தேவ் ராஜ்


‘சங்கதம் பார்ப்பனர்க்கு மட்டுமே உரிய மொழி. பவுத்த – சமண சமயங்கள் சங்கதத்தை ஆதரிக்கவில்லை. சாமானியப் பேச்சு வழக்கு மொழிகளையே கையாண்டு வந்தன’ என்பது
பரவலான ஆழ்ந்த புரிதல். ஆனால் சமண வரலாறும், சான்றுகளும் இக்கருத்தைச் சற்றும் ஏற்க முடியாமல் அமைந்திருக்கக் காண்கிறோம். பஞ்ச பரமேட்டிகளைப் போற்றும் சமண மந்திரமான ணமோகார மந்திரம் பாகதத்தில் அமைந்திருப்பதும் உண்மையே. ஆனால் ஜைனம் பிரணவத்தை, பீஜாக்ஷரங்களை மறுக்கவில்லை. சமணக் கோட்பாட்டுக் கலைச்சொற்கள் அமைந்திருப்பது ஸம்ஸ்க்ருதத்தில்.

அடிப்படையில் பௌத்தம், ஜைநம் என்பவை சங்கதப் பெயர்களே;
தீர்த்தங்கரர் பெயர்கள் சங்கதத்தில், கணதரர் பெயர்கள் சங்கதத்தில். சமணக் கல்வெட்டு சொல்லும் சில சமணத் துறவியருக்கு அழகான சங்கதப் பெயர்கள் –
ப₄த்₃ரோ ப₄த்₃ரஸ்வபா₄ஶ்ச த₄ரஸேநோ யதீஶ்வர:||
பூ₄தப₃லி: புஷ்பத₃ந்தோ ஜிநபாலிதயோகி₃ராட்|
ஸமந்தப₄த்₃ரோ தீ₄த₄ர்மா ஸித்₃தி₄ஸேநோ க₃ணாக்₃ரணீ:||

புகழ்பெற்ற கணதரர் சிலர் –
வ்ரு’ஷப ஸேன, கேசி, சுபதத்த, ஆர்யகோஷ, வசிஷ்ட, ப்ரஹ்மசாரி, ஸோம, வீரபத்ர, ஸ்ரீதர, இந்த்ரபூதி கௌதம, ஸுதர்ம ஸ்வாமி. இவர்கள் தீர்த்தங்கரர்க்கு அணுக்கமாக இருந்து கோட்பாடுகளைப் பரப்பினர். ஆநந்தகனர் என்ற வெள்ளாடைத் துறவியார் சிறந்த கவிதைகளைப் படைத்தார். இருபெரும் சமணப்பிரிவினரும் பின்பற்றும் ‘தத்வார்த்த ஸூத்ரம்’ அமைந்திருப்பது சங்கதத்தில்.

சமணத் துறவியர் நந்தி கணம், ஸேன கணம், ஸிம்ஹ கணம், தேவ கணம் என நான்கு கணத்தவராக இருந்தனர். வஜ்ர நந்தி மதுரையில் சமண சங்கத்தை நிறுவினார். பவணந்தி முனிவர் [நன்னூல்] நந்தி கணம் சார்ந்தவர்; அப்பரடிகளார் தாய்ச் சமயம் திரும்புமுன் சமணத்தின் ஸேன கணத்தைச் சேர்ந்தவராக இருந்தார்; ‘தர்மஸேனர்’ அவர்தம் பெயர். திருஞான ஸம்பந்தமூர்த்தி ஸ்வாமிகளின் ‘திருவாலவாய்ப் பதிகம்’ பார்த்துத் தெளிவு பெறலாம். தமிழ்க் காப்பியமான நீலகேசிக்கு உரை எழுதியவர் ஸமய திவாகர முனிவர்.

இன்றளவும் சமணத் துறவியர் சங்கதப் பெயர்களோடுதான் இருக்கின்றனர்; இன்றைய சமண உலகின் புகழ்பெற்ற துறவியார் ‘தருண ஸாகர முனி’. இவரது சொற்பொழிவுகளை யுட்யூபில் கேட்கலாம்.

சமணரின் தொன்மையான ஆகம நூலான ஷட்கண்டாகமத்தின் தவள டீகை அருமையான சங்கத சுலோகங்களுடன் திகழ்கிறது, மாதிரிக்கு ஒன்று-
பூர்வாபரவிரோதா₄தே₃வ்ர்யபேதோ தோ₃ஷஸந்ததே:|
த்₃யோதக: ஸர்வபா₄வநாமாப்தவ்யாஹ்ருʼதிராக₃ம:||

சந்திரகுப்த மௌரியர் காலத்தில் வடக்கிலிருந்து புலம் பெயர்ந்த சமணர் குழாம் கருநாடகத்தில் நிலைபெற்று வளர்ந்தது; தென்னக மொழிகளில் சமயப் பரவல் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் சங்கதம் ஒதுக்கப்படவில்லை. ‘மஹா புராணம்’ கருநாடகச் சமணர் தந்த முக்கியமான சங்கத நூல். சமணர் தம்மில் வாதுவல்ல அறிஞர்க்கு ‘வாதீப ஸிம்ஹ’, ’வாதி கண்டீரவ’ எனும் பட்டங்களை அளித்துக் கவுரவித்தனர். பாரதத்தில் விருதளிப்புச் சடங்கை முதலில் தொடங்கி வைத்தது சமணராகவே இருக்க வேண்டும்.

தென்னகத்தின் மிகுந்த புகழ் படைத்த குந்தகுந்த ஆசார்யரும் சங்கதத்தில் நூல்கள் செய்துள்ளார். இவரது தீக்ஷா நாமம் – பத்ம நந்தி. மாநதுங்க முனி, ரிஷப தீர்த்தங்கரர் குறித்து ‘பக்தாமர ஸ்தோத்ரம்’ இயற்றினார்; இத்துதி நூல் சமணரால் மிகவும் மந்திர சக்தி பொருந்தியதாகக் கருதப்படுகிறது. பன்முக ஆற்றல் படைத்த ஹேமசந்த்ர முனியின் சங்கதப் படைப்புகள் பற்றித் தனியாக எழுத வேண்டும்.

ப்ராஹ்மி லிபியை ஜைனரின் பழைய பகவதி ஸுத்தம் “ணமோ பம்பியே லிவியே” என்று போற்றி வணங்கினாலும், இன்றைய பாகதச் சமண நூல்கள் அச்சேற்றப்படுவது தேவநாகரியில்தான். அதைப் பார்த்துவிட்டுப் பாகத மொழிக்கெனத் தனியான எழுத்துருக் கிடையாது என முடிவுகட்ட இயலாது, இதே நிலைதான் சங்கதத்துக்கும். அன்றைய கால கட்டத்தில் எல்லா மொழிகளுக்கும் ப்ராம்மி லிபி பொது எழுத்துருவாக இருந்திருக்க வேண்டும். இன்றைய தேவநாகரி 120 மொழிகளுக்கு ஒரே எழுத்துருவாக விளங்குவதுபோல. அதே காரணத்தால் சமணமும் அந்த லிபிக்கு மரியாதை தந்திருக்கலாம்.

அருமையான சங்கத நிகண்டு செய்தளித்த அமரசிம்மர் பார்ப்பனரல்லர்.

அருகர் சமயப் பரப்புரைக்கு பேச்சுமொழிகளைக் கையாண்டனரே தவிர, சங்கத வெறுப்பு அவர்களிடம் கிடையாது. அர்த மாகதி, சூரஸேனி மொழிகளில் அவர்கள் எழுதினாலும் கூடவே ஸம்ஸ்க்ருதத்திலும் சாயை காட்டியே எழுதியுள்ளனர்.

சமயவாதிகளின் நோக்கம் சமயப்பரவல் மட்டுமே; மொழி வளர்ப்பது அவர்களது நோக்கமன்று. தம் கோட்பாடுகளை விரைவில் பரப்பப் பிராந்திய அளவில் பெரும்பான்மையோர் பேசும் மொழிகளை ஊடகமாக்கிக் கொண்டனர். கோட்பாடுகளைச் செந்தரமாக்கிப் பொதுப்புரிதலுக்கு ஆக்கும்போது சங்கதத்தைத் துணை கொண்டனர். சமணக் கோட்பாடுகள் நூற்பா ஆகும்போது சங்கதமே துணை செய்கிறது. சமணர் தொடர்பில்லாத இந்திய மொழிகள் இல்லை; ஆனால் அவர்களின் சங்கதப் பங்களிப்பும் மிகுதி, இதுவே உண்மை. சமணம் சமயம் தவிரப் பிறதுறைகளிலும் அவர்கள் நூல்கள் யாத்துள்ளனர்.

“What would be the condition of the Indian Sanskrit literature if the contribution of the Jains were removed? The more I study Jain literature the more happy and wonderstruck I am.”
– Dr Hertel, Germany

ஜப்பானிய அறிவியலார் தம் ஆய்வுரைகளை உலக அளவில் முற்செலுத்தும்போது ஆங்கில மொழி வல்லுநரைத் துணை கொள்வர், தம் கல்வித் திட்டத்தில் ஆங்கிலத்துக்கு இடமில்லாதபோதும். ஆங்கிலம் இன்றைய உலகில் இன்றியமையாத மொழியாக விளங்குவதுபோல், அன்று தெற்காசியாவைப் பொருத்த மட்டில் சங்கதம் இன்றியமையாத மொழியாக இருந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *