-மேகலா இராமமூர்த்தி 

நல்ல நட்பினால் ஒரு மனிதன் அடையக்கூடிய நன்மைகள் ஏராளம். அதேவேளை கூடாநட்பினால் அவன் அடையும் இன்னல்களோ அதனினும் ஏராளம். ஒருவனை நல்லவனாக்கி வாழ்வில் உயர்த்துவதிலும் தீயவனாக்கி அவன் வாழ்வையே சீரழிப்பதிலும் நண்பர்களுக்கு இணை யாருளர்?

”Keep company with the wise and you will become wise. If you make friends with stupid people, you will be ruined” என்று விவிலியம் சொல்லும் வேதவாக்கை நாம் நெஞ்சில் நிறுத்த வேண்டும்.

”நுட்ப உணர்வுடையாரோடு கலந்து பழகி இன்புறுதல் விண்ணுலக இன்பமே போலும் விரும்பப்படும் மேன்மையினையுடையது; நுண்ணிய நூலுணர்வும் இல்லாதவராகிய பயனிலாரொடு கேண்மை கொள்ளுதல் நரகத்திற் சேர்தலை ஒக்கும்” என்பது நட்பு குறித்த நாலடியாரின் பார்வை. 

நுண்ணுணர்வி னாரொடு கூடி நுகர்வுடைமை
விண்ணுலகே யொக்கும் விழைவிற்றல் – நுண்ணூல்
உணர்வில ராகிய ஊதிய மில்லார்ப்
புணர்தல் நிரயத்து ளொன்று. 
(நாலடி – 233)
 

இப்பாடலில் நுண்ணுணர்வென்று முதலடியிலும் நுண்ணூல் உணர்வென்று இரண்டாம் அடியிலும் நாலடியார் கூறியிருப்பது இருவகைப்பட்ட பண்பினரைச் சுட்டுவதாகும். இவர்களை வேறு வார்த்தைகளில் விளிப்பதாயின் நுண்ணறிவினார், நூலறிவினார் எனலாம். நுண்ணறிவும் நூலறிவும் மிக்காரை நண்பராக்கிக் கொள்க என்பதே இந்நாலடியார்ப் பாடல் நமக்குணர்த்தும் செய்தியாகும்.

ஒரே குளத்து நீரில் தோன்றி ஒன்றாகவே வளர்ந்தாலும் மணம் வீசும் குவளை மலரின் இயல்பை ஆம்பல் ஒருநாளும் ஒத்திருப்பதில்லை. அஃதொப்ப, பெருந்தன்மையும் நற்பண்புகளும் வாய்ந்தோரின் நட்பைப் பெற்றாலும் அத்தன்மையில்லாதாருடைய செயல்கள் மாறுபட்டே இருக்கும்.

நாம் தலைகீழாய் நின்றாலும் நாய்வாலை நிமிர்த்த முடியுமோ?  அதுபோன்றதுதான் கூடாநட்பினரைத் திருத்த முயலுதலும்! ஆகலின், அவர்களோடு நேயங்கொள்ளாமலிருத்தலே நன்று என்று நவிலும் நாலடியாரின் புத்திமதி மதித்துப் போற்றத்தக்க ஒன்றாகும். 

ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக் கடைத்தும்
விரிநீர்க் குவளையை ஆம்பலொக் கல்லா
பெருநீரார் கேண்மை கொளினுநீ ரல்லார்
கருமங்கள் வேறு படும்.  
(நாலடி – 236)
 

புல்லறிவினாரின் நட்பு எத்தகையது என்பதை எளிய சான்றுகளுடன் நம் மனங்கொளத்தக்க வகையில் விளக்குகின்றது மற்றொரு நாலடியார்ப் பாடல்!

ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து
வேம்படு நெய்பெய் தனைத்தரோ – தேம்படு
நல்வரை நாட! நயமுணர்வார் நண்பொரீஇப்
புல்லறிவி னாரொடு நட்பு.  
(நாலடி – 239)

தேன் உண்டாகின்ற உயர்ந்த மலைகளையுடைய நாடனே! இனியதறியும் பேரறிஞரது நட்பினின்றும் நீங்கிச் சிற்றறிவினாரோடு செய்யும் நட்பானது, பசுவினிடத்தில் உண்டாகும் நெய்யைப் பெய்திருந்த கலத்தில் அந்நெய்யை நீக்கிவிட்டு வேப்பெண்ணெயைப் பெய்து வைத்தாற்போன்ற தன்மையதாகும். குணத்திலும் மணத்திலும் பசுவின் நெய்யை எவ்விதத்திலும் ஒவ்வாத வேப்பெண்ணையை விரும்புவது போன்றது நல்லறிவினாரை நீக்கிப் புல்லறிவினாரோடு பொருந்துவது என்று நமக்கு அறிவு கொளுத்துகின்றது நாலடி.

எடுத்த முயற்சிகளில் வெற்றிபெற ஒருவனுக்கு அடிப்படைத் தேவையாயிருப்பது அறிவுடைமை. 

அதனாலல்லவோ,

”அறிவுடையார் எல்லாம் உடையார்  அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்”
என்று எடுத்தோதினார் பொய்யில் புலவர்.
 

”புத்தியே சகல சக்தியும்” என்றது தீஞ்சுவைத் தமிழ்ப் பனுவலான மனோன்மணீயம். 

எத்தகு சூழ்நிலையிலும் தம் அறிவு திரியாதிருக்கும் அறிவுடையாரின் மாண்பினைப் பேசும் நாலடியார்ப் பாடலொன்று! 

வேம்பின் இலைக்குள் இருந்து பழுத்தாலும் வாழைப்பழம் தனது இன்சுவையிற் சிறிதும் மாறுபடாது; அதுபோல், தமக்கு நேர்ந்த நட்பு தீயதெனினும் இயற்கையறிவுடையாரது நட்பு மனந்தீயதாய் மாறும் வகை அரிதே. 

வேம்பின் இலையுட் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதுந் திரியாதாம்; ஆங்கே
இனந்தீ தெனினும் இயல்புடையார் கேண்மை
மனந்தீதாம் பக்கம் அரிது.  
(நாலடி – 244)
 

அறிவுடையார் மாட்டு அறிவென்னும் அரண் இருக்கையில் முரண்கொண்டோரின் தீநட்பும் அவரைக் கெடுக்க இயலாமல் ஒடுங்கிப்போகும் என்பது நாலடி ஆசிரியர்களின் துணிபு. 

நாம் ஒன்றை உள்ளத்தால் உணர அதனைக் குறிப்பால் உணர்ந்தொழுகுங் கூருணர்வுடையாரை நட்புச் செய்தால் இன்பம் நம்மைப் பொருந்தும்; நம் கருத்துக்கள் வெளிப்படையாகத் தெரிய அந்நிலையிலும் அவற்றை அறிந்தொழுகும் அறிவில்லாதாரை நட்புச் செய்யாமற் பிரிந்திருக்கத் துன்பங்களும் நம்மைச் சேராமற் பிரிந்திருக்கும். 

உணர உணரும் உணர்வுடை யாரைப்
புணரிற் புணருமாம் இன்பம் – புணரின்
தெரியத் தெரியுந் தெரிவிலா தாரைப்
பிரியப் பிரியுமாம் நோய்.  
(நாலடி – 247)
 

”குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்” என்று கூர்மதியாளாரைப் போற்றிய குறளாசானும்,

”பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்” என்றும்  பகடியாய்ச் சாற்றியிருப்பதை ஈண்டு நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.

”தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது புலவர் பூங்குன்றனாரின்  பொன்மொழி. அதனையே சற்று விரிவாக விளக்கி வழிமொழிகின்றனர் நாலடியின் ஆசிரியர்களும்! 

நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும், தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மே லுயர்த்து நிறுப்பானும், தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.  
(நாலடி – 248)
 

நன்னிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வானும், தனது முந்தைய நிலையையுங் குலையச்செய்து தன்னைக் கீழ்நிலைக்கண் தாழ்த்திக்கொள்வானும், தான் முன்னிறுத்திக்கொண்ட சிறந்த நிலையினும் மேன்மேல் உயர்ந்த நிலையில் தன்னை மேம்படுத்திக் கொள்வானும், தன்னை அனைவரினும் தலைமையுடையோனாகச் செய்து கொள்வானும் தானேயாவன்.

”பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்” என்று இதே கருத்தை நறுக்கென்று சொன்னது முப்பால். சொல்லுதற்கு என்ன இருக்கின்றது இதற்கும் அப்பால்?

ஆதலால், நம் ஆக்கத்துக்கும் அழிவுக்கும் நாமே காரணம் என்பதையுணர்ந்து அறிவுடையோராய் நடந்துகொண்டால் வாழ்வில்வரும் சோதனைகளைத் துணிச்சலோடு எதிர்கொண்டு சாதனை படைக்கலாம். 

உலக வாழ்வில் பொருள்வரவுக்கு வகைசெய்யும் தொழில் முயற்சியில் ஈடுபட்டு, அதனால் இம்மைப் பயனாகத் தான் போகமுந் துய்த்து, மறுமைப் பயனாகத் தகுதியுடையார்க்கு அறமுஞ் செய்து, இம்மூன்றும் பிறவியிற் கடைசிவரையிற் தடையின்றி ஒரே தன்மையாய் நிறைவேறுமாயின், அப்பேறு, தன் பட்டினத்தை மீண்டு(ம்) வந்தடைந்த வாணிகக் கப்பலை ஒக்கும் என்று அறிஞர் கூறுவர். 

கருமமு முட்படாப் போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே செய்யா – ஒருநிலையே
முட்டின்றி மூன்று முடியுமேல் அஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்.   
(நாலடி – 250)

தளராத முயற்சியில் ஈடுபட்டுப் பொருளீட்டி, உலகியல் இன்பங்களைத் துய்த்து, மறுமையின்பத்துக்கு வழிகோலும் அறச்செயல்களையும் செய்து வாழ்தலே அறிவுடைமையாகும் என்பதே இப்பாடல்வழி நாலடியார் நமக்குக் காட்டும் வாழ்வியல் நெறியாகும்.

[தொடரும்]

*****

துணைநூல்கள்:

1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்   பிள்ளை
2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *