கணியன்பாலன்

        தமிழக வரலாற்றுக்கான காலவரையறைகள்

         நமது பழந்தமிழக வரலாறு இங்கு தரப்பட்டுள்ள இருபத்தொரு காலவரையறைகளைத் தனது வரலாற்றுக்கான அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டுள்ளது. இந்த அடிப்படை வரலாற்று ஆதாரங்களையும், நமது சங்க இலக்கிய ஆய்வுகளையும் இணைத்து, இவை இரண்டின் அடிப்படையில்  பல புதிய கணிப்புகள் கண்டுணரப்பட்டு, நமது முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்கான ஆண்டுகளும், காலகட்டங்களும்  கணிக்கப்பட்டன.

1.கிரேக்கவீரன் அலெக்சாந்தர் கி.மு. 326 வாக்கில் இந்தியாவின் மீது படையெடுத்து, 19 மாதம் கழித்து கி.மு 325 வாக்கில் வெளியேறுகிறான்-(1).

2.அலெக்சாந்தர் காலத்திலும் அவனுக்கு முன்னும் மகதத்தை நந்தர்கள் ஆண்டு வந்தனர். நந்தர்களில் மகாபத்ம நந்தன் இந்திய அளவில் புகழ்பெற்றவனாக இருந்தான்-(2).

3.கி.மு.325-322 வரையான காலங்களில் வட இந்தியாவில் கலவரங்களும் குழப்பங்களும் நடைபெற்றது என்கிறார் வின்சென்ட் சுமித்-(3).

4.மௌரியர்கள் சுமார் கி.மு. 321 வாக்கில் மகத ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். வட இந்தியாவில் தங்களை நிலை நிறுத்திக்கொண்ட அவர்கள் கி.மு. 300 வாக்கில் தக்காணத்தின் மீது படையெடுக்கின்றனர்-(4).

5.கி.மு. 297இல், பிந்துசாரன் பதவியேற்றபின் தக்காணத்தின்மீதான படையெடுப்பு தீவிரப்படுத்தப்படுகிறது. கடலுக்கு இருபகுதிகளிலும் இருந்த தக்காணப்பகுதிகளைக் கைப்பற்றியவனாக அவன் கருதப்படுகிறான்-(5).

6.சங்கப்பாடல்கள், வடுகர்கள், கோசர்கள் துணையோடு நடந்த மௌரியப் படையெடுப்பு குறித்தும், வல்லம்போர், செருப்பாழிப்போர் ஆகியவற்றில் வடவடுகர், வம்பவடுகர், ஆரியர் எனப்படுகிற மௌரியர்கள் இளஞ்செட்சென்னியால் தோற்கடிக்கப்பட்டது குறித்தும் பேசுகின்றன-(6).

7.இப்படையெடுப்புக்குப்பின் மௌரியர்களின் தெற்கெல்லை, மேற்கே கல்யாணபுரி ஆற்றின் முகத்துவாரம் வரையிலும், கிழக்கே வடபெண்ணை நதியின் முகத்துவாரத்தில் இருந்த நெல்லூர் வரையிலும் பரவியிருந்ததாக வின்சென்ட் சுமித் குறிப்பிடுகிறார்-(7).

8.வின்சென்ட் சுமித் தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகள் பராமரித்து வந்துள்ளன எனவும் ஆனால் மௌரியப்பேரரசில் கடற்படை இராணுவத்தின் ஓர் அங்கமாக இருந்தது பற்றிய ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் கூறுகிறார்-(8).

9.மாமூலனார் தமிழ் மூவேந்தர்களின் கட்டுப்பாட்டில் மொழிபெயர்தேயம் எனப்படும் தாக்காணப்பகுதி இருந்ததாகத் தெரிவித்துள்ளார்(9).

10.முதுகுடுமிப்பெருவழுதி வெளியிட்ட நாணயத்தின் காலம் கி.மு. 4ஆம், 3ஆம் நூற்றாண்டு என்கிற நடனகாசிநாதன் அவர்களின் கருத்து, கி.மு. 3ஆம் நூற்றாண்டு என்கிற பிரித்தானிய-ஜெர்மன் குழுவினர்,  ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்களின் கணிப்பு-(10).

11.புகளுர்கல்வெட்டின் காலம் பட்டிப்பொருளு கல்வெட்டுக்கு(கி.மு.290-270) முந்தைய கி.மு. 4ஆம் நூற்றாண்டு என்கிற நடனகாசிநாதன் அவர்களின் கணிப்பு-(11).

12.சேரலாதன் இமயவரம்பன் குறித்தப் பதிற்றுப்பத்துப்பாடல்கள், அதன் பதிகம், அவன்குறித்த மாமூலனார் போன்ற சங்கப்புலவர்களின் பாடல்கள் ஆகியன, அவன் 58 ஆண்டுகள் ஆட்சியாண்டதையும்,  வேந்தன் ஆனவுடன் இமயம்வரை அவன் படையெடுத்துச் சென்று வென்றதையும், கடம்பர்களையும், யவனர்களையும் வென்றதையும் தெரிவிக்கின்றன-(12)

13.கி.மு. 256ஆம் ஆண்டைய அசோகன் கல்வெட்டில் சோழ, பாண்டிய, சதியபுத்ர, கேரளபுத்ர அரசுகள் இடம்பெற்றுள்ளனர். சோழர்கள் முதன்மை பெற்றுள்ளார்கள். அதியன்கள் இடம் பெற்றுள்ளார்கள்-(13).

14.கி.மு. 232இல் அசோகர் இறந்துபோகிறார். சாதவாகனர்கள் கி.மு.230இல் தனி அரசாக ஆகின்றனர்-(14).

15.சம்பை கல்வெட்டின் காலம் கி.மு.270-230; அதில் இடம்பெற்ற ‘சதியபுதோ’ என்பதில் உள்ள எழுத்துக்கள் பண்டைய எழுத்தியல்-கல்வெட்டியல் (palaeography-orthography) படி, அசோகரின் கல்வெட்டில் இருப்பது போன்றே இருப்பது-(15).

16.காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டின்படி, கி.மு. 165க்கு முன்  1300 வருடங்களாக தமிழரசுகளின் ஐக்கியகூட்டணி இருந்து வந்துள்ளது. தமிழரசுகளின் காவல் அரணாக இருந்த, புத்துண்டா என்கிற கலிங்கநாட்டின் இரண்டாவது பெரிய துறைமுக நகரம் காரவேலனால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த ஆண்டு பாண்டிய வேந்தன் பரிசுப்பொருட்களை காரவேலனுக்கு அனுப்பியுள்ளான்-(16).

17.பதிற்றுப்பத்துப் பாடல்களின் தரவுகளும், அதன்பதிகங்கள்தரும் வேந்தர்களின் ஆட்சியாண்டுகளும்-(17).

18.வரலாற்றுக்கால இரண்டாம் தூமகேதுவின் ஆண்டும்(கி.மு.163), யானைக் கண்சேய்மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறந்தஆண்டும் ஒன்றாக இருப்பது. பத்தாம் பதிற்றுப்பத்தின் தலைவன் இவனே என்கிற தமிழறிஞர்களின் கணிப்பு-(18).

19.தலைவடிவப் பெருவழுதி நாணயங்களின் காலம்-கி.மு. 2ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி(சுமார்கி.மு.130-100) என்கிற தினமலர் ஆசிரியர், நாணயவியலாளர் ஆர். கிருஷ்ணமூர்த்தி அவர்களின் கணிப்பு-(19).

20.மாக்கோதை வெளியிட்ட தலைவடிவ நாணயங்களின் காலம் கி.மு. 2ஆம் 1ஆம் நூற்றாண்டு அல்லது கி.மு. 1ஆம் நூற்றாண்டுக்கு சிறிது முந்தைய காலப்பகுதி(130-100)  என்கிற அகழாய்வு இயக்குநர் நடன காசிநாதன், ஆர். கிருஷ்ணமூர்த்தி  ஆகியவர்களின் கணிப்புக்கள்-(20).

21.கி.மு. முதல் நூற்றண்டில், சுங்க வம்ச ஆட்சியாளர்களின் இறுதிக் காலத்தில்(கி.மு.75), அவர்களது கட்டுப்பாட்டில் இருந்த உச்சயினி மீது  தெற்கத்திய சாதவாகனர்களின் படையெடுப்பு நடந்தது என்கிற கோசாம்பி அவர்களின் கருத்து. சோழன் நலங்கிள்ளி உச்சயினி மீது படையெடுத்தான் என சங்ககால இறுதிக்கால “முத்தொள்ளாயரம்” நூல் கூறும் செய்தி-(21).

       வரலாற்றுக் காலவரையறைக்கான ஆதாரங்கள்

1.பண்டைக்கால இந்தியா, ஆர். எசு. சர்மா, தமிழில் மாஜினி,    வெளியீடு, ஜூன்-2004, பக்: 187.

2.பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 101.

3.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, பக்: 56.

4, 5. பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர்-2011, பக்: 111, 112.

6.மாமூலனார் – அகம்: 251, 265, 281; பாவைக்கொட்டிலார் – அகம் 336; இடையன் சேந்தன் கொற்றனார் – அகம்: 375;   ஊன்பொதிபசுங்கொடையார்- புறம்: 370, 378; கள்ளில் ஆத்திரையனார்-புறம்: 175; உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்- அகம்: 69.

7.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, பக்: 64.

  1. “     “    பக்: 79

9.மாமூலனாரின் அகநானூற்றுப்பாடல்: 31.

10.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 45;  தமிழகக் கடல்சார் வரலாறு, பதிப்பாசிரியர்கள்-ந.அதியமான் & பா.ஜெயக்குமார்,   தமிழ்ப்பல்கலைக்கழகம்,   ஐப்பசி-நவம்பர்:2006,     பக்:24;     ஆர். கிருஷ்ணமூர்த்தி,  செழிய செழியன் நாணயங்கள், பக்: 125-128.

11.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 25.

12.இரண்டாம் பதிற்றுப்பத்துப்பாடல்கள் & பதிகம் – குமட்டூர் கண்ணனார்; மாமூலனாரின் அகப்பாடல்கள்: 127, 347.

13.அசோகர், இந்தியாவின் பௌத்தப் பேரராசர், வின்சென்ட் சுமித், தமிழில் சிவ முருகேசன், 2009, அசோகர் ஆணைகள், பக்: 123, 124, 139, 140.

14.பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 310, 311.

15.TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 26-28.

16.www.jatland.com/home/Hathigumpha– inscription & சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய “சிரி காரவேலா” என்கிற நூலில் இருந்து இணையதளம் வழியாக இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

17.சங்ககால பதிற்றுப்பத்தும் அதன் பதிகமும்.

18.க.ப. அறவாணன், “தமிழியல் தேற்றங்களும் தீர்வுகளும்” டிசம்பர் 2009, பக்: 54-61 & பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016, பக்: 580-582.

19.ஆர். கிருஷ்ணமூர்த்தி, பாண்டியர் பெருவழுதி நாணயங்கள், பக்: 81-91.

20.சங்ககால சேர நாணயங்கள் கண்டுபிடிப்பு, சில வரலாற்றுச்செய்திகள், ஆர். கிருஷ்ணமூர்த்தி, 2009, பக்: 31, 32. & TAMILS HERITAGE, NATANA. KASINATHAN, 2006, PAGE: 45.

21.டி.டி. கோசாம்பி, பண்டைய இந்தியா, செப்டம்பர்-2006, பக்: 388. & கவிஞர் தெசிணி அவர்கள், ‘கலித்தொகையும் முத்தொள்ளாயிரமும்’, டிசம்பர் 2004, பக்; 180;

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *