தகழியின் இரண்டுபடி நாவலில் எதார்த்த வாதம்

0

-மு.சண்முகப்பிரியா

தகழி சிவசங்கரப்பிள்ளை ‘பிரதிபலம்’ என்ற நாவல் மூலம் மலையாள இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர்.  இவர் ஆலப்புழை மாவட்டத்தில் ‘தகழி’ என்ற சிற்றூரில் பிறந்தவர்.   தகழி ‘பதித்பங்கஜம்’, ‘சங்கதி’, ‘நித்தியகன்னிகை’ போன்ற புதினங்கள் படைத்துள்ளார்.  இவை அனைத்தும் இடதுசாரிச் சிந்தனைகள் உடையவை.  ‘தோட்டியின் மகன்’ (1947) தோட்டிகளின் வாழ்க்கையை சொன்ன மலையாள இலக்கிய உலகில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய புதினம் ஆகும்.  ‘இரண்டடங்கழி’ (1948) குட்ட நாட்டில் பண்ணை வேலை செய்யும் புலையரின் வாழ்வியல் பற்றியது.  சாகித்ய அகாதெமி விருதுபெற்ற ‘செம்மீன்’ (1956) பரதவ மக்களின் நம்பிக்கைகளையும் வாழ்க்கையையும் பதிவிட்டது.  ‘ஓசோபின்ட மக்கள்’ (1959 )கிறித்துவக் குடிகளை பதிவு செய்தது.  கேரளநாட்டு வரலாற்றையே உள்ளடக்கிய ‘கயிறு’ (1980) இலக்கிய உலகில் மிக உயரிய விருதான ஞானபீடப் பரிசும் பெற்ற புதினம் ஆகும்.

‘இரண்டுபடி’ சேற்று நிலம் நிறைந்த குட்டநாட்டில் பண்ணை முறை ஒழிந்து உடலுழைப்புக்கேற்ற கூலி என்ற நிலை ஏற்பட்ட காலத்தில் சொந்த நிலம் இல்லாத ஏழைப் பண்ணைத் தொழிலாளர்களின் வாழ்க்கைநிலையைக் கூறுகிறது.  நிலப்பற்று, தொழிற்பற்று, பண்ணையார் பக்தி ஆகிய மயக்கங்களோடு வாழ்க்கை நடத்துகிறவர்கள் குட்டநாட்டு விவசாயத் தொழிலாளர்கள்.  இந்த மயக்கத்தில் இருந்து விடுபடும் கோரன், சமூக அமைப்பின் கொடுமை குறித்தும் நடைமுறையில் இருக்கும் பொருளாதார நிலைமை குறித்தும், இதன் அநீதி குறித்தும் மெல்ல மெல்ல விழிப்படைய அவனுக்குச் சங்கங்கள் உதவி செய்கின்றன.

கதையின் தலைவனான கோரன், தன் திருமணத்திற்குப் பெண்வீட்டிற்கு ஐம்பது ரூபாயும், இருபத்தைந்து பறநெல்லும், சீர்கொடுத்துத் திருமணம் செய்ய வேண்டிய சூழலில் புஷ்பவேலி பண்ணையாரிடம் ஓணப்பணியாளாக வேலைக்கு சேர்கிறான்.  முழுமையான பண்ணைத்தொழில் மட்டுமே தெரிந்த கோரன் முதலாளிகளால் தானும், தன்னைச் சார்ந்த தொழிலாளர்களும் சுரண்டப்படுகின்றனர் என்று தெரிந்தபோது அதை எதிர்க்கிறான்.  அங்கு உரிமை மறுக்கும்போது போராட்டக்களம் உருவாகத் தொடங்குகிறது. 1950-களில் சங்கம் தொடர்ந்து ஒன்றிணைந்து போராடுவதாக நாவல் புனைவாக்கம் செய்யப்படுகிறது.

குட்டநாட்டுச் சமூகம்:

எட்டித்துறையில் வாழும் காளிச்சம்பான் தன் மகள் சிருதயை திருமணம் செய்ய வருபவர்கள் 25 பறநெல்லும், ஐம்பது ரூபாயும் தட்சணை கொடுத்துத் திருமணச்  செலவு செய்து கொண்டு போக வேண்டும் என நிபந்தனை போட, சிருதைக்குத் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.

‘‘கல்யாண விருந்து, ஊர்ப் பணம், உடை, தாய்மாமானுக்கு உடை, பெண்ணின் தாய்க்கு உடை,  50 ரூபாய் 25 பறநெல்””1  இது கோரன் கொடுக்கவேண்டிய தட்சணை.  இதற்காகக் கோரன், புஷ்பவேலி பண்ணையாரிடம் ஓணப்பணியாளாக வேலைக்குச் சேர்ந்தான்.  வருடம் 180 நாள் வேலை. ஒருநாள் கூலி  5 கூலியேன், இரண்டுபடி நெல், ஓணம், அமாவாசை, மகம் நாட்களில் வேலை இல்லை.  அறுவடைக்காலத்தில் ஒருநாள் விட்டு ஒருநாளாகக் கதிர்க்கட்டு கிடைக்கும்.  கோரன் குடும்பத்தினர் குஞ்சப்பு வீட்டில் ஒரு தரைபோட்டுத் தங்கிக் கொண்டனர்.  கடுமையான ஐப்பசி மாதக் குளிரில் தண்ணீரில் இறங்கிச் சகதிக்கட்டுகளைத் தோண்டி எடுத்து கரையில் போடுவது அவர்களின் முதல்வேலையாக இருந்தது.

அங்குள்ள மக்கள் உரிஅரிசி இருந்தால் என்றாவது ஒருநாள் அரிசிச் சோறு வடிப்பார்கள்.  அங்கு ஊப்பைமீன்கள் கொண்டு குழம்பு வைப்பார்கள்.  ஆனால் மரவள்ளிக்கிழங்குதான் பெரும்பாலும் உணவாக இருக்கும்.

தொழிலாளர்கள் நிலை:

ஐப்பசி மாதம் ஒருநாள் அனைவரும் முதலாளியின் வீட்டில் ஒன்றுகூடுவார்கள்.  அன்று பண்ணையாரால் ஒருநேர விருந்தும் மதுவும் வழங்கப்படும்.  அதில் பலர் அடக்கி வைக்கப்பட்டுள்ள உண்மையைப் புலம்பலாக வெளியிடுவர்.  அன்று சமையல் சாம்பான் ‘‘பள்ளனும் பறையனும் வேலை செய்தான் நெல் உண்டாக்கினான் அதை, பண்ணையார் அறையில் வாரி போட்டாவ, சாம்பனும் குடும்பனும் வேலை செய்து தரையை உண்டாக்கினான், சகதிக்கட்டை போட்டு உயர்த்தி தோட்டமுண்டாக்கினான், தென்னம்புள்ள நட்டான், பண்ணையார் தேங்காய் பறிக்கிறாவ””2  என்று கூறுவதன் மூலம் அந்த ஊர் உருவாகக் காரணமானவர்களே அடித்தட்டு தொழிலாளி மக்களே ஆவார் என்பது புலனாகிறது. பண்ணையார் அடிக்கும்போது வாங்கிக்கொள்வது பெருமையாகவே இருந்தாலும் தொழிலாளர்கள் தம்மைப் பண்ணையார் அடித்தால் அந்த அடியை வாங்கிக் கொண்டால் பின் நன்மை செய்வார் என்று நம்பிக்கை கொண்டிருந்தனர். முதலாளிகள் தன்னிடம் வேலை செய்யும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலத்தைப் பிரித்துக் கொடுப்பார்.

புஷ்பவேலிப்  பண்ணையாள் அந்த வயலில் உழுது, விதையிட்டு, பயிர் செய்து அறுவடை தொடங்கும் முன்வரை அவனே அதற்கு முழுப் பொறுப்பாவான்.  ஆனால் அறுவடை தொடங்கியதும் அந்த நிலத்திற்கும் அறுவடைக்கும் அவனுக்கும் எந்தவிதச் சம்பந்தமுமில்லை.  உழைப்பும், விளைச்சலை உண்டாக்குவதும் தொழிலாளியுடையது.  ஆனால், அந்த விளைச்சலும் அதன் உரிமையும் அவனுக்கில்லை.  ‘‘கோரனுக்குத் தன் பொறுப்பில் உள்ள வயலின் அறுவடை வந்ததும் மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.  ஒரு மணிகூட சிந்தாமல் சிதறாமல் அறுக்கவேண்டும் என வேலை செய்யும் பெண்களிடம் கூறினான்.  தன் உழைப்பின் பயனைப் பார்த்துப் பார்த்து வியந்து  மகிழ்ச்சியால் ஒரு கதிரெடுத்து புட்டிலில் வைத்தான்.  அதைக் கவனித்த பண்ணையார் கதிரைக் கீழேபோடச் சொல்லி அதட்டினார்.  கோரன் அசைவற்று நின்றுவிட்டான்.””3  கோரன் போராடியும் ஒரு பிடி நெல் கேட்டபோது அவனைக் கடுமையாகப் பார்த்தார்.  பண்ணையாரின் சகதிக்காடு கோரனால் விளைநிலமாகியது.  அவன் உழைப்பால் உருவானது. ஆனால், அந்த விளைநிலத்தில் விளைந்த விளைச்சலைத் தொட அவனுக்கு அனுமதியில்லை.  பண்ணையார் தான் எடுத்த கதிர்க்கட்டைக் கீழேபோடச் சொல்லிய உடன் அவன் வெதும்பிபோய் தனக்கு உரிமையில்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தான்.  இது அங்கிருந்த ஓணப்பணியாள் அனைவருக்கும் பொதுவான நீதியாக இருந்தது.

வறுமையும் உணவும்:

புஷ்பவேலியில் வாழும் தொழிலாளிகளுக்கு அதிகபட்சமான ஆசை சகதிக்காட்டை சரிசெய்து குடிசையிடுவதும், உணவாக நெல்லரிசிச் சோறும் சிறுமீன் குழம்பும் மரவள்ளிக்கிழங்கும் உண்பதுமாக இருந்தது. அதோடு புதுத்துணி அணிந்து ஆலப்புழைக்கு சென்று ஒரு திரைப்படம் பார்ப்பதுமாக இருந்தது.

விவசாயத் தொழிலாளர்களின் அன்றாட உணவு என்பது நாழிக்கஞ்சியும் நாலு துண்டு கிழங்கும்தான் இருந்தது.  வெளுதை தன் மகன் குடிசைக்கு வந்திருந்தான்.  உடல் முழுவதும் வீக்கம்.  ‘‘அரிசி போட்டுக் கொதிக்கவச்ச தண்ணி குடிச்சு நாள் பத்தாச்சு, அதுதான் இந்த விதர்ப்பு என்று கூறினான்.””4  இதன்மூலம் நெல்லரிசிக்கு ஏங்கியிருந்தனர் என்பதை நம்மால் உணரமுடிகிறது. அறுவடைக் காலம் முழுவதும்  முதலாளிகள் கூலி நெல்லுக்கு பதில் காசு கொடுக்க ஆரம்பித்தனர்.  கூலி நெல்லைக் கொண்டு உணவருந்திப் பசிபோக்கிய குடும்பங்கள் குறைவான கூலிப் பணத்தைக் கொண்டு தங்களின் அடிப்படையான உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்யமுடியவில்லை. கோரனின் எண்ணம் முழுவதும் தன் தந்தையைக் கவனிக்க வேண்டும் என்றே விரும்பியது.  தந்தை தன் வீட்டிற்கு வந்தபோது தன் மனைவி அரிசிக் கஞ்சிக் கொடுத்தாள் என்ற செய்தி கோரனை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது.

சரியான உணவு இல்லாமலும், குளிராலும் கோரனின் தந்தை இறந்தான்.  புதைக்க இடம் இல்லை.  குடியிருப்புப்பகுதி முழுவதும் ஈரமான தரை.  எனவே புதைத்தால் பிணம் மேலே வந்துவிடும்.  கிறித்துவர் ஆக இல்லாதால் கல்லறைப்பகுதிகூட இல்லை.  பிணத்தைக் கல்லால் கட்டி ஆற்றில் போட்டான்.  தன் தோட்டியின் மகன் புதினத்தில் கூட ‘‘சுடலையின் தந்தை இசக்கிமுத்து தோட்டியைப் புதைக்க இடமில்லால் புதைக்கப் பணம் இல்லாமலும் மலக்கிடங்கில் புதைத்தனர். இரண்டு நாளில் நாய் பிணத்தை எடுத்து வெளியே இழுத்துப் போட்டுவிட்டது.””5 என்று அடித்தட்டு மக்களின் வாழ்வியலை எதார்த்ததோடு சுட்டுகிறார்.

போராட்டங்களும் தீர்வும்:

உழைத்துப் பழகிய மக்கள் அதற்கான கூலி கிடைக்காமல் பட்டினியால் வருந்தினர்.  ‘‘பண்ணைத் தொழிலாளர்களுக்குச் சம்பளமாக ஒவ்வொரு ரூபாய் கொடுத்துவிட்டு யோசேப்பு கர்வத்தோடு வேணுமென்றால் கொண்டு போ இங்கு நெல்லும் புல்லும் ஒன்றுமில்லை.  வேலை வேண்டாம் என்றால் பற்றுள்ளதை வைத்துவிட்டு போ””6 என்றான்.  குட்டநாட்டில் பண்ணையார்கள் இரகசிய தீர்மானம் போட்டு யாருக்கும் நெற்கூலி இல்லை என்று முடிவெடுத்தனர்.

முதல் முறையாகப் பத்திலிருந்து அறுபது பறையர்கள் கூடினர்.  தங்களைப் பற்றிய பிரச்சனைகளைப் பேசினர்.  ஒன்றுசேர்ந்து நிற்கவேண்டும் என்றனர். தங்களுக்குக் கூலி கொடுக்க நெல் இல்லை என்று சொன்ன பண்ணாயார்களின் நெல்லை லாரியில் ஏற்றும்போது அங்கிருந்த விவசாயக்கூலிகள் அந்த லாரியை மடக்கிப் பிடித்துத் தங்களின் முதல் எதிர்ப்புக்குரலை ஒலித்தனர்.  சங்கம் ஆரம்பித்தனர், சிறுசிறு சங்கங்களைச் சேர்த்த நிர்வாகமும் மக்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கிய காலகட்டம்.  கோயில் திருவிழாக்களில் சங்கம் குறித்தும் உழைப்புக்கேற்ற கூலி வாங்கவேண்டும் என்றும் பேசினார்.  இது ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் ‘‘ஒரு எசமான் எல்லோரும் சமமுனு சொன்னார்.  அப்ப நம்மளும் பண்ணையாரும் சமமா?  நமக்குக் கூலி கூடுதல் வேணமின்று கேட்டா பண்ணையாரிடம் இருந்து வாங்கி தருவாங்களா?””7 என்று அறியாமை நிறைந்த மக்களாகவே இருந்தனர்.  அன்றைய காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கிவிட்டது.  அதில் சாதி, மத, பேதமின்றி கட்சியில் அனைவரும் இணைந்தனர்.

சங்கமானது தொழிலாளர்கள் பேசவும் அவர்கள் கருத்துக்களைக் கூறவும் அவர்களுக்குத் துணிவுடன் கூடிய உரிமையைக் கொடுத்து இருந்தது.  இந்த அரசாங்கம் நமக்கு என்ன செய்யபோகிறது என்று பேசும் அளவிற்கு வளர்ந்து இருந்தனர்.  இவர்களின் இந்த எதிர்ப்பால் அரசு இவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்தது.

‘‘தினந்தோறும் இரண்டு கூலியேன் நெல்லும், மீதி அரசு நிர்ணயித்துள்ள சம்பளம் என்றும் கூலிவிகிதம் மாறிவிட்டது.  இது சங்கத்தின் முதல் வெற்றியாகும்.  இந்த வெற்றி கோரனை இன்றும் சங்க செயல்களில் தீவிரப்படுத்தியது.  தன் மனைவி  தடுக்கும்போது அவள் தனக்கு முட்டுக்கட்டைப் போடுகிறாள் என்று கூறும் அளவிற்கு அவன் சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டான்.  சங்கமே அவனுக்கு உயிர் மூச்சாகவும் இருந்தது.  அவனின் ஈடுபாட்டைப் பார்த்து தானும் கணவனுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சங்கத்தில் சேர்வதாக கூறுகிறாள்.  அப்போது சங்கம் பற்றிக் கோரன் தன் மனைவிக்கு அறிவுறுத்திக் கொண்டிருந்தான்.””8 ‘‘இனி நமக்கு முன்னால் இருக்கும் காலம் அபாயகரமானது.  அதோடு இந்தப் போர் குட்டநாட்டுப் பண்ணைக்கு மட்டுமன்று; ராஜ்யத்தை  ஆளுகிறவர்களுக்குக் கூட யூனியனையும் அதில் பணியாற்றுபவர்களையும் எதிர்ப்பார்கள்.  இவர்கள் பண்ணையார்களின் மச்சான்களே.  எனவே நமக்கு வேண்டியதைப் பிடிச்சு வாங்கனும், ஜெயிலுக்கு போகவோ அடிபட்டு சாகவோ எல்லாம் நடக்கும்””9 என்ற நிலையினை எடுத்துச் சொன்னான்.

குட்டநாட்டு விவசாயத் தொழிலாளர்கள் அவர்களுக்குத் தேவையான சிறு சிறு உரிமைகளை யூனியன் வழியாகப் பெற்றனர்.  அவர்களின் மோதல் பண்ணையார்கள் மட்டுமின்றி அரசாங்கமும்தான். அங்கு இருக்கும் தாழ்த்தப்பட்ட பண்ணைத் தொழிலாளர்கள் சற்று வளர்ந்தனர்.  ஆதலால், அவர்களின் குரலில் கனம் கூடியது. அவர்கள் இட்ட நிபந்தனைகளை ஏற்று கூலி தரப்பட்டது.  ‘‘கூலியை அவர்கள் முன்னால் அளக்கவேண்டும்.  நிலத்தில் விளைவதில் ஒரு பங்கும், மற்றும் பண்ணையாளர்களின் இலாபத்தில் ஒரு பங்கும், வேலைக்கேற்ற கூலி, அதோடு பண்ணையார்களின் கட்டுக்குத்தகையை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றனர்.””10 இதனால் சில பண்ணையார்கள் ஏழை நாயரையும் கிறித்துவர்களையும் ஈடுபடுத்தினர்.  பின் இவர்களே இதைச் சரியென்று ஒப்புக்கொண்டு போய்விட்டனர்.  நாடெங்கும் விவசாயத் தொழிலாளர்களின் கூட்டங்களும் ஊர்வலங்களும் நடைபெற்றன. தொழிலாளர்கள் முத்திரைமொழிகள் முழங்குகின்றனர்.  பல இடங்களில் வேலைநிறுத்தம் நடந்தது.  சில இடங்களில் கேட்ட கூலி வாங்காமல் வேலையாட்கள் கலைந்து போகவில்லை.  இரவில் வீட்டின் முன்னே நின்று உறுதிச்சொற்கள் உரைத்துக் கூவினர்.  அரசுக்கு எச்சரிக்கை செய்தனர்.  குட்டநாட்டில் உணவுப்பஞ்சம் உச்சத்தில் இருந்த காலத்தில் எல்லைமீறி பொது அமைதியை உடைத்தனர் என்று அரசு பலர்மீது வழக்குத் தொடர்ந்தது.  அதில் முக்கிய தலைவர்கள்  தலைமறைவாகிவிட்டனர்.  இதேபோல் டி.செல்வராஜின் ‘தோல்’ புதினத்தில் தோல் தொழிலாளர் போராட்டமும், ‘மலரும் சருகும்’ புதினத்தில் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டமும் வர்க்கப் போராட்டத்தையும் எடுத்துக்காட்டுகிறது. ‘‘1948-1955 காலகட்டத்தை இடதுசாரி இயக்கங்களின் தலைமறைவுக் காலம்””11 என்றே பா. ஆனந்தகுமார் தனது கட்டுரையில் தெரிவிக்கிறார். வகைமாதிரியான சூழல்களில் வகைமாதிரியான கதை மாந்தர்களைப் படைத்துக் காட்டுவதுதான் எதார்த்தவாதம் என்னும் ஏங்கல்ஸ் கூற்றுக்கேற்பக் கோரன் இங்குப் படைக்கப்படுகிறார்.  போராட்டத்தில் சிலர் பிடிபட்டனர்.  சிலர் ஒடுக்கப்பட்டு அடிக்கப்பட்டு அடைக்கப்படுகிறார்கள்.  கோரன் தலைமறைவாக இருக்கிறான்.  சிருதையை ஓர் இரவில் திடீரென சந்தித்திப் பேசிவிட்டுச் செல்கிறான்.

தகழியின் இந்தப் புதினத்தில் புரட்சியான ஆனால் எதார்த்தமான காட்சியாக கோரன் தன் வாழ்க்கையைத் தொழிலாளர்கள் நலன், சங்கம் என்று அர்ப்பணித்துவிட்டதால் சிருதையை விரும்பிய சாத்தனிடம் ஒப்படைக்கிறான்.  அதோடு சிருதைக்குத் துன்பத்தைக் கொடுக்கும் புஷ்பவேலி சாக்கோவை அடித்துக் கொன்றான். ஆனாலும், தொழிலாளர்களின் நலனுக்காகத் தலைமறைவாக இருந்தான்.  விவசாயத்தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுவதால் ‘‘முதலாளி இனத்தார் மிகவும் பயந்து சங்கடப்பட்டனர்.   மாதா கோவில்களிலும் மிக நீண்ட பிரார்த்தனையும் இந்து கோவில்களில் திவ்ய ஹோமங்களும் நடந்தன.  கம்யூனிஸத்திலிருந்து உலகைக் காப்பாற்றுமாறு இவையெல்லாம் நடந்தது.””12 இவ்வாறு போராட்டத்தின் தன்மையைப் பார்க்கும்போது சிருதையும் மற்ற பெண்களும் போராட்டத்தில் தாங்களும் ஈடுபடவேண்டும்  என்று விரும்பினர்.

முடிவுரை:

விவசாயப் போராட்டங்களின் எழுச்சியானது அரசாங்கத்தில் ஒரு மாற்றத்தை உண்டாக்கியது.   குட்டநாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.  பொதுமக்களின் விருப்பங்கள் மதிக்கப்படவேண்டும் என்று சங்கங்கள் கூடிப் பேசி முடிவெடுத்தனர்.  சங்க உறுப்பினர்கள் அனைவரும் சமமான சீரான முன்னேற்றம் அடையவேண்டும் என முடிவெடுத்து விவசாயத் தொழிலாளர்களின் இந்த கலகக்குரலானது உரிமைக்குரலாக ஒலித்து வெற்றியடைந்தது.

அடிக்குறிப்பு:

1.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 20.
2.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 33.
3.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 53.
4.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 71.
5.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 98.
6.தோட்டியின் மகன் தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 30.
7.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 100.
8.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 115.
9.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 120.
10.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 121.
11.கட்டுரை டி.செல்வராஜ் தால் நாவல் வரலாறும் எதார்த்தவாதமும் பா. ஆனந்தகுமார், பக்.51.
12.இரண்டுபடி தகழி சிவசங்கரன் பிள்ளை, பக். 113.

பயன்பட்ட நூல்:

சிவசங்கரம்பிள்ளை, தகழி. இரண்டுபடிகள், சாகித்ய அகாடமி, தலைமை அலுவலகம், இரவீந்தரபவன், 35, பெரோஷா சாலை,புதுதில்லி-1.

*****

கட்டுரையாளர் – தமிழ் உதவிப்பேராசிரியர்,
அரசுக் கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் – 636 007.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *