டும் மேற்கோள்கள்  4
பேராசிரியர்  காட்டும் மேற்கோள்கள்  6
நச்சர்      காட்டும் மேற்கோள்கள்    5

உரையாசிரியர்கள் அதிகமாக மேற்கோள் காட்டும் அக நூல் கலித்தொகை ஆகும். கலி முதலாகிய சான்றோர் செய்யுளகத்துக் கண்டு கொள்க என்று இளம்பூரணர் அந்நூலைச் சங்க செய்யுளில் முதன்மையானதாகக் காட்டுவதைக் காணும்போது உரையாசிரியர்கள் காலத்தில் அந்நூல் பெற்றிருந்த சிறப்பிடம் புலனாகிறது. மேலும் நச்சர் சங்க நூல்களுள் இதற்கு மட்டுமே உரை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

உரையாசிரியர்களால் மிகக் குறைவாகக் காட்டப்படும் நூல் பரிபாடல் ஆகும். பரிபாடல் 70 பாடல்களை உடையது எனினும் தற்போது 22 பாடல்களே கிடைக்கின்றன. தொல்காப்பியர் குறிப்பிடும் பரிபாட்டு காமப்பொருண்மையதாகவே வரும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பரிபாடல் எழுபதும் கடவுளர் வாழ்த்துதல் பொருண்மையதாக உள்ளன. இதை சங்கப்பனுவல்களுள் மிகப் பிற்பட்டதும் பக்தி இலக்கியக் காலத்தை ஒட்டியதும் எனக்கொள்ளமுடிகிறது. எனவேதான் உரையாசிரியர்களால் இது பெருமளவில் மேற்கோளாக எடுத்தாளப்படவில்லை என்று கருதப்படுகிறது.

தொல்காப்பிய உரையாசிரியர்கள் தங்களது சங்க இலக்கியப் புலமையை கீழ்கண்ட வகைகளில் வெளிப்படுத்துகின்றனர்.

  1. அதிக அளவில் மேற்கோள்களாக எடுத்தாளுதல்
  2. பாடல்களைப் பாடவேறுபாடுகளுடன் தருதல்
  3. குறையுடன் உள்ள மூலப்பனுவலை செம்மையாக்கல்

4.சங்கப்பாடல்களுக்கு தொல்காப்பிய மரபு வழி திணை, துறை வழங்குதல்

பாடல்களைப் பாடவேறுபாடுகளுடன் தருதல்:

நற்றிணையில் 380ஆவது பாடல் இளம்பூரணராலும் நச்சராலும் மேற்கோள்காட்டப்படும் போது நற்றிணையின் அடியெல்லையை மீறியதாக, இளம்பூரணர் 14 அடிகளுடனும் நச்சர் 15 அடிகளுடனும் காட்டுகின்றார். இப்பாடல் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் பதிப்பில் 12 அடிப்பாடலாகவே உள்ளது. இளம்பூரணர் (கற்பியல்,145 உரை)

”புரையோ ரன்ன புரையு நட்பின்
இளையோர் கூம்புகை மருவோர் ஆங்குக்
கொண்டுசெல் பாணநின் தண்துறை யூரனைப்” என்று 3 அடிகளை (9 முதல் 11 அடிகளாக) இணைத்து 14 அடிப்பாடலாகத் தருகிறார்.

நச்சர் தமது உரையில் (கற்பியல் 147 உரை)

புரையோ ரன்ன புரையு நட்பி
னிளையோர் கூம்புகை மருள வோராங்
கட்டங் காது விட்டாங் கமைத்துக்
கொண்டுசெல் பாணநின் தண்துறை யூரனைப்

என்று 4 அடிகளை (9 முதல் 12ஆம்அடிகளாக) இணைத்து 15 அடிப்பாடலாகத்தருகிறார். மேலும் இப்பாடல் நற்றிணைப்பதிப்பிலும் இளம்பூரணர், நச்சர் உரைகளிலும் பாடவேறுபாடுகளுடன் காணப்படுகின்றது.

வ.எ         அடி நற்றிணை இளம்பூரணர்       நச்சர்

 

1 4      அதனால்    இதனால் அதனால்
2 10     ——    மருள்வோர் மருளவோர்
3 11     பூணிலை பூணிலை பண்ணிலை
4 12   வேட்டதில் வேட்டத்தில் வேட்டதில்

 

உரையாசிரியர்கள் இருவரும் நற்றிணை மூலபாடத்துடன் வெவ்வேறு இடத்தில் பாடவேறுபாடு கொள்கின்றனர். நச்சர் ஓர் இடத்திலும் இளம்பூரணர் 2 இடங்களிலும் இருவரும் தத்தமக்குள் ஓர் இடத்திலும் என 4 இடங்களில் வேறுபட்ட பாடம் கொள்கின்றனர்.

குறையுடன் உள்ள மூலப்பனுவலை செம்மையாக்கல்:

உ.வே.சா-வுக்குக் கிடைத்த பரிபாடல் ஏட்டுச்சுவடிகளில் முதலிலும் இறுதியிலும் உள்ள ஏடுகள் அழிந்திருந்தன. எனவே பரிபாடலின் முதல் பாடல் எதுவென்று அவரால் அறியமுடியவில்லை. அந்நிலையில் உ.வே.சா. தொல்காப்பியச்செய்யுளியல் உரையில் உள்ள இளம்பூரணர் மேற்கோள் வழியே பாடலை மீட்டெடுத்தார் என்பதை அவரது கூற்று வழியே காணலாம்.

           இந்நூற் பரிசோதனைக்குக் கிடைத்தவை முதலிலும் இறுதியிலும் இர்க்க வேண்டிய ஏடுகளில்லாமலும் இடையிலுள்ளவை ஒடிந்தும் இராமபாண வாய்ப்பட்டும் பழுதுற்றிருந்த பழம்பிரதிகளாதலின் அவற்றிற் காணப்படாமல், ”கட்டுரை வகையின்” என்னும் தொல்காப்பியச்செய்யுளியற் சூத்திர வுரையில் (119) இளம்பூரணவடிகள் காட்டிய மேற்கோள்களிற் காணப்பெற்ற இப்பாடல் மிகச்சிதைந்திருந்த உரைப்பகுதியால் இந்நூலின் முதற் செய்யுளென்று அறியப்பெற்றுத் தமிழ்த்தெய்வத்தின் திருவருட்செயலை நினைந்து இன்புற்று இங்கே பதிப்பிக்கலாயிற்று. (பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும்)

கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்து” என்ற நூற்பா உரையில் பரிபாடல் பாட்டு முழுவதையும் பகுதிகளாகப் பிரித்து அதன் செய்யுள் உறுப்புகளையும் மேற்கோளாகத் தருகிறார். பாடலின் இடையிடையே,

இது தரவு
இஃது எருத்து
இவை நான்கும் அராகம்
இஃது ஆசிரியம்
இது பேரெண்
இதுவும் ஆசிரியம்
இவையாறும் பேரெண்
தனிச்சொல்
இது சுரிதகம்
இவை சிற்றெண்ணும் பேரெண்ணும் இடையெண்ணும்
இது சுரிதகம்

என்று செய்யுள் உறுப்புகளை இளம்பூரணர் சுட்டிக்காட்டும் மரபு பரிபாடல் பதிப்பினுள் பிறபாடல்களில் பயிலப்பெறவில்லை. இத்தகைய மரபு இளம்பூரணர் அளித்த கொடையாகும்.

உ.வே.சா கண்டெடுக்காத பரிபாடலடிகள்:

செய்யுளியல் 123 ஆவது நூற்பா உரையில். ‘முட்டடியின்றிக் குறைவு சீர்த்தாயும்’ வருவனவற்றிற்கு மேற்கோள்களாக,

‘நின்னொக்கும் புகழ் நிழலவை” (பரி.1:55) எனவும்

”கறையணி மிடற்றினவை
கண்ணணி நுதலினவை
பிறையணி சடையினவை” என வரும் என்பார் பேராசிரியர். கறையணி மிடற்றினவை எனத் தொடங்கும் மூன்றடிகள் நச்சராலும் இந்நூற்பா உரைப்பகுதியில் மீளவும் எடுத்துக்காட்டப்படுகின்றது. எனினும் தொல்காப்பிய உரைப்பதிப்பாசிரியர்களோ பரிபாடலைப் பதிப்பித்த உ.வே.சா வோ பிற பரிபாடல் பதிப்பாளர்களோ இவ்வடிகளை பரிபாடல் எனக் குறிக்கவில்லை.

பேராசிரியர் தமது உரையில், இப்பாடலில் கீழே, ‘மேற்காட்டிய பரிபாடற் செய்யுளுள்” ஒருசார் என்பது ஒழியசை; என்னை? அது சீராகலின் அதனொடு சில அசை கூடியன்றி அசையெனப்படாமையின் ”ஆங்கு” என வருந் தனிச்சொல் வழியசையெனப்பட்டது” என்று எழுதுவர். பேராசிரியர் ‘மேற்காட்டிய பரிபாடற் செய்யுளுள்’ என்று குறிப்பிடுவதால் அவ்வடிகள் பரிபாடல் என்று கருதுதல் தகும். எனினும் முதலாவது பரிபாடலிலிருந்து ஓர் அடியும் மேற்கோளாகத் தருவதால் ‘மேற்காட்டிய பரிபாடற் செய்யுள்’ எது என்பதில் மயக்கம் ஏற்படுகிறது. பேராசிரியர் தமது உரையில் மேற்காட்டிய பரிபாடலுள் ‘ஒருசார்’ ஆங்கு என்ற சொற்கள் பயின்று வருவதாகக் கூறி அதற்கு விளக்கமும் தருவது காணத்தக்கது.

ஒருசார் என்ற அசையும் ஆங்கு என்ற தனிச்சொல்லும் முதலாம் பரிபாடலுள் உள்ளனவா என்று ஆய்ந்தபோது ஆங்கு என்ற தனிச்சொல் இருப்பதும் ஒருசார் என்ற அசை இல்லாமையும் கண்டறியப்பட்டது. எனவே பேராசிரியர் முதலாவது பரிபாடலைக் குறிக்கவில்லை என்று புலப்படுகிறது. கறையணி மிடற்றினவை என்ற பாடலடிகள் உள்ள பரிபாடலில்தான் ஒருசார், ஆங்கு ஆகிய சொற்கள் இருக்கவேண்டும் என்றும் அதையே பேராசிரியர் குறித்தார் என்றும் உய்த்துணரமுடிகிறது. இப்பாடலடிகள் சிவனைப்பற்றிய வருணணையாக உள்ளன. எனவே இதைச் சிவனைப்பற்றிய பரிபாடல் என்று கருத இயலுகிறது.

சங்கப்பாடல்களுக்கு தொல்காப்பிய மரபு வழித் திணை, துறை வழங்குதல்:

அக இலக்கியங்கள் பாடப்பட்ட காலத்தில் தொகுக்கப்படவில்லை. அவை பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு தொகுக்கப்டடு திணை, கூற்று ஆகியன வழங்கப்பட்டன. உரையாசிரியர்கள் அவற்றிலிருந்து மாறுபட்டுத் தொல்காப்பிய விதிப்படி கூற்றுவகைகள் வழங்குகின்றனர். விரிக்கிற் பெருகும்.

தொல்காப்பிய உரையாசிரியர்கள் சங்க இலக்கியங்களுக்குத் திணை துறை வகுத்த முறையை ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் அவை தொல்காப்பிய மரபல்லாது பிற்கால மரபுவயப்பட்டதாகும். நச்சர் .”தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானுற்றிற்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின் அவர் சூத்திரப்பொருளாகத்துறை கூற வேண்டுமென்றுணர்க” என்று புறநானூற்றுக்குத் திணை, துறை வகுத்த மரபைக் கண்டிக்கிறார். ஏலவே தொல்காப்பிய மரபுப்படியே தொகை நூல்களுக்கு திணை, கூற்று வகைகள் கூறவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

அதோடு நில்லாது நச்சர் புறப்பாடல்கள் 111க்குத் தொல்காப்பியப் புறத்திணை மரபுப்படி திணை துறைகள் வகுத்துத் தருகிறார். இளம்பூரணர் 76 புறநானூற்றுப்பாடல்களுக்குத் தொல்காப்பியப் புறத்திணை மரபுப்படி திணை துறைகள் வகுக்கிறார். (இலக்குவன், இரா, 2013).

புறம் 308 ஆவது பாடலுக்குப் பதிப்பில் அடிக்குறிப்பு இல்லை. நச்சர் உரை மூலம் ”இது சீறூர் மன்னன் வேந்தனைப் புறங் கண்டது” என்ற அடிக்குறிப்பைப் பெறமுடிகிறது.

புறம் 349 ஆவது பாடலுக்குப் பதிப்பில் அடிக்குறிப்பில்லா நிலையில் ”பெருஞ்சிக்கல் கிழான் மகட்கொடை மறுத்தது” என்ற குறிப்பு இளம்பூரணர் உரையில் காணக்கிடைக்கிறது.

முடிவுரை

தொல்காப்பிய உரையாசிரியர்களின் சங்கநூல் புலமைக்குச்சில சான்றுகளைக்கண்டோம்.  உரையாசிரியர்கள் தொகை நூல்களைத் தொல்காப்பிய மரபிற்கு ஏற்பவும் மாறுபட்டும் மேற்கோள்களாகத் தந்தும் அவை இரண்டிற்கும் தமிழ்கூறும் நல்லுலகில் நிலையானதொரு உறவை உருவாக்கி வலுப்படுத்தினர். தொகை நூல்களின் பாடல்கள் பலவற்றிற்கு உரைகள், பாடவேறுபாடுகள் தந்து அவற்றை மெருகேற்றினர். தொல்காப்பிய மரபிற்குள் பொருந்தியும் பொருந்தாமலும் வரும் சங்க இலக்கிய இயல்புகளையும் வளர்ச்சிகளையும் இதற்குள் உள்ளடக்கிப் பேசுகின்றனர். தொல்காப்பியத்திற்கும் தொகை நூல்களுக்கும் இன்று நிலவும் அதிகாரபூர்வமான உறவு நிலைபெற்றதில் இவ்வுரையாசிரியர்களின் பங்கு முக்கியமானதாகும்.

துணைநூல் பட்டியல்

1.இளம்பூரணர் (உ.ஆ) தொல்காப்பியம் பொருளதிகாரம், திருநெல்வேலி   தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை, 1982.

2.கோபாலையர்,தி.வே., அரணமுறுவல்,ந., தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (முதல் பகுதி) தமிழ் மண் பதிப்பகம், சென்னை, 2000.

3.கோபாலையர்,தி.வே., அரணமுறுவல்,ந., தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (இரண்டாம் பகுதி) தமிழ் மண் பதிப்பகம், சென்னை, 2000.

4.கோபாலையர்,தி.வே., அரணமுறுவல்,ந., தொல்காப்பியம் பொருளதிகாரம் நச்சினார்க்கினியம் (மூன்றாம் பகுதி) தமிழ் மண் பதிப்பகம், சென்னை, 2000.

5. வையாபுரிப்பிள்ளை, எஸ்., தமிழ்ச்சுடர்மணிகள், குமரிமலர் காரியாலயம், சென்னை, 1949

6.Zvelebil, Kamil., The Smile of Murugan on Tamil Literature of south India, Tuta sub aegide pallas, Leiden,1971

*****

கட்டுரையாசிரியர் – உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
வெ.ப.சு. தமிழியல் ஆய்வுமையம்,
ம.தி.தா. இந்துக்கல்லூரி,
திருநெல்வேலி.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *