-முனைவர் இரா.சித்திரவேலு

முன்னுரை

ஒரு மொழியின் தன்மையை அறிந்துகொள்வதற்கு உதவுபவை அம்மொழியில் தோன்றிய இலக்கியங்களாகும். அம்மொழியைப் பேசும் சமூகம், பழமை, பண்பாடு போன்றவைகளையும் கூறுவது

இலக்கியங்களே ஆகும். தமிழ்ச் சமூகத்தின் பழமை, பண்பாடு அடங்கிய ‘நூல்’ மரபைப் பார்க்கும் போது பத்தொன்பதாம் நூற்றாண்டின் நூல் எனும் தன்மையில் அச்சாக்கம் பெறத்தொடங்குகின்றன. 1812இல் திருக்குறள், நாலடியார் ஆகிய இரண்டும் ஒரே நூலாக வெளியிடப்பெற்ற தன்மைத்து, சார்லஸ் மெட்காஃப் என்பவரால் 1835இல் கொண்டுவரப்பட்ட ‘அச்சுத் தடை நீக்கச் சட்டம்’ தமிழகத்தில் நூற்பரவலுக்கு வித்திட்டது எனலாம். எனினும் பாட்டும், தொகை நூல்கள் அச்சாக நீண்ட காலம் தேவைப்பட்டதற்குச் சொல்லப்பெறும் முதன்மைக்காரணம் சமயப்பற்றுதலே.

“திண்ணைப் பள்ளிக்கூட மரபில் எண், எழுத்துப் பயிற்சிக்குப்பின் புராணங்கள் எனும் பெயரில் மதம் தொடர்பான செய்திகளே போதிக்கப்பட்டன. ‘தமிழே சைவம், சைவமே தமிழ்’ எனும் உரையாடல் நாம் அறிந்த ஒன்றுதானே! சங்க இலக்கியப் பிரதிகள் அனைத்தும் புறச்சமயம் பற்றிப் பேசுவன.”1 பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டு சைவ இலக்கணக்காரர்களான இலக்கணக் கொத்து சாமிநாத தேசிகர் ஆகிய பிறர் எதிர்கொண்ட முறைமையை இங்கு நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.

“சங்க நூல்களையும் சங்க மருவிய நூல்களையும் படிப்பவர் சமயப் பற்றற்றவர் என்றும், வீணர்கள் என்றும் பழிக்கப்பட்டனர். இந்தத் தவறான கருத்தைப் பரப்பியவர் 18ஆம் நூற்றாண்டிலிருந்த சுவாமிநாத தேசிகரும், சிவஞான சுவாமிகளும் ஆவர். மிக அரிதாகச் சங்க நூல்களைப் பயின்று வந்த சிறுபான்மைப் புலவரையும் அவற்றைப் படிக்கவிடாமல் தடுத்தவர் இலக்கணக்கொத்து நூலாசிரியராகிய சுவாமிநாத தேசிகர். மிகுந்த சைவப்பற்றுடை தேசிகர் சங்க நூல்களையும், சமண, பெளத்த, வைணவ இலக்கியங்களையும் படிக்கக்கூடாதென்றும் சைவ நூல்களை மட்டும்தான் படிக்கவேண்டும் என்றும் வற்புறுத்தி எழுதினார்”2 எனத் தனது நூலில் மயிலை சீனி.வேங்கடசாமி குறிப்பிட்டுச் செல்கிறார். மேலும், பெரியபுராணம், திருமுருகாற்றுப்படை முதலான சைவ சமய நூல்களுக்கு உரை எழுதுதல் மற்றும் பதிப்பித்தல் ஆகியவற்றைச் செய்த நாவலர் சங்க நூல்கள் மீது கவனம் செலுத்தாமல் போனது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியாகும். இதனை நாவலர் செய்த வரலாற்றுப் பிழை என்றே மதிப்பிடலாம். 1850களில் தம்மிடமிருந்த சங்க இலக்கியச் சுவடிகளைத் தமிழ்ச் சைவப் பாரம்பரியத்தில் உருவாக்கிவந்த நாவலர் பதிப்பித்து வெளிக்கொண்டு வந்திருப்பாரேயானால் பின்னர் தமிழ்த் தாத்தா உருவாக வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது, ‘தமிழ்த் தாத்தாவிற்கு வாய்ப்பளித்து ஆறுமுகநாவலர் கண்ணை மறைத்தது மதம்’3 என்று வீ.அரசு குறித்துள்ள விமர்சனமானது ஆறுமுக நாவலர் எனும் தனிமனிதரை மட்டும் மையமிட்டதன்று. ஏனெனில் சமய வளர்ச்சி எனும் ஒற்றைத் தளத்தில் நின்று கொண்டு சங்க நூல்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வாழ்ந்தவர்கள் நாவலரின் காலத்திற்கு முன் எண்ணற்றோராகத் திகழ்ந்துள்ளனர். இத்தகு தடைகளைத் தாண்டித் தமிழ்ச் செல்வங்கள் நூலாக்கம் பெற்றன.

சங்க இலக்கிய முதல் பதிப்பு

பத்துப்பாட்டுள் திருமுருகாற்றுப்படை (1839) முதலில் பதிக்கப்பெற்றது. தொகை நூல்களுள் கலித்தொகையே முதலில் (1887) நூலாக்கம்பெற்ற சிறப்பைப் பெறுகிறது. இதன் முதல் பதிப்பாசிரியராக யாழ்ப்பாணத்து அறிஞர் சி.வை.தாமோதரம் பிள்ளை திகழ்கின்றார். சி.வை.தாமோதரம் பிள்ளைக்கு முன் ஆறுமுக நாவலர் கலித்தொகையைப் பதிப்பிக்கும் எண்ணமுடையவராகத் திகழ்ந்துள்ளதனை, “ஆறுமுக நாவலர் திருக்கோவையார் நூலை 1860 ஆம் ஆண்டு வெளியிட்டார். அந்த நூலின் இறுதியில் இனிதான் வெளியிடப் போகும் நூல்களின் பட்டியல் ஒன்றைத் தருகிறார். அதில் புறநானூற்று உரை, கலித்தொகை உரை, சிலப்பதிகார உரை, சீவகசிந்தாமணி உரை, வளையாபதி போன்ற நூல்களைக் குறிப்பிட்டுள்ளார்.”4

கலித்தொகை முதற்பதிப்பு

‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்று சிறப்பித்துப் பேசப்படும் கலித்தொகையை சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் இந்நூலை பதிப்பிக்கும்போது “கலித்தொகைப் பிரதிகள் தேட யான்பட்ட கட்டம் வாயினாற் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூலப்பாடப்பிரதி. அது தலையுங் கடையுமின்றிய குறைப்பிரதி. மேலும் பெரும்பாலும் எழுத்துக்கள் சிதைந்து ஒரு பாட்டின் ஓருறுப்பாவது முற்றும் வாசிக்க முடியாமற் கிடந்தாற் படிப்பதற்கே வெறுப்புண்டாக நீக்கிவிட்டேன்.”5

பின்னர்த் தொல்காப்பியப் பரிசோதனைக்காகத் தேடியபொது ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்கள் பிரதி சேர்க்கப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அமையுணர்ந்து அதனை எப்படியும் உலகிற்குப் பயன்பட அச்சிட வேண்டுமென்றும் அவாவுற்று ஸ்ரீ ஆதீன மடாதிபதிகளுக்கு விண்ணப்பஞ் செய்து கொண்டேன்.

சுவாமிகள் அனுப்பிய பிரதிகளைக் கொண்டு மூலப்பாடத்தையாவது பரிசோதித்து, ஓர் அரும்பத அகராதியும் இலக்கணக்குறிப்புஞ் சேர்த்து முதலில் அச்சிட உத்தேசித்து, சென்னைப் பிராசிய கிரந்த மண்டபத்துந் தஞ்சைச் சரஸ்வதி மஹாலிலும் இங்கும் அங்குஞ் சிதறுண்ட சில ஒற்றைகளைச் சேர்த்துக் கட்டி ஓரொரு பிடியோடு கலித்தொகையென்று அபிதானஞ் சூட்டி வைக்கப்பட்டிருந்தது.

கூடலூரில் மஞ்சக்குப்பத்திற் சண்முக உபாத்தியாயரென்றோர் வயோதிகரும் புதுச்சேரியில் நெல்லித் தோப்பிற் சொக்கலிங்க பிள்ளையென்றோர் தமிழ்ப் பண்டிதருங் கலித்தொகை வைத்திருந்தது என் ஞாபத்திற்கு வர அந்த இடங்களிற் சென்று விசாரித்தேன்”5 என்று தனது பதிப்புரையில் குறிப்பிடுகின்றார் என்பார் பொ.வேல்சாமி. எனினும் ஆறுமுக நாவலர் மேற்குறித்தவற்றுள் எவற்றையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, இவரிடமிருந்து கலித்தொகையைப் பதிப்பிக்கும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டவர் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களே. தொடர்ந்து கால இடைவெளியில் கலித்தொகைக்குப் பதிப்பு வெளியீட்டு நூல்கள் தோன்றிய வண்ணம் உள்ளன. இதுவரைக்கும் 28 நூல்கள் தோற்றம் பெற்றுள்ளன. இவற்றுள் 2 நூல்கள் மூலம் மட்டுமே கொண்டவை.

கலித்தொகை தனித்த நிலையிலன்றி, சங்க இலக்கியங்கள் முழுமையையும் முன்னுறுத்திய மூல நூல்களும் சமகால இடைவெளியில் தோற்றம் பெற்றுள்ளன. அவ்வகையில் சைவ சித்தாந்த மகா சமாஜத்தினர் 1940இல் (வையாபுரிப்பிள்ளை உதவிவழி) சங்க இலக்கியங்களைப் புலவர் அகர வரிசை அடிப்படையில் பாட்டும் தொகையும் எனும் பெயரில் ஒருங்கிணைத்து வெளியிட்டுள்ளனர். இப்பதிப்பு பின்னர் எஸ். வையாபுரிப் பிள்ளையின் பெயர் கொண்டு மு.சண்முகம் பிள்ளை உதவியால் பாரி நிலையம் வழி 1967இல் வெளியிடப்பெற்றுள்ளது. 2006இல் ச.வே.சுப்பிரமணியம் அவர்களால் சங்க இலக்கியம் பிள்ளை உதவியால் பாரி நிலையம் வழி 1967இல் வெளியிடப் பெற்றுள்ளது. 2016இல் ச.வே.சுப்பிரமணியம் அவர்களால் சங்க இலக்கியம் மூலம் முழுவதும் அடியளவில் அடிப்படையில் நூல் வரிசைப்படுத்தப்பெற்று, சந்தி பிரித்து வெளியிடப்பெற்றது. தமிழ்ச் செவ்வியல் நூல்களைத் தனித்து அடையாளப்படுத்தும் நோக்கில் 2008இல் தமிழ்ச் செவ்வியல் நூல்கள் எனும் பெயரில் மேற்படி அறிஞரால் மணிவாசகர் பதிப்பகத்தின்வழி வெளியிடப் பெற்றது. அண்மையில் (2010) உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு வெளியீடாகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வழி ம.வே. பசுபதி அவர்களால் செம்மொழித் தமிழ் இலக்கண இலக்கியங்கள் எனும் பெயரில் பாடவேறுபாடுகளை அடிக்குறிப்பில் கொண்ட நூல் தொகுதி வெளியிடப்பெற்றுள்ளது.

சி.வை.தாமோதரம் பிள்ளையின் கலித்தொகைப் பதிப்பு பிற்காலத்தில் மறுபதிப்பாக வேறொரு நிறுவனத்தால் வெளிவந்துள்ளது. முல்லை நிலையத்தாரால் 2006, 2008களில் மறுபதிப்பாக வெளியிடப்பெற்றுள்ளது. 1958இல் வெளிவந்த சக்திதாசனின் உரை, தமிழ்மண் அறக்கட்டளையின்வழி 2008இல் வெளிவந்துள்ளது. புலியூர்க்கேசிகன் உரையானது அண்மையில் (2009) சாரதா பதிப்பகத்தாரால் வெளியிடப்பெற்றுள்ளது. இவை தவிர இவை அனந்தராமையரின் பதிப்பு நூலை நிழற்படப்பதிப்பாக 1984இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது. ‘பாட்டும் தொகையும் என் உரை’ எனும் பெயரில் ப. ஆறுமுகம் 2010இல் 18 நூல்களுக்கும் உரை எழுதி ஒரே நூலாக வெளியிட்டுள்ளார். கலித்தொகை வளர்ச்சி நிலைகள் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.

கலித்தொகைப் பதிப்பு வெளியீடுகள்

  1. 1887 சி.வை.தாமோதரம் பிள்ளை (பதிப்.) – நல்லந்துவனார் கலித்தொகை
  2. 1925 இ.வை. அனந்தராமையர் (பதி.) – பாலை, குறிஞ்சி
  3. 1925 இ.வை. அனந்தராமையர் (பதி.) – மருதம், முல்லை
  4. 1930 இ.வை. அனந்தராமையர் (பதி.) – மூலம் முழுவதும்
  5. 1931 இ.வை. அனந்தராமையர் (பதி.) – நெய்தல்
  6. 1933 தை.ஆ.கனகசபாபதி முதலியார் – பாலைக்கலி
  7. 1938 மு.காசிவிசுவநாதன் செட்டியார் – கலித்தொகை
  8. 1941 ந.சி.கந்தையா – கலித்தொகை வசனம்
  9. 1949 ந. இராமய்யா பிள்ளை – பாலைக்கலி
  10. 1951 எஸ்.ஆர். மார்க்கபந்து சர்மா – குறிஞ்சிக்கலி வழித்துணை விளக்கம்
  11. 1958 மர்ரே எஸ். ராஜம் (பதி.) – கலித்தொகை (மூலம்)
  12. 1958 புலியூர்க்கேசிகன் – கலித்தொகை
  13. 1958 மா.இராசமாணிக்கனார் (பதி.) – கலித்தொகை
  14. 1958 சக்திதாசன் சுப்ரமணியன் – கலித்தொகை
  15. 1966 பொ.வே.சோமசுந்தரனார் – குறிஞ்சிக்கலி
  16. 1968 பொ.வே.சோமசுந்தரனார் – முல்லைக்கலி
  17. 1969 பொ.வே.சோமசுந்தரனார் – பாலைக்கலி
  18. 1969 பொ.வே.சோமசுந்தரனார் – மருதக்கலி
  19. 1969 பொ.வே.சோமசுந்தரனார் – நெய்தற்கலி
  20. 1987 லேனா தமிழ்வாணன் (பதி.) – கலித்தொகை
  21. 1999 அ.மாணிக்கம் – கலித்தொகை
  22. 2003 சுப. அண்ணாமலை – கலித்தொகை
  23. 2004 அ. விசுவநாதன் – கலித்தொகை
  24. 2007 இரா.மணியன் – கலித்தொகை காட்டும் பாலைத் தமிழும் குறிஞ்சித் தமிழும்
  25. 2007 குழ.கதிரேசன் – எளிய தமிழில் பாலைக்கலி
  26. 2008 இரா. சரவணமுத்து – கலித்தொகை என்னும் காதல் தொகை
  27. 2009 ச.வே.சுப்பிரமணியன் – கலித்தொகை
  28. 2012 தமிழமுதன் – கலித்தொகை மூலமும் உரையும்

முடிவுரை

கலித்தொகைப் பதிப்புகளாகிய 1887 முதல் 2012 வரையிலான பதிப்புகளைப் பார்க்கும்பொழுது, 28 நூல்களுள் பதிப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்ட பதிப்பு நூல்களாக அமைபவை 8உம், வெளியீடுகளாகக் கருதத்தக்கவை 20 நூல்களும் ஆகும். இவற்றுள் நான்கு நூல் பகுதிப்பதிப்பாகவும், இரு நூல் மூலம் மட்டும், ஒரு நூல் வசனம் (உரைநடை) மட்டும் அமைந்துள்ளது. உரை கவிதை வடிவம் ஒரு நூலும், இசைப்பாடல் வடிவம் ஒரு நூலும் இடம்பெற்றுள்ளன.

துணைநூற் பட்டியல்

இரா.ஜானகி, சங்க இலக்கியப் பதிப்புரைகள் தொகுப்பு, ப.5.
மயிலை சீனி.வேங்கடசாமி, 19 ஆம் நூற்றாண்டுத் தமிழிலக்கியம், ப.90.
வீ. அரசு, தமிழ் அச்சுப்பண்பாடும் புத்தக உருவாக்கமும், ப.4.
ஆறுமுக நாவலர், தமிழ்ப் புத்தக உலகம் 1800-2009, ப.4
சி.வை. தாமோதரம் பிள்ளை, கலித்தொகை, பக்.28-29.

*****

கட்டுரையாளர் – பேராசிரியர்,
அபி & அபி கலை அறிவியல் கல்லூரி,
வயலூர், தஞ்சாவூர். செல்: 9751072554
mailid: mohanachitravelu24@gmail.com

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *