உளவியல் பேசும் – ரமேஷ் பிரேதனின் ஐந்தவித்தான்

0

முனைவர் சு. செல்வகுமாரன்

ரமேஷ் பிரேதனின் ஐந்தவித்தான் புதினம், சமூகத்தில் ஒரு மனிதனை காலப்போக்கில் இயல்பாக பற்றிக் கொள்ளும் மனநோயினையும் அதன் வளர்ச்சி, வளர்சிதை மாற்றத்தினை புனைவின் வழியாகப் பேச முயல்கின்றது. ஐந்தவித்தான் உளவியல் மற்றும் தத்துவார்த்தக் கருத்துக்களை முதன்மைப்படுத்தி தனது உரையாடலை நிகழ்த்துகின்றது. புனைவின் கதையாடலை ரமேஷ் தொடர்புடைய, தொடர்பறுந்த நிலையில் நகர்த்திச் செல்வதும், யதார்த்த, மிகையார்த்தங்களைக் கடந்த பின்நவீனத்துவ, பின்காலனியக் கூறுகளையும், மாய ஜாலங்களையும் நிகழ்த்துகின்ற குறுக்கு வெட்டுத் தன்மையுடையதாக விளங்கச் செய்வதும் கதையை  ஒரு புதிய தளத்துக்கு கொண்டு சேர்ப்பதாக அமைகின்றது.

புதினம் முற்றிலும் மனவியல் சார்ந்ததாகக் கொண்டு செல்லப்பட்டாலும், உறவுகள் குறித்த இழப்புகள், ஏக்கங்கள், காதல், காமம், கடவுள், மதம், மொழி, சாதி, வர்க்கம், வரலாறு, கதை தொன்மம், பெரியாரியம், மார்க்சியம், ஈழம், அறிவியல், புதுவை குறித்த வரலாறு, வரலாற்றை மீட்பது எனப் புனைவுக்குள் புனைவாக ஏராளமான விஷயங்களை மிக நுட்பமாகத் தருக்கத்தின் மூலம் முன்வைத்துச் செல்வதும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.

மழை என்பது ஒரு சொல் அன்று அது மழைதான் என்ற அழுத்தமான ஒரு காட்சிப்படுத்தலோடு புதினத்திற்குள் அழைத்துச் செல்கிறார் ரமேஷ் பிரேதன். நாவிதர் சமூகத்தைச் சேர்ந்த மாதவன் என்ற முதன்மைப் பாத்திரம் மூலமாக எளிமை, ஏமாளித்தனம், உறவுக்காக அலைந்து திரியும் ஒரு தந்தையைப் பற்றியான பதிவுகளோடு, உயர்சாதித் திமிர், ரிக்சாக்காரனோடு தவறான தொடர்பு, யாரையும் கொலை செய்யும் துணிச்சல், சர்க்கஸ் கூடாரத்தில் பீயள்ளினாலும் சிங்கத்தின் பீயைத்தானே அள்ளுகிறேன் எனப் பெருமிதம் கொள்ளல் என்பதோடு இந்தச் சமூகத்தோடு பெரிதும் முரண்படுகின்ற ஒருதாய் பாத்திரத்தோடும் கதை முன் நகர்த்தப்படுகின்றது. இன்னும் கதைசொல்லி சந்திக்கும் சக பயணிகளான தாமரை, தேவகி, கொன்றை, பூமிதா, ழகரி என்னும் சகப் பாத்திரங்களோடு புதினம் இயக்கப்படுகிறது.

புதிய அம்சங்களை நிரம்பக் கொண்டிருக்கும் இந்தப் புதினத்தை ரமேஷ் பிரேதன் ஓர் ஆய்வேடு போல முக்கியமான இரு பகுதிகளாகப் பிரித்தளித்துள்ளார். இது புதினத்தைத் திசைமாறாமல் பயணிக்கவும் வாசிக்கவும் செய்யும் இரயில் தண்டவாளங்களாகவே எனக்குப்படுகிறது. முதற்பகுதி மனநோயின் தோற்றமும் வளர்ச்சியும் எனும் தலைப்பை மையப்படுத்துகின்றது. இரண்டாம் பகுதி மனநோயின் வளர்சிதை மாற்றத்தை மையப்படுத்தியும் விவாதிக்கின்ற ஒரு புனைவாக விளங்குகின்றது. ஐந்தவித்தான் புதினம் பொதுவான ஒரு ஜனரஞ்சகமான வாசகத்தளத்தைத் தாண்டிய தீவிர வாசகனை நோக்கிய பின் நவீனத்துவ, உளவியல் எழுத்து வகையைச் சார்ந்த ஒரு புதின வகை என்பதை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். அப்படியெனில் நாம் புதினத்துக்குள் ஓர் அறிவார்ந்த வாசகனாக அல்லது மனநோய் பிடித்த ஒரு வாசகனாக பாத்திரங்களின் மொழி, கருத்தியலோடு யதார்த்தம், மிகையதார்த்தம் கடந்த மாய உலகைத் தரிசிக்கவும், பயணிக்கவும், தருக்கம் செய்யவும், புரிந்து கொள்ளவும் எளிதில் முடியும்.

காமம் – பாலியல் – மனங்களின் தொடர்பினை முன்னிலைப்படுத்தி, பின்காலனியத்தின் குரலாய் வரலாற்றை மீட்டெடுத்தல் என்பதாகக்  கதைசொல்லும் புதினம் ஐந்தவித்தான். மாதவனின் தாய் தான் பருவமடைந்து வீட்டிலிருக்கும் காலத்தில் ஒருவனோடு புணர்ந்து கருத்தரித்து விடுகிறாள். உயர் சாதிய சமூகத்தைச் சேர்ந்த மாதவனின் தாய் தன்னை அதிலிருந்து காத்துக்கொள்ள நாவிதர் சமூகத்தைச் சேர்ந்த மாதவனின் தந்தையை விரும்புவதாகப் பாவனை செய்து அவரை கணவனாக்கிக் கொள்கிறாள். இதனால் சாதிய ரீதியில் ஏற்படுகிற குழப்பங்களும் மரணமும் ஒருபுறம். இன்னொரு நிலையில் மாதவனின் தந்தை அவளுக்குப் போதாமையாய் மாற அவள் சமூக யதார்த்தத்துக்கு மாறாக மாற்று, எதிர்கலாசாரத்தை விரும்புகின்ற ஒரு பெண்ணாக ஒரு ரிக்சாக்காரனோடு தொடர்பு வைத்துக் கொள்கிறாள். இதனால் மாதவனின் தந்தைக்கும் தாய்க்குமான இடைவெளி விரிசலடைகிறது.

இதனை யதார்த்த மனநிலையில் வளரும் மகன்  மாதவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. ஒரு பள்ளி விடுமுறை நாளில் ரிக்சாக்காரனை கொலை செய்வது பற்றியே எண்ணிக் கொண்டிருப்பதாக புனைவு எழுதிச்செல்கிறது. எதிர்ப்பையோ, தனது நலனையோ, அறிவுறுத்தலையோ கண்டுகொள்ளாத மாதவனின் தாயின் சுதந்திரமான பாலியல் வேட்கை அல்லது மாற்றுக் கலாசார வாழ்வை யோசிக்கும் அவளின் மனதை ஒரு சம்பவம் பெரிதாக கலைத்துப்போடுகிறது. தனது பைத்தியக்கார மகளை தான் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த ரிக்சாக்காரன் அவளின் எதிர்ப்பையும் மீறிப் புணர்ந்து விட அதனை ஏற்றுக் கொள்ள இயலாமையிலேயே தனது அக்காள் இறந்து விட்டாள் என்ற மாதவனின் கூற்றில் ஒரு கணம் அதிர்ந்து போய் விடுகிறாள். “அடிவயிற்றில் ஓங்கி உதைத்ததைப் போல மாதவா எனக் கத்தினாள்” (ப-20) பின்னர்ப் பொறுமையாக ரிக்சாக்காரனை சந்தித்துப் பேச்சுக் கொடுத்து அவனை ஓர் இரவில் வீட்டிற்கு பிராந்தியுடன் வரவைத்து ஊற்றிக் கொடுத்து மகிழ்விக்கிறாள். போதையின் உச்சத்தில் ரிக்சாக்காரன் குடைசாயும் நேரத்தில் விரிக்கப்பட்ட சாக்குத்துணிக்கு கீழே மடிக்கப்பட்டுக் கிடந்த சவரக்கத்தியை எடுத்து ஒரே வீச்சில் அவனது ஆண் உறுப்பை வெட்டி வீழ்த்தி விடுகிறாள். இது புதினத்தின் போக்கில் மிகப் பெரிய கேள்வியை எழுப்புகின்ற இடமாக அமைகின்றது.

மாதவன் அறுபட்ட ஆணுறுப்பை செத்த எலியைப் போல தூக்கி பாலித்தீன் கவரில் போட்டு தூக்கித் திரிவது, ஓரிரு நாள் கழித்து அதனை தோட்டத்தில் புதைத்து விடுவது, ரிக்சாக்காரன் சிலநாள் கழித்து பிணமாக குளத்தில் மிதப்பது எனத் தொடரும் நிகழ்வுகள் முடிவுக்கு வருவதற்குள்ளாகவே மாதவனின் அம்மா மீண்டும் சில நாட்களில் அப்பாவுடன் முடிவெட்டுகிற கடையில் வேலை செய்கிற ஓர் இளம் வயதுக்காரனோடு சென்று விடுகிறாள். இது நமக்குப் புதிராகவே இருக்கும். சிறிது காலத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் வேலை செய்வதான தகவல். பின்னர் ஒரு தளர்ந்த நிலையில் அப்பாவின் அழைப்பினை ஏற்று இரவில் சிறிதுகாலம் வீட்டில் வந்து படுக்கை கொள்கிறாள்.

இறுதியாக ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு இறங்கி இரவு நேரத்தில் வெளியில் கடற்கரைக்குச் சென்று கடலில் விழுந்து இறந்து போக முயற்சிப்பதும் செல்லும் வழியில் இருவர் மது அருந்திவிட்டு அவளை பாலியல் சுரண்டலில் ஈடுபட முயற்சிப்பதும் விருப்பமில்லாத அவள் அவர்களில் ஒருவனை இடுப்பில் செருகியிருந்த மடக்குக்கத்தியை வீசி கொன்றுவிட்டு கடலில் விழுந்து செத்துவிடுவதாக புனைவு பதிவு செய்கிறது. இங்கு மாதவனின் அம்மா பாலியல் விஷயத்தில் மிகு ஈர்ப்புக் கொண்டிருந்தாலும் பல முரண்களைக் கொண்டிருப்பதும் முதன்மை பெறுகின்றது. இதனை ஒருவரின் மனநோயின் தன்மையாகப் பார்க்கமுடிகிறது. புனைவின் இப்போக்கு  பின்காலனியம் என்ற கோட்பாட்டு எழுத்தை தாண்டிய ஒரு மனவியல் புதினமாகவே பார்க்க இடமளிக்கிறது.

புதினத்தில் எவ்வளவோ விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தாலும் அதன் இன்னொரு பரப்பு ஒருவருக்கொருவர் உயிராய்க் காதலித்துக் கொண்டிருந்த மாதவன் தேவகி வாழ்வில் ஒரு கட்டத்தில் தேவகி மாதவனிடமிருந்து விலகி வீட்டிலுள்ளோர் அறிவுறுத்தலின்படிக் கொன்றையைத் திருமணம் செய்து கொள்கிறாள்.  நாட்களின் நகர்வில் அவர்களுக்குக் குழந்தையின்மை நிலை ஏற்பட  தேவகி கல்லூரியில் தன்னுடன் பணியாற்றும் சக தோழிகளிடம் தான் மாதவனை ஏமாற்றிய பாவம் என்பதான ஓர் இரங்கற்பா கருத்தைத் தெரிவிக்கின்ற செய்தி மாதவனை எட்டுகிறது.

மாதவனோ படித்தவர்களிடம் கூடக் காதலுக்குச் சாதியும் வர்க்கமும் தடையாய் உள்ளதைத் தன் சிற்றப்பாவிடம் விளக்கித் தனக்குத் திருமணமே வேண்டாம் என்ற ஒரு முடிவுக்கு வந்திருந்தான். மாதவனின் அதிர்ஷ்டம் அவன் வீடுகட்டக் குழிதோண்ட தனது அக்காள் ஒரு மழைநாளில் இறந்த இடத்தில் இருந்து ஒரு சிறிய தாழி  கிடைக்க அதில் தொப்புள்கொடியில்லாத அழகிய ஒரு  பெண் குழந்தை கிடைக்கிறது. குழந்தைக்கு அவள் பூமிதா என பெயரிட்டு வளர்த்து வருகிறான். “ஏவாளுக்குப் பிறகு பூமியில் தோன்றிய தொப்புள் இல்லாத இரண்டாவது பெண் தன் மகள் பூமிதா என மாதவன் பெருமைப்பட்டுக் கொள்கிறான்.

இதற்கு இடையில் தனக்குக் குழந்தை இல்லை எனப் புலம்பிய தேவகிக்கு மாதவன் தன்னால் இயன்ற உதவியைச் செய்வதாக உறுதியளிக்கிறான். தேவகி தன் அகம் மகிழ்ந்து தன் கணவனிடம் சொல்ல அவன் மாதவனை அணுகி இது குறித்துப் பேசியிருக்கிறான். தன் மகள் பிறந்த கதையை நம்பும்படி தேவகியின் கணவனிடம் மாதவன் கேட்டுக் கொண்டான். தேவகிக்கு ஒரு நல்வழி காட்டினான். தினமும் ஒரு திருக்குறளை மனப்பாடம் செய்து வந்தால் ஆயிரத்து முந்நூற்றி முப்பதாம் நாள் ஒரு குழந்தை பிறக்கும் என நம்பிக்கை அளிக்கிறான். மாதவன் காட்டிய திசையில் பயணித்த தேவகிக்குக் குழந்தை ஒன்று சித்திக்கிறது. கொன்றை மாதவனை கையெடுத்து வணங்கினான். பிறந்த குழந்தைக்கு மாதவனின் மகள் பூமிகா ழகரி எனப் பெயர் சூட்டினாள்.

ஒரு கட்டத்தில் பூமிதா வளர்ந்து பருவமடைகிறாள். அவளுக்கு ஒரு தாய் தேவைப்படுகிறாள். மகளுக்கு ஒரு தாயின் சேவை தேவை என்பதை உணர்ந்து தவித்த மாதவனுக்கு தேவகி உதவிக்கு வர பின்நாளில் அடிக்கடி தேவகி இங்கு வந்து போவதும் இங்கே தங்கிவிடுவதுமாய் ஒரு கட்டத்தில் தேவகி கொன்றையைப் போல ஓர் ஆண்மகன் தனக்கு வாழ்க்கைத் துணையாக அமைந்தது மாதவன் பெற்ற வரம் என பேசிக் கொள்ளும் படியாகவும் அமைகிறது. இது மன ரீதியாக வேறுபட்ட அர்த்தப்பாடுகளை தருவது கவனத்திற்குரியது. சில நேரங்களில் பூமிதாவே தன் தந்தையை விட்டு விலகி தனக்கான பாதையில் செல்லும் போது தேவகி ஏன் மாதவனைச் சுமந்து கொண்டு திரிகிறாள் என்ற கேள்வி கொன்றையை குடையும்.  இந்நாட்களில், தன் இயல்பை விட்டு விலகி மது அருந்துவான். அந்தச் சமயங்களில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே எழும் செம்புகையானது வீடெல்லாம் நிறைந்து ழகரிக்கு மூச்சுத் திணறலை உண்டாக்கும் என்பதாகவும் கதை பதிவு செய்கிறது.

இன்னோரிடத்தில் மாதவன் தேவகி பல நேரங்களில் நான் உன்னை ஒரு புனைவு உயிரியோ என சந்தேகிக்கிறேன். நீ இல்லாத நேரங்களில் இந்த வீட்டில் நான் மட்டும் இருக்கும் போது என்னுடன் உண்மையாகவே நீ வாழ்ந்து வருகிறாயா? அல்லது இதுவும் எனது கற்பனையா என்ற கேள்வி எழுகிறது என்பதான மாதவனின் கேள்விகளும், மேலும் பாலியல் புணர்ச்சி, ஆண் பெண்  உறவு, உடலுறவு எனும் மையத்தைச் சுற்றியே கதை நகர்வதும் இவை தொடர்பான வரையறைகளும், மீறல்களும் பாத்திரங்களில் ஒருவருக்கொருவர் ஏற்படும் ஐயங்களும், உடன்பாடுகளும், ஆசைகளும் ஒரு நேர்கோட்டு வரிசையினதாக இல்லாமல் குறுக்கு வெட்டுத் தோற்றங்களாய் அமைவது மனநோயின் உருவாக்கம், வளர்ச்சி மற்றும் சிதைவாகப் பார்க்க முடிகிறது.

மேலும் ஒருமுறை கதைசொல்லி ழகரி கிடைத்தது தொடர்பாகத் தேவகியிடம் பேசிக் கொண்டிருக்கிறபோது இருபதாம் நூற்றாண்டில் தனக்கு ஒரு மகள் கிடைத்ததாகவும் அவள் பிரான்சிலிருந்து புதுச்சேரிக்கு தனது இருபத்தியோராம் அகவையில் தன்னைத் தேடி வந்தாள் என்றும் அவள் தனக்கு பிறந்த மகள் என்றும் குறிப்பிடுகிறார். அவளின் முகச்சாயல் பற்றி சொல்லுகின்றபோது எனக்கு பெண் வேடமிட்டது போல ஒரு பிரான்கோ – தமிழ்ப் பெண் அவள் என்கிறார். வெள்ளைத் தோலுமில்லாமல் கறுப்புத் தோலுமில்லாமல் தேன் நிறத்தில் இருந்தாள் என்கிறார். இப்பெண்ணின் பெயராக பூமிகா மாதவன் எனக்குறிப்பிடுவது கதையின் மைய ஓட்டத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. புனைவில் ஓர் இனக்கலப்பை அடையாளப்படுத்துகின்றார். மேலும் இந்நிகழ்வின் மூலமாகப் பாலினக்கவர்ச்சி புணர்ச்சி என்பவை சாதி, வர்க்க, நிற, இன வேறுபாடுகளைக் கடந்தவை என்பதும் இங்கு முன்வைக்கப்படுகிறது.

புனைவில் இடம்பெற்றுள்ள சபீன்துய்ஷாம்ப் மெர்ஸ்ஸியோ துய்ஷாம்ப் பொந்திஷேரியில் (பாண்டிச்சேரி) ஐந்தாண்டுகள் தந்தையாக இருந்தவர். அப்போது இவர்களுக்கு சமையல் வேலை பார்த்த கதை சொல்லியோடு சபீன் துய்ஷாம்ப் விரும்பிப் புணர்ந்ததில் பிறந்த பெண்ணே – இந்த பிரான்கோ தமிழ்ப் பெண். ஐந்தாண்டு பதவியை முடித்து பிரெஞ்சு தேசத்துக்கு புறப்பட்டுச் சென்றபோது மெர்ஸ்ஸியோ கப்பலில் வைத்துப் பலமுறை சபீனை புணர்கிறான். குழந்தை பிறக்கும் தருணத்தில் தான் தந்தையாகப் போகும் சந்தோஷத்தில் இருந்த மெர்ஸ்ஸியோவுக்கு குழந்தை வெள்ளைக்கு மாற்றாக பிறக்க தலையிடி ஏற்படுகிறது. மருத்துவமனையிலேயே இருவரையும் கொலைசெய்ய முயற்சிக்கிறான் மெர்ஸ்ஸியோ. சபீன் பாரீசிலிருந்து மர்ஸெய் வழியாக கதூலூப் தீவுக்குத் தப்பிச் செல்கிறாள். மர்ஸெயில் உள்ள துறைமுகத் தொழிலாளி ஒருவன் சபீனுக்கு உதவி செய்கிறான். பூமிகாவை துறைமுகத் தொழிலாளியிடம் அடைக்கலப்படுத்தி விட்டுச் செல்கிறாள்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மர்ஸெய் திரும்பிய சபீன் தன் மகளுடன் இணைகிறாள். அந்தத் தொழிலாளியை மறுமணம் செய்து கொள்கிறாள். பின்னர் தன் மகள் பூமிதாவை கதைசொல்லி்யென அவளின் தந்தையர் வீட்டிற்கு அனுப்பி வைப்பதும் அவளின் மூலம் கதைசொல்லி இந்த கதைகளைத் தெரிந்து கொண்டு வரலாற்று வெளியில் திக்கற்று அலைந்து கொண்டிருந்த எனது வாழ்க்கைக்குப் புதிய அர்த்தம் கிடைப்பதாக மகிழ்வதும் உணர்வுகள், மனங்கள் சார்ந்த பல யதார்த்தங்களை நமக்கு வெளிச்சப்படுத்துவதாக அமைகிறது. இங்கு மாதவனின் தாயின் முரண்பட்ட செயல்பாடுகள். சபீன் கதைசொல்லியோடு புணர்தல் – துறைமுகத் தொழிலாளியோடு உறவை ஏற்படுத்திக் கொள்ளுதல், மாதவன் –  தேவகி – சபீன் உறவுகள், வளர்ந்த பிறகு மாதவனிடம் இருந்து விலகி இருக்க விரும்பும் பூமிகாவின் செயல் என எல்லாமே ஒருவித மனநோயின் வெளிப்பாடே என்பதை பிராய்டு உள்ளிட்ட உளவியலாளர்களின் கருத்துப்படி புதினத்தில் உறுதிப்படுத்துகிறார் ரமேஷ்.

 மேலும் புனைவில் முடிதிருத்தும் நாவிதர்களின் தொழில் அல்லது சேவை குறித்துப் பேசுகின்ற போது முடிதிருத்தி முகம் மழித்து குளிர்நீரைப் பீய்ச்சித் துடைத்து பவுடர் பூசி, கைவிரல்களுக்கு நெட்டி முறித்து, அக்குள் முடிநீக்கி எனப் பதிவு செய்யுமிடத்தில் யாரோ ஒருவனின் தாயோ தாரமோ கூட இப்படித் தொட்டு துடைத்திருக்க மாட்டார்கள் என்று குறிப்பிடுவது நம்மை ஒருகணம் மறுவாசிப்புக்கு உட்படுத்துகின்ற இடமாக உள்ளது. இங்கு இத்தகையதான ஒரு சமூகத்துக்கு நாம் கொடுக்கின்ற மரியாதை என்ன என்பதே முக்கியம்.

மாதவனைப் பார்த்து அவனது தந்தை குறிப்பிடுகிறபோது நீ ஒரு நாவிதன் நாய்க்குக் கூட குரைப்பதற்கு நாக்கு இருக்கிறது. உனது நாக்கு பிறக்கும் போதே அறுக்கப்பட்டு விட்டது. நாவற்றவன் தான் நாவிதன் என்பதோடு கல்வி உன்னை விடுதலை செய்யும் என்று குறிப்பிடுவதன் மூலம் ஒடுக்குதல் மற்றும் விடுதலையின் வரலாறும் உணர்த்தப்படுகிறது. இன்னோர் இடத்தில் வறுமையை மாதவனின் தாய் மூலம் பதிவு செய்கிறபோது அரசு மருத்துவமனைக்குச் சென்று மாதம்தோறும் ரத்தத்தை பணத்திற்கு விற்று அந்த காசில் சமைத்து சாப்பிடுபவள்.  ரிக்சாக்காரனுக்கு   மட்டும் உடம்பையும் விற்பவள் என்பதான பதிவு விளிம்பு நிலை சார்ந்த ஒரு யதார்த்தப்பதிவாக விளங்குவதும் கவனிக்கத்தக்கதாகின்றது.

மாதவன் தன் அக்காவின் இறப்புக்கு பிறகு அவனது வகுப்பு ஆசிரியர், வகுப்புத் தோழி உள்ளிட்ட பலரிடம் அக்காவின் சாயலைத் தேடுவதென்பதும் தெளிவான மனநோயின் பிரதிபலிப்பாக புனையப்பட்ட வார்த்தைகளாகின்றன. அக்கா செத்த நாளைப் பற்றி பேசுகின்றபோது திதியன்று அவளுடைய அறைக்குள் எப்படியோ எங்கிருந்தோ மூத்திரவாடை கமழத் தொடங்கி விடுகிறது. பெருங்காயமிட்ட மாங்காய் கத்தரிக்காய் முருங்கைக்காய் சேர்ந்த சாம்பாருக்கு இளம் மூத்திரத்தின் மணம் வந்து விடும் என்பதும், மாதவன் அக்காவின் இறப்பின் போது அவளின் சாம்பலிலிருந்து வேகாத ஒரு எலும்புத்துண்டை எடுத்து வைத்துக் கொள்வதும், பின்னர் பூமிதாவுக்கு முதல் பல் விழுந்தபோது அதை எடுத்து பத்திரப்படுத்துவதும், அது போலவே மாதவனின் அக்காள் தாயின் இறப்பினை மையப்படுத்தி மழை, கடலை கொலைக்கான ஒரு காரணியாகப் பார்ப்பதும் மனநோயின் வளர்நிலையாகவே பார்க்க முடிகிறது.

பழைய நினைவுகளைப் பகிரும்போதும் அத்தோடு ஒப்பிட்டுச் சமகால நிகழ்வுகளை பேசுகின்றபோதும் வெட்டுக்கிளி, தும்பி, தொட்டால் சுருங்கி, பெடிக்காய், பாம்பு, பேய்கள் முற்றாக அழிந்து விட்டன என்பதான பதிவும் ஆனால் இன்று போலீஸ் என்ற புதிய பேய்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனும் கூற்றும் சில காவல்துறையினரின் மக்கள் விரோதச் செயல் சார்ந்த விமர்சனமாக அமைகிறது.

மேலும் புனைவில் ஓர் அப்பா ஓர் அம்மாவின் இறப்புக் குறித்த பதிவு அவர்கள் சாகும் முதிர் தறுவாயில் உயிர் போவதற்கு முன்பாகவே அப்பாவை தீயிலிட்டேன் என்பதும், அம்மாவை தூக்கிப் புதைத்துவிட்டேன் என்பதும் முன்னூறு ஆண்டுகள் வாழ்ந்தேன். நானூறு  ஆண்டுகள் வாழ்ந்தேன் என்பது போன்ற பல வினோத சித்தரிப்புகளும், புனைவில் இடம்பெற்றுள்ளன. ஆக யதார்த்தம், விளிம்புநிலை, பின்நவீனத்துவம், பின் காலனியம், மாய உலகங்களை எழுப்புதல், புனிதங்களைக் கட்டுடைத்தல், மாற்றுக் கலாச்சாரத்தை முன்நிறுத்துதல் குடும்ப அமைப்பு என பன்மைத்துவமான விஷயங்களை அருமையான மொழிவளத்தோடு ரமேஷ் பிரேதன் இப்புனைவின் கதைகளின் வழியே நமக்குள் கடத்த முயன்றுள்ளார் என்பதே உண்மை.

*****

கட்டுரையாளர் – தமிழ் உதவிப் பேராசியர்
அரசு கலைக்கல்லூரி
பரமக்குடி – 623701

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *