-மேகலா இராமமூர்த்தி

ஒருவரை வாழ்த்தும்போதும் சரி, ஏதேனும் நன்னிகழ்வுக்கு வரவேற்கும்போதும் சரி, ‘சுற்றமும் நட்பும் சூழ’ என்ற சொற்றொடரை நாம் பயன்படுத்துகின்றோம். சுற்றம் எத்துணை முக்கியமானதோ அதற்கிணையாக நட்பும் முக்கியமானது என்பதையே இது விளக்குகின்றது.

களிப்பூட்டும் இன்பத்தை மிகுதியாக்குவதிலும், கருத்தழிக்கும் துயரத்தைக் குறைப்பதிலும் சுற்றத்தினும் நட்பின் பங்களிப்பே அதிகம் என்பது மாந்தர் பலரும் தம் வாழ்வில் கண்ட அனுபவ உண்மையாகும். ஆதலால், நண்பர்களைத் தேர்ந்தெடுக்குமுன் அவர்களின் ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து நட்புகொள்ளல் வேண்டும் என்கிறது நாலடியார்.

எப்படிப்பட்டவரின் கேண்மை நன்று? எவருடையது தீது? என்பதற்கு நாலடி நவிலும் விளக்கத்தைக் காண்மின்!

யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் – யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.
  (நாலடி – 213)

யானையை ஒத்த இயல்புடையாரது நட்பை நீக்கி, நாயை ஒத்த இயல்புடையாரது கேண்மையைத் தழுவிக் கொள்ளுதல் வேண்டும்; ஏனெனில், யானை பலநாள் பழகியிருந்தும் தன்னை வளர்த்த பாகனையே குற்றங்கண்டு கொல்லும்; ஆனால் நாயோ தன்னை வளர்த்தவன் சினத்தால் தன்மேல் வீசிய வேல் தன் உடம்பில் உருவி நிற்கும்போதினும் அவன்பால் கொண்ட அன்பால் வால்குழைத்து நிற்கும்.

பிழை பாராட்டாத இயல்புகொண்ட பண்பாளரையே அறிந்து நட்புச் செய்தல் வேண்டும் என்பதே இதனால் பெறப்படும் கருத்து.

நண்பருள் முதல் தரத்தினர், இரண்டாம் தரத்தினர், மூன்றாம் தரத்தினர் யாவர் என்று வகை பிரித்துக் காட்டுகின்றது மற்றொரு நாலடியார்ப் பாடல்.

நட்பில் கடைத்தரமானவர் பாக்கு மரத்தின் இயல்பை ஒத்தவர்; இடைத்தரமானவர் தென்னை மரத்தின் இயல்பை ஒத்தவர்; ஏனை உயர்ந்தோரெனப்படும் பழைமை கருதுவாரது நட்பு, மதிப்புமிகு பனை மரத்தின் இயல்புபோன்று நேயம் ஊன்றியபோது ஊன்றியதேயாம். அது மாறாது!

கடையாயார் நட்பிற் கமுகனையர் ஏனை
இடையாயார் தெங்கி னனையர் – தலையாயார்
எண்ணரும் பெண்ணைபோன் றிட்டஞான் றிட்டதே
தொன்மை யுடையார் தொடர்பு.
   (நாலடி – 216)

தினமும் நீரூற்றிக் கவனித்தலால் பாக்குமரமும், இடையிடையே நீரூற்றிக் கவனித்தலால் தென்னை மரமும், முதலில் விதையிட்ட அளவோடு நீரூற்றாவிட்டாலுங்கூடப் பனைமரமும் வளர்ந்து பயன்தரும் இயல்புடையவையாதலால், அவ்வகையில் கவனித்தால் மட்டுமே நேயம் காட்டும் மக்கள் இயல்புக்கு அவை உவமைகள் ஆயின.

”நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்” என்று நாயனார் சொன்னதை ஈண்டு எண்ணுக.

நண்பரைப் பல்லாற்றானும் ஆய்ந்து தெளிதல் வேண்டும். அப்போதுதான் அந்த நட்பு நம்பிக்கைக்குரியதாயிருக்கும்; இல்லையேல் பின்னாளில் வெம்பி வருந்தவேண்டி வரும்.

தெளிவிலார் நட்பின் பகைநன்று சாதல்
விளியா அருநோயின் நன்றால் – அளிய
இகழ்தலின் கோறல் இனிதேமற் றில்ல
புகழ்லின் வைதலே நன்று.
   (நாலடி – 219)

”நம்பத் தகாதவரது நட்பினைக் காட்டிலும் அவரது பகை நலந்தருவதாகும்; தீராத கொடிய நோயோடு போராடி வாழ்வதினும் சாதல் நலம் பயப்பதாகும்; பிறரை நெஞ்சு புண்ணாகும்படி கடுஞ்சொற்களால் இகழ்தலினும் அவரைக் கொல்லுதல் நல்லது; ஒருவரிடம் இல்லாத குணங்களையெல்லாம் இருக்கின்றன என்று கூறிப் பொய்ப்புகழ்ச்சி செய்தலினும் அவரைப் பழித்துவிடுதலே நன்மையாம்” என்று வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளையெல்லாம் வரையறுத்துச் சொல்லிவிடுகின்றது நாலடி.

”புலவர்காள்! வலியும் வீரமுமில்லாதானை விறலில் வீமனே! வீரத்தில் விசயனே! என்று புகழ்ந்தாலும், கொடுக்கும் குணம் இல்லாதானைப் பாரியே என்று போலியாய்ப் புகழ்ந்தாலும் உமக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை” என்று புலவர்களின் வெற்றுரையை வெறுத்துரைக்கும்  தம்பிரான் தோழரின் தேவார அடிகள் இத்தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகின்றன!

மிடுக்கி லாதானை வீம னேவிறல்
விசய னேவில்லுக் கிவனென்று
கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று
கூறி னுங்கொடுப் பாரிலை…
(தேவாரம் – ஏழாம் திருமுறை)

சில நேரங்களில் நாம் மிகவும் ஆராய்ந்து நட்புக்கொண்ட நல்லோரிடத்தும் விரும்பத்தகாத குணக்கேடுகள் தோன்றக்கூடும்.  அத்தகு சங்கடமான வேளைகளில் நாம் செய்யவேண்டுவது என்ன?

நல்லவர் என்று நாம் பலகால் ஆராய்ந்து மிகவும் நேசித்துக் கொண்டவரைப் பின்பு ஒருகால் அவர் நல்லவரல்லாராய் பிழைபட்டாரெனினும் அதனைப் பொறுத்து அவரைத் தம்மிடமே இணக்கமாய் வைத்துக்கொள்ளல் வேண்டும்; ஏனென்றால், பயன்பாடுடைய நெல்மணிக்கு அதிலிருந்து நீக்குதற்குரிய உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு, பூவிற்கும் புறவிதழ் உண்டு.

ஆக, குறையற்ற மனிதர்கள்தாம் நண்பராய் வேண்டும் என்று நாம் குவலயத்தில் தேடினால் ஒருவரும் தேறமாட்டார்; இருப்பவர்களில் நற்குணம் மிக்குள்ளோரை, அவரிடம் உள்ள குறைபாடுகளோடு, ஏற்றுக்கொள்வதே அறிவுடைமை என்கிறது நாலடியார்.

நல்லா ரெனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லா ரெனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக் குமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
    (நாலடி – 221)

அதுமட்டுமன்று!  நம்மோடு நட்புக் கொண்டவர் மிகவுந் தீங்குகள் செய்தாலும் அவற்றைப் பொறுத்தொழுகுதல் தகுதியான ஒன்றே! நிறமான கோங்கமலரில் அழகிய வண்டுகள் சென்று ஒலிக்கின்ற உயர்ந்த மலைநாட! ஒருவர் பொறுத்துப்போவதால் இருவரிடையே உள்ள நல்ல நட்பு நீடிக்கும் என்கிறது நாலடியார்.

இறப்பவே தீய செயினுந்தந் நட்டார்
பொறுத்தல் தகுவதொன் றன்றோ – நிறக்கோங்கு
உருவவண் டார்க்கு முயர்வரை நாட!
ஒருவர் பொறையிருவர் நட்பு.
  (நாலடி – 223)

”விட்டுக்கொடுத்தார் கெட்டுப்போவதில்லை” என்று நம்மவர் நாட்டு வழக்கில் சொல்வதும் இதைத்தானே?

இன்னா செயினும் விடுதற் கரியாரைத்
துன்னாத் துறத்தல் தகுவதோ – துன்னருஞ்சீர்
விண்குத்து நீள்வரை வெற்ப ! களைபவோ
கண்குத்திற் றென்றுதங் கை.
    (நாலடி – 226)

”அணுகுதற்கரிய சிறப்பினையுடைய, வானத்தைக் குத்தும் நீண்ட மூங்கில்களையுடைய மலைநாடனே! தவறுதலாகத் தம் கண்ணைக் குத்திற்றென்று தமது கையை மக்கள் நீக்கி விடுவரோ? ஆகவே, அறியாமையால் தீமைகள் செய்தாலும் நீக்குதற்குக் கூடாத நல்ல நட்பினரை நெருங்காமற் கைவிட்டுவிடுதல் தகுந்ததாகுமா? ஆகாது!” என்று நமக்கு நல்லறிவு கொளுத்துகின்றது நாலடி.

வாழ்வில் முடிவெடுக்க முடியாமல்  நாம்  தடுமாறும் தருணங்களில் நல்லறிஞர்களின் இதுபோன்ற நல்லுரைகள் நமக்குக் கைவிளக்கென வழிகாட்டுகின்றன எனில் மிகையில்லை.

 [தொடரும்]

*****

துணைநூல்கள்:

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *