உலகைக் காக்கும் பொறுப்பு

அம்மாணவன் பிறருடன் தோழமையுடன் பழகினான். கவர்ச்சிகரமாக இருந்தான்.

எங்கள் பள்ளிக்கூடத்தில் நான் பொறுப்பேற்றிருந்த சங்கத்திற்குப் பிறர் ஏகமனதாக அவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தனர். (அதற்காகத்தானே அவ்வளவு சிநேகிதமாக இருந்தான்!) பல சங்கங்களிலும் அவனே தலைவனாக இருந்தான்.

வருட இறுதியில், மாணவத் தலைவர்களுக்கெல்லாம் சான்றிதழ் அளிக்கும் வைபவம் நடந்தது. நான் கையெழுத்திட்ட சான்றிதழ் அவனுக்குக் கிடைக்கவில்லை.

குழப்பத்துடன் என்னிடம் வந்தான். “டீச்சர்! நம் சங்கத்தின் சான்றிதழ்..?”

நான், “நீ எதுவுமே பண்ணவில்லையே?” என்றபோது, அவன் அதிர்ந்தான்.

பெரும்பாலான தலைவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். பதவி, அது அளிக்கும் அதிகாரம், பெருமை எல்லாம் வேண்டும். ஆனால், பொறுப்பாக நடக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

செய்யவேண்டுவதைத் தாமே கவனித்துச் செய்பவர்கள்தாம் தலைவர்களாகும் தகுதி பெறுகிறார்கள். வீடு, சங்கம், நாடு – இவற்றில் எதன் தலைவராக இருந்தாலும் சரி, அவர் தன் கடமையைச் சரிவர ஆற்றாவிட்டால் அது ஆட்டங்கண்டுவிடும்.

கதை

“எங்கப்பா எப்பவும் குடிச்சுட்டு, கத்திக்கிட்டே இருப்பார். படிச்சதெல்லாம் மறந்து போயிடுது!” என்றாள் என் மாணவி மீனா.

“ஏதாவது வாசகசாலைக்குப் போய் படி. பள்ளிக்கூடத்திலேயே ஓய்ந்த நேரத்தில் சில தோழிகளுடன் கலந்து படி. அதிகம் பேசாதே!” என்று ஆலோசனை கூறினேன். “அப்பாவை விடு! இது உன் வாழ்க்கை. நன்றாகப் படித்து முன்னுக்கு வருகிற வழியைப் பார்! இல்லாவிட்டால், உன் அப்பாவைப்போலவே ஒருவனை மணந்து, அவனிடம் அடிபட்டுச் சாகவேண்டும்!” நான் கூறியது கடுமையாக இருந்தபோதிலும், மீனா அதில் பொதிந்திருந்த உண்மையைப் புரிந்துகொண்டு ஏற்றாள். தனக்கென ஓர் இலக்கை வகுத்துக்கொண்டாள்.

`இந்தமாதிரி ஒரு குடும்பத்திலே பிறந்துட்டு, நீயெல்லாம் உருப்பட்டுவிட முடியுமா?’ என்று அக்கம்பக்கத்தினர் பழிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்தாள். பிறர் தன் மனத்தைத் தளர வைப்பது பொறாமையால் என்று புரிந்தபின், அவர்களின் கேலியை அலட்சியம் செய்தாள்.

சிறு வயதிலேயே நிறைய துன்பம் அனுவித்திருந்ததால், தன் வாழ்க்கை நல்லவிதமாக மாறவேண்டும் என்ற துடிப்பு மீனாவிடம் இருந்தது. பொறுப்புடன் தன் இலக்கை நோக்கிப் பயணம் செய்ய ஆரம்பித்தாள் அப்பெண்.

எப்போதும் பிறர் சொன்னபடியே நடந்து, அவர்களை மகிழ்விப்பவர்கள், தெரிந்தோ, தெரியாமலோ, தமக்குரிய பொறுப்பை ஏற்க மறுப்பவர்கள். பின், எப்படித்தான் தம் செயலால் விளைந்த வீழ்ச்சிகளுக்கு பொறுப்பு ஏற்காது, பிறரைக் குற்றம் சாட்டுவது!

வித்தியாசமாக இருந்தால் தனித்துத் தெரிவோம் என்ற பயத்தில், `நான் பயந்தாங்கொள்ளி, சோம்பேறி!’ என்பவர்களுக்கு நிறைய நண்பர்கள் வாய்ப்பதுண்டு. எல்லாருமாகச் சேர்ந்து, தம்மைப்போல் இல்லாதவர்களைக் கேலிசெய்து சமாதானம் அடைவார்கள்.

கதை

என் சக ஆசிரியை மேரி, “எனக்கு ஒரே மூச்சில் ஒரு புத்தகத்தைப் படித்து முடிக்க வேண்டும். அதிகம் படித்தால் தலைவலி வரும்,” என்று தெரிவித்தாள்.

`நீ அதிகம் படிப்பதில்லையா?’ என்று நான் அவளைக் கேட்டிருக்கமாட்டேன். அவளுக்கே ஏதோ தாழ்மை உணர்ச்சி — ஆங்கில ஆசிரியையாக இருந்துகொண்டு தான் இவளைப்போல் படிப்பதே இல்லையே, பத்திரிகைகளில் எழுதுவதும் கிடையாதே என்று.

“ஒரு வரி எழுதி முடித்தவுடன், இதை இப்படி எழுதியிருக்கலாமோ என்று பல முறை திருத்துவேன். அதுதான் எழுதுவதில்லை,” என்று மேலும் கூறினாள்.

எடுத்த எடுப்பில் நமக்குப் பிடித்தமாதிரி எழுதுவது, (ஏன், எதையும் செய்வது) இயலாத காரியம். தோன்றுவதையெல்லாம் எழுதி முடித்துவிட்டு, அதன்பின் பல முறை திருத்த வேண்டியதுதான்.

கனவு பலிக்க

பல ஆண்கள், `நாற்பது வயதுக்குள் நான் லட்சாதிபதி ஆகவேண்டும்,’ என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். ஆனால், பொறுப்புடன் அதற்கான முயற்சியில் இறங்கமாட்டார்கள்.

கனவு கண்டால் மட்டும் போதுமா? முதலில், அதை எப்படி நிறைவேற்றுவது என்று யோசிக்க வேண்டும். பல இடைஞ்சல்கள், எதிர்ப்பு, வரத்தான் செய்யும். எதற்கும் தளராது, முயற்சியைக் கைவிடாமல் இருந்தால்தான் வெற்றி கிட்டும்.

பிற நல்ல பழக்கங்களைப்போல, பொறுப்புணர்ச்சியையும் சிறு வயதிலேயே பழக்கமுடியும்.

குட்டிக்கதை

சுமார் பத்து சிறு குழந்தைகளைப் பகல் வேளைகளில் பார்த்துக்கொண்ட இல்லத்தரசி ஸிதி (SITI) தான் ஓயாமல் குனிந்து, நிமிர்ந்து இடுப்பை ஒடித்துக்கொள்ளாமல் இருக்க ஓர் உபாயத்தைப் பின்பற்றினாள். கையை ஒரு முறை ஓங்கி தட்டி, “ஒழுங்குபடுத்து” என்று கூவுவாள்.

அவள் கண்காணிப்பிலிருந்த என் மகன் எங்கள் வீட்டுக்கு வந்தபின்னரும், தன் விளையாட்டுச் சாதனங்களை எடுத்து வைக்க ஸிதி செய்ததுபோலவே கையைத் தட்டி, “KEMAS!” என்று மலாய் மொழியில் ஆணையிட்டுக்கொள்வான்!

`குப்பையைக் கண்ட இடத்தில் வீசாதே!’ என்று பள்ளிக்கூடங்களில் விதி இருந்தாலும், சிலர் வீடுகளிலும் அதைப் பின்பற்றத் தவறிவிடுகிறார்கள். `நம் வீடுதானே!’ என்ற தம் பொறுப்பை அலட்சியம் செய்வார்கள். அத்தருணங்களில், மூத்தவர்கள் பரிவு காட்டாது, ஆனால் குரலை உயர்த்தாது கண்டித்தால் பொறுப்பு வரும்.

வீட்டை மட்டுமல்ல, இப்பரந்த உலகையும் பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்ச்சி மிக்க ஒருவரைச் சந்திப்போமா?

62 வயதான ராபர்ட் ஸ்வான் (ROBERT SWAN) என்ற ஆங்கிலேயரை உலகம் `பைத்தியக்காரன்’ என்று கேலி செய்தது. யாராவது வடதுருவம், தென்துருவம் இரண்டு இடங்களிலும் நடந்து போவார்களா?

தென்துருவமான அன்டார்ட்டிகாவில் நாம் அறிந்தபடி நிலம் கிடையாது. பனிப்பாறைதாம். அங்கு வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளும் வசதியும் கிடையாது.

அதன்மேல் கால்நடையாக தனது இருபதாவது வயதில், மற்றும் இருவரின் துணையுடன் போனார் ராபர்ட். அதற்கான செலவை (அமெரிக்க டாலர் 50 லட்சம்) சேகரிக்க ஏழாண்டுகள் பிடித்தன.

900 மைல் நடந்தார்கள். ஒரு நாளைக்கு ஒன்பது மணி என்று 70 நாட்கள்! ஒவ்வொருவரின் முதுகிலும் 180 கிலோகிராம் எடைகொண்ட சாமான்கள்! _77 டிகிரி செல்ஷியஸ் குளிரில் வியர்வை உறைந்துவிடுமாம். (குளிரில் வியர்க்குமா என்ற யோசனை வருகிறதா? உடலை இந்தப் பாடுபடுத்தினால்?) ஒருவருக்குக் குதிகால், இன்னொருவருக்கு கால் பெருவிரல் இரண்டும் சிதைந்துவிட்டன. ராபர்ட்டின் எடையில் 33 கிலோ குறைந்தது. கண்களின் நீல நிறம் வெளிறியது. முகத்தின் சதை பிய்ந்தது.

கடந்த பதினைந்து வருடங்களில், 3,500 பேரை (இந்தியா. சீனா போன்ற உலகின் பல பாகங்களிலிருந்தும் வந்தவர்கள்) 22 முறை இத்துருவங்களுக்கு அழைத்துப்போயிருக்கிறார். பல பெண்களும் இதில் அடங்குவர். பல்வேறு தாவர, விலங்கினங்களைத் தன்னிடத்தே அடக்கியிருக்கும் அழகான அன்டார்ட்டிகாவை ரசிப்பதுடன், அதைக் காக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்.

சரி, இதில் பொறுப்பு எங்கே வந்தது, என்கிறீர்களா?

உலகின் 90% சுத்தமான நீர் அன்டார்ட்டிகாவில்தான் உள்ளது, பனி வடிவில். 4,500 மீட்டர் நீளத்திலுள்ள பனிப்பாறைகள் உருக ஆரம்பித்தால்..?

இவ்வாறு உலகம் அழியாது காக்கும் பெரும் பொறுப்பை ஏற்றிருக்கிறார் ராபர்ட் ஸ்வான். எட்டு ஆண்டுகள் பிரயத்தனப்பட்டு, 1,500 டன் (TON) எஃகு குப்பையை அகற்றி, அதை மறுசுழற்சி செய்து வெற்றி பெற்றிருக்கிறார். (இந்த `குப்பை’ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் விட்டுப்போனது).

நம்மால் பிறரது நலனுக்கென இப்படியெல்லாம் உழைக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், பிளாஸ்டிக் சாமான்களையும், தகர டப்பாக்களையும் அதற்கென வைக்கப்பட்டு இருக்கும் குப்பைத்தொட்டிகளில் போட்டு மறுசுழற்சிக்கு அனுப்பலாமே!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *